Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 70

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

நான் அப்பிடிச் சொல்லேல்ல ஆதீரன், நிறைய சாவு. பயமாயிருக்குது” எனச் சொல்லிவிட்டு கதைப்பதை நிறுத்திய அம்பிகா, என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்

கடவுள்... பிசாசு... நிலம்! - 70

நான் அப்பிடிச் சொல்லேல்ல ஆதீரன், நிறைய சாவு. பயமாயிருக்குது” எனச் சொல்லிவிட்டு கதைப்பதை நிறுத்திய அம்பிகா, என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

சமாதான காலமெனும் கோரமான நாள்களின் பலனாக, இந்த யுத்தம் பெரு வெறியோடு தொடங்கியிருக்கிறது. பல நாடுகளின் பேருதவியோடு அரசினால் நிகழ்த்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தத் தீவில் சமாதானத்தை நிலைக்கப்பண்ணுவதற்காக இயக்கம் நிதானமாகப் பேசிய பேச்சுவார்த்தை மேடைகளெல்லாம் வீண் வேலையென்று சனங்கள் சொல்லினர். அதன் பொருட்டு “யுத்தம் அமைதியைவிட நேர்மையானது” என்றொரு வரியை இரணைமடு குளத்துக்குச் செல்லும் பாதையிலிருக்கும் மதகில் சுண்ணாம்பினால் எழுதிவைத்தேன். அம்பிகா கொல்லப்பட்டு மாதங்கள் உருண்டோடின. அவளின் தலையற்ற உடலைப்போல நிறைய சாவுகள் விளைந்திருந்தன. வான் தாக்குதல்களில் அப்பாவிச் சனங்கள் கொல்லப்பட்ட உண்மையைக்கூட அரசாங்கம் மறுத்தது. தங்கள் தாக்குதல்களில் கொல்லப்படும் அனைவரும் பயங்கரவாதிகளே என்று தீர்ப்பு வழங்கினர். பூட்டம்மாவும் அம்மாவும் அம்பிகாவின் சாவிலிருந்து வெளியேற முடியாமல் திணறினர். இரவுகளில் விழித்திருக்கும் அம்மாவுக்கு, அம்பிகாவின் நிஜமான உருவம் தெரியுமாம். அம்பிகா இல்லாத வாழ்வின் நொடிகளைப் பாரச் சிலுவையாக உணர்ந்தேன். என்னுடைய சிரசில் நிரந்தரமாக தரிக்கப்பட்ட முள்முடியாக அவ்வலி அழுத்தியது. அவளோடு கதைத்தவை, சிணுங்கியவை, நெகிழ்ந்தவை, மோகித்தவை எனத் தருணங்கள் மாறி மாறிக் கொந்தளிப்போடு அலைந்தன. ஒருநாள் இரவு அவளும் நானும் லாம்பு வெளிச்சத்தில் அமர்ந்தபடி கதைத்துக்கொண்டிருந்தோம்.

“ஆதீரன், இந்தச் சண்டையெல்லாம் ஓய்ஞ்சு ஒரு நிம்மதியான காலம் எங்களுக்கு வராதோ?”

“அந்தக் காலம் வரும். அதுக்காகத்தானே இப்பிடியாய் உயிர்களை விலை கொடுக்கிறம்.”

“ஆனால், எவ்வளவு உயிர்களைக் கொடுக்கிறது... நிறைய துயிலுமில்லங்கள் பெரிதாக்கப்படுகுதாம்.”

“ஓம், அப்பிடித்தான் நடக்கும். போராளிகள் எதிர்த்து நிக்கிறது வெறுமென ஒரு வெறிகொண்ட அரசை மட்டுமில்ல. எங்களுக்கு எதிராய் உலகத்திலுள்ள நிறைய ரத்தக்காட்டேரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கினம். இராக்கில ரத்தம் குடிச்ச காட்டேரி இப்ப இரணைமடுவிலையும் குடிக்கத் துடிக்குது.”

“நாங்கள் எல்லாரும் செத்துப்போய் மீட்கிற மண்ணில, வாழக்கூட ஆட்கள் இருக்க மாட்டினம் அல்லவா?”

“இது முட்டாள்தனமான எண்ணம். அதுக்காக அடிமையாய் மூச்சுவிட்டுக்கொண்டிருக்க ஏலுமே?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 70

“நான் அப்பிடிச் சொல்லேல்ல ஆதீரன், நிறைய சாவு. பயமாயிருக்குது” எனச் சொல்லிவிட்டு கதைப்பதை நிறுத்திய அம்பிகா, என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், இன்று அவளில்லை. தலை வேறு, உடல் வேறாகச் சிதறிக்கிடந்த அவளைச் சவப்பெட்டியில் வைத்து சரிசெய்த நொடிகள் என்னை ரணமாக்குகின்றன. அவளுடைய கூந்தலில் காய்ந்திருந்த ரத்தவெடிலை நினைக்கவே குமட்டுகிறது. அம்பிகாவைச் சுடலையில் வைத்து எரியூட்டும் முன்பு, என்னை அழைத்த அவளது தந்தையார், “நீங்களே கொள்ளியை வையுங்கள்” என்றதும், உடலெல்லாம் எரிவின் வெக்கை எழுந்தது. நான் மறுத்தேன். ``எனக்காக வந்துதித்த அம்புலி வெளிச்சத்தில் மலர்ந்த வாசனை மலர் அவள். ஒரு பொருட்டும் அவளைத் தீயினால் தொட மாட்டேன். அவள் என்னுள் இப்போதும் வாடாத ஓர் அதிசய மலர். அவளை நீங்கள் எரியூட்டுங்கள். என்னுள் இறக்காத ஒரு தேவியை நான் சாம்பலாக்க மாட்டேன்’’ என்று கூறினேன். வார்த்தைகள் நல்ல தெளிவாக இருந்தன. எனக்குள் எந்தக் கலக்கமும் அப்போதில்லை. அம்பிகா இல்லையெனத் தெரிந்தாலும், ஏதோவொன்று அவள் இருக்கிறாள் என உணரச் செய்தது. நான் இறை நம்பிக்கை கொண்டவன் என்பதால்கூட அப்படி நிகழும்.

பூட்டம்மா எப்போதும் தனது அடிவயிற்றில் மண்ணை நிரப்பி, அதனை மேடாக்கித் தண்ணீர் ஊற்று என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள். அவளுக்கு அதுவொரு வேலையாகவே இருந்தது. அம்மாவை எத்தனையோ நெருக்குவாரங்கள் சூழ்ந்திருந்தன. இயக்கத்தின் சில முடிவுகள் சனங்களை இடருக்குள் தள்ளின. வாழ்வா, சாவா எனும் இறுதிக் களத்துக்கு ‘வீட்டுக்கு ஒருவரை நாட்டுக்குத் தாருங்கள்’ எனப் பிரசாரம் செய்து, பின்னர் ‘நீங்கள் தருவதில்லை எனில், இயக்கமே எடுத்துக்கொள்ளும்’ என நடந்த சில சம்பவங்கள் அம்மாவைக் கவலைக்குத் தள்ளின. அம்மா இயக்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்து, உடனடியாகத் தனக்குத் தெரிந்த மேல்மட்டப் பொறுப்பாளர்களுக்குத் தெரியப்படுத்தினாள். போராட விருப்பமற்ற, திராணியற்ற ஒருவரைக் கட்டாயமாகப் படையில் சேர்ப்பதன் மூலம் எம்மால் வெற்றியடைய முடியாது எனத் திட்டவட்டமாகப் பலரோடு பேசினாள். இயக்கத்தின் இது போன்ற அத்துமீறல்களைக் கண்டித்து, அம்மா இயக்கத்தின் உயர்மட்டத்தினருக்குக் கடிதம் எழுதினாள். அந்தக் கடிதத்தில் அம்மா பயன்படுத்திய வார்த்தைகள் பிரளயத்தின் மொழியில் இருப்பவை. அவை விறகென எரிந்து சுழன்றடித்தன.

நான் தூரிகை. களமுனையில் கடுமையான மழை பெய்கிறது. பங்கருக்குள் தண்ணீர் நிரம்பிவிட்டது. இருப்பதற்கோ நிற்பதற்கோ இடமற்று, எட்டு மணித் தியாலங்கள் நீரில் காலூற நிற்கிறேன். சண்டை ஓய்ந்திருக்கும் இப்பொழுதில், மழையின் சன்னதம் ஏறி நிற்கிறது. நேற்றைக்கு முழுவதும் மருதனின் நினைப்பாகவே இருந்தது. திரும்பத் திரும்ப எனக்கருகில் இருப்பதைப்போல உணர்கிறேன். போர்க்களம் பற்றிய மருதனின் அனுபவங்கள் வேறானவை. அவர் சொல்லி நான் கேட்ட கதைகள் எல்லாமும் பிறிதொன்றாய் இருந்தன. ஆனால் இக்களத்திடை நிறைய கடினங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன. நான் மருதனை இழந்து நிற்பதைப்போல, சோழ மறவனை இழந்து நல்லாள் நிற்பதைப்போல, இக்களத்தில் இன்னும் எத்தனை பேர் நிற்கக்கூடும்... போர் எல்லாவற்றையும் சிதைக்கிறது. அதற்குக் காருண்யம் என்பதே தெரியாது. காருண்யத்தை போதித்த புத்தனின் புதல்வர்கள், மானுடத்தைப் புதைக்கையில் காருண்யமும் கொல்லப்பட்டுவிட்டது. மருதன் என்னுடைய கூந்தலில் பூச்சூடவேண்டிய அரசன். அவனை இழந்தேன். ஆயுதம் எல்லோரையும் கொல்லும். மருதனுக்கு அது நன்றாகத் தெரிந்திருந்தது. தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஒரு தோட்டாவைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லிக்கொண்டே இருந்தார். என் கூந்தலில் இனி எப்போதும் ஒரு பூ தங்காது. மருதனின் நினைவுகள் இந்த மழைநாளில் ஏன் எழுகிறது என்ற கேள்வியை என் மனம் வானத்திடம் கேட்கிறது. நீரில் தத்தளித்து மேலேறிய எறும்பு எனது துப்பாக்கியின் முனையில் ஊர்வதைப் பார்க்கையில், ஜீவிதத்தில் அடர்ந்திருக்கும் துருவின் பாரம் குறைகிறது. அம்பிகா கொல்லப்பட்டுவிட்டாள் என்ற செய்தியறிந்தும் போக முடியாமல் போயிற்று. போர்க்களத்திலிருந்து வீடு திரும்புவதற்கு ஒன்றில் நாமோ அல்லது வேறு யாரோ இல்லாமல் போக வேண்டுமென்று இருப்பதை நினைத்து மெல்லச் சிரித்தேன். காலம் கைகூடினால் வீடு திரும்புவேன்.

நான் நல்லாள். அரசனை இழந்தவள். என் கூந்தலில் மலர்கள் இல்லை. இனி என்னிடம் வசந்தமில்லை. இக்களத்திடை எனது துவக்கு சிவந்து கக்கும் குண்டுகள் எதிரியை வீழ்த்தும். ஒரு போர் மங்கையின் துயரக்கதையைக் கேட்கக்கூட நொடிகளற்று நீளும் இந்தச் சண்டையில், நான் கொற்றவையைப்போல உக்கிரம்கொண்டுள்ளேன். அவனை மண்ணினால் மூடிவிட்டு களத்துக்குத் திரும்பிய நாளிலிருந்து நித்திரையற்று விழித்திருக்கிறேன். சுடுகாட்டுக் கூகையின் கண்களைப்போலச் சிவந்திருக்கும் என்னுடைய கண்களை நேற்றைக்குக் காலைச் சூரியனிடம் காட்டினேன். உதித்து சில நொடிகள் ஆன இளஞ்சூரியன், தனது கதிர்களால் என்னைத் தடவிக்கொடுத்தான். கண்கள் இன்னும் இன்னும் சிவந்தன. கிழக்குத் திசை முழுதும் அவனது வெளிச்சத்தின் கனதி மெல்ல மெல்ல வளர்ந்து பெருகியது. இந்தக் களத்திடை நான் வீழ்வேனென என்னுள் எழுகிற குரலின்மீது அவ்வளவு வாஞ்சையும் காதலுமெனக்கு. வீரச்சாவு அடைந்தால் சுகம்போலிருக்கிறது என்று ஒருமுறை நான் சோழனிடம் சொன்னபோது, கோபங்கொண்டு என்னைப் பார்த்தது நினைவிருக்கிறது. எனக்கு முன்பாக அவனை இந்த மண் முத்தமிட்டுவிட்டது. `களத்தில் ஓய்வற்றுச் சுழலும் ஒரு சூறாவளியாய், எனக்குள் என்னையே குளிர்விக்கும் ஒரு தென்றல் மூச்சாய் இருந்த சோழா... நீ எல்லாவற்றுக்கும் மேல் நேசித்த மண்ணின் விடுதலையைப் பெறுகிறபோது, நான் மிஞ்சியிருந்தால் என் கூந்தலில் ஒரு காந்தள் மலரை உனது அம்மாவின் கரங்களால் சூடிக்கொள்கிறேன். அதுவரை இக்களத்திடை என் கால்களை நிறுத்துவேன்.’

கடவுள்... பிசாசு... நிலம்! - 70

நித்திரையிலிருந்து வீறிட்டு அழுதபடி எழுந்தேன். அம்மா எழுந்து திருநீற்றை அள்ளி நெற்றியில் பூசினாள். அம்பிகா இறந்து கிடந்த அதே தரை. எத்தனை தடவை சாணிபோட்டு மெழுகினாலும், அதற்குக் கீழே அவளது ரத்தம் ஈரமாகவே கிடக்கிறதுபோலும். நான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். பூட்டம்மா தன்னுடைய உடலை நிர்வாணமாகக் கிடத்தி அதன்மீது மண்ணை அள்ளி அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள். பின்னிலவு வானில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. நான் அவளுக்கருகில் போனேன். அவளுடைய கண்கள் வேல் வடிவில் கங்குகளைப்போல மூண்டுகொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் ``நீரள்ளி அடிவயிற்றில் ஊத்து’’ என்றாள். வாளியில் கிடந்த நீரை மெல்ல மெல்ல அவளது அடிவயிற்றில் ஊற்றினேன். அவளது மூச்சின் இரைச்சல் கடலின் பேரலையைப்போல அந்த அதிகாலையை அச்சுறுத்தியது. ஊற்றும் நீரை அடிவயிறு உள்வாங்கிக்கொண்டிருந்தது. அவள் ``இன்னும் ஊற்று... ஊற்று...’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். கிடக்கும் வாளிகளில் நீரை நிரப்பி ஊற்றிக்கொண்டிருந்தேன். அவளது கண்களிலிருந்து இரண்டு காந்தள் செடிகள் எழுந்தன. அவளது அடிவயிற்றிலிருந்து பன்னிச்சை மரத்தின் துளிர் எழுந்தது. அடிவயிற்றின் மண்ணைத் தட்டிவிட்டு தனது ஆதிக்குகையிலிருந்த குருதியை எடுத்து மண்ணோடு குழைத்து என்னுடைய கைகளில் ஒரு பிடி சோற்றைப்போலத் தந்து “இந்த ஒரு குழையல் பிடிமண்ணை நீ கைவிடாமல் பாதுகாக்க வேண்டும். எப்போதும் உலர்ந்துபோகாத, ஈரமாய் ரத்தமிருக்கும் இந்தப் பிடிமண்ணை கைவிடாதே” என்று சொல்லிக்கொண்டு அவளது கண்களில் துளிர்த்தெழுந்த காந்தள் மலர்ச்செடியில் பூத்த இரு மலர்களையும் என்னிடம் கையளித்துச் சொன்னாள்.

“ஒன்று உன்னுடைய கொக்காவுக்கு, இன்னொன்று உன்னுடைய அண்ணி நல்லாளுக்கு” அவர்கள் இருவரும் கூந்தலில் சூடும் ஒருநாள் வரும். அந்நாளில் இந்த மலர்களை அவர்களிடம் கையளி. அதுவரை இந்த மலர்களை நீ பாதுகாத்து வைத்திரு. இந்தக் காந்தள் மலர்கள் வாடாது.”

“அவர்கள் பூக்களைச் சூடும் நாள் வருமா?” பூட்டம்மாவிடம் கேட்டேன்.

“ஒரு ஊழியை நாம் காண்போம். அந்த ஊழியில் பிணங்கள் பெருகும். சாவு கடலாகும். அலைகள் குருதியாய் நிறம் மாறும். கானங்கள் பறிபோகும். நம் வேங்கைகள் மாயும். பாதைகள் அழியும். ஆனபோதிலும் தூரிகையும் நல்லாளும் பூக்களைச் சூடும் நாள் வரும்.”

“இவ்வளவு நடந்தும், ஒரு நாள் வருமா?”

“ஒரு கொடுங்கனவென நம்மைவிட்டுப் பறிபோன பெருநிலத்தில், ஒருநாள் வசந்தம் திரும்பும். விடுதலை அரும்பும். நடுகற்களிலும் கல்லறைகளிலும் உறங்கும் தெய்வங்கள் ஒன்றுகூடி எழுவர். அப்போது ஒரு வீரயுகம் தனது அறத்தால் வெல்லும். அறம் வெல்லும் அஞ்சற்க” என்று சொல்லியபடி, கங்குகள் எரியும் கண்களை மூடிக்கொண்டாள்.

ரத்தம் சேர்த்துக் குழைத்த ஒரு பிடி மண்ணோடும், இரண்டு காந்தள் மலரோடும் வீட்டுக்குள் நுழைகிறேன். அடைக்கல மாதாவாகவும், பன்னிச்சைத்தாயாகவும் நின்றுகொண்டு அம்மா என்னை அணைத்து முத்தமிடுகிறாள். அவளின் கண்ணீரில் ஒரு துளி அந்தப் பிடி மண்ணில் விழுகிறது. வெளியே நிலம் விடிந்தது!

(நிறைந்தது)

எறிகணை பட்டுத் தெறிக்க
காயம்பட்ட
இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை
மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்
இக்கணம் கடவுள்
நீரற்ற விழிகளுடன் அலறும் தாய்
ஒரு பிசாசு’
என்கிறான் ஈழ நிலம் முளைத்த
சேரன்!

கடவுள்... பிசாசு... நிலம்! - 70

ஈழப் பெருநிலத்தின்பண்பாட்டு வேர்களை உலகெங்கும் பறைசாற்றியுள்ளேன்!

‘கடவுள் பிசாசு நிலம்’ என்கிற இத்தொடர், என்னுடைய எழுத்தூழியத்தில் பெறுமதியான ஆக்கம் எனக் கருதுகிறேன். இந்த நல்வாய்ப்பை எனக்கு வழங்கிய ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி. தொடர் முழுமைக்குமாகத் தன் தூரிகைகளால் என் பாத்திரங்களை உயிர்ப்பித்த ஓவியர் பாலகிருஷ்ணனுக்கு அன்பு. தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் பத்திரிகையில் வெளியான முதல் ஈழத்தொடர் என்ற வகையில், அதன் முக்கியத்துவம் பெரிதானது. வாசகர்கள் மத்தியில் இதற்கு வழங்கப்பட்ட வரவேற்பும், ஊக்கமும் சொல்லித் தீராதவை. ஈழ இனப்படுகொலை அரசியல் மேடைகளிலும், சர்வதேச நாடுகளின் ஜனநாயக அரங்குகளிலும், பேசுபொருளாகக்கூட இல்லாமல் போய் நாள்கள் ஆகிவிட்ட சூழலில், ஈழத்தின் சமாதான காலத்தையும், போருக்கு முன்பான சில தொடக்க காலங்களையும் ஒரு தொடராகப் பேசக் கிடைத்த வாய்ப்பு அளப்பரியது. எப்போதும் விகடன் குழுமத்துக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இத்தொடர் மூலமாக ஈழத்தின் ஒரு காலகட்டத்தின் பதற்றத்தையும், உள்ளக நிலவரங்களையும் மட்டுமல்லாது, ஈழப் பெருநிலத்தின் பண்பாட்டு வேர்களையும் உலகெங்கும் பறைசாற்றியுள்ளேன் என்பதே எல்லையற்ற மகிழ்வாக இருக்கிறது. நன்றியும் அன்பும்!‘

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism