Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அடுத்த நாள் காலையில் கடுமையான மழை பெய்தது. பன்னிச்சையடி கிராமத்தைச் சுற்றியுள்ள குளங்கள் நிரம்பிப்போகுமளவுக்கு விடாமல் பெய்துகொண்டிருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

அடுத்த நாள் காலையில் கடுமையான மழை பெய்தது. பன்னிச்சையடி கிராமத்தைச் சுற்றியுள்ள குளங்கள் நிரம்பிப்போகுமளவுக்கு விடாமல் பெய்துகொண்டிருந்தது.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அக்கா வந்தாள். வாகனத்தைவிட்டு இறங்கியோடி வந்து அம்மாவைக் கட்டியணைத்து அழுதாள். அம்மா தனது அணைப்பின் மூலம் அவளை ஆற்றுப்படுத்த எண்ணினாள். சவப்பெட்டிக்குள் கிடக்கும் மருதனின் முகத்தைத் தடவிக்கொடுத்தபடி அழுது புலம்பினாள். விம்மலும், கண்ணீர்ப் பெருக்கும் சொல்ல முடியாத ரணத்தின் மொழியாயிருந்தன. அக்கா இயல்புக்குத் திரும்ப நேரம் எடுத்தது. மருதனுடைய உடலை உள்வாங்கக் காத்திருந்தது மண். அக்காவை நினைவுகள் பேரலையாகப் புரட்டின. அவள் கலங்கித் தேயும் ஒருநாளைப்போல ஆகியிருந்தாள். உடலைப் புதைப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர். அப்பாவின் அருகிலேயே வெட்டப்பட்ட குழியில், மருதனுடைய உடலைக் கீழே இறக்கினர். எல்லோரும் உள்ளங்கையில் பூவும் மண்ணும் கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மணியன் மட்டும் பெருங்குரலெடுத்து “ஐயோ மருதண்ணா...” என்று கத்தினான். அப்படியே மயங்கிச் சரிந்தான். இழப்பின் பாரத்தைச் சுமந்தபடி நின்ற அக்காவின் அருகில் போயிருந்தேன். என்னை மடியில் கிடத்தி விம்மி விம்மி அழுதாள். அக்காவின் துயரைப் போக்கச்செய்யும் ஆறுதல் வார்த்தைகள் இவ்வுலகில் இல்லை. அவளின் கைவிரல்களை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே படுத்திருந்தேன். மருதன் மண்ணுக்குள் மூடப்பட்டார்.

இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக வீட்டுக்கு ஆட்கள் வந்துபோயினர். மருதனின் பிரிவைச் சேர்ந்த போராளிகள் அதிகமாக வந்தனர். நானும் மணியனும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம். நாகப்பர் நன்றாகக் கள்ளுக் குடித்தபடி புலம்பிக்கொண்டோ, பாடல்களைப் பாடிக்கொண்டோ இருந்தார். பூட்டம்மா போராளிகளோடு வார்த்தைகளை அளந்து கதைத்தாள். அக்காவுக்கு இயக்கம் விடுமுறையை வழங்கியிருந்தது. அவளைப் பார்ப்பதற்கு அம்பிகா வந்துபோனாள். அம்மா அடுத்தடுத்த வேலைகளுக்குள் கால்பதித்தாள். மருதனை இயக்கம் ஏன் பொறுப்பேற்கவில்லை என்கிற கேள்வி என்னைப்போலவே அக்காவுக்கும் எழுந்தது. ஒருநாள் இரவு உணவு வேளையில் அம்மாவிடம் அக்கா அதைக் கேட்டாள்.

“இயக்கமெண்டு மருதனைச் சொல்லுறதில ஏதோ சிக்கல் இருக்குபோல” என்றாள் அம்மா.

“என்ன சிக்கலாம்?”

“அதொண்டும் என்னட்ட சொல்லேல்ல, ஆனால் நான் அப்பிடித்தான் நினைக்கிறன்.”

“அம்மா, என்ன விஷயமெண்டு தெளிவாய் நீங்கள் இயக்கத்திட்ட கேளுங்கோ” அக்கா சொன்னாள்.

“என்னவாய் இருந்தாலும் என்ன, அந்தப் பிள்ளையோட உயிர் போய்ட்டுது. சனங்களுக்காகப் போராடின உயிர். அவன் உயிருக்கும், அவன் சாவுக்கும் ஒரு மரியாதை இயல்பிலேயே இருக்கு” என்றாள் பூட்டம்மா.

அக்காவும் நானும் இரவிரவாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தோம். இயக்க வாழ்க்கையும் பயிற்சியும், இப்போது அவளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணியென எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

“உங்களுக்கு இயக்கப் பேர் என்ன?”

அக்கா தனது இயக்கப் பெயரைச் சொல்லிவிட்டு “பேர் எப்பிடியிருக்கு?” என்றாள். எனக்குப் பிடித்த சில போராளிகளின் பெயர்களான அணிநிலா, கானகி, நிலமதி, அம்புலி, சந்தனா ஆகிய பெயர்களைச் சொன்னேன்.

“நீ சொல்லுற பெயரில ஒண்டை இன்னொரு பெயராய் வைக்கிறேன்” என்றாள்.

அடுத்த நாள் காலையில் கடுமையான மழை பெய்தது. பன்னிச்சையடி கிராமத்தைச் சுற்றியுள்ள குளங்கள் நிரம்பிப்போகுமளவுக்கு விடாமல் பெய்துகொண்டிருந்தது. அக்காவிடம் சொல்லிவிட்டு உப்புக்காட்டுக்குச் செல்ல ஆயத்தமானேன். ‘திரும்பி வரும்போது எனக்கு ஈச்சம்பழம் கொண்டு வா’ என்றாள். ‘உறுதியாக’ என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். பொதுக்கிணற்றடியில் சனங்கள் நின்றனர். அம்பிகா குடத்தில் நீர் நிரப்பிக்கொண்டு இடுப்பில் சுமந்துகொண்டு வந்தாள். அவளுடைய முகம் காய்ந்துபோயிருந்தது. கொஞ்சம் வேகமாக நடந்து யாருமற்ற வீதி வளைவில் அவளுக்காகக் காத்திருந்தேன். அம்பிகா என்னருகில் வந்ததும் சொன்னாள், “உங்களுக்கு இப்ப என்ர ஞாபகமே இல்லை.”

“ஞாபகம் தொலைந்தால், உங்களுக்காக இங்கே காத்திருந்திருக்க மாட்டேன்.”

“நேற்று நான் உங்கட வீட்டுக்கு வந்திருக்கேக்க நீங்கள் என்னைப் பார்க்கவேயில்லை.”

“அம்பிகா கோபப்படாதே” என்று அவளை ஒரு கணம் அணைத்துக்கொண்டேன். அவளது இடுப்பில் கிடந்த குடம் கீழே நழுவி விழுந்து நீர் ஊற்றியது. அம்பிகா என்னை விட்டுவிடும் எண்ணமில்லாது இறுக்கி அணைத்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தாள். இதழ்கள் இனித்துக் கனிந்தன. உடலின் கதவைத் திறக்கும் சிறிய நுட்பங்கள் இதழ் முத்தத்துக்கே வாய்த்திருக்கிறதுபோலும். நிறைந்து வழிந்த கள்ளு முட்டியைப்போலிருக்கும், அவளின் தனங்களில் நான் வழிந்துருகிக்கொண்டிருந்தேன். காதல், துயரங்களை மோதி வீழ்த்துகிறது.

உப்புக்காட்டுக்குள் இறங்கினேன். இரண்டு நாள்களுக்கு மேலாக நாம் சென்றடைந்த தூரத்தைத் தனியாக நடந்து கடக்க வேண்டும். முனிப்பனையடி என்று நினைத்தாலே மூச்சு வாங்குகிறது. காட்டுக்குள் தூரம் பெருகிப்போகிறது. ஏழு நடுகற்களைப் பற்றி நாகப்பர் சொன்ன விஷயங்களை நினைத்துக்கொண்டேன். நான் பன்னிச்சை மரத்தை வணங்கிவிட்டு மிக வேகமாக நடக்கலானேன். இந்த ஏழு நடுகற்களும் போற்றவேண்டிய மாவீரத்தினுடையவை. நாம் அள்ளித் தின்று வளர்ந்த மண்ணில் இவர்கள் உதிரம் இருக்கிறது. மண்ணின் வழியாக உதிரத்தையும் வீரத்தையும் சுரந்து தருகிற இந்த மூதாதைப் பெண்களின் மீது எனக்கோர் காதல் பிறந்தது. மூச்செரிய காட்டுக்குள் நடந்து முனிப்பனையை வந்தடைந்தேன். அங்கிருந்து ஏழு நடுகற்களைத் தேடத் தொடங்கினேன். அடர்ந்த காட்டினுள்ளே நடுகற்களைத் தேடும் என்னுடைய நெஞ்சில் படபடப்பும் பதற்றமும் கூடியிருந்தன. அப்போதுதான் நாகப்பர் சொன்ன இவர்களின் கதையை நினைத்துப் பார்த்தேன். போரிட்டு, நஞ்சருந்தி மாய்ந்துபோனார்கள் என்பதைக் கேட்டதும், வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. மண்ணுக்காகப் போரிட்டு நஞ்சருந்தி ஆகுதியாகும் மரபை நினைத்துப் பார்த்தேன். நாகப்பர் சொன்ன கதை இதுதான்.

வன்னி வளநாட்டில் தனியாட்சி செய்துவந்த ஆறு வன்னியனார்களும் கடவுள் நம்பிக்கையில் சிறந்து விளங்கினர். அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள தலங்களைத் தரிசிக்க எண்ணினர். தாங்கள் சென்று திரும்பிவரும் வரை ஆட்சிப் பொறுப்பை தமது மாமனார் நாகப்பரிடம் ஒப்படைப்பதென உறுதிசெய்தனர். ஆனால் நாகப்பர் அதனை மறுத்தார். ஆறு பேரும் ஒரே நேரத்தில் சென்றால் நாட்டுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமென எச்சரித்தார். அவர்களின் மனைவிமாரும் நாகப்பரோடு சேர்ந்து, வேண்டாமெனக் கூறினார்கள். ஆனால் வன்னியனார் ஆறு பேரும், “நீங்கள் இருக்கும்போது நாட்டுக்கு எந்த ஆபத்தும் வராது மாமா” என்றனர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

ஆறு பேரும் தனது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார் நாகப்பர். ஆறு வன்னியனார்களும் தங்களுடைய தல யாத்திரையை ஆரம்பித்தனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாகப்பர், நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தார். ஆனால், அவர் சொன்னதைப்போலவே சிக்கல்கள் உருவாகின. அதில் பாரிய சிக்கலைத் தந்தவன் பெருமலையை ஆண்டுவந்த நம்பி என்பவன். வயதில் சிறியவனாக இருந்தாலும், நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கோடு உள்நாட்டுக் குழப்பத்தைத் தூண்டிவிட்டான். ஆனால் நாகப்பர் அசரவில்லை. அவனது திட்டங்களை நுட்பமாக முறியடித்தார். நம்பி கோபங்கொண்டான். அவனை அதிகாரவெறி வழிநடத்தியது. துரோகம் அவனுக்கு ஊன்றுகோலெனத் தோன்றியது. கோழையின் புகலிடம் துரோகமின்றி வேறில்லை. அவன் பறங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் துணையை நாடினான். பறங்கிப்படைக்கு இதுவொரு காரணமாக இருந்தது. நாகப்பர் ஆட்சிசெய்துவரும் வன்னிநாட்டை பறங்கிப்படை தாக்கத் தொடங்கியது. ஒரு மழைநாளில் பறங்கிப்படை வன்னி நாட்டுக்குள் முன்னேறித் தாக்குதலைத் தொடங்கியது. யுத்தப் புரவிகளில் நாகப்பரின் படைகள் தாக்குதலை எதிர்கொண்டன. நாகப்பர் சமராடினார். மழையும் இருளும் போர்க்களத்தில் வழிந்தோடும் குருதியைப் பார்த்து மிரண்டன. நாகப்பர் பறங்கிப்படையின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், போர் முடிந்த பின்னர் குதிரையிலிருந்து தவறி விழுந்து இறந்துபோனார் நாகப்பர். வன்னிநாடே துயரில் அமிழ்ந்தது. படையெடுப்புக்கு எதிரான போரில் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாதபடி வன்னி நாடு தவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பின் தலைமையை இழந்து நின்ற வன்னிநாட்டை, இப்போது கைப்பற்றிவிடலாமென நம்பி மீண்டும் பறங்கிப்படையை உசுப்பினான். நம்பியின் ஏவலுக்கு பறங்கிப்படை பணிந்தது. துரோகிகளின் வரைபடத்தில் ஆக்கிரமிப்புக்காரர்களுக்கு நம்பிக்கையிருக்கும். ஆனால், அவர்கள் ஒருபோதும் துரோகிகளை நம்ப மாட்டார்கள். பறங்கிப்படை வன்னிநாட்டின் மீது மீண்டும் தாக்குதல் தொடுத்தது. தலைவனை இழந்த துயரம் தாளாது நின்ற வன்னிநாட்டின் படைகள் தாக்குதலை எதிர்கொண்டன. ஆனபோதிலும் இழப்புகள் பெருகின. கைக்கூலியாளன் ஒருவனை வைத்து ஊடுருவல் தாக்குதலைச் செய்து வன்னித் தளபதியைக் கொன்றொழித்தது பறங்கிப்படை. அப்போதுதான் ஆறு வன்னியனார்களின் இல்லாள்களும் ஆண் வேடமணிந்து போர்க்களம் புகுந்தனர். படையை வழிநடத்தினர். அவர்களுக்குத் துணையாகப் பணிப்பெண் பொன்னச்சியும் போரில் ஈடுபட்டாள். துப்பாக்கிகளோடு முன்னேறும் பறங்கிப்படையின் நடவடிக்கையை, வன்னிப்படைகளால் எதிர்கொள்ள முடியவில்லை. படைகளுக்குள் சாவு அதிகரித்தது. மெல்ல மெல்ல வன்னிப்படைகளின் தாக்குதல் அற்றுப்போனது. பனைமரத்தின் மீதிருந்து கூட்டமாகக் கிளிகள் எழுந்து பறந்தன. பறங்கிப் படையினன் ஒருவன், அந்தப் பனைமரத்தைத் தனது துப்பாகியால் சுட்டுத்தீர்த்தான். வன்னிப்பெரு நாடு பறங்கிப்படைகளின் கைகளில் அகப்பட்டது. ஆனால் ஆறு வன்னியனார்களின் இல்லாள்களும், பணிப்பெண்ணுமாக ஏழு பேரும் உப்புக்காட்டுக்குள் மறைந்தனர்.

“எதிரியின் கையில் அகப்படுவோமாக இருந்தால், அது எங்கள் குருதி மரபுக்கே இழுக்கானது” என்று உப்புக்காட்டுக்குள் விளைந்திருந்த குன்றுமணிகளைப் பிடுங்கிவந்த பணிப்பெண் பொன்னச்சி, செங்கல்லோடு சேர்த்து அதனை இடித்துக்கொண்டிருந்தாள்.

`நாட்டுக்கு ஆபத்து வருமென்று நாகப்பரும் நாங்களும் சொன்னபோது கணவன்மார் கேட்கவில்லையே...’ என்ற கோபத்தோடும், பறங்கிப்படையிடம் நாடு வீழ்ந்துவிட்டதே என்கிற குமுறலோடும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பொன்னச்சி குன்றுமணியையும் செங்கல்லையும் சேர்த்து இடித்து மாப்போல உருட்டி, எல்லோர் கையிலும் உருண்டையாக்கிக் கொடுக்கிறாள்.

உப்புக்காடு வெறித்துப் பார்த்தபடியிருக்க, நான் ஏழு நடுகற்களையும் அடர்ந்த காட்டினுள்ளே ஈச்சம்பழங்கள் கனிந்து கிடக்கும் ஒரு பகுதியில் காண்கிறேன். என்னை யாரோ பின்னிருந்து தொட்டு `ஆதீரன்...’ என்றழைப்பது கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். அவள்தான் நிற்கிறாள்.

(நீளும்...)