Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 9

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பச்சைக் குண்டுமணிகளை எடுத்து இன்றைக்கொரு மாலை கோர்க்க வேண்டுமென உப்புக்காட்டுக்குச் செல்ல நினைத்தேன். குண்டுமணி என் கனவுகளின் நிரந்தர கிறக்கம்....

கடவுள்... பிசாசு... நிலம்! - 9

பச்சைக் குண்டுமணிகளை எடுத்து இன்றைக்கொரு மாலை கோர்க்க வேண்டுமென உப்புக்காட்டுக்குச் செல்ல நினைத்தேன். குண்டுமணி என் கனவுகளின் நிரந்தர கிறக்கம்....

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அதிகாலையில் எழுந்த அம்மா, அப்பம் சுட்டுக்கொண்டிருந்தாள். அடுப்படி வாசலில் கொழுவிக்கிடந்த வானொலியில் டி.எம்.செளந்தரராஜன் ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...’ பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். பாடலின் நடுவே வருகிற ‘நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால், நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ...’ என்ற மகா வித்துவான் யாழ்ப்பாணம் வீரமணி ஐயரின் வரிகள் நித்திரையின் மயிர்க்கால்களைச் சிலிர்க்கச் செய்தன. விடியும் இந்நாளின் முதல் வாசமாக இந்தப் பாடல் எனக்குள் கசிந்து இறங்கியது. எழுந்துபோய் ஒரு சோடி அப்பத்தைச் சாப்பிடலாம். ஆனால் முகம் கழுவாமல் அடுப்படிக்குள் நுழையக்கூட முடியாது. அப்படி இறுக்கமான விதிமுறைகளை அம்மா கடைப்பிடித்துவந்தாள். அம்மாவுக்கு அடுப்படி ஆலயம். காய்ந்த விறகுகள் கடவுளர். எரியும் தீயின் வெடிப்பு, அவளுக்கு இறுக்கம் தளர்த்தும் ஓரொலி. அவள் முகத்தில் அனலாடும் வெம்மையில் சுரப்பதெல்லாம் தாய்மை. பிறர் வாழ, தம்மை ஈயும் விடுதலை யுகத்தின் பிள்ளைகளுக்கு உணவு ஊட்ட ஆயிரமாயிரம் அன்னக் கைகள் அவளிடம் பிறந்தன.

படுக்கையிலிருந்து எழும்பி நேராகக் கிணற்றடிக்குச் சென்றேன். அடுப்புக்கரியால் பற்களைத் தீட்டி, முகத்தைக் கழுவினேன். அம்மா ஒரு தட்டில் இரண்டு சோடி அப்பங்களைப் போட்டுத் தந்தாள். அப்பத்துக்காகத் தயார்செய்யும் மாவுக்குள் எங்கள் வீட்டுப் பனங்கள்ளைவிட்டுக் கலக்கிப் புளிக்கவைப்பாள். கள்ளின் மெல்லிய புளிப்புச்சுவை காலைப்பொழுதுக்கே பரவசம் தந்தது. நீலநிறச் சுடுதண்ணீர் போத்தலுக்குள் சாயத்தண்ணி இருந்தது. தேநீர்க் கோப்பையில் நிரப்பிக் குடித்துக்கொண்டிருந்தேன். நாகப்பர், உடம்பைச் சாறத்தால் போர்த்திக்கொண்டு வீட்டுப் படலையைத் திறந்தார். பார்த்ததும் அவர் நேற்றைக்குச் சொன்ன வார்த்தைகள் எனக்குள் ஒலிக்கத் தொடங்கிற்று.

“ஆதீரா! உன்னைப் பெத்ததே பன்னிச்சை தாய்தாண்டா...”

நாகப்பர் இரண்டு சோடி அப்பம் சாப்பிட்டார். காலையிலேயே கள்ளருந்தியிருந்தார். அவரின் மேனியில் கள் வாசனை குமிழியிட்டது. வாயைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.

“மோனே, நீ என்னட்ட எதையோ கேக்க நினைக்கிறாய். ஆனால், கேக்க ஏலாமல் கிடக்கு. நீ இப்ப கேட்டாலும் நான் சொல்லப்போறதில்லை. அதுக்கொரு காலம் வரும். அதுவரை காத்திரு.” முடிவற்ற கதையின் முதல்வரியைச் சொன்ன அசரீரியைப்போல பெருமிதத்தின் மருங்கில் நாகப்பர் அமர்ந்திருந்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 9

பொன்வண்டு பிடித்து விளையாடும் சின்னஞ்சிறு அகவையில், உப்புக்காட்டிலிருந்து குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டின் கோடிப்பக்கத்தில் கிடந்த பழைய இறங்குபெட்டியில் சேமித்துவைப்பேன். “நஞ்சை எதுக்கடா இறங்குபெட்டியில சேர்த்துவைக்கிறாய், விசரா” என்று அம்மாவிடம் ஏச்சு வாங்காத நாளில்லை. உப்புக்காட்டின் வசீகரத்துக்குக் குண்டுமணிகளும் ஆபரணம். குண்டுமணிச் சிவப்பின் மினுக்கம் கிளர்த்துகிற கனவுகளுக்கு நான் எப்போதும் இரையாவேன். புதையல் வைரவர் கோயிலுக்கு முன்னாலுள்ள காணியிலும் குண்டுமணிக் கொடிகள் நின்றன. அம்மாவுடன் வெள்ளிக்கிழமை பூசைக்குச் செல்லும்போது அவற்றையும் சேமித்து வர நினைத்திருந்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை வைரவருக்கு அணிவிப்பதற்கான வடை மாலையோடு நானும் அம்மாவும் கோயில் நோக்கிச் சென்றோம். ‘புதையல் வைரவர்’ புதுமைகளும் அற்புதங்களும் நிறைந்தவராம். ஐம்பது மட்டைக் கிடுகில் வேய்ந்துவிடக்கூடிய சிறிய கோயிலினுள்ளே பூசாரி குனிந்து நின்று பூசை செய்வார். கோயிலுக்கு முன்னாலுள்ள காணியின் முள்ளுக்கம்பி வேலியைப் பாய்ந்து கடந்தேன். குண்டுமணிப் பூக்கள் மலர்ந்து தொங்கின. முன்னைய நாள்களில் வெடித்து உதிர்ந்த குண்டுமணிகளைக் கீழேயிருந்து பொறுக்கி சட்டைப்பையில் போட்ட நினைவுகள் திடீரென ஆயிரம் இழை பின்னி என்னைச் சுற்றின. பச்சைக் குண்டுமணிகளை நூலால் கோர்த்து மாலையாக அணிந்து நடந்த ஈரலிப்பான பருவங்களை நினைவில் துய்த்தேன்.

நீண்ட நாள்கள் கழித்து நகுலன் அண்ணா வீட்டுக்கு வந்திருந்தார். நாகப்பர் அவரைக் கண்டதும், ‘‘வாங்கோ’’ என்று அழைத்தார். நகுலன் அண்ணா என்னைக் கண்டதும் கேட்டார்.

“நீ எப்பையடா வந்தனீ தம்பியா?”

“மூண்டு நாள் ஆகுது. நீங்கள் எப்பிடி இருக்கிறியள்?”

“நல்லாய் இருக்கிறன். இடையில ஒருக்கால் யாழ்ப்பாணம் வந்தனான். உங்கட வீட்ட வரவேணுமெண்டு திட்டம் இருந்தது. ஆனால் வர ஏலாமல் போயிற்று.”

“அடுத்த தடவை வரேக்க வாங்கோ.”

நகுலன் அண்ணாவுக்கு அம்மா தேத்தண்ணியும் அப்பமும் கொடுத்தாள். அவர் மதியம் தங்களுக்கு நான்கு சாப்பாடு வேணுமெண்டு கேட்டார். அம்மா சரியென்று தலையாட்டினாள். சாப்பிட்டு முடித்ததும் ‘‘என்னோட வாறியா?’’ என்று கேட்டார். ஒளிமிகுந்த காலையின் நிமிர்ந்த அழைப்பிது. அம்மாவிடம் சொல்லிக்கொண்டு நகுலன் அண்ணாவின் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்.

முகாமின் வேலி, தகரத்தால் அடைக்கப்பட்டிருந்தது. இரண்டு பெரிய மரங்கள் கிளைவிரித்து சடைத்து நின்றன. வீட்டினுள்ளே நுழைவதற்கு முன்பு, வாசலில் நின்ற போராளி தனது இறுகிய தேகத்தில் அணிந்திருந்த ஆயுதங்களோடு என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார். அவரின் கண்களில் ரகசியமாக உறங்கும் விழிப்பு தெரிந்தது. நகுலன் அண்ணாவோடு முன்னர் வந்த முகாமில்லை இது. ஏற்கெனவே பார்த்த யாரையும் என்னால் சந்திக்க முடியவில்லை. எல்லோரும் புதியவர்களாக இருந்தனர்.

“ஏன் அந்தப் பழைய வீட்டைவிட்டு மாறினியல்?”

“ஓமப்பன், நான் இப்ப பிரிவு மாறிட்டன். என்ர புதுப்பிரிவோட இடம் இதுதான்.”

“முந்தி நீங்கள் என்ன பிரிவு?”

“அரசியல்துறை.”

“இப்ப?”

“புலனாய்வுத்துறை.”

நகுலன் அண்ணா அணிந்திருந்த வெள்ளை நிறத்தில் நீலக்கோடு போட்ட சட்டையைக் கழற்றி, கசங்காமல் கொடியில் போட்டார். அவரின் கழுத்தில் குப்பியும், இலக்கத் தகடும் வியர்வையில் மின்னின. நஞ்சணிந்த நாயகர்கள். ‘கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே’ என்ற தேவாரப்பாடல் எனக்குள் எழுந்தாடியது. மருதன் அண்ணாவைப் பற்றி நகுலன் அண்ணாவிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

“நீங்கள் யாழ்ப்பாணத்தில எங்கட வீட்டுக்கு வந்திருந்தால் மருதன் அண்ணாவைச் சந்தித்திருக்கலாம்.”

“ஆர் மருதன்?”

“உங்களுக்கு அவரைத் தெரியாதா?”

“இல்லையே.”

“அவரும் இயக்கம்போல கிடக்கு, அம்மாதான் கூட்டிக்கொண்டு வந்தவா.”

“ஓ... எனக்கு மருதன் எண்டு இயக்கத்தில ஆரையும் தெரியாது ஆதீரன். எல்லாம் அடைக்கல மாதாவுக்கே வெளிச்சம்.”

நகுலன் அண்ணாவின் உடல் முழுக்க விழுப்புண் தழும்புகள். அவரின் உடலினுள்ளே குண்டுச் சிதறல்கள் நீக்க முடியாதபடி இருக்கின்றன. வெயில் காலங்களில் அவரின் தலையில் ஏற்படும் வலியும் கொதிப்பும் சொல்லிமாளாதாம். தூண்டில் போட்டு பிடித்த குளத்து மீன்களை ஒரு போராளி செதில் தட்டி மஞ்சள் பிரட்டிப் பொரித்துக்கொண்டிருந்தார். அந்த வாசனை புகையாகப் பரவியது. என்னைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டனர். ‘குளத்து மீன் பிடியாது’ என்றேன். மதிய உணவு வாங்குவதற்காக வீட்டுக்கு வரும் போராளியோடு நானும் சேர்ந்துகொண்டேன்.

நாகப்பர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் தலைமாட்டில் வெற்றிலைப் பையிருந்தது. கால்களை விரித்து கைகளைத் தலைக்கு அணை கொடுத்தபடி சொப்பனத்தில் சிரித்தார். வந்திருந்த போராளி அவரைப் பார்த்து “நல்ல நித்திரையடிக்கிறார் ஐயா” என்றார்.

“நாலு போத்தில் கள்ளைக் குடிச்சுப்போட்டு படுத்திருக்கிறார். இனியெழும்ப இரவாகிடும்.” அம்மா சொன்னாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 9

அம்மா உணவுப் பொதிகளைப் பையில் போட்டு போராளியிடம் கொடுத்தாள். நாகப்பர் பூமியின் அடியில் புதைந்த தன் குரலை மீட்டெடுப்பவரைப்போல குறட்டைவிடத் தொடங்கினார். அம்மா சமைத்து முடித்துக் குளிக்கப்போனாள். கிணற்றடியில் நின்ற இரண்டு இதரை வாழை மரங்களில் ஒன்று குலை தள்ளியிருந்தது. நாகப்பர் கபடமற்ற தனது கண்களைத் திறந்து இதமான குரலில் “ஆதீரன் இஞ்ச வா...” என்று அழைத்தார். என் ஆத்மாவின் சுவாசகோளங்களில் குரலின் இனிமையும் அணைப்பும் நிரம்பி நாகப்பரைப் பார்த்தேன். அவர் ஒரு கணம் உன்னதப் பிரகாசம் நெளியும் பாம்பாக அசைந்து படுத்தார்.

பழைய இறங்கு பெட்டியில் சேர்த்துவைத்த குண்டுமணிகளைப் பல வருடங்கள் கழித்துத் திறந்து பார்த்தேன். நிறைய மாலைகள் இருந்தன. பச்சைக் குண்டுமணிகளை எடுத்து இன்றைக்கொரு மாலை கோர்க்க வேண்டுமென உப்புக்காட்டுக்குச் செல்ல நினைத்தேன். குண்டுமணி என் கனவுகளின் நிரந்தர கிறக்கம். உப்புக்காட்டுக்குள் புகுந்தேன். நாகப்பர் கண்விழித்தார். அவர் என்னைப் பின்தொடர்ந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அவரை நான் கண்டுவிட்டேன் என வெளிக்காட்டவில்லை. தலை திருப்பிப் பார்க்கக் கூடாதென விறுவிறுவென பன்னிச்சை மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினேன். நாகப்பர் புதர்களுக்குள்ளும், மரங்களுக்குப் பின்னாலும் மறைந்து என்னை நோட்டம் பார்க்கிறார். என் செவிகளும் கண்களும் மேலும் கூர்மையாகின்றன. நான் பச்சைக் குண்டுமணிகளைச் சேகரித்துக்கொண்டேன். இரண்டு உள்ளங்கை நிறைய குண்டுமணிகளோடு வீட்டுக்கு வந்தேன். நாகப்பர் அப்படியே நித்திரையிலிருந்ததைப் பார்த்துவிட்டு உடம்பெல்லாம் அதிர்ந்தது. நான் குண்டுமணிகளை ஓலைப்பாயில் போட்டுவிட்டு அம்மாவிடம் கேட்டேன்.

“நாகப்பர் கொஞ்சம் முன்னால எழும்பி எங்கையாவது போனவரா?”

அம்மா, ‘இல்லை’ என்று சொன்னாள். படுக்கையில் கிடக்கும் நாகப்பரைத் திரும்பிப் பார்த்தேன். உப்புக்காட்டு மண் அவர் கணுக்காலில் ஒட்டிக்கிடந்தது.

(நீளும்...)