இந்தியாவின் தனித்துவமிக்க பதிப்பகமான Westland நிறுவனத்தை 2017 இல் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான Trent -இடமிருந்து அமேசான் வாங்கியது. இந்தியாவின் மிகப் பழைமையான பதிப்பகங்களுள் ஒன்று, Westland. 1962 முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இதன் இலட்சக்கணக்கான புத்தங்கள் விற்பனையாகின்றன. ஆங்கில மொழியில் பெயர் சொல்லும் அளவுக்கு நூல்களை வெளியிட்டுள்ள Westland பதிப்பகம் Context, Tranquebar, Eka, Westland என்கிற பேனர்களில் புத்தங்களை பதிப்பித்து வருகிறது. பிரபலமான நாவலாசிரியர்களான சேத்தன் பகத், அமிஷ் திரிபாதி உள்ளிடோரின் நூல்களும் இவற்றில் அடக்கம்.

அமேசான் சார்பில், "Westland நிறுவனத்தை கைவிடும் கடினமான முடிவை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகே எடுத்துள்ளோம். இந்தப் பணியில் பணியாளர்கள், எழுத்தாளர்கள், ஏஜெண்டுகள் மற்றும் புத்தகத்தைக் கொண்டு சேர்ப்பவர்கள் என எல்லோருடனும் நெருக்கமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறோம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்ற முயற்சி செய்வோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Westland - புனைவு, புனைவிலி, தன்வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், விளையாட்டு என எல்லா துறைகளிலும் புத்தங்களை வெளியிட்டுள்ள நிறுவனம். புதிய எழுத்தாளர்களின் புத்தங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவின் சிறந்த எடிட்டர்கள் கொண்டு செயல்படும் Westland இன் புத்தகங்கள் உயரிய விருதுகள் பலவற்றை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வாசகர்களுடன் மனரீதியாக இணைந்து உள்ள Westland பதிப்பகத்தை கைவிட இருக்கும் அமேசானின் முடிவை, வாசகர்கள் கவலையோடு எதிர்நோக்குகின்றனர். ஏற்கனவே அச்சில் இருக்கும் புத்தகங்கள், வெளியிடவுள்ள புத்தகங்கள், அவற்றின் உரிமைகள் போன்றவை என்னவாகும் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.