Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 63

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மாவைப் பார்த்தேன். ‘வெறுங்கால் நந்தன்’ எதுவும் கதையாமல் கஞ்சியை மட்டுமே குடித்துக்கொண்டிருந்தார். அண்ணாவும் அக்காவும் இயக்கத்தில் இருப்பதை அறிந்திருந்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 63

அம்மாவைப் பார்த்தேன். ‘வெறுங்கால் நந்தன்’ எதுவும் கதையாமல் கஞ்சியை மட்டுமே குடித்துக்கொண்டிருந்தார். அண்ணாவும் அக்காவும் இயக்கத்தில் இருப்பதை அறிந்திருந்தார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

சண்டை நடந்துகொண்டிருந்தது. இரவுவரை நீடித்து காலையிலும் தொடரும் உக்கிரமான மோதல். களமெங்கும் அடர்ந்து நிறைந்திருக்கும் கந்தக வாசனை அடிவயிற்றைப் புரட்டியது. முன்னேறிய ராணுவத்தைத் தடுத்துநிறுத்தி போராளிகள் வெஞ்சமர் ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால், நிறைய பேர் விழுப்புண் அடைந்திருக்கின்றனர். என்னருகில் விழுந்து வெடித்த மோட்டார் ஷெல்லினால் கொஞ்சம் பயந்துபோய்விட்டேன். எழுந்த புகைக்குள்ளால் சிதறல்கள் பறந்தன. சத்தம் அடங்கியும் காற்றில் சுழன்றது. போர்க்களம் மெல்ல மெல்ல என்னைப் பழக்கியெடுக்கிறது போலும்!

துணிச்சலும் நடுக்கமும் மாறி மாறி சுற்றிவளைத்திருக்கிறது. இரவினில் ஒரு தோற்றம். பகலினில் ஒரு தோற்றமென விளங்கும் இப்போர்க்களத்தில், இரண்டு துவக்குகளை மாற்றியிருக்கிறேன். இயங்க மறுத்து இறுகி நிற்கும் ஆயுதங்களோடு களத்தில் நிற்கும் என்னைப் போன்ற பல புதிய போராளிகளுக்கும் இப்படியான சிக்கல்களும் பரிதவிப்புகளும் நேரக்கூடும். அதனைச் சரிசெய்யவல்ல விவேகமான பயிற்சி இருந்தும், அக்கணத்தில் இயலாத ஒன்றென ஆகிவிடுகிறது. ஒரு துவக்கு இயங்க மறுக்கும் நொடியை துரதிர்ஷ்டமாகக் கருதுகிற மனநிலை எனக்குள் வளர்ந்துவிட்டது. அப்படி நின்றுவிட்டால், என்னுடைய உயிருக்கு ஏதோ நேரப்போகிறதோ என்கிற யோசனை ரத்தத்தைப்போலப் பெருக்கெடுக்கிறது. `அக்கா...’ என்று ஆதீரன் அழைக்கும் சத்தம் கேட்கிறது. இத்தனை குண்டுச் சத்தங்களுக்கு இடையிலும், அவன் அழைப்பதைப் போலிருக்கும் பிரமையே ஆறுதலாக இருக்கிறது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 63

கிழக்கில் இருக்கிற இயக்கத்தின் படை வலிமை முற்றாக வீழ்ந்துவிட்டது. அங்கிருந்த போராளிகள் காடுகளுக்குள்ளால் நடந்து வன்னிக்குள் வந்தடைந்தனர். இப்போது அவர்கள் வாழ்வதற்குக் குடியிருப்புகளை உருவாக்கி அளித்திருந்தது இயக்கம். அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. போர்க்களத்துக்குச் செல்லத் தேவையில்லை என்பது அறிவிக்கப்படாத உத்தரவாக இருந்தது. ஆனால் பலர் அதனை மறுத்தனர். `எங்களுக்கு ஓய்வு வேண்டாம்’ எனத் தலைமைக்குத் தெரிவித்தனர். அம்மாவுக்குத் தெரிந்த போராளி ஒருவர் தேடிப்பிடித்து, நாங்கள் இடம்பெயர்ந்திருக்கும் இடத்துக்கே வந்திருந்தார். அவர் அம்மாவைப் பார்த்ததும் கட்டியணைத்து “அக்கா...” என நீண்ட நேரமாக எந்தச் சொல்லுமற்று கண்ணீர் சிந்தினார். அம்மா ஆறுதல்படுத்தி அவரை அமரச் சொன்னாள். நான் அவரைப் பார்த்தது கிடையாது. அவர் கதைப்பது, பழகுவது எல்லாமும் புதுமையாக இருந்தது. “ஊரான், இங்க வாங்க” என்று என்னை அழைத்து அருகில் அமரச் சொன்னார். அவரது வலது கையில் விழுப்புண் தழும்புகள் நிறைந்திருந்தன. உள்ளங்கை காய்ச்சுப் போயிருந்தது. மூன்று விரல்களற்ற அவரது இடது கையைப் பிறகுதான் பார்த்தேன். பூட்டம்மா, “ஆரடா மோனே வந்திருக்கிறது?” என்று என்னிடம் கேட்டபோது, அவரே குரலுயர்த்திச் சொன்னார்.

“நான் மட்டக்களப்பிலருந்து `வெறுங்கால் நந்தன்’ வந்திருக்கிறன்.’’

பூட்டம்மாவுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வந்திருப்பவர் புலிப்படையைச் சேர்ந்தவர் என்பதை விளங்கிக்கொண்டிருந்தாள். அம்மாவை அழைத்து, ‘`என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டாள். அம்மா, ``ராசவள்ளிக்கிழங்கில் கஞ்சி செய்கிறேன்’’ என்றாள். எனக்கு ‘வெறுங்கால் நந்தன்’ என்ற பெயரின் வரலாற்றை அறிய வேண்டுமென ஆவல் கொதித்தது. அம்மாவிடம் கேட்கலாம். அவள் சுருக்கமாகச் சொல்லி முடிப்பாள். இவரிடம் கேட்டால் எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியாது. எனக்குத் தெரிந்த போராளிகளோடு கதைப்பதைப்போல இவரிடம் கதைக்க முடியாது. நான் மெல்லக் கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உங்கட இயக்கப் பேரே வெறுங்கால் நந்தனா?”

“இயக்கப் பேர், நந்தன். வெறுங்கால், இயக்கம்வெச்ச பட்டப்பெயர்.”

கொஞ்சம் நேரம் எடுத்துச் சிரித்துக்கொண்டு கேட்டேன். `அதென்ன வெறுங்கால்?”

“ஊரான் அது பெரிய கத. மறுகா வர்றையில சொல்லுறன்.”

அவர் கதைப்பதிலுள்ள பல சொற்களின் அர்த்தமும் சப்தமும் எனக்குப் புதிதாக இருந்தன. அவருடைய உடல்மொழியை ரசித்துக் கொண்டிருந்தேன். மிக இளமையாக இருந்தார். ஆனால் அவர் திடீரென யோசனையில் அமிழ்ந்து பின்னர் மேலெழுந்து என்னைப் பார்ப்பதை உணர்ந்துகொண்டேன். அம்மா ராசவள்ளிக் கிழங்கில் கஞ்சி செய்துகொண்டு வந்திருந்தாள். ‘வெறுங்கால் நந்தன்’ விருப்பமும் ஆசையும் கொப்பளிக்கச் சூடுபறக்கும் கஞ்சியைக் குடிக்கத் தொடங்கினார். கஞ்சிக்கும் அவருக்கும் ஓர் அந்தரங்க உறவை ஏற்படுத்திக்கொண்டார் போலும். சுற்றியிருக்கும் எம்மை அவர் மறந்திருந்தார். பிறகு அவராகவே அம்மாவிடம் சொன்னார்.

“அக்கா... இந்த மூசாப்பில உங்க கையால செய்த கஞ்சியைக் குடிக்கிறது பாக்கியம்.”

அம்மா சிரித்துக்கொண்டு சொன்னாள். “நந்தன் உங்களுக்கெல்லாம் அடுப்பூதி சமைச்சன் என்கிற நிம்மதியோடயும் சந்தோசத்தோடயும் இந்தக் கட்டை தணலில வேகும்.”

அம்மாவைப் பார்த்தேன். ‘வெறுங்கால் நந்தன்’ எதுவும் கதையாமல் கஞ்சியை மட்டுமே குடித்துக்கொண்டிருந்தார். அண்ணாவும் அக்காவும் இயக்கத்தில் இருப்பதை அறிந்திருந்தார். அதனால் அவர்களைப் பற்றியே விசாரித்துக்கொண்டிருந்தார். அண்ணா சமீபத்தில் வந்துபோனதைக் கூறினாள் அம்மா. நந்தன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். பூட்டம்மா படுத்திருந்தபடி நந்தனைத் தன்னிடம் வருமாறு கையசைத்தாள். நந்தன் அவளுக்கருகில் போனதும், தலைமாட்டில் கிடந்த திருநீற்றை எடுத்து, அவரின் நெற்றியில் பூசிவிட்டார். அதன் மீதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர முடிந்தது. ஆனபோதும் வெறுங்கால் நந்தன் அதனை வெளிப்படுத்த வில்லை. பூட்டம்மா சொல்வதைக் கேட்டார்.

“உனது வாசற்கடையைவிட்டு ஒரு பூந்தபொழுதில் நீ காட்டுக்குள் இறங்கினாய். ஆயுதங்களோடும் சேனையோடும் நீ தேடிவந்த நிலத்தை அடைந்துவிட்டாய். பேயாடல் ஆடும் கருணையற்ற துரோகத்தின் நிழல்கூட உங்களில் விழுந்துவிடக் கூடாது என எண்ணிய புனிதர்களுள் நீயும் ஒருவன். உனக்குச் சுகமே பொலியட்டும்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 63

வெறுங்கால் நந்தன் பூட்டம்மாவை வணங்கினார். புறப்படத் தயாராகும் வேளையில் “இந்த வெட்டுவாயன் உங்கடையா... எடுத்துக்கொண்டு போகவா அக்கா?” என்று கேட்டதும், தென்னையின் கீழே கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டுவரும்படி அம்மா சொன்னாள். நான் நந்தனிடம் மண்வெட்டியைக் கொடுத்தேன். அவர் பிடியைக் கழற்றித் தந்துவிட்டு ‘வெட்டுவாயனை’ மட்டுமே எடுத்துச் சென்றார். அவர் போனதும் கேட்டேன்.

“நந்தன் கதைக்கிற பல விஷயங்கள் எனக்கு விளங்கவே இல்லை.”

“ஓம், அவையள் அப்பிடித்தான் கதைப்பினம். அது மட்டக்களப்புக் கதை.”

“உங்களுக்கு எப்பிடி விளங்குது அம்மா?”

“எல்லாம் பழக்கம்தான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் எண்டுற மாதிரிதான்.”

“மண்வெட்டிக்கு `வெட்டுவாயன்’ என்றொரு பெயர் நல்லாய் இருக்கு.”

அம்மா சிரித்துக்கொண்டு சொன்னாள். “அவையளப்போல கதைக்கவேணுமெண்டால் இந்தச் சொல் மட்டும் காணாது.”

“வெறுங்கால் நந்தன் என்று ஏன் அவருக்குப் பெயர் வந்தது?’

“அது அவன்ர பட்டப்பெயர். தளபதி ராஜு வெச்சது எண்டு நினைக்கிறன். இயக்கம் சீருடைக்கு மாறி சப்பாத்து போட்ட தொடக்க

காலத்தில அதெல்லாம் போட முடியாது. மண்ணுக்கும் தன்ர உள்ளங்காலுக்கும் தொடர்பு இருக்கவேணுமெண்டு ஒரே வாதாட்டமாம்.”

“பிறகு என்ன நடந்தது?”

“இப்ப வரைக்கும் செருப்பு, சப்பாத்து போடுறதில்லை. வெறுங்காலோடதான் திரியிறான்.”

“இந்தக் காடுமேடெல்லாம் வெறுங்காலோட திரியிறதுக்கே ஒரு செருக்கு வேணுமெல்லே?”

“ஓம். அவையள் அப்பிடித்தான். நல்ல உபசரிப்பும் அன்பும்கொண்ட ஊர் சனம்.”

நான் வெறுங்கால் நந்தனை மீண்டும் சந்திக்க ஆவலாக இருந்தேன். அம்மா அவரைப் பற்றி நிறைய கதைகளைச் சொன்னாள். தன்னைத் தேடிவந்து பார்த்துவிட்டுப் போனது அவளுக்குப் பெருத்த சந்தோஷத்தைக் கொடுத்தது. நந்தன் இருக்கிறானா, இல்லையா என்றுகூட அம்மாவுக்குத் தெரியாமல் இருந்ததாம். துரோகத்தின் பிளவு யுத்தத்தில் இப்படி நிறைய போராளிகளை இழந்திருந்த மண்ணைப்போலவே அம்மாவும் சோர்வுகொண்டிருந்தாள். மரணங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் பழக்கம் யாரிடமும் இல்லாமல் இருந்தது. அம்மா சொன்னாள்.

“நந்தன் ஒரு போர்த்திறன் மிக்க ஆள். அவன் இயக்கத்தில் சேர்ந்த குறுகியகாலத்திலேயே பெயர் வாங்கியவன். பிறகு கொஞ்ச காலம் பெரியவரோட பாதுகாப்பு அணியில நிண்டவன். இப்ப இந்தச் சமாதான காலத்திலதான் ஊருக்குப் போனவன்.”

“எத்தினை வருஷமாய் இயக்கத்தில இருக்கிறார்?”

“நீ பிறக்கிறதுக்கு முதல் இயக்கமானவன்” என்றாள்.

சண்டை நடந்துகொண்டிருந்தது. இரவுவரை நீடித்து, காலையிலும் தொடர்ந்து, இப்போது மதியம் தாண்டியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது உக்கிரமான மோதல். களமெங்கும் ரத்தமும் கந்தக வாசனையும். அதே மாதிரி முன்னேறிய ராணுவத்தைத் தடுத்து நிறுத்தி போராளிகள் வெஞ்சமர் ஆடிக்கொண்டிருந்தோம். போராளிகள் நாற்பது பேர் இதுவரையிலும் வீரச்சாவு அடைந்திருக்கின்றனர். போர்க்களம் வித்துடல்களை எண்ணத் தொடங்குகிறது. வீரச்சாவும் விழுப்புண்ணும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல அலர்கின்றன. என்னுடைய மாதப்போக்கின் இரண்டாம் நாளிது. என்னுடைய சுடுகலன் உக்கிரமாய் இயங்குகிறது.

“போரும் போர் வீரமும்

ஆணுக்கேயெனச் சொல்வார் பொய்யை – உன்

புலி மகள் உடைத்தாளம்மா

வேரோடும் வேரடி மண்ணோடும்

மாற்றானை வீழ்த்தினாள்

வீரம் படைத்தாளம்மா

எங்கே நகையெங்கே என்று நகைதேடி

வாழ்ந்தாளம்மா நேற்று

வாழ்ந்த கன்னி

எங்கே பகையெங்கே என்று வாழ்ந்தாளம்மா

உன் மகள் இன்றுதன்

மண்ணை எண்ணி

அம்மா உன் மகள்

காவலரண் ஒன்றில் நின்றாள்

நான் பார்த்தேன்”

என்ற காசி ஆனந்தனின் வரிகளை, செல்லப்பா முழங்கிக்கொண்டிருந்தார். பங்கருக்குள் கிடக்கும் வானொலியில் ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்டபடி, துவக்கை இயக்குவது ஏதோ சரித்திரக் காட்சிபோல எனக்குள் தோன்றியது. பங்கருக்கு வெளியே எழுந்து சென்று காப்பெடுத்து சண்டை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எங்களுக்கு முன்னிருந்த மண் அணையின் ஒரு பகுதியை ராணுவம் கைப்பற்றிவிட்டது என்கிற தகவல் எங்களுக்கு வந்துசேர்ந்தது.

எனக்கு எல்லாமும் இருண்டுபோய்விட்டன.

(நீளூம்...)