Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 64

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை

கடவுள்... பிசாசு... நிலம்! - 64

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அரச படையினர் கைப்பற்றிய பகுதியைவிட்டு போராளிகள் பின்வாங்கினர். அந்தப் பகுதியை மீட்பதற்குத் திட்டங்கள் போடப்பட்டன. கட்டளைத் தளபதி நிறைய வியூகங்களை அமைத்துக்கொண்டிருப்பதாக அறிய முடிந்தது. போராளிகள் ஓர் உக்கிரமான பொழுதுக்காகக் காத்திருந்தனர். எரியுண்ட மரங்களும் வீடுகளும் புகைந்துகொண்டிருந்தன. பறவைகள் பல பொசுங்குண்டு போயின. பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்தேன். மாதப்போக்கின் வலியுழல்வு கொஞ்சம் கூடியிருந்தது. ஒவ்வொரு அணியினரும் முகங்களைப் பார்த்துக் கதைத்தோம். கிடைத்த இடைவெளியில் உடல் உபாதைகளைக் கழித்துக்கொண்டு முகங்களைக் கழுவினோம். சாப்பாடு வந்து சேர்ந்திருந்தது. மேலே வேவு விமானங்கள் இரண்டு பறந்துகொண்டிருந்தன. மரங்களுக்குக் கீழால் நடமாடினோம். நிழலில் அமர்ந்து சாப்பிடலாம் என்று தோன்றியது. நான் உட்பட சில போராளிகள் அமர்ந்திருந்து சாப்பிடத் தொடங்கினோம். எங்களோடிருந்த மூத்த போராளியொருவர் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் பைபிளை எடுத்துப் பெரிதாகச் சத்தமிட்டு வாசிக்கலானார். அந்த வரிகள் அப்பொழுதின்மீது ஆறுதலைப் பொழிந்தன. விளக்கில் வளரும் ஒளியைப் போன்று ஒப்பில்லாத இளைப்பாறலை வழங்கியது. போராளி காண்டீபன் வாசிக்கும் வரிகள் களமுனையில் ஒலித்தன.

“பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.”

“கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.”

“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 64

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.”

“காண்டியண்ணே, நீங்கள் வாசிச்சது காணும். சாப்பிடுங்கோ” என்ற சக போராளியின் குரலைக் கேட்டதும் இயல்புக்குத் திரும்பினார். பைபிளை மூடிவைத்துவிட்டுச் சாப்பிடத் தொடங்கிய அவரின் கண்ணீர், பொலபொலவென உதிர்ந்தது.

“ஏன் அழுகிறியள்?” சூழ இருந்த எல்லோரும் கேட்க நினைத்தோம். அவர் கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தார். எனக்கு அவரிடம் கதைக்க வேண்டும்போலிருந்தது. அவரை நான் `அப்பா’வென்று அழைத்தேன். அவருடைய கண்கள் என்னுடைய தந்தையை ஞாபகப்படுத்தின.

“சொல்லுங்கோ பிள்ளை. நான் அழுதது என்னத்துக்கு எண்டு கேக்கப் போறியளா?”

“இல்லை அப்பா” என்று சொன்னேன்.

“பின்ன என்ன கேக்க நினைச்சனியள், கேளுங்கோ பிள்ளை.”

“ஒண்டுமில்லை. உங்களோட கதைக்கவேணும் போல இருந்தது. அதுதான்.”

அவர் சிரித்துக்கொண்டு “நல்ல விஷயம். என்ன... சண்டைக்குப் புதிசுபோல. ஒண்டுக்கும் பயப்பிடாதையும். நல்லதுதான் நடக்கும்” என்றார்.

“நான் பயப்பிடேல்ல. ஆனால் ஒருமாதிரி இருக்கு.”

“அதுதான் பயம். பயமெண்டால் நடுங்கி அழுகிறது இல்லை. எங்கட மனம் வெறிச்சுப்போனாலே பயமென்றுதான் அர்த்தம்.”

“அது எப்பிடி பயமாகும்?”

“நான் சண்டைக்களத்தில பத்து வருஷ அனுபவம் கொண்ட ஆள். உள்ளுக்குள்ள எல்லாம் வெறிச்சுப் போய்டும். அதைத்தான் நான் பயமெண்டு சொல்லுறன்.”

“நீங்கள் இப்ப எதுக்கு அழுதனியள்?”

“நான் எங்க அழுதனான். என்னையறியாமல் கண்ணீர் பொங்குது. உள்ளுக்குள்ள பேரலையோட கொந்தளிப்பும் சத்தமும் எனக்கு மட்டும்தான் கேக்குது. கண்ணீர் அதோட சாரல். ஆனால், நான் அழேல்ல. அழுகிறது ஒண்டும் மானக்கேடானா விஷயமும் கிடையாது. அழத் தெரிந்த மனுஷனுக்குத்தான் அழுகையை ஒழிக்கும் துணிச்சல் வரும்” எனச் சொல்லி முடித்தார். அவரது பைபிள் மினுக்கமான உறைபோடப்பட்டிருந்தது. நான் அதைத் திறந்து பார்த்து, வருகிற பக்கத்திலுள்ள வாக்கியங்களை வாசிக்க ஆவலாயிருந்தேன். முதல் விரிப்பில் வந்த பக்கத்தில் இந்த வாக்கியம் எனக்குப் பெலமாயிருந்தது.

“நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.”

மீண்டும் மூடிக்கொண்டேன். சின்னஞ்சிறுமியாக இருந்த நாள்களில், பாடப்புத்தகத்தைத் திறந்து மூடி வருகிற பக்கத்திலுள்ளவற்றை வாசிப்பதைப்போல பைபிளையும் ஆக்கிக்கொண்டேன். மரத்தின் கீழே சாத்திவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து மடியில் வைத்தபடி மீண்டும் பைபிளைத் திறந்தேன். அப்போது இந்த வாசகம் எனது கண்ணுக்குப்பட்டது.

“என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக் கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.”

இந்த வசனத்தை எங்கள் கட்டளைத் தளபதி சொல்வதைப்போல எண்ணிக்கொண்டேன். காண்டீபனிடம் ‘இந்த பைபிளை நான் எடுத்துச் செல்லவா?’ என்று கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். அது தன்னோடு இருக்க வேண்டுமென அவர் ஆழமாக விரும்பினார். நான் இறுதி தடவையாகப் பைபிளை மூடித் திறந்தேன்.

“நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” எனும் இந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் வாசித்தேன். உளவுந்தல் அளிக்கிறது. போராடும் என்னுடைய வழியை உறுதிசெய்கிறது. நான் இந்த வரியை மட்டும் மனப்பாடம் செய்துகொள்ள எத்தனித்தேன். இந்தத் தேசம் முழுவதையும் வன்கவர்ந்து எங்கள் சனங்களைக் கொன்றொழிக்கும் அக்கிரமக்காரர்களோடு நாங்கள் செய்யும் யுத்தம், வாழ்வதற்கான அடிப்படைப் போராட்டம் என்பதையும் நினைத்துக் கொண்டேன். காண்டீபன் பைபிளை வாங்கிக்கொண்டு தன்னுடைய இடத்துக்கு நகர்ந்தார். முன்னரங்கம் அமைதியாக இருந்தது. ராணுவ அணியினர் மாற்றப்படுகின்றனர் என்கிற உளவுச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. அப்படியெனில் மீண்டும் போர்க்களம் தீக்கழல் அணிந்து நகரப்போகிறது. நான் பங்கருக்குள் இறங்கினேன்.

அம்மா, அம்பிகா, நான் மூவரும் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தோம். வெவ்வேறு ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த சனங்களும் குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். அம்மா கொஞ்சம் வேகமாக நடக்கத் தொடங்கினாள். அம்பிகாவும் சளைக்காமல் வேகமாக நடக்கத் தொடங்குகையில், குளத்தை அடைந்திருந்தோம். கொஞ்சம் சனமாகத்தான் இருந்தது. “தண்ணியைக் கலக்கிச் சேறாக்கிப் போடுதுகள்” என்று அம்மா நொந்துகொண்டாள். அம்மா குறுக்குக் கட்டை கட்டிக்கொண்டு நீரில் இறங்கினாள். அம்பிகா, அணிந்திருந்த பாவாடை சட்டையோடு அப்படியே இறங்கினாள். நான் கொஞ்சம் தள்ளிப்போய் நீரில் குதித்தேன். அம்மா தண்ணீரில் மூழ்கி எழும்பினாள். ஊத்தை உரஞ்சி குளித்து முடிக்க அவளுக்குப் பத்து நிமிஷம் போதுமானதாக இருந்தது. அம்பிகாவும் அப்படித்தான். ஆனால் அவளுக்கு இந்தக் குளக் குளிப்பில் அதிகம் பேர் இருந்தால், உடன்பாடு கிடையாது. “ஆதீரா… எவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு என்றாலும் நீங்களும் நானும் மட்டுமே நிண்டு குளிக்க வேணும்” என்பாள்.

சில நாள்களுக்கு முன்பு, அம்பிகாவும் நானும் இடையில் தனியாகச் சந்தித்துக்கொண்டோம். பூட்டம்மா வெளியே படுத்திருந்தாள். ஆழ்ந்த நித்திரையில் அவளிருந்தாலும் எனக்கு பயமாக இருந்தது. அம்மா வீட்டில் இல்லை. கிளிநொச்சியிலுள்ள சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்காகப் போயிருந்தாள். அன்றைக்குக் காலையில் அம்பிகா வீட்டுக்கு வந்திருந்தாள். நான் அவளுக்குத் தேத்தண்ணி போட்டுக் கொடுத்தேன். அவள் வீட்டுக்குள் வந்து ஒரு பூனையைப்போலச் சுழன்றுகொண்டிருந்தாள். அவளது கண்களில் கொடிவிட்டேறிய பூக்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். காதல், தொட்டிமீனைப்போல அசையும் நீர்ப்பரப்பின் அடியில் தனக்கென ஓர் அணைப்புக்காகக் காத்திருக்கும். அம்பிகா அப்படித்தான் காத்திருந்தாள். நான் அவளை அணைக்கும் அந்தக் கணமொன்றுக்காகக் கனத்திருந்தாள். அருகில் தனது தலைவனிருந்தும் ஸ்பரிசிக்க இயலாதவள் பருத்தும், பிரிந்தால் மெலிந்தும் போய்விடுவாள்போலும்! அம்பிகா அடம்பிடித்தாள். அவளுக்கு இப்போது அணைப்பின் வழியாகப் பெருக்கெடுக்கும் முத்த நுரைகளை அளிக்க வேண்டும். நான் மெல்ல அவளை அணைத்துக்கொண்டேன். அவள் என்னை இறுகப் பற்றிக்கொண்டு சொன்னாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 64

“உங்கட மேல் சரியாய்க் கொதிக்குது.”

“உம்மட மேலும் கொதிக்குதுதானே” என்றேன்

“அப்பிடித்தான் அது கொதிக்கும்” என்று சொல்லியபடி, தன் இதழ்களை என்னில் இணைத்துக்கொண்டு கண்களை மூடி கிறக்கம் கொண்டு சொன்னாள்.

“உடம்பு மட்டுமில்ல, உங்கட எச்சிலும் கொதிக்குது.”

அவளை முத்தமிட்டு என்னுடைய கண்களை அவளுக்குள் ஊற்றிக்கொண்டு சொன்னேன்.

“உம்மட வாசம், பன்னிச்சைக் காட்டோடது.”

அவள் என்னை, இதழ்களை இன்னும் இன்னும் ஈரத்தில் ஆழ்த்திக்கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். நான் பயந்துபோய்விட்டேன். அவளைக் கொஞ்சம் இறுக்கமாக என்னிலிருந்து பிரித்தெடுத்து “ஏன் அழுகிறியள்” எனக் கேட்டேன்.

அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு “நான் அழேல்ல, கண்ணீர் வந்திருக்கு” என்றாள்.

“ஒருத்தர் அழாமல் எப்பிடிக் கண்ணீர் வரும்?”

“தெரியேல்ல. ஆனால் உண்மையாக நான் அழேல்ல. அக்கணம் மனசுக்குள்ள அப்பிடியொரு ஆறுதல் இருந்தது. எல்லாமும் கரைஞ்சு ஒளி பெருகிய வெளியில நிக்கிற மாதிரி உணர்ந்தனான்.”

“அப்ப இனி லாம்பெண்ணை இல்லாட்டி, நாங்கள் ரெண்டு பேரும் கொஞ்சிக் கொண்டிருந்தால் வெளிச்சம் வந்திடும், அப்பிடித்தானே?” என்றேன்.

அம்பிகாவுக்கு அந்தப் பகிடி பிடிக்கவில்லை. முகத்தை மூஞ்சூறு மாதிரி ஆக்கிக்கொண்டு வெளியேறினாள்.

அம்மா குளத்தைவிட்டு வெளியேறி, உடுப்பை மாற்றிக்கொண்டிருந்தாள். நானும் கரைக்கு வந்திருந்தேன். திடீரென எங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு இரண்டு குண்டுகள் வெடித்தன. இரைச்சல் எல்லாவற்றையும் இருட்டிவிட்டது. அம்மாவின் குரல் மட்டும் ஒரு அசரீரியைப்போலக் கேட்டது.

“கிபிர் குத்துறான் எல்லாரும் தண்ணிக்குள்ள ஓடுங்கோ...”

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism