Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 53

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

மழை விட்டிருந்தது. அறுவரும் மாறி மாறிக் கதைத்துக்கொண்டிருந்தனர். உப்புக்காடு மெல்ல விடிந்திருந்தது. வன்னி நாடெங்கும் பெருமலையை ஆண்டுவந்த நம்பி கொல்லப்பட்ட செய்தி பரவியது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 53

மழை விட்டிருந்தது. அறுவரும் மாறி மாறிக் கதைத்துக்கொண்டிருந்தனர். உப்புக்காடு மெல்ல விடிந்திருந்தது. வன்னி நாடெங்கும் பெருமலையை ஆண்டுவந்த நம்பி கொல்லப்பட்ட செய்தி பரவியது.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

எலும்புகளாகக் கிடப்பவர்கள் நாச்சிமாரும் பொன்னச்சியும்தானென மூத்த வன்னியனார் சொன்னதும், ஏனைய இரண்டு வன்னியனார்களும் அதிர்ச்சியடைந்தனர். ``இத்தனை உறுதியாக எப்படிச் சொல்லுகிறீர்கள், அப்படி நிகழ வாய்ப்பில்லை’’ என்றனர். ஆனால், மூத்த வன்னியனார் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார். இருப்பிடத்தை அடைந்ததும், இந்த இடத்துக்கு அனைவரும் ஒன்றாக வர வேண்டுமெனக் கூறிக்கொண்டு நடக்கலாயினர். மழையும் இருளும் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தன. பதுங்கும் இடத்தை வந்தடைந்தனர். ஏற்கெனவே இங்கேயிருந்த மூவரும் ``இந்தக் காடு முழுவதும் தேடிப் பார்த்தோம். ஆட்கள் நடமாட்டமே இல்லை’’ என்றனர். மூத்த வன்னியனார் சொன்னார்... “நாம் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கப்போவதில்லை. ஏற்கெனவே அவர்கள் வீரச்சாவைத் தழுவிவிட்டனர். நாச்சிமார்களோடு சேர்த்து அவர்களின் பணிப்பெண்ணான பொன்னச்சியும் உயிரைவிட்டிருக்கிறாள்.”

“அவர்கள் எப்படி இந்தக் காட்டுக்குள் வந்திருக்க முடியும்?”

“எதிரிகளின் கையில் நாடு வீழ்ச்சியுற்றதும், அவர்களைத் தாக்கியழிக்க ஏதாவது திட்டமிட்டிருப்பார்கள். அது பொய்த்துப் போய் அவர்களது கையில் அகப்படாமல் மாண்டிருக்கலாம்.”

“அதுதான் சொல்கிறேன். இந்த ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நாங்கள் யுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னர் நாம் தாக்க வேண்டும்.”

“எதிரியைத் தவறாக அளவிடக் கூடாது. அவர்களிடமிருக்கும் ஆயுதம் தொலைவிலிருந்து தாக்கக்கூடியது. நாம் அவர்களை ஆயுதங்களால் வெல்ல முடியாது.”

“எங்களது போர்த்திறமைக்கு முன்னால் அவர்கள் எதுவும் செய்ய முடியாது.”

“இல்லை, கண்மூடித்தனமாகக் கோபப்படக் கூடாது. அவர்களை எதிர்கொள்ள முடியாது. ஆனால் அவர்களுக்கு இழப்பினை அளிக்கலாம். சில நாள்கள் ஆகட்டும். அதுவரை நாம் உப்புக்காட்டுக்குள்ளேயே பதுங்கியிருப்போம்.”

“நாச்சிமார்களுக்கும் பொன்னச்சிக்கும் நாம் நடுகற்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைப் பாருங்கள்.”

“ஊருக்குள் எங்களுக்கிருக்கும் நம்பிக்கையான சக்திகளை அழைத்துக் கதையுங்கள். தேவையான பொருள்களைச் சொல்லி வரவழையுங்கள்.”

