Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 65

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மா சமைத்து முடிக்கும்வரை இருவரும் நிறைய கதைத்துக்கொண்டிருந்தோம். அவனுக்கு எதையும் பலவிதங்களில் அணுகுவதில் சிக்கல் இருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 65

அம்மா சமைத்து முடிக்கும்வரை இருவரும் நிறைய கதைத்துக்கொண்டிருந்தோம். அவனுக்கு எதையும் பலவிதங்களில் அணுகுவதில் சிக்கல் இருந்தது.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

வான்படைத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் இல்லை. குளத்தை ஒட்டியிருந்த காட்டுக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அந்தக் காட்டுக்குள் போராளிகளின் முகாமும் இருக்க வாய்ப்பில்லை என்றே அம்மா சொன்னாள். ஆனால் அரசோ எந்த இலக்குமற்று தாக்குதலை நடத்தியிருக்காது என்று அம்மாவுக்கு உணர்த்தினேன். நாங்கள் குளத்திலிருந்து வீட்டுக்குப் போகிற வழியில் நின்றுகொண்டிருந்த சனங்களும் கிபிர் தாக்குதலைப் பற்றியே கதைத்துக்கொண்டிருந்தனர். அம்பிகா எனக்கு நெருக்கமாக நடந்து வந்தாள். எனதருகில் அவள் இருக்கையில் காலத்தின் கசப்பும், நோவும் என்னைச் சற்று அழுத்தாமல் இருப்பதாக உணர்கிறேன். ஒரு வீட்டின் முகப்பு வாசலில் நிற்கும் பலா மரத்தின் அடிவரை காய்கள் தொங்குகின்றன. இன்னும் கொஞ்சம்தான் பழுக்க வேண்டுமெனக் காய்கள் அனுப்பும் வாசனையே அப்போதைக்குப் போதுமானதாக இருக்கிறது. நாங்கள் மூவரும் சிறிய பள்ளமொன்றைக் கடந்து திரும்பினால் வீடு வந்துவிடும். கிபிர் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட போராளிகள் காயப்பட்டிருப்பதாகச் சனங்களுக்குள் ஒரு செய்தி பரவலாயிற்று. அது உண்மையா, பொய்யா என்பதை அறிய முடியாது. எல்லாச் செய்திகளும் ஊகங்களாலும், நம்பிக்கையாலும், விருப்பு வெறுப்புகளாலும் உருவாகிக்கொண்டிருந்தன. நாங்கள் பள்ளத்தை இறங்கிக் கடந்தால் வருகிற தேத்தண்ணிக் கடையில், மணியன் நின்றுகொண்டிருந்தான். எங்களைப் பார்த்ததும் முன்னே ஓடிவந்து சேர்ந்துகொண்டான். அம்மா கேட்டாள்.

“கொப்பா எப்பிடி இருக்கிறார்?”

“நல்ல சுகம். வள்ளிபுனத்திலவுள்ள கடையொண்டில வேலைக்குப் போறார்.”

“நீ என்ன இந்தப் பக்கம்?”

“உங்கள் எல்லாரையும் பார்க்கத்தான் வந்தனான்” மணியன் சொன்னான்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 65

அம்மா அவனை வீட்டுக்கு வரும்படி அழைத்துக்கொண்டு வந்தாள். அவன் எனக்கும் அம்பிகாவுக்கும் சேர்த்து ஒரு புன்னகையைத் தந்து முகத்தை மலர்த்தினான். மணியன் வீட்டுக்கு வந்து பூட்டம்மாவோடு கதைத்துக்கொண்டிருந்தான். அம்பிகா தனது வீட்டுக்குப் போய்விட்டாள். அம்மா உள்ளே சமைக்கத் தொடங்கியிருந்தாள். மணியனையும் நின்று சாப்பிட்டுப் போகுமாறு அம்மா இட்ட உத்தரவு, மணியனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்க வேண்டும். கால்களை நீட்டி அமர்ந்தவாறு பூட்டம்மாவிடம் கதையளந்தான்.

“நீங்களெல்லாம் போராடியிருந்தால் நாங்கள் கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை” என்று மணியன் சொன்னதும், “நாங்கள் அடிவாங்கிப் போராடினதோட தொடர்ச்சிதான் இப்ப அடிகுடுத்து போராடுறதும்” என்றாள். மணியன் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. நான் அவனுக்கருகில் போய் அமர்ந்தேன். அவன் போராளியான தடயங்கள் தெரிந்தன. மாற்றங்கள் இன்னும் கூடியிருந்தன. ஆனால், அவனது கழுத்தில் குப்பியோ, இலக்கத் தகடோ இல்லாமல் இருந்தது. நான் மணியனிடம் கேட்டேன்.

“இண்டைக்கு உனக்கு என்ன விடுப்பா?”

“இல்லையில்லை. எனக்கு எப்பவுமே வெளியாலதான் வேலை” மணியன் சொன்னான்.

அம்மா சமைத்து முடிக்கும்வரை இருவரும் நிறைய கதைத்துக்கொண்டிருந்தோம். அவனுக்கு எதையும் பலவிதங்களில் அணுகுவதில் சிக்கல் இருந்தது. இயக்கத்தினால் சாதிக்க முடியுமென மணியன் சொன்னவை பல வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருந்தன. அவனை நான் மறுக்க எண்ணவில்லை. ஆனால் அவனிடம் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை என்று அடுத்த கணமே தோன்றியது. பூட்டம்மா இடையிடையே சில போராளிகளின் பெயர்களை உச்சரித்து நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தாள். அம்மா உணவைப் பரிமாறினாள். சோறும், வெந்தயக் குழம்பும், மிளகாய்ப் பொரியலும் மணியன் ருசித்துச் சாப்பிட்டான். உறைப்பு தாங்க முடியாமல், கண்கள் கலங்கி அரைச் சொம்புத் தண்ணீரைக் குடித்து முடித்தான்.

அடுத்த நாள் காலையில் அம்பிகாவின் வீட்டுக்குப் போனேன். அவள் நித்திரையிலிருந்தாள். தலைசீவிக்கொண்டிருந்த அவளுடைய தாயார் என்னைக் கண்டதும், அமருமாறு சொன்னாள். புன்னகைத்துக்கொண்டு வேண்டாம் என்றேன். என்னுடைய குரலைக் கேட்டதும் விழித்தெழும்பிய அம்பிகா வெளியே வந்து கண்களைக் கசக்கினாள். பிறகு என்னைப் பார்த்து, “காலமை வெள்ளனவே இந்தப் பக்கம் காத்து அடிச்சிருக்கு, என்ன விஷேசம்?” என்று கேட்டாள்.

“நான் சாமத்தியப்பட்டிட்டன், அதைச் சொல்லிட்டுப்போக வந்தனான்” என்று சொன்னதைக் கேட்ட அம்பிகாவின் தாயார் விழுந்து விழுந்து சிரித்தாள். அம்பிகா கொஞ்சம் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னாள்.

“அப்ப அதில போயிருங்கோ, முதல் தண்ணி வார்த்துவிடுறன்.”

இரண்டு வாளிகள் நிறைய பாத்திரங்கள் கழுவுவதற்காக நிரப்பிவைக்கப்பட்ட தண்ணீர் இருப்பதைக் கண்டேன். அம்பிகா ஒரு நீண்ட கொட்டாவியைவிட்டு மீண்டும் கேட்டாள்.

“பகிடி விடாமல் என்னவெண்டு சொல்லுங்கோ.”

“சும்மா உம்மள பார்த்திட்டுப் போகலாமெண்டு வந்தனான்.”

“அதுசரி, நாங்கள் பார்த்தே ரெண்டு நூற்றாண்டு முடிஞ்சு போச்சா என்ன!”

“நக்கலா?”

“இல்லை, விக்கல். இருங்கோ... முகம் கழுவிட்டு வாறன். தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ.”

“இல்லை வேண்டாம், நான் வீட்டில போய் குடிக்கிறன்.”

“நான்தான் போடப்போறன், நிண்டு குடிச்சிட்டுப் போங்கோ.”

“அதுதான் சொல்லுறன், நான் வீட்டில போய் நல்ல தேத்தண்ணி குடிக்கிறன்.”

“சரி போய் குடியுங்கோ. உங்கட வீட்டு நல்ல தேத்தண்ணியை. ஆர் வேண்டாமெண்டது” அம்பிகா கோபித்துக்கொண்டு நடந்தாள். அவளது கோபத்துக்கு மஞ்சள் வாசனை. அது மெல்ல மெல்ல உணருகிற ஒருவரை அழகாக்கிவிடும். பல்லைத் தீட்டி முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவளுக்காகக் காத்திருந்தேன். அவள் ஆக்கித் தந்த தேத்தண்ணி, அந்தக் காலைப்பொழுதை நறுமணத் தேயிலை ஆக்கியிருந்தது. அம்பிகா நேற்றைவிடக் கொஞ்சம் பருத்திருக்கிறாள் என்றே தோன்றிற்று. அவள் கண்களால் என்னைப் பருகிக்கொண்டிருந்தாள். விழித்தெழுந்த அவளது படுக்கையில் பரவி நிற்கும் உடற்சூட்டின் வெப்பத்தை என்னால் உணர முடிந்தது. அடுப்படியில் இருக்கும் தாயாரைப் பார்த்தேன். அவள் வேலையாக இருக்கும் சிறு நொடியில் அம்பிகாவை இழுத்து அணைத்து முத்தமிட்டு விலகி அமர்ந்தேன். கணத்தின் ஒவ்வோர் இழையிலும் வலை பின்னிக்கொண்டிருந்தது காதல்.

‘இளவெயினி வீரச்சாவடைந்தாள்’ என்ற செய்தி என்னை அடைந்தபோது கண்ணீர் அடைத்துவிட்டது. மனத்தை வெறுமையும் சொல்லவியலாத அவலமும் சூழ்ந்து தாக்கியது. ‘லெப்டினன்ட் இளவெயினி’ ஆகியிருந்த எனது பாசறைத் தோழமையின் வித்துடலை நான் காண வேண்டும். துயிலுமில்லம் வரைக்கும் அவளோடு சென்று வழியனுப்பிவைக்க வேண்டும். பூம்பாவைக்கும் தெரிந்திருக்கும். அவளால் இந்தச் செய்தியைத் தாங்க முடியாது. பயந்துகொண்டு அலறக்கூடும். அவளைத் தொடர்புகள் மூலம் அடைய முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் நேற்றைக்கு நடந்த தாக்குதலில், இயக்கத்துக்குக் கடுமையான இழப்பு. பல்குழல் எறிகணை வீச்சுகளுக்கும், உலங்கு வானூர்திகளின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க முயன்ற போராளிகள் பலர் வீரச்சாவைத் தழுவினர். பூம்பாவை என்னுடைய தொடர்புக்கு வந்திருந்தாள். அவளும் நானும் இளவெயினியின் வீரச்சாவு வீட்டுக்குச் சென்று திரும்ப வேண்டுமென கட்டளைப் பணியகத்துக்கு அறிக்கை எழுதினோம். அதிர்ஷ்டவசமாக அன்றைக்கு மாலையில் ஒப்புதலளிக்கப்பட்டது. களமுனையிலிருந்து பின்னுக்கு நடந்து வந்தோம். போர்க்களப் பணிக்காக வந்திருந்த உதவிப்படையினர் அங்கிருந்தனர். நாங்கள் அவர்களைக் கடந்து, போராளிகளின் இருப்பிடத்துக்குச் சென்று ஆயத்தமானோம். எங்களைக் கிளிநொச்சி வரை கொண்டு சென்று விடுவதற்கு வாகனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து இன்னொரு வாகனமெனத் திட்டமிடப்பட்டிருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 65

அடுத்த நாள் காலையில், இளவெயினியின் வித்துடல் துயிலுமில்லம் எடுத்துச்செல்லப்படவிருந்தது. இரவு முழுக்க அவளது வித்துடலின் முன்னே நின்றுகொண்டிருந்தேன். அவள் புலிச்சீருடையில் நிமிர்ந்து கம்பீரம் எழுமாறு கிடத்திவைக்கப்பட்டிருந்தாள். தலைமாட்டில் தீபம் எரிகிறது. அதன் மெல்லிய அசைவில் நெருப்பின் தீரம். கண்ணீராலும், கதறலாலும், ஆற்ற முடியாத பிரிவாலும் உற்றாரும் உறவினரும் கலங்கிக்கொண்டேயிருந்தனர். லெப்டினன்ட் இளவெயினியின் வித்துடல் அவளது வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, ஊரிலுள்ள பள்ளிக்கூட கேட்போர் கூடமொன்றில் வைக்கப்பட்டது. படித்த பள்ளிக்கூடத்துக்கு மாவீரராகி இளவெயினி வந்துசேர்ந்திருந்தாள். அங்கே நடக்கும் வீரவணக்கக் கூட்டத்தில் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் பேசி முடித்து எங்கள் இருவரையும் பேச அழைத்தார். முதலில் பூம்பாவை இளவெயினியுடன் தனக்கு ஏற்பட்ட நட்பையும் அன்பையும் பகிர்ந்துகொண்டாள். வார்த்தைகள் அறுந்து துடிக்கும் வாலென, ஒழுங்கற்று தளர்ந்து கண்ணீரில் மூச்சிழுத்து திணறி வெளியேறின. பூம்பாவைக்கு மூச்சடைத்தது. அவள் மயக்கமுற்று விழப்போகையில் தாங்கிக்கொண்டேன். பூம்பாவையை வேறுசில போராளிகள் பார்த்துக்கொண்டனர். என்னை இளவெயினி பற்றிப் பேச அழைத்தார்கள். அவளது வித்துடலுக்கு அருகில் நின்றபடி, கையில் ஒலிவாங்கியைப் பிடித்துக்கொண்டேன். வார்த்தைகள் இல்லை. அழுகையில்லை. எதைக்கொண்டு எதைச் சமன் செய்ய இயலும். நினைவுகளைத் தொகுக்கத் தொடங்கினேன். ஒன்றாய்க் கூடி எழுந்து வருகையில், இழப்பின் உண்மை அதனைத் தகர்த்துவிடுகிறது. பயிற்சி முகாம், கடுமையான தண்டனை, அழுகை, பாடல்கள், பாராட்டுகள் என தருணங்கள் அணிவகுக்கின்றன. போர்க்கள அனுபவங்கள் பின்னே ஓடிவருகின்றன. அழ வேண்டுமென ஆசைப்படுகிறேன். ஆனால் இயலவில்லை. இதயத்துக்கு நெருக்கமான ஒருவரை இழந்து நிற்கையில், அழ முடியாமல் போகும் வாழ்வு பற்றி யாரிடம் முறையிட வேண்டுமென எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் அழுதால் சுகமெனத் தோன்றுகிறது. காலில் சிதல் முற்றி கழுத்தில் நெறி கட்டுவதுபோல இந்த வலி உடலில் மட்டிலுமா, உயிர் வரை நொம்பலமாய் நங்கூரமிட்டுள்ளதே! என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் அவளது வித்துடலை முத்தமிட்டு “போய்ட்டு வா...” என்று சொன்னேன். மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியது. இளவெயினியின் வித்துடல் துயிலுமில்லத்தை நோக்கிப் புறப்பட்டது.

அம்மாவும், நானும், பூட்டம்மாவும் கதைத்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய வீட்டுக்கு முன்பாக உந்துருளியில் வந்த ஒருவர் அப்பாவின் பெயரைச் சொல்லி விசாரித்தார். அம்மா, “உள்ள வாங்கோ” என்று கூப்பிட்டார். வந்தவர் குரலில் ஒருவிதக் கலக்கம் இருந்தது. தன்னை அந்தப் பிரதேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் எதற்கோ தயாராகிக்கொண்டு என்னைத் தனியாக அழைத்தார். நான் என்ன விஷயமென அறியும் ஆவலோடு அவருக்கருகில் போனேன்.

மழை வலுத்துப் பெய்துகொண்டிருந்தது!

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism