கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 27 : முகமூடிகள் விற்பவன்

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

வாழ்க்கையைத் தன் தோளின்மீது போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினான் பங்கஜ் குமார். இன்னும் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.

எதை நோக்கி நடக்கிறான் என்றும் தெரியவில்லை. சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும், வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்பில்தான் நடக்க ஆரம்பித்தான். மனைவி மீரா குமாரி, மகன் அபினவ்வின் முகம், கசகசத்து வழியும் வியர்வையுடன் பாதையெங்கும் வந்துகொண்டேயிருக்கின்றன. உத்திரப் பிரதேசத்தின் சிறிய கிராமம் ஒன்றில் இவனுக் காகத்தான் அவர்கள் காத்துக்கிடப்பார்கள்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, சௌகார் பேட்டையில் மார்வாடிகள் கூடி நின்று தட்டில் கரண்டியை வைத்து அடித்துக்கொண்டி ருந்தார்கள். சிலர் சங்கு ஊதவும் செய்தார்கள். ஆங்காங்கே சிலர் மாடியில் நின்று கைதட்டவும் செய்தார்கள். ஆனால் தன் சொந்த ஊரோடு ஒப்பிட்டால் இது சொற்பம்தான். ஏனோ இங்கெல்லாம் பிரதமர் பேச்சை அவ்வளவாக மதிப்பதில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை வியாபாரமே இல்லைதான். இல்லையென்றால் சென்னை மெரினா கடற்கரையில் குவியும் கூட்டத்துக்கு இரண்டாயிரம் ரூபாய்க்காவது வியாபாரம் ஆகியிருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த ஊரடங்கு முடிந்துவிடும் என்றுதான் நினைத்தான்.

ஆனால் 21 நாள்கள் ஊரே அடங்க வேண்டுமாம். மெரினாவிலும் பெசன்ட் நகர் கடலிலும் அலைகள் அடங்குவதாயில்லை. மனிதர்கள் அடங்கிவிட்டார்கள். கடற்கரை, தீவுத்திடல், வள்ளுவர் கோட்டம் என்று சனி, ஞாயிறுகளில் பொம்மைகள் விற்பதுதான் பங்கஜின் தொழில். சிங்கம், ஸ்பைடர் மேன், புலி, சோட்டா பீம் என்று விதவிதமான முகமூடிகள், பலூன்கள், பீப்பிகள்...

எல்லோரும் வீட்டுக்குள் அடைந்துதான் கிடக்கவேண்டுமாம். இந்த 21 நாள்களில் இந்த மொழி தெரியாத மண்ணில் என்ன செய்வது? சாவதாய் இருந்தாலும் மீராவின் மடியில், அபினவ்வின் சுண்டுவிரலைப் பிடித்தபடியே செத்துப்போகலாம். பங்கஜ் நடக்க ஆரம்பித்தான்.

குறுங்கதை
குறுங்கதை

து என்னமாதிரியான வியாதி என்றே தெரியவில்லை. ஆனால் இந்தியாவே நடுங்கிக்கொண்டிருக்கிறது என்று வீரேந்தர் சொல்லியிருந்தான். எத்தனையோ நோய்களைத் தன் கிராமத்தில் பார்த்திருக்கிறான் பங்கஜ். சென்னையில் கவர்மென்ட் ஆஸ்பத்திரியே இவ்வளவு பிரமாண்டமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யம்தான். ஆம்புலன்ஸ் இல்லாமல் செத்துப்போன தன் மனைவியைத் தோளில் சுமந்துகொண்டு வீடுவரை கொண்டுவந்த கன்யாலால் இவனது பக்கத்து கிராமத்துக்காரர்தான். கன்யாலால் தன் மனைவி ரூபாவதியின் சடலத்தைத் தோளில் தூக்கிச் சுமந்ததைப் போல்தான் இப்போது பொம்மைகளைச் சுமந்தபடி மீராவையும் அபினவையும் காணச் சென்றுகொண்டிருக்கிறான்.

இதேபோன்ற மோசமான வியாதிதான் பிளேக். இவனுக்கு என்ன தெரியும்? இவன் தாத்தாவின் அப்பா பிளேக் பற்றிப் பேசுவதென்றால் வாரக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பார். தாத்தா இறந்துவிட்டார். தாத்தாவின் அப்பா 92 வயது வரை உயிருடன் இருந்து சாவதற்கு முதல்நாள் கூட புகையிலையைக் குதப்பிக்கொண்டிருந்தார். பிளேக் வந்து மனிதர்கள் கொத்துக்கொத்தாகச் செத்துக்கொண்டிருந்தார்களாம். எலியினால்தான் பிளேக் நோய் பரவியதால், ‘உன் வாகனத்தை அடக்கிவை’ என்று கண்பதியிடம்(கணபதி) அப்போது வேண்டிக்கொள்வார்களாம். நகரத்தில் நடக்கும் கண்பதி ஊர்வலம் இவன் ஊரில் குறிப்பாக, பங்கஜ் வசிக்கும் தெருவுக்குள் வந்ததில்லை. அந்த ஊரைக் கடக்கும்போது கேட்கும் வாத்தியத்தின் ஓசையில் ‘ஜெய் கணபதி’ கோஷம் கேட்கும். இவர்கள் கிராமமும் அதை எதிரொலிக்கும். பங்கஜ் ஊருக்கு என்று பாவப்பட்ட கண்பதி மந்திர் இருந்தது. கண்பதியின் வாகனம் சிறியது என்பதால் அவர் அவ்வளவாக உலகம் சுற்ற முடியாது. இப்போது இந்தியாவில் எல்லோரும் கண்பதியைப் போலத்தான். வாகனத்தில் ஊர் சுற்ற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்.

நான்கு தலைமுறைகளாகப் படிக்காத தலைமுறை. அபினவ்தான் ஸ்கூல் போய் நன்றாகப் படித்துக்கொண்டிருக்கிறான். கொள்ளுத்தாத்தா பிளேக் கதை சொன்னபோதுதான் அபினவ் தன் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒரு வெளிநாட்டுக் கதையைச் சொன்னான். ஏதோ ஒரு வெள்ளைக்கார நாட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அப்போது பீப்பி ஊதும் ஒருவர் பீப்பி ஊதியே எலிகளை மயக்கி அந்த ஊரின் ஆற்றுக்குள் கொண்டு சென்று கொன்றுவிட்டாராம். இந்தக் கதையைச் சொல்லிவிட்டு அப்பாவிடம் இருக்கும் பீப்பி பொம்மையை எடுத்து அபினவ் ஊதுவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். கண்கள் கசிந்தன. பாரம் அழுத்தியது. நடையை நிறுத்தி, சுமையைத் தன் தோளில் இருந்து இறக்கிய பங்கஜ் குமார், ஒரு பீப்பியை எடுத்து ஊதத் தொடங்கினான். ஆளில்லாத தெருக்களில் அந்த ஓசை முடிவேயில்லாமல் சென்றுகொண்டிருந்தது. தனக்கு முன்னால் சென்ற அந்த ஓசையைப் பின்தொடர்ந்து பங்கஜ் நடக்கத் தொடங்கினான்.

மூன்று தலைமுறைகளாக விவசாயக் கூலிகள். அதுவும் கொள்ளுத் தாத்தா காலத்தில் பணம் கூலியில்லையாம். கோதுமையையும் தானியத்தையும் துணியில் முடிந்து தூக்கிப்போடுவார்களாம். பொறுக்கி எடுத்துவர வேண்டும். பங்கஜ் அப்பா காலத்தில் இவையெல்லாம் கொஞ்சம் மாறியிருந்தன. மழை பொய்த்து, நாட்டின் நிலைமை மாறி பரதேசம் போவதற்காக உத்திரப்பிரதேசத்திலிருந்து கிளம்பினான் பங்கஜ்.

‘தமிழ்நாட்டுக்குப் போகிறான்’ என்றதும் அவன் ஊர்க்காரர்கள் பயமுறுத்தினார்கள். ‘மதராசிகளுக்கு இந்தின்னா பிடிக்காது. இந்திக்காரங்களையும் பிடிக்காது’ என்றார்கள். ஆனால் அப்படியொன்றும் தெரியவில்லை. பங்கஜ் சென்னைக்கு வந்து 12 வருஷம் ஆகிவிட்டன. அவன் வந்ததைவிட இப்போது வடக்கேயிருந்து ஆட்கள் அதிகம் வர ஆரம்பித்துவிட்டார்கள். ஏதாவது ஒரு ஏரியாவில் இந்தி தெரிந்தவர்களைச் சந்தித்துவிடுகிறான். ஆரம்பத்தில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தான். அப்போது மனைவியையும் மகனையும் சென்னைக்கே கூட்டி வந்திருந்தான். பிறகு அந்த ஹோட்டலை மூடிவிட்டார்கள். இருவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டான். மீரா, இப்போது ஒரு சாயப்பட்டறையில் வேலை பார்க்கிறாள். சலூன் கடை, சூப்பர் மார்க்கெட் என்று பலவற்றில் வேலை பார்த்தவனுக்கு சிறிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசை. அதனால்தான் கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் பொம்மை வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். ஒரே கட்டடத்தில் நாள் முழுக்க இருக்கவேண்டியதில்லை.

ஹோட்டலில் வேலை பார்க்கும்போதுதான் வீரேந்தர் பழக்கம். “சுழிச்சு ஓடற பிரம்மபுத்ராவில குளிச்சவன் நான். இப்போ குளிக்கிறதுக்கு ஒரு பக்கெட் தண்ணி. மேலே ஆஸ்பெஸ்டாஸ் வெயிலில கொளுத்துது” என்று வாடும் வீரேந்தர் அசாமைச் சேர்ந்தவன். சுரங்கம் அமைப்பதற்காகக் காடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பழங்குடி இளைஞன். சென்னையை விட்டுக் கிளம்பலாம் என்று முடிவு செய்ததும் வீரேந்தருக்குத்தான் போன் செய்தான். “ஊருக்குப் போய் நான் என்ன பண்ணப் போறேன்? காடு இல்லைன்னு ஆனப்புறம் எல்லாமே என் வீடுதான், என் ஊருதான்” என்று சொல்லிவிட்டான் வீரேந்தர். இப்போது ஏதோ சமூகநலக்கூடத்தில் தங்கவைத்திருக்கிறார்களாம்.

முகமூடிகள் விற்பவன்
முகமூடிகள் விற்பவன்

தெரு காலியாகக் கிடந்தது. இப்படி ஒரு சென்னையை அவன் 12 ஆண்டுகளில் பார்த்ததே கிடையாது. ஏன் சென்னைக்காரர்களே இப்படி ஒரு சென்னையைப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. முக்கியமான சாலைகள், தெருமுனைகளில் எல்லாம் போலீஸ்காரர்கள் விசாரித்துக்கொண்டும் லத்தியால் வெளுத்துக்கொண்டும் இருந்தார்கள். ஓரளவுக்கு சென்னையைத் தெரிந்து வைத்திருந்ததால் குறுக்குவழிகளில் புகுந்து போனான். சிலசமயம் தெருமுனைகளில் பிடிபட்டாலும் போலீஸ்காரர்கள் இந்தி தெரியாமல் சில பீப்பிகளையும் பொம்மைகளையும் வாங்கிவைத்துக்கொண்டு இவனை அனுப்பிவிட்டார்கள்.

தாகம் எடுத்தது பங்கஜுக்கு. இரண்டு நாள்களுக்கு முன்புதான் மதியத்துடன் கடையை அடைக்கச் சொல்லி அரசு உத்தரவாம். ஒரு கடையை மூடிக்கொண்டிருந்தார்கள். வேகமாகச் சென்றான் பங்கஜ்.

“பானி... வாட்டர்” என்றான்.

கடைக்காரர் ஒரு வாட்டர் பாட்டிலைத் தூக்கிக் கொடுத்தார்.

“நை... பானி பாக்கெட்... வாட்டர் பாக்கெட்” என்றான்.

சிறிதுநேரம் யோசித்தவர், எங்கோ தேடி கசங்கிக்கிடந்த வாட்டர் பாக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.

5 ரூபாயாம். விலை ஏறியிருந்தது. பாக்கெட்டில் துழாவி பத்து ரூபாயை எடுத்து நீட்டினான். கடைக்காரர் கையில் வாங்க மறுத்து, பலகையில் வைக்கச் சொன்னார். மீதிச் சில்லறையையும் அதே பலகையில் வைத்தார்.

இது ஒன்றும் பங்கஜுக்குப் புதிது அல்ல. கடைக்காரராவது வாட்டர் பாக்கெட்டைக் கைகளில் கொடுத்தார். அவன் உத்திரப்பிரதேச நொய்டா நகரத்துக்குச் செல்லும்போதெல்லாம் தண்ணீர் கேட்டால் கைகளில் தர மாட்டார்கள். அவர்கள் பாத்திரத்தில் இருந்து ஊற்ற, கைகளைக் குவித்து ஏந்தித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிவப்பாய் இருப்பவர்கள் எல்லாம் உயர்ந்த சாதி என்று நினைத்துவிடுகிறார்கள்.

காலையில் நடந்துகொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஒரு முஸ்லிம், தெருவில் கூட்டிக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு பார்சலையும் சின்ன வாட்டர் பாட்டிலையும் கொடுத்தார். இவனும் அதை வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருந்தான். என்ன நினைத்தாரோ இவன் கையில் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

பசி வயிற்றில் ஒரு நாகப்பாம்பைப்போலப் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது. பொட்டலத்தைப் பிரித்து இட்லியை சாம்பாரில் நனைத்து இரண்டு துண்டுகளை அனுப்பியபிறகுதான் நாகம் அடங்கியது.

சுருண்டு படுத்துக்கொண்டது. இன்னும் மூன்றுவேளைக்குப் போதும். பங்கஜின் நாக்கு ரொட்டிக்கும் தாலுக்கும் சப்ஜிக்கும் ஏங்கியது. ‘சிக்கனுக்கும் சேர்த்து ஏங்கலாம்’ என்று மூளை யோசித்தபோது சுருண்டு கிடந்த நாகம் எழப் பார்த்தது. அவனுக்கு உண்மையில் சிக்கனைவிட மாட்டிறைச்சிதான் பிடிக்கும். எப்போது மீராவின் தம்பி அஜிதேஷ் குமார், மாட்டுத்தோலை உரித்ததற்காகக் கொல்லப்பட்டானோ அப்போதே அவன் பீஃப் உண்பதை நிறுத்திவிட்டான்.

செல்போனில் சார்ஜ் குறைந்துகொண்டே வருகிறது. மீராவிடம் ஊருக்கு வருவதாகச் சேதி சொல்லிவிட்டான். அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டாள். ‘`அப்பா என்ன வாங்கி வருவே?” என்றான் அபினவ். என்ன வாங்கிச் செல்வது, போகும் வழியில் என்ன கிடைக்கும், ஊருக்குப் போய்விட முடியுமா, நடந்தே ஊருக்குச் சென்றுவிட முடியுமா என்ற யோசனையில் பங்கஜ் நடந்துகொண்டிருந்தபோதுதான் அவன் பின்னந்தொடையில் பலத்த அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தான். முகத்தில் துணியைக் கட்டியபடி போலீஸ்காரர்.

“யாருய்யா நீ? எங்கே போய்க்கிட்டிருக்கே?” என்றார் அவர்.

“ஊர்க்கு...?” என்றான்.

“எந்த ஊருய்யா நீ?” என்றார் அவர்.

“ஜாஜாவலி. ஊப்பி” என்றான்.

“பாய் இங்கே வாங்க” என்று இன்னொரு முஸ்லிமைக் கூப்பிட்டார். முகத்தில் துணி மாட்டிய இன்னொரு போலீஸ். “பாய், இந்தியில பேசுறான். என்னன்னு கேட்டுச் சொல்லுங்க” என்றார் முதல் போலீஸ்காரர்.

அஞ்சிறைத்தும்பி - 27 :
முகமூடிகள் விற்பவன்

இன்னொரு போலீஸ்காரர் உருது முஸ்லீம். இவன் இந்தியில் சொன்னதைப் புரிந்துகொண்டவர் லத்தியால் காலில் ஒரு போடு போட்டார். இவன் சொன்ன விவரத்தைத் தமிழில் மற்றொரு போலீஸ்காரரிடம் சொல்ல அவர் இன்னொரு காலில் லத்தியால் அடித்தார்.

“நாடு முழுக்க என்ன நிலைமைல இருக்கு? ஊருக்குப் போறியா? அதெல்லாம் போக முடியாது.”

“இல்லை ஷாப். ஊர்ல என் பொண்டாட்டியும் பையனும் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க” என்று சொல்லும்போதே உடைந்து அழுதுவிட்டான் பங்கஜ்.

“யோவ், சொன்னாக் கேளுய்யா. நீ எப்படி இருந்தாலும் ஊருக்குப் போக முடியாது. இப்போதைக்கு உன்னை மாதிரி வடமாநிலத்துக்காரங்களை அரசாங்கம் கல்யாண மண்டபத்துல தங்க வெச்சிருக்கு. உங்க வீட்டுக்கு நாங்க தகவல் சொல்றோம். சாப்பாடு கவர்ன்மென்டே தருது. பிரச்னையெல்லாம் முடிஞ்சபிறகு நாங்களே ஊருக்கு அனுப்பிவைக்கிறோம்” என்று போலீஸ்காரர் சொன்னதை அவன் கேட்கவில்லை. பெருங்குரலெடுத்து அழுதவனை ஜீப்பில் அள்ளிப்போட்டுக்கொண்டு போனார்கள். போகும் வழியில் “உன்கிட்ட மாஸ்க் இல்லையா?” என்று கேட்டார் போலீஸ்காரர். இவன் கையில் இருந்த குரங்கு மாஸ்க் ஒன்றை எடுத்துக்காட்ட, சிரித்துக்கொண்டவர், ஜீப்பின் முன்புறம் இருந்த மாஸ்க் ஒன்றை எடுத்து நீட்டினார்.

ந்து இரண்டு நாள்களாகிவிட்டன. போனில் சார்ஜ் செய்து மனைவியிடம் பேசிவிட்டான். சுற்றியிருந்தவர்களெல்லாம் ம.பி, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்காரர்கள் என்பதால் பங்கஜுக்கு நிம்மதியாக இருந்தது.

7 மணிக்கெல்லாம் சப்பாத்தியும் தாலும் கொடுத்தார்கள். மூன்று குழந்தைகள் அவனிடம் வந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை அவனிடம் இருந்த முகமூடிகளிடமே இருந்தன. ஆளுக்கு ஒரு முகமூடியை எடுத்துக்கொடுத்தான். இரவு

9 மணிக்குக் கல்யாண மண்டபத்தில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, சிறிய அகல் விளக்குகளை ஏற்றத் தொடங்கினார்கள். ‘என்ன விஷயம்’ என்று விசாரித்தான். “கொரோனாவை விரட்டுறதுக்கு மோடி ஜி விளக்கு ஏத்தச் சொல்லியிருக்கார்” என்றான் சத்தீஸ்கர்காரன். பக்கத்தில் இருந்த பீகார்காரன் நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு சப்பணக்கால் இட்டபடி ஒரு பீடியைப் பற்றவைத்தபடி போஜ்பூரியில் ஏதோ சொன்னான். பங்கஜுக்குப் புரியவில்லை. ஏதோ திட்டுகிறான் என்பது மட்டும் புரிந்தது.

தெருவே இருளில் கிடந்தது. மூன்று முகமூடிக் குழந்தைகள் மட்டும் வாசலிலிருந்து தெருவுக்குள் இறங்கினார்கள். சிங்கம், புலி மற்றும் ஸ்பைடர்மேன்.

- தும்பி பறக்கும்...