Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 7

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

வலம்புரியக்கா சொன்னது அப்போதுதான் எனக்கு உறைத்தது. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசையில் தோன்றிய கனவுதான் எனக்குள் வந்துபோயிருக்கிறதென உணர்ந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 7

வலம்புரியக்கா சொன்னது அப்போதுதான் எனக்கு உறைத்தது. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசையில் தோன்றிய கனவுதான் எனக்குள் வந்துபோயிருக்கிறதென உணர்ந்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

வானம் தெரியாதபடிக்கு உருவாக்கப்பட்ட அடர்பச்சை நிறத்திலான கூரைகள்கொண்ட அந்த முகாமில், கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருந்தன. பெரிய அரங்கமொன்றில் எல்லோரும் கூடியிருந்தனர். போராளிகள் நிறைந்திருந்தனர். இரவு மகிமையான ஒரு செடியைப்போல வளர்ந்து கொண்டேயிருந்தது. வலம்புரியக்கா தனக்கருகிலுள்ள கதிரையில் என்னை அமரவைத்தாள். புலிச்சீருடையில், முகக்களை தோன்றிய ஒவ்வொரு மனிதரும் புன்னகைத்தபடி இருந்தனர். தேனிசை செல்லப்பாவின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அவருடைய குரலில் நிறைந்திருக்கும் ஜீவன், அப்பழுக்கற்ற புரட்சியின் வழிகளில் எதிரொலிக்கும் வல்லமைகொண்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கவிருப்பதாக மீண்டும் மீண்டும் இனிய குரலில் பெண் போராளி ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அவரைக் காணவில்லை. பைபிளில் தாவீதின் சங்கீதம் பகுதியில் வருகிற வாசகம் நினைவில் சுரந்தது. `உமது முகத்தை எனக்கு மறையாதேயும், நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப் போடாதேயும், நீரே எனக்குச் சகாயர், என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும், என்னைக் கைவிடாமலும் இரும்.’ அப்போது வலம்புரியக்கா கேட்டாள்.

“ஆரைத் தேடுகிறாய்?”

“உலகம் யாரைத் தேடுகிறதோ, அவரைத்தான்.”

“அவர் இங்கெல்லாம் வர மாட்டார்.”

“நாங்கள் வரும்போது அந்தக் கொட்டிலடியில் நின்றுகொண்டிருந்தாரே...”

“இல்லை, அது உன்ர பிரம.”

வலம்புரியக்கா சொன்னது அப்போதுதான் எனக்கு உறைத்தது. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசையில் தோன்றிய கனவுதான் எனக்குள் வந்துபோயிருக்கிறதென உணர்ந்தேன். சங்கநாதம் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவந்த நிறத்தில் மஞ்சள் ஊறிய ஒளி, மேடையில் படர்ந்திருந்தது. கலைஞர்களின் ஒவ்வோர் அபிநயத்திலும் கண்ணீரைக் கோரும் அசைவுகளும் துடிப்புகளும் இழைந்திருந்தன. பார்வையாளர்கள் உறைந்த தங்களது கண்களை அசைக்க முடியாது தவித்தனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்து, அங்கிருந்து எல்லோரும் கலைவதற்கு விடியற்காலை ஆகியிருந்தது. நித்திரை கண்களை நிறைத்து உடலைச் சோர்வுக்குள்ளாக்கியது. வலம்புரியக்கா என்னை வாகனத்தில் ஏற்றிவந்து வீட்டில் இறக்கும்போது அதிகாலை ஐந்து மணியாகியிருந்தது. அடுப்படிக் கூரைக்குள்ளால் புகை கசிந்தது. அப்பம் சுட்டுக்கொண்டிருந்த அம்மா வலம்புரியக்காவை அடுப்படிக்குள் அழைத்து, சுடச்சுட அப்பம் சாப்பிடக் கொடுத்தாள். நன்றாக விடியும் வரை காத்திருந்தேன். மழைத்தூற்றலோடு கிழக்கு திசையில் எழுந்த சூரியனின் வெம்மை உடலுக்கு இதமாக இருந்தது. வெறும் வயிற்றோடு உப்புக்காட்டுக்குள் இறங்கினேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 7

வெந்துயர் தீர்க்கும் தாய்மையோடு காடு குளிர்ந்திருந்தது. பனியின் சிறு தும்மல் படர்ந்ததைப்போல இலைகளில் சொட்டும் நீர்த்துளிகள் போதம் அளித்தன. பன்னிச்சை மரத்தின் முன்னே அமர்ந்தேன். இன்று நான் புகும் வேட்டைக்கு அருள் பாலிக்கவேண்டுமென பிரார்த்தனை செய்தேன். நீண்ட வால் கொண்ட குருவியொன்று மெல்லிசை உருக பாடிக்கொண்டிருந்த மொழியெனக்கு விளங்கவில்லை. அந்தக் குருவியின் கண்கள் நீல நிறத்தில் மின்னின. சின்னஞ்சிறு அலகின்மீது தவிட்டு நிறத்தில் ஒரு பூ வளர்ந்திருந்தது. கண்களை அகலத் திறந்து ரசித்தேன். பன்னிச்சை மரத்திலிருந்து எழுந்து நீண்டுகிடக்கும் காட்டினுள்ளே நடக்கலானேன். எனது நெஞ்சம் முழுக்க நெடுவல் ராசன் நிறைந்திருக்கிறார். அவரின் பெயரைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். எப்போதும் என்னோடு நடந்து வருகிற அரூபக் காவல் தெய்வம் நெடுவல் ராசன். சுடுகாட்டின் சாம்பலை மேனியெங்கும் பூசி நின்றாடும் எம்பிரானைப்போல, நெடுவல் ராசனைப் பூசிக்கொண்டேன். காடு கம்பீரமான அவரின் காலடித் தடங்களை முதுசமாய்த் தாங்கி நிற்கிறது.

முதன்முறையாக நித்திரையில் சுக்கிலத்தை இழந்திருந்தான் மணியன். கனவின் கட்டற்ற களிப்பில் சரீரம் எரிந்து நனைந்து எழுச்சிகொண்டது. கனவின் நினைவுகள் தாழ்ந்து மறைந்ததும் பூமியில் வெளிச்சம் உண்டாயிற்று. புள்ளினங்களின் சப்தத்தோடு கண்களை விழித்தான். கட்டியிருந்த சாறத்தில் சுக்கிலத்தின் கறைகள் காய்ந்துபோயிருந்ததைத் தொட்டுப் பார்த்தான். அவனுக்குள் சொல்ல முடியாத எண்ணங்கள் அலர்ந்தன. குளிர்ச்சியும் வெம்மையும் அவனுடலில் தளிர்த்து நின்றன. படுக்கையைவிட்டு எழும்புவதற்கு முன்னர் கறைபடிந்த பகுதியை உள்ளே மடித்து சாறத்தைக் கட்டினான். பற்பொடியை இடதுகையின் உள்ளங்கையில் கொட்டிக்கொண்டு கிணற்றடிக்கு நடக்கலானன். ரகசிய உறுப்பிலிருந்த சின்னஞ்சிறு கிலேசத்தை அப்போதுதான் உணர்ந்தான். கால்களுக்கு இடையே கிளர்ச்சியூட்டும் பாரம். பலம் குன்றியதாய் உணரச்செய்யும் நோவு. அதற்கு முன்னர் மோந்திருக்கா புதிய மணம். அவனுக்குள் வெளிச்சம் மிகுதியாகப் பரவி சிறு புன்னகையாய் வெளியேறியது. தீட்டிய பற்களைக் கிணற்றுநீரில் கொப்பளித்துத் துப்பினான். சுக்கிலம் கறையாகப் படிந்திருக்கும் சாறத்தைக் கொஞ்சம் இழக்கிக்கட்டி குளிக்கத் தொடங்கினான். வானம் தளும்பி அசையும் கிணற்றுக்குள் மூழ்கியது வாளி. மணியனுக்குள் பரிபூரணமாய் ஒரு ருசி தேடும் பசி சுடராய் ஆவேசம்கொண்டு திசையெங்கும் நாவைச் சுழற்றியது.

அவனது தந்தையார் ராமலிங்கம் பள்ளிக்கூடத்தின் பராமரிப்பாளராக இருந்தார். ஒரு நாள் தவறாமல் வேலைக்குச் சென்றுவிடுவார். மணியனுக்கும் படிப்புக்கும் ஆகாது. பள்ளிக்கூடம் போவதை மனதளவில் நிறுத்திக்கொண்டான். கிழமையில் மூன்று நாள்கள் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு, வகுப்பின் பின் இருக்கையில் இருந்துவிட்டு வருவான். ராமலிங்கம் எத்தனை தடவை சொன்னாலும் படிக்க மாட்டேன் என்பான். கொஞ்ச நாள்களில் வேலைக்குப் போகத் தொடங்கினான். அடர்ந்த காட்டுக்குள் பட்டுப்போய் நிற்கும் மரங்களை விறகாக்கி, மரமடுவத்துக்கு ஏற்றிவிடும் அந்த வேலை இவனுக்குப் பிடித்திருந்தது. தன்னிலும் பார்க்க மூப்புடையவர்களுடன் கிடைத்த ஸ்நேகமும் உரையாடல்களும் இவனின் கண்களைக் கட்டிற்று.

கடவுள்... பிசாசு... நிலம்! - 7

முதன்முறையாக ஒரு பீடியை ஊதி முடித்து தண்ணீர் குடித்தான். வேறொரு நாளில் காட்டுக்குள் கொண்டு சென்று கள்ளருந்தினான். மணியன் ஒரு குடிகாரனாக ஆகிவருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமலிங்கம் ஒருநாள் நாய்ச் சங்கிலியால் அவனை அடித்துத் துவைத்தார். மணியன் உடலில் அச்சிடப்பட்ட சங்கிலி வளையங்கள் சிவந்து கண்டிப்போயிருந்தன. ராமலிங்கம் வீட்டைவிட்டு வெளியேறி பள்ளிக்கூடத்துக்குப் போனார். மணியன் கடைக்குச் சென்று ஒரு பீடிக்கட்டை வாங்கி வந்து வீட்டில் வைத்துப் புகைத்தான். வலி மிகுந்திருந்த அக்கணமும் உடலும் கொதித்தது. வீட்டின் கோடிப்பக்கத்தில் சடைத்து வளர்ந்து நிற்கும் நிழல்மரவள்ளி மரத்தின் கீழே போய் நின்றான். பக்கத்து வீட்டிலுள்ள விநோதினி தன்னுடைய ஆடைகளைத் தோய்த்துக்கொண்டிருந்தாள். ஈரமும் உடலும் ஒட்டிக்கொண்டிருந்தன. அவள் குனிகிறாள்; நிமிர்கிறாள். அவளுடைய கூந்தல் முகத்தில் வழிகிறது. புறங்கைகொண்டு சரிசெய்கிறாள். தோய்த்த நீரை கீழே ஊற்றிவிட்டு புதிய நீரில் மீண்டும் துணிகளை அலசுகிறாள். மணியனின் உடல் முழுக்க இரைச்சல். பெருக்கெடுத்தோடும் ஆற்றின் புரள்வொலி. அவனின் காதுகள் அடைத்துக்கொண்டன. பெருங்கோயிலினுள்ளே நுழைந்ததும் எதிர்கொள்ளும் அமைதி. `உவ்வ்...’ என்று சத்தமிடும் காற்றின் தாண்டவமென மணியனை ஆக்கிரமித்தது. விநோதினி ஈரத்தால் சூழ்ந்திருந்தாள். அவளொரு நீர் மலர். அவளொரு கற்பூரக் கனவு, நினைத்ததும் தீப்பற்றிக்கொள்ளும் அங்க அசைவுகள். மணியனுக்குள் இந்த உருவகங்களின் வேழம் மதம்பிடித்து அலைகிறது. வேகம் கொண்டான். காமம் இதயத்துக்கும் மூளைக்குமென மின்னல் வேகத்தில் ஒரு தையல் பின்னுகிறது. நிழல் மரவள்ளியின் கீழே கண்களை மூடியபடி மணியன் தன்னில் சுகம் காண்பதை விநோதினி கண்டுவிட்டாள். ஆயினும் அவள் அங்கிருந்து மறைய விரும்பாமல் அலசி முடித்த பிழிந்த ஆடைகளை மீண்டும் தண்ணீரில் இட்டு அலசத் தொடங்கினாள்.

என்னுடைய மச்சானின் திருமணத்திலேயே மணியனைக் கண்டேன். யாரையும் பொருட்படுத்தாத அவனின் சுபாவம் எனக்குப் பிடித்திருந்தது. அவனை யாரென்று விசாரித்துப் பார்த்தால் தூரத்துச் சொந்தம் என்றார்கள். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுடைய கண்களில் ஒளியில்லை. கன்னங்கள் உள்ளொடுங்கி, உதடுகள் காய்ந்திருந்தன. ஆனால் எல்லோருடனும் கதைத்துக்கொண்டேயிருந்தான். நான் அவனைக் கையசைத்துக் கூப்பிட்டேன். நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு ‘என்ன?’ என்று சைகையால் கேட்டான். பிறகு கண்களை என் கண்களில் நிலைகுத்திப் பார்த்தான்.

“எத்தினியாம் வகுப்பு படிக்கிறீர்?”

“நான் பள்ளிக்கூடமே போறதில்லை, இதில எத்தினாம் வகுப்பெண்டொரு கேள்வி.”

“பள்ளிக்கூடம் போறதில்லை உமக்கு என்ன கொள்ளை. படிக்காம என்ன செய்யப் போறீர், காவாலியாய் சுத்தப்போறீரோ?”

“உங்களுக்கு என்ன விசரா! நீங்கள் என்ன கலியாண வீட்டுக்கு வந்தனியளோ, இல்ல எனக்கு டிசிபிளின் வகுப்பெடுக்க வந்தனியளோ?”

``இந்தக் கதிரையை இழுத்துப்போட்டு இரும். உம்மளோட கதைக்கவேணும்.’’

“அதுக்கு வேற ஆரையும் பாருங்கோ” என்றான்.

காட்டின் நடுவில் கிடக்கும் துரவில் மணியன் குளித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உடுப்புகள் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. என்னைக் கண்டதும், கையைக் காட்டி “எப்ப இஞ்ச வந்தனி”யெனக் கேட்டான்.

“நேற்றைக்குப் பின்நேரமே வந்திட்டன்.”

“யாழ்ப்பாணத்தில பிரச்னையாம், கேள்விப்பட்டன்.”

“ஓம், எங்கட பள்ளிக்கூட அதிபரச் சுட்டுட்டினம்.”

``எந்த இயக்கம் சுட்டது?’’

“எங்கட இயக்கம்தான்.”

“உங்கட அதிபர் அல்பிரட் துரையப்பாவோட வம்சாவழியாயிருக்கும்” என்று சொன்ன மணியன், எள்ளலாய்ச் சிரித்தான். பிறகு கேட்டான்.

“நீ யாழ்ப்பாணத்தில படிக்கிற பெடியன், இந்தக் காட்டுக்குள்ள ஏன் சுத்தித் திரியிறாய்?”

“இதென்னடா புதினக் கதை, யாழ்ப்பாணத்தில படிச்சால் காட்டுக்குள்ள சுத்தக் கூடாதோ?”மணியன் துரவைவிட்டு வெளியே வந்து ஈரத்தோடு ஆடைகளை அணிந்தான். என்னோடு காட்டுக்குள் உலவ விரும்பினான். ஆனால் அவனை அழைத்துச் செல்ல மனம் ஒப்பவில்லை. இந்தக் காட்டுக்கும் எனக்குமிடையே தொனிக்கும் அந்தரங்கத்தை நான் யாருக்கும் காண்பிக்க விரும்பவில்லை. அவனோடு கொஞ்ச தூரம் பாவனையாக நடந்து சென்றேன். வீட்டுக்குச் செல்லலாம் என அழைத்துக்கொண்டு ஊர் நோக்கி வந்தேன்.

“உப்புக்காட்டுக்குள் இன்றிரவு நீ வர வேண்டும்” என்றொரு குரல் எனக்குள் கேட்கத் தொடங்கிற்று.

(நீளும்...)