Published:Updated:

“சினிமாக்களில் இது சித்திரங்களின் காலம்!”

ஓவியர் டிராட்ஸ்கி மருது
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் டிராட்ஸ்கி மருது

கிராபிக்ஸ், அனிமேஷன் என்றாலே அது மாயாஜாலம்தான் என்று அர்த்தமில்லை. தத்ரூபமான சித்திரிப்புக்குக்கூட கிராபிக்ஸ் உதவும்.

“சினிமாக்களில் இது சித்திரங்களின் காலம்!”

கிராபிக்ஸ், அனிமேஷன் என்றாலே அது மாயாஜாலம்தான் என்று அர்த்தமில்லை. தத்ரூபமான சித்திரிப்புக்குக்கூட கிராபிக்ஸ் உதவும்.

Published:Updated:
ஓவியர் டிராட்ஸ்கி மருது
பிரீமியம் ஸ்டோரி
ஓவியர் டிராட்ஸ்கி மருது

அழகியல், வரலாற்றுணர்வு, சமூக மாற்றத்துக்கான வேட்கை - மூன்றிலும் தோய்த்தெடுத்த தூரிகை ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடையது. கோடுகள், வண்ணங்களில் மாயம் நிகழ்த்தும் மருதுவுக்கு, சமீபத்தில் மா.அரங்கநாதன் இலக்கிய விருது கிடைத்திருக்கும் இனிய சூழலில் அவரைச் சந்தித்துப்பேசினேன். பலமணிநேர உரையாடலின் குறுக்குவெட்டுத்தோற்றம் இது.

“நான் மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் பணிபுரிந்ததில் இருந்து எழுத்தாளர் மா.அரங்கநாதன் பழக்கம். அப்போது அவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய கதைகளைத் தொடர்ந்து படித்திருக்கிறேன். அவர் நடத்திய ‘முன்றில்’ சிற்றிதழில் நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். அவர் பெயரிலான விருதை அரங்கநாதனின் மகன் நீதியரசர் மகாதேவன் எனக்கு வழங்குவது மகிழ்ச்சி. அதிலும் அந்த விருதைத் தமிழின் முக்கியமான ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பெறுவது இன்னும் பெருமகிழ்ச்சி!” உற்சாகத்தில் ததும்புகின்றன வார்த்தைகள்.

“சினிமாக்களில் இது சித்திரங்களின் காலம்!”

``இன்றைய நவீனச் சூழலில் ஓவியத்துக்கான இடம் என்ன?’’

“உலகம் முழுவதும் உள்ள எல்லா நிலப்பரப்புகள், எல்லா இனக்குழுக்கள், எல்லாப் பண்பாடுகளிலும் ஓவியத்துக்குத் தவிர்க்க முடியாத இடமுண்டு. நாம் வளரும்போதே சித்திரங்களுடன்தான் வளர்கிறோம். மதுரையில் நாயக்கர் காலத்து ஓவியம் ஒன்றில் நெஞ்சில் பறையைக் கட்டிக்கொண்டு இசைக்கும் ஓவியம் ஒன்றை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிநாடாவுக்கு அருகில் இருக்கும் கரையோரக் கிராமம் ஒன்றில் இரவுநேரத்து விழாவில் அதேபோல் மக்கள் பறையை நெஞ்சில் கட்டி அடிப்பதைப் பார்த்தேன். இப்படி ஓவியங்கள் நமக்கு வரலாற்றுத் தொடர்ச்சியையும் அந்த வரலாற்றுத்தொடர்ச்சியில் நாம் யார் என்பதையும் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரை எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு. பொதுவாகவே தமிழ்ச்சமூகம் என்பது வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட சமூகம். ஓவியத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் அல்ல. காமிக்ஸ் படித்த ஒரு தலைமுறை இங்கே இருந்தாலும் சித்திரத்தின் தாக்கத்தைவிட எழுத்துகள், வார்த்தைகளின் தாக்கம்தான் தமிழ்ச்சூழலில் அதிகம். ஆனால் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான நவீன வாழ்க்கை அந்தச் சூழலை மாற்றியிருக்கிறது.

விஷுவல் என்பது தற்காலச் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இப்போது மீம்கள், வீடியோ மீம்கள், மார்பிங் புகைப்படங்கள், மார்பிங் வீடியோக்களால் சூழப்பட்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் வீடியோ கேம்ஸ், அனிமேஷன் வீடியோ என்று பிம்பங்கள், சித்திரங்களுடன்தான் வாழ்கிறார்கள். வார்த்தைகளால் அனுமானிக்கத்தான் முடியும். ஓவியம்தான் காட்சிப்படுத்தும். இன்று ஒரு மீமிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. அது பொய்ச்செய்தியாகக்கூட இருக்கலாம். பொய்யைக்கூட இப்போது விஷுவலாகத்தான் சொல்ல முடியும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.”

``ஆர்ட் வொர்க் முதல் கிராபிக்ஸ் வரை பல ஆண்டுக்காலம் நீங்கள் சினிமாவில் பணிபுரிந்துவருகிறீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்...’’

“பீரியட் படம், மன்னர்காலப் படம் என்றாலே என்.டி.ராமாராவ் படங்கள் நினைவுக்கு வருமளவு தