Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 6

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அதிகாலையில் கோயிலுக்குப் பலர் வராமலிருந்தனர். ஐயரையும் என்னையும் சேர்த்தே ஐந்து பேர்தான் இருந்தோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 6

அதிகாலையில் கோயிலுக்குப் பலர் வராமலிருந்தனர். ஐயரையும் என்னையும் சேர்த்தே ஐந்து பேர்தான் இருந்தோம்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அடர்ந்த செந்திறத்திலான முசுறு எறும்புகள் அவரின் நிர்வாண உடலில் மொய்த்திருந்தன. கண்கள் சிவந்து, கூந்தல் விரிந்திருந்தது. அவரின் வலக்கை என்னை `வா’வென்று அழைத்தது. அவர் கால்களுக்குக் கீழே நின்ற கறுப்பு நாயின் நாக்கு நீல நிறத்தில் வெளியே தொங்குவதும், உள்ளே போவதுமாக இருந்தது. உப்புக்காட்டின் வாசம் கமழ்ந்தது. வந்திருப்பவர் “அதீரா, என்னட்ட வா” என்று குரல் கொடுத்ததும் அவருக்கருகில் ஓடிச் சென்றேன். கட்டியணைத்து “நீயென்னை மறந்துபோயிட்டாய்” என்று அழுதபடிக்கு நின்றவரைத் தேற்ற முடியவில்லை. அடுத்த நொடியில் நாயின் மீதேறி மறைந்தார்.

நித்திரையிலேயே வீறிட்டு அழுதிருக்கிறேன். அக்கா என்னுடைய முகத்தில் மூன்று முறை எச்சிலால் துப்பி அணைத்துக்கொண்டாள். துருப்பிடித்த கதவைத் திறப்பதைப்போல என்னுடைய கண்களைத் திறந்தேன். அக்கா திருநீற்றை அள்ளிவந்து முகமெங்கும் அப்பினாள். கொஞ்சம் தள்ளிப் படுத்திருந்த மருதன் அண்ணா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் நித்திரைக்கும் தொடர்பில்லை. எப்போதும் விழித்திருக்கும் கண்கள். பூமியின் எட்டுத் திசைகளில் நிகழும் ஒவ்வோர் அசைவையும் கணக்கெடுக்க, கடவுளால் படைக்கப்பட்டவர். இயல்புக்குத் திரும்ப சில நிமிடங்கள் தேவையாக இருந்த என்னை விளையாட்டுப்பொருளாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அக்கா கேட்டாள்.

“என்ன பேய்க்கனவு கண்டனியோ?”

“இல்லையில்லை, நெடுவல் ராசண்ணா வந்தவர். என்னை அவரோட வரச் சொல்லி கூப்பிட்டவர். செத்ததுக்குப் பிறகு இண்டைக்குத்தான் கனவில வந்திருக்கிறார்.”

“சரி படு நாளைக்கு காலமை கதைப்பம்” என்றாள் அக்கா.

ஒப்பனையற்ற இந்தக் கனவின் கருஞ்சுடரில் விறைத்து நிற்கும் தருணங்கள் என்னை நித்திரைக்குச் செல்லவிடவில்லை. விரிந்த கூந்தலோடு நாயின் மீதேறி மறைந்த நெடுவல் ராசன் என்னை உப்புக்காட்டுக்கு அழைத்துக்கொண்டேயிருந்தார். வீடெங்கும் உப்புக்காட்டின் வாசம் நீர்நிலையாய் அசைந்தது. அக்கா போர்வையால் மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள். திடீரென வயிறு பற்றியெரியப் போவதைப்போல பசியெடுத்தது. உடல் முழுக்க வியர்த்தது. `சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்’ வேதாகமத்தின் வார்த்தைகள் நினைவில் தையலிட்டு என்னை அந்தரிக்கச் செய்தன. `எல்லாக் காலத்திலும் அழுகை தங்கும் எங்களிடம் விடியற்காலமில்லையே!’ எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் எலும்புகள் உலர்ந்து போகும்படியாய் எழுமிந்தப் பசி, எல்லாவற்றையும் எரித்துவிடுவதைப்போல மிரட்டியது. என்னைப் பார்த்துக்கொண்டிருந்த மருதன் அண்ணா கேட்டார்.

“தம்பியா என்ன செய்யுது?”

ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். உடல் குளிர்ந்து தாகமெடுத்தது. மிச்சமிருந்த இரவின் மீது கண்கள் சொருகி பாயில் விழுந்தேன்.

அதிகாலையில் கோயிலுக்குப் பலர் வராமலிருந்தனர். ஐயரையும் என்னையும் சேர்த்தே ஐந்து பேர்தான் இருந்தோம். பிள்ளையாருக்கு அறுகம்புல்லில் மாலை கட்டிவரும் தெய்வீகநாதன் கொஞ்சம் தாமதமாக வந்தார். மனமெல்லாம் இந்தப் பூசையை முடித்துக்கொண்டு பன்னிச்சையடிக்கு வெளிக்கிடு என்று சொல்லிக்கொண்டே இருந்தது. உப்புக்காடே நினைவுகளில் நின்றது. அன்றைக்கு ஆசான் சண்முகவடிவேல் வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். அவருக்குப் பிடித்த ‘மூவரென இருவரென’ எனத் தொடங்கும் தேவாரத்தைப் பாடினேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 6

சுந்தரர் அருளிய இப்பதிகம் மன்னார் திருக்கேதீச்சரத்திலுள்ள சிவனைப் பாடியது என்பதால், ஒருபடி மேலான ஈர்ப்பு இருக்கிறதென்பார். பூசை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் அக்காவிடம் சொன்னேன்.

“நான் அம்மாவிட்ட போயிற்று வாறன், அவாவையும் பார்க்க வேணும் போலயிருக்கு.”

“இன்னும் ரெண்டு நாளில இஞ்ச வருவால்லே, பள்ளிக்கூடத்த விட்டிட்டு இப்ப என்ன அவசரமுனக்கு?”

“எனக்கு ஒரு மாதிரிக் கிடக்கு. என்னை விடுங்கோ. நான் போயிற்று வாறன்.”

அக்கா விட மாட்டாள் என்று தெரிந்தது. அவள் கடும்போக்குவாதி. படிப்பதைத் தவிர எதைக் கதைத்தாலும் “உனக்கு ஏன் தேவையில்லாத கதை” என்பாள்.

பூட்டம்மாவின் வீட்டுக்கு ஓடினேன். அவளுக்கு உடம்பு சுகமாகியிருந்தது. பச்சைப் பாக்கும் வெற்றிலையும் போட்டு, பொயிலையைக் கடைவாய்க்குள் வைத்து அதக்கத் தொடங்கியிருந்தாள். என்னைப் பார்த்ததும் புருவத்தைச் சுருக்கிப் பார்த்து, “என்ன வில்லங்கத்தோட வந்து நிக்கிறாய் மோனே?” என்றாள்.

“நான் பன்னிச்சையடிக்குப் போகப்போறன். அம்மாவைப் பார்க்கோணும் போலயிருக்கு. அக்கா விடமாட்டாளாம்.”

“நாடு கிடக்கிற கிடைக்கு, உன்னைத் தனிய விடேலுமே, அவள் சொல்லுறது சரிதானே.”

“முதல் ஒருக்கால் தனிய போய்ட்டு வந்தனான்தானே. எனக்கென்ன பிரச்னை சின்னப்பெடியன்தானே.”

பூட்டம்மா கதிரையில் அமர்ந்திருந்தபடி உடலை எக்கி வெற்றிலை எச்சிலைத் துப்பினாள். யாசகம் கேட்பவனைப்போல் நிற்கும் என்னைப் பார்த்து “இப்ப நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள். “என்னைப் பன்னிச்சையடிக்கு அனுப்பிவிடச் சொல்லுங்கோ” என்றேன்.

“சரி போய் வெளிக்கிடு. கொக்காவிட்ட நான் சொல்லுறன்.”

பூட்டம்மாவின் வீட்டிலிருந்து துள்ளி ஓடி வந்தேன். அக்கா மரவள்ளிக்கிழங்கு வெட்டிக்கொண்டிருந்தாள். உலை பொங்கிக்கொண்டிருந்தது. மருதன் அண்ணா வோக்மெனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் மட்டும் அவருக்குப் பிடிக்கும். ஜேசுதாஸின் குரலில் கடவுள் இளைப்பாறுவதாகச் சொல்லுவார். நான் அக்காவுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு, “பூட்டம்மா என்னைப் போகச்சொல்லி பெம்மிசன் தந்திட்டா, நான் மதியமாய் வெளிக்கிடுறன்.”

அக்கா கோபத்துடன் கையில் கிடந்த மரவள்ளிக்கிழங்கால் எறிந்து கத்தினாள்.

“ஊத்த நாயே, உனக்கு ஊர் சுத்துறதில இருக்கிற சுகம் பள்ளிக்கூடம் போகிறதில வருதில்லையே.”

அசையாமல் அப்படியே நின்றேன். அவளுக்குள் எழுந்த கோபம் புழுவைப்போல உடல் மடித்துச் சுருங்குவதை உணர்ந்தேன். இரண்டு மூன்று நாள்களில் திரும்புவதாக இருந்தாலும் பையை எடுத்து உடுப்புகளை அடுக்கினேன். மருதன் என்னைப் பார்த்து வென்றுவிட்டாய் என்று கட்டைவிரலை நிமிர்த்திக் காட்டினர். மதியம் சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினேன்.

பன்னிச்சையடி கிராமத்துக்கு நான் சென்று சேர மம்மல் பொழுதாகியிருந்தது. அம்மா என்னைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து “என்ர சிவனே, என்னடா தனிய வந்து நிக்கிறாய்?” என்றாள். அம்மாவின் வியர்வை வாசமும், அவளது அரவணைப்பும் என்னில் மெல்ல நிரம்பி, அலைக்கழியும் என் மனத்தை ஒரு மலராக்கியது. நாசியெங்கும் உப்புக்காட்டின் சுகந்தம் புலர்ந்தது. நெடுவல் ராசனின் காலடிகள் விரவிக்கிடக்கும் உப்புக்காட்டில் நிலவொளியின் பருத்த காம்புகள் வெம்மையை ஈந்து சுரந்தன. எனக்காக அம்மா விறாத்தல் கோழிக் குஞ்சொன்றை உரித்து சமைக்கத் தொடங்கியிருந்தாள்.

உப்புக்காட்டுக்குள் நுழைந்தேன். பன்னிச்சை மரம் செழித்திருந்தது. மினுங்கும் சின்னச் சின்ன காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. மரத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். காலடியில் கிடந்த மண்ணையள்ளி நெற்றியில் பூசி, “தாயே! நெடுவல் ராசண்ணா கனவில வந்து நாய் மீதேறி பறந்துபோய்ட்டார்” என்றேன். மரம் குரல் திறந்து சொன்னது.

“மகனே இந்தக் காடுள்ள வரையும் நெடுவல் ராசன் இங்குதான் இருப்பான், நீ கலங்காதே”

மரத்தடியில் அமர்ந்திருந்தபடி விசிலடித்தேன். காடெங்கும் அதிர்ந்த ஒலியின் பாதையில் வேட்டை நாய்கள் பாய்ந்து வந்தன. இளைத்துப்போயிருந்தன. என்னுடைய கைகளையும் முகத்தையும் நக்கியெடுத்தன. அவற்றை அழைத்துக்கொண்டு நடுக்காடு நோக்கி நடக்கலானேன். இரவுக்கு நிறைய சூத்திரங்கள் இருக்கின்றன. நான் அவற்றைத் தெரிந்துவைத்திருக்கிறேன். சப்தம் இலைகளில் துளிர்த்திருக்க, சத்தமிடும் உயிரினங்களைக் காட்டின் மொழியாகவே எண்ணுவேன். இரவின் சருமத்தில் காட்டின் நிழல் பரவிக்கிடக்க அதன்மீது நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 6

நாய்களைக் குளிப்பாட்ட வேண்டுமென்று தோன்றியது. துரவுக்குள் இறங்கினேன். நாய்களைக் கட்டியணைத்து நீரால் கழுவி முத்தமிட்டேன். ‘கறுப்பன்’ காதுகளில் நிறைய உண்ணிகள் இருந்தன. ஒவ்வொன்றையும் பிடுங்கி எடுத்தேன். தீனமான குரல் எழுப்பி இரவின் திவலையில் சலனம் எழுப்பியது. திடீரென எனக்கு முன்னால் யாரோ நின்று மறைவதைப் போலிருந்தது. அதுவெனது நினைப்பாக இருக்குமென்று நாய்களோடு குளித்துக் கொண்டிருந்தேன். பிறகு என் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்டது. குளித்துக்கொண்டிருந்த நாய்கள் வாலை ஆட்டிக்கொண்டு நீர் சொட்டச் சொட்ட பாய்ந்து விரைந்து ஒரு பனை மரத்தின் அடியில் போய் நின்றன. உடல் நடுநடுங்கிப் புலன்கள் மோத, நாய்களுக்கருகில் வந்தேன். நாய்கள் பனையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன. இரவின் தோகை அசைந்து கொண்டேயிருந்தது. நாய்கள் போகலாம் என்பதைப்போல உடலால் சைகை செய்தன. உப்புக்காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பினேன்.

வெளியே ஜீப் வாகனமொன்று நின்றது. அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஈர உடுப்புகளைக் கழற்றி எறிந்து சாறத்தைக் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் போராளி அக்காக்கள் மூவர் இருந்தனர். அம்மா என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். வயதில் மூப்பானவளாக இருந்தவள் தன்னுடைய பெயர் வலம்புரி என்று சொன்னாள். மற்றைய இருவருக்கும் அவள்தான் பொறுப்பாளராக இருக்கிறாள் என்பதை விளங்கிக்கொண்டேன். வலம்புரி அக்கா என்னை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு கேட்டாள், “யாழ்ப்பாண நிலைமைகள் எப்பிடி இருக்கு?”

“ஒவ்வொரு நாளும் ஆரோ ஒருத்தரத் தேடி ஆர்மிக்காரர் வருவாங்கள். சிலரைப் பிடிச்சுக்கொண்டு போறாங்கள்.”

நான் சொன்ன பதிலுக்கு வலம்புரியக்கா தனது புருவங்களை உயர்த்தினாள்.

“அவங்கள என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள்?”

“திருப்பி அடிச்சு எங்கட இடத்தவிட்டு திரத்த வேணும், அதவிட வேறென்ன வழி” என்றேன்.

அம்மா சமையல் செய்து உணவுகளை எடுத்துவந்தாள். வலம்புரியக்கா எனக்கு உணவை ஊட்டிவிட்டாள். அன்றிரவு அவர்களோடு வாகனத்தில் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்குதான் அவரை முதன்முதலில் கண்டேன். நாளை உதிக்கவிருக்கும் சூரியன் அவர் முகத்தில் தரித்திருந்தது.

(நீளும்)