மழை விட்டிருந்தது. அறுவரும் மாறி மாறிக் கதைத்துக்கொண்டிருந்தனர். உப்புக்காடு மெல்ல விடிந்திருந்தது. வன்னி நாடெங்கும் பெருமலையை ஆண்டுவந்த நம்பி கொல்லப்பட்ட செய்தி பரவியது. பறங்கிப்படை மூர்க்கம்கொண்டது. துரோகி நம்பி கொல்லப்பட்டது, சனங்களுக்குப் பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்தது. நம்பியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்ற அடிப்படையில், சிலரை வீடுகளிலிருந்து அழைத்துச் சென்று துன்புறுத்தினர், பறங்கிப்படையினர். நம்பியின் தலையறுந்த உடலைச் சேர்த்துக்கட்டி பெருமலையின் இடுகாட்டில் புதைத்தனர். இறுதியாக நம்பியோடிருந்த தங்களது பெண்ணைப் பறங்கிப் படையினர் விசாரணை செய்தனர்.

“எத்தனை பேர் வந்தனர்?”

“இரண்டு பேர் வந்தனர்.”

“அவனைக் கொல்லும்போது, நீ மட்டும் எப்படித் தப்ப முடிந்தது. அவர்கள் உன்னை எதுவும் செய்யவில்லையா?”

“இல்லை. நிர்வாணமாக இருந்த என்னை ஒருகணம்கூட பெண்ணாகக்கூட உணரவைக்கவில்லை. அப்படியோர் ஒழுக்கவான்கள். நம்பியின் கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதற்கு முன்னர், அவனது வாயில் கொண்டுவந்த ஒருபிடி உப்பையள்ளித் திணித்தனர்.”

“உப்பா?”

“உப்புதான். அப்போதுதான் உப்பளத்திலிருந்து அள்ளிவந்திருப்பார்கள் என்று தோன்றியது. கசிந்துகொண்டேயிருந்தது.”

“நம்பி, அவர்களது பெயரை உச்சரித்தானா?”

“ஆமாம், ஆனால் எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.”

பறங்கிப்படை, வன்னியனார்களின் உருவங்களை ஓவியர்களைக்கொண்டு வரைந்தது. அந்தப் பெண்ணே நம்பியைக் கொன்றவர்களை அடையாளம் சொன்னாள். பறங்கிப்படை விழித்துக்கொண்டது. மீண்டும் காடுகளுக்குள் படைகள் இறங்கின.

உப்புக்காட்டுக்குள் பொன்னச்சி இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள். வேட்டைநாய்கள் எனக்கருகிலேயே படுத்திருந்தன. எங்களிலிருந்து சற்றுத் தொலைவில் போராளிகள் நடந்துபோவது தெரிந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 53

“இன்னும் சில நாள்களில இந்தப் பிள்ளையள் ஓய்வில்லாமல் சண்டை செய்யப் போகுதுகள். எங்களுடைய நிலம் மீண்டுமொருமுறை கைவிடப்படும்” என்றாள்.

“உங்களுக்கு என்ன விசரா பிடித்திருக்கிறது, ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்?” என்றேன்.

“ஆதீரா, நான் சொல்லுவதில் ஒன்றுகூட பிசகாது. எங்களைச் சூழவுள்ள இருள் பெரிது. எங்களைச் சூழ்ந்திருக்கும் இந்தக் கடலைவிடவும் அந்த இருளின் இரைச்சலும் பயங்கரமும் எங்களைத் தலைமுறையாகத் துரத்தும். நாம் படையைக் கைவிடுவோம், நிலத்தைக் கைவிடுவோம். பின்னர் நம்மைக் கைவிடுவோம். இதுவே நிகழப்போகிறது.”

“இல்லை, நான் அப்படிக் கருதவில்லை. ஆனால் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பயமூட்டுகிறது. எங்களுடைய படையைக் கைவிடோம்.”

“பறங்கிப்படைகளின் இரும்புத் துப்பாக்கிகளுக்கு எதிராக எம்மால் களமாட முடியாமல் போனதைப்போல, இவ்வுலகின் நாசகாரச் சக்திகளின் அனைத்து ஆயுதங்களுக்கு எதிராகவும் நாம் போரிடுவது இயலாது. விளங்கிக்கொள்.”

