Published:Updated:

அப்பா - சிறுகதை

அப்பா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அப்பா - சிறுகதை

- கி.சரஸ்வதி

அப்பா - சிறுகதை

- கி.சரஸ்வதி

Published:Updated:
அப்பா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அப்பா - சிறுகதை

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இயந்திரப்பறவை, ரன்வேயைப் பின்னுக்குத் தள்ளி தன் ரப்பர் சக்கரங்களைப் பொறிபறக்கத் தேய்த்தபடி மேலேறியது. செவ்வக உலகத்தை மூடி பவுச்சில் போட்டுவிட்டு மேகங் களைப் பார்த்தபடியே பின்னோக்கி பறக்கத் தொடங்கினேன் நான்.

மாதையன் சார் வழக்கம்போல பளிச்சிடும் சிரிப்புடனும், கறுத்த முரட்டுத் தோற்றத்துடனும், யாருக்கு வேண்டுமானாலும் எப்போதும் அன்பைப் பொழியத் தேவையான மழை மனதுடனும் அருகே அமர்ந்திருப்பது போல தோன்றியது.

புதுக்கோட்டை, வடகாடு கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மாவுக்கு நர்ஸ் வேலை கிடைத்தவுடன், அப்பா எனும் துணையற்ற நிலையில், அலையத் திராணியின்றி புதுகை டவுனில் இருந்து வட காட்டுக்குக் குடி புகுந்தது நேற்றுபோல திரையிலாடுகிறது.

கி.சரஸ்வதி
கி.சரஸ்வதி

டவுனில் இருந்து கிராமத்துக்குப் போனதாலும், ஓரளவு தெரிந்த ஆங்கிலத்தாலும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த என்னிடம் பத்தாம் வகுப்பு பையனின் கெத்தும் துடிப்பும் இருந்தது. பள்ளியில் என்னை பயத்துடன் பார்ப்பது போல பட்டது எனக்கு. ஆங்கிலப் புத்தகத்தைச் சரளமாக வாசித்த தகுதியைக் கொண்டு பழைய மாணவனைப் புறந்தள்ளி சட்டென்று லீடர் ஆனதில் இன்னும் பெருமை அதிகமாகி தோள் நிமிர்த்தியபடி திரியத் தொடங்கினேன்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் சில துறுதுறு மாணவிகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகக் கவரும் விதத்தில் இல்லை. என்றாலும், மிகத் தூய்மையான பள்ளி வளாகமும், ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் செடிகளும் மரங்களுமாகக் கொஞ்சமே கொஞ்சம் என் முரட்டு மனதை திசைதிருப்பத்தான் செய்தன.

பிடிக்காத விஷயங்களின் பட்டியல் நீண்டதாகவே அமைந்துவிட்டது. முதலாவதாக, என் வகுப்பு ரகு. முக்கியமாக, மாதையன் சார். அவர் மற்ற எல்லாரையும் போலவே என்னையும் சர்வ சாதாரணமாகவே நடத்தியது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. `பொறவு டவுனுக்கும் வில்லேஜுக்கும் என்னதான்டா வித்தியாசம்’ என்ற கோடி பெறும் கேள்வி என் மனதில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கேள்வி யையும் அடித்து நொறுக்கி, அதைவிடப் பெரிதாகச் சிந்திக்க வைக்கக் காலம் தலைப்பட்டது.

ஒரு சுபதினத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் என்று பள்ளியில் அறியப் பட்ட மாணவக் கண்மணி ஒருவன் வந்து, சுகாதாரத்துறையில் சேர விருப்பமுள்ளவர்கள் பெயர் தரலாம் என்று கூறவும், `வந்ததடா வாய்ப்பு’ என்ற துடிப்பில் முதல் ஆளாகப் பெயரைக் கொடுத்துவிட்டுச் சுற்றிலும் பார்த்த எனக்கு, பையன்களும் பெண் களும் ஏன் நமட்டுச் சிரிப்புச் சிரிக் கிறார்கள் என்று மட்டும் புரியவில்லை. `சரி பேர் கொடுத்த பசங்க எல்லாம் சாயந்தரம் பெல் அடிச்சதும் கொடிக் கம்பத்துக்கிட்ட வந்துடுங்க’ என்று சொல்லிவிட்டுப் போனான் அந்த அமைச்சன்.

மாலை மணியடித்ததும் கொடிக் கம்பம் அருகே விறைப்பாக நின்று கொண்டேன். சற்று நேரத்தில் மாதையன் சார் அங்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, “வழக்கம் போல காலையில கொஞ்சம் சீக்கிரமா வந்துடணும்டா. வந்ததும் பள்ளிக் கூடத்தை கூட்டித் தள்ளிட்டு, டாய் லெட்டு சுவர் வெளிப்பக்கத்தைக் க்ளீன் பண்ணிவுடணும்டா. உள்ளே சுத்தம் பண்ற வேலை உங்களுக்கு இல்ல; நான் பார்த்துக்குவேன். வெளிய மட்டும் பார்த்துப்புடணும். ஸ்கூல சுத்திப் பார்த்து எதுனா பிரச்னையினா மட்டும் சொல்லணும். வாரத்துக்கு ஒரு நாள் தான் ஒருத்தருக்கு டியூட்டி வரும், ஒரு நாளைக்கு ரெண்டு பேரு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அப்பா - சிறுகதை

பிரியாணிக்குப் பதிலாகப் பழைய சோறும் பச்சை மிளகாயும் இலையில் போட்டதைப் போல திகைத்துப் பின் வாங்கினேன்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வாசல் மெழுக வந்த நாச்சியம்மாவிடம் அம்மா, மாதையன் சார் பற்றி பேச்சுக் கொடுத்தாள். எல்லாம் என் வேலைதான். அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பல விஷயங்கள் சொல்லியிருந்தேன்.

“நர்ஸம்மா, சாரு ரொம்ப நல்லவரும்மா. அவரோட சின்ன வயசுலேயே அவரு அம்மா வேறொருத்தர்கூட போயிருச்சும்மா. அவரை அக்காவும், அப்பாவுமாத்தான் பார்த்துப் பார்த்து வளத்தாக. கிராமத்துல பொம்பளப் புள்ளைகளுக்கு கக்கூஸு வசதியெல்லாம் எங்க இருக்கு? அவுக அக்கா ஒரு தரம் ஆவா ரங்காட்டுக்கு அவசரத்துக்குப் போனப்போ எவனோ பார்த்துக் கேலி பண்ணித் தொரத்தி இருக்கான். அடுத்த நாளு, பள்ளிக்கூட சொவத்துல கண்டபடி வரைஞ்சு கிறுக்கி வச்சுட்டானுங்கம்மா. அவுக அக்கா பாவம் அவமானம் தாங்காம செத்துப் போச்சு” - இப்போது அம்மா என்னை முறைக்கத் தொடங்கியிருந்தாள்.

“அப்புறம் என்னாச்சு நாச்சியம்மா?” என்றவாறே என்னைப் பார்த்தாள்.

“அப்புறம் என்னம்மா, சார் தானா படிச்சு வேலைக்கு வந்தாரு. அப்பாரும் செத்த பொறவு கலியாணம்கூட பண்ணிக்காம, ஒத்த ஒண்டியா ஊருக்குப் பாடுபடுறாரும்மா. முக்கியமா, தெனமும் பள்ளிக்கூடத்தைச் சுத்தம் பண்றது, புள்ளைக போற இடத்த எவனும் அசிங்கப்படுத்தாம பார்த்துக்கிறது, இவரே உள்ள போயி, பள்ளிக்கூடத்துக்குப் புள்ளைக வர்றதுக்கு முன்னாடி எல்லா பாத் ரூமையும் சுத்தம் பண்ணி வைக்கிறதுன்னு செய்வாரு. வீட்டுல கக்கூஸ் இல்லாம ஒரு பொம்பளப் புள்ள உசுர பறிகொடுத்த ஆற்றாமைக்கு, அவர் போட்டுக்கிற மருந்து தான் இது. பள்ளிக்கூடத்துல புள்ளைக எல்லாம் சுத்தமான, பாதுகாப்பான பாத்ரூமை பயன்படுத்துறது அவருக்குக் கொடுக்குற நிம்மதி, ஒரு தாயோட நிம்மதிக்கு நிகரானது. பள்ளிக்கூடத்துல மட்டுமில்ல... விருப்பப்பட்ட பசங்களைச் சேர்த்துக்கிட்டு வெளியிலயும் இப்படி உதவுற வேலைகளைப் பாப்பாரும்மா, ரொம்பத் தங்கம்மா அவரு. புள்ளைக வீட்டுல வந்து கதகதையா சொல்லுதுகம்மா” என்ற வாறு வேலைகளை முடித்துக் கிளம்பினாள்.

அடுத்து வந்த நாள்களில் மாதையன் சார் வெகு சீச்கிரம் பள்ளிக்குச் செல்வதையும், பெண்கள் கழிப்பறையில் அவர்களுக்குத் தேவையான நாப்கின் பாக்கெட்டுகளை அடுக்கி வைப்பதையும், கழிவறையைத் தானே சுத்தம் செய்வதையும், அவரின் தொண்டரடிப் பொடிகள் வெளியே காவலாளிகள்போல திரிவதையும் பார்க்க முடிந்தது.

அரையாண்டு லீவில் ஊர் சுற்றும்போது, பனங்காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு நடந்த கேங் பிரச்னையில் பனை மட்டையால் ரகுவின் மண்டையில் ஓங்கி ஒரே அடி. அவன் ரத்தம் மண்டையில் வழிய பேச்சு மூச்சின்றி சாய்ந்துவிட்டான். ஏரிக்கரையில் நடுவதற் கெனப் பனங்கொட்டைகள் பறிக்க அங்கு வந்திருந்த சாரும் அவர் சீடர்களுமாகச் சேர்ந்து ரகுவைத் தூக்கி வந்து காப்பாற்றிய தையும், மிகப்பெரிய ஊர்ச் சண்டையாகி, என்னையும் பாதிக்கவிருந்த பெருங்கலவரம் ஒன்றை தன் அன்பாலும் ஆளுமையாலும் சார் சமாளித்து, சுமுகமாக முடித்ததையும் பிறகுதான் அம்மா அழுதபடியே கூறினாள். சம்பவம் நடந்தவுடன் நானும் மற்றவர்களும் அங்கிருந்து மாயமாகிவிட்டோம்.

அலுமினியப் பறவை டர்புலன்ஸில் லேசாகக் குலுங்கி மீண்டது. நினைவுகளிலும் ஒரு சிலிர்ப்பு.

என்ன மாதிரி ஒரு ஆள் அவர்... என்னைப் போன்ற ஒரு முரடனைத் தன் பேரன்பால் சரிசெய்த பேராற்றல் அவருடையது. புத்தகம், சிரிப்பு, பேச்சு, நட்பு என அழகான உலகைக் காட்டிய பேராசான். அவர் நடத்திய வாழ்க்கைப் பாடத்தில் தேறியவர்கள் பலர். விடுமுறையில் ஊர்க்கோடிப் பனங்காபட்டில் பனங்கொட்டை கள் பொறுக்கி வாய்க்கால் ஓரங்களில் நடுவதும், எல்லோரும் மரத்தடியில் அமர்ந்து சார் தரும் சாப்பாட்டைச் சாப்பிடுவதுமாக சொர்க்கம் அது.

அப்பா - சிறுகதை

பெண்களோடு ஆத்மார்த்தமான நட்பு பாராட்ட, பேரன்போடு உலகை அணுக அவரே கற்றுத் தந்தார். அல்ல, நடந்து காட்டினார். ப்ளஸ் டூ படிக்க வேறு பள்ளிக்குச் சென்றபோதும் அவர் வீட்டின் மாமரத்தடியில் தான் விடுமுறை நாள்களில் நான், ரகு, மணி, ஜெயா, பூவிழி, சுகந்தி, தேவராஜ் என அனைவரும் கூடிப் பிடிப்போம். அவர் தரும் நீர்மோரும் டீயும், அவ்வப்போது அரட்டையுமாக அற்புதமான பொழுதுகளை ஒரு கிராமத்து வாத்தியாரால் எங்களுக்கு வழங்க இயன்றது. நட்பின் மூலமாக உள்நுழைந்து தழைத்த பெருவிருட்சம் அவர்.

அறிவுரை என்ற ஒன்று அவர் கூறியிருந்தார் என்றால்... “பொழுதா வேணும், புத்தியா வேணும், காலத்தே வேணும்டா’’ என்பார்.

திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்து வடகாட்டுக்குச் சென்று கொண்டிருக் கிறேன். இந்த ஆசிரியர் தினத்தன்று அவரைச் சந்திக்கவே நெதர்லாந்திலிருந்து வருகிறான் இந்த கெமிக்கல் இன்ஜினீயர். பழைய மாண வர்கள் எல்லோரும் இணையப் போகிறோம்.

ரகுவை அழைத்தேன். மூன்றாம் முறைதான் அழைப்பை ஏற்றான். “டேய், கண்ணா, வேகமா வாடா” என்றவாறு போனை வைத்து விட்டான். அவன் அழுதது போலத் தோன்றி யது கற்பனையா? சற்றே பதற்றம் கூட, வழி சொல்லியபடி சென்று மாதையன் சார் வீட்டை அடைந்தேன். தெரு முனையிலிருந்து நல்ல கூட்டம். நீண்ட காலம் ஆகியிருந்தாலும் பழகிய முகங்களைப் பார்த்தபோது புரிந்துவிட்டது. எப்படி? எப்போது? நேற்றிரவு கூட எதுவும் சொல்லவில்லையே? பேசினேனே. அவருக்கென வாங்கி வந்த சில புத்தகங்களையும், புதுக் கைபேசி யையும் எடுத்துக் கொண்டு ஓடினேன்.

எந்தப் பெண்களுக்காக டாய்லெட் கழுவினாரோ, யார் செழிக்க உழைத் தாரோ, எந்தத் தலை முறைக்காக மரம் நட்டாரோ, அவர்கள் அத்தனை பேரும் `அப்பா’, `அப்பா’ என்று கதறிக் கொண்டிருந்தார்கள்.

“காலத்தே வராமப் போயிட்டோ மேடா கண்ணா” என மணி என்னைப் பார்த்து அலறினான்.

புத்தகத்தையும் கைபேசியையும் அவர் காலடியில் வைத்தேன். “அப்பா...” - என் வாழ்நாளில் முதன்முறையாகக் கூறி கதறத் தொடங்கினேன்.