பொன்னச்சியிடம் பதிலுக்கு பதில் கதைத்துக்கொண்டிருப்பது கசப்பை ஊட்டியது. ஆனால், அவள் சொல்லும் உப்புக்காட்டின் ஏழு நடுகற்களையும், வன்னியனார்களின் போர்க்கதையையும் கேட்க ஆவலோடிருந்தேன். அவளது தீர்க்கதரிசனச் சொற்களை விளங்குவதற்கு முயன்றேன். நாய்கள் அப்படியே படுத்துக்கிடந்தன. எத்தனையோ தடவை இந்தக் காட்டுக்குள் நடந்தும் தங்கியுமிருக்கிறேன். ஆனால் இன்று வேறோர் உணர்வாக இருக்கிறது. ஏழு நடுகற்களோடு, எதிரிகளோடு போரிட்டு நஞ்சருந்தி மாண்ட எனது மூதாதையின் அருகில் நின்று கதைத்துக்கொண்டிருக்கிறேன். வரலாற்றின் முலையூட்டி அவள். இந்த உப்புக்காட்டின்மீது எழுந்தருளியிருக்கும் பன்னிச்சைத்தாயின் சாயலில் பொன்னச்சி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். இருவரினது தரிசனமும் கிட்டிய பாக்கியவான் நான். பொன்னச்சி இந்த நாட்டின் கதையைச் சொல்லுகிறாள். மண்ணுக்காக உதிரமளித்த மறவர்களின் சரித்திரத்தை ஒரு கதையாகப் பாடுகிறாள். நாகப்பர் காத்தவராயன் கூத்தைப் பாடுவதைப்போல இவள் பாடும் பாடல் அவ்வளவு உணர்ச்சியாக மிதக்கிறது. நாகப்பரோடு இந்தக் காட்டிடையே நடந்த ஓர் உரையாடல் நினைவின் பரணிலிருந்து சத்தமிடுகிறது.

“எல்லாத் தெய்வங்களும் கோயிலில் இருக்க, பன்னிச்சைத்தாய் மட்டும் ஏன் இந்த உப்புக்காட்டுக்குள்ள வந்தவா?” கேட்ட என்னை நின்று பார்த்த நாகப்பர் மெல்லச் செருமினார். அவரின் வெறும் மேலில் வியர்வையைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.

“ஆதீரா, எங்களைக் காப்பாத்திற தெய்வங் களுக்குக் காட்டிலதான் இருப்பு. அது இண்டைக்கு நேற்றில்லை... எண்டைக்கும் அப்பிடித்தான்.”

“அப்ப கோயிலில இருக்கிற தெய்வங்கள் என்ன சும்மாவே?”

“எனக்குச் சும்மாதான். தெய்வம் எண்டு சொன்னால், வழிபடுகிற என்னோட இருக்க வேணும். என்னை அது தொட வேணும். நான் அதைத் தொட வேணும். பரஸ்பரம் எனக்கும் தெய்வத்துக்கும் கதைப் பேச்சு இருக்க வேணும்.”

“எங்கட புதையல் வைரவரையும் அப்படியே சொல்லுவியள்?”

“புதையல் வைரவர் அப்பிடிக் கிடையாது, எங்கட தெய்வம். போர்த்துக்கீசியரை எதிர்த்து நின்று சண்டைபோட்ட பண்டாரவன்னியன் காலத்திலருந்து இண்டைக்கு பிரபாகரன் காலம் வரையும் வைரவர் காட்டின புதுமைகள் ஏராளம்.”

“புதையல் வைரவர் என்ன இயக்கமே?”

“ஓம் உனக்குத் தெரியாதே. கேணல் புதையல் வைரவர் என்று ராங் குடுத்தது.” சொல்லிவிட்டுச் சிரித்தார்.

பொன்னச்சி உண்மையிலும் இயக்கமென்று உள்ளே நினைத்துக்கொண்டேன். அவளது கண்கள் இப்போதும் விழிப்புடன்தான் இருக்கின்றன.

“காடுகளுக்குள் இறங்கிய பறங்கிப்படைக்கும் வன்னியனார்களுக்கும் போர் மூண்டதா?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 53

``பறங்கிப்படை காட்டுக்குள் நாள்களைக் கழித்தது. வன்னிக்காடுகள் முழுதும் பறங்கிப்படைகளின் நடமாட்டம். உப்புக் காட்டினுள்ளே இருந்த ஆறு வன்னியனார்களும் பதுங்கியே இருந்தனர். தக்க நேரத்தில் ஒரு தாக்குதலைச் செய்யலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் அவர்களை எதிர்க்கவல்ல பலமான ஆயுதங்களை எங்கிருந்து பெறுவது என யோசித்தனர். அப்போதுதான் எதிரியைத் தாக்கி, அவனது ஆயுதங்களை எடுத்துத் தாக்குதல் செய்யலாமென முடிவுசெய்தனர். காட்டுக்குள் ஊடுருவித் தேடிக்கொண்டிருந்த பறங்கிப்படையினர் மூவரைச் சுற்றி வளைத்து பொறியில் மாட்டினர். அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்து, அவர்களைத் தாக்கி ஆயுதத்தைப் பயன்படுத்தும்விதத்தையும் கேட்டறிந்தனர். அடுத்தநாள் காலையில் மூன்று பறங்கிப்படையினரின் உடல்களும் காட்டின் நடுவேயுள்ள பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கிக்கொண்டிருந்தன. திகிலும் ஆக்ரோஷமும் பொங்க பறங்கிப்படை உப்புக்காட்டை ஒரு சாண் விடாமலும் சல்லடை போடுவதாகத் தீர்மானித்தது. இரண்டு நாள்கள் செல்ல, போர் மூண்டது. வன்னியனார்கள் மூவர் நடுகற்கள் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதேவேளை காட்டினுள்ளே கடுமையான மோதல் நீடித்தது. நடுகற்களைக் கட்டிமுடித்து பனை ஓலைகளாலும் காய்ந்த முட்செடிகளாலும் மறைத்துவைத்துவிட்டு ஆறு வன்னியனார்களும் போரில் ஈடுபட்டனர்’’ என்றாள் பொன்னச்சி.

“எத்தனை நாள்கள் நடந்தன போர்?”

``ஒரு நாள். அதற்குள் ஆறு வன்னியனார்களும் வீரச்சாவைத் தழுவிவிட்டனர்’’ என்று பொன்னச்சி சொல்லிக்கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கோடு எறிகணைகளை ஏவத் தொடங்கியிருந்தனர். உப்புக்காடெங்கும் எறிகணைகள் விழுந்து வெடித்தன. பொன்னச்சி என்னை அணைத்து வைத்துக்கொண்டு சொன்னாள்.

“ஆதீரா, நீ வீட்டுக்குப் போ.”

‘‘எறிகணைகள் விழுகிற நேரத்தில் எங்கே போவது, கொஞ்சம் ஓயட்டும்” என்றேன்.

``இனி இது ஓயாது. நான் சொன்னேன் அல்லவா. அந்த இருள் எங்களைக் சூழ்ந்துவிட்டது. நீ வீட்டுக்குச் செல்.’’

நான் அங்கிருந்து வெளிக்கிடத் தயாரானேன். எறிகணைகள் கூவி வெடிக்கின்றன. பொன்னச்சி என்னை அணைத்து முத்தமிட்டு “மகனே, நாம் சந்திப்போம்” என்றாள். நான் பன்னிச்சை மரத்தடிக்கு ஓடி வந்தேன். அங்கே மரமில்லை. எறிகணை விழுந்து எரிந்து சாம்பலாகியிருந்தது.

நான் ``பன்னிச்சைத் தாயே...’’ என்று கதறியபடியே உப்புக்காட்டைவிட்டு வெளியேறினேன்.

(நீளும்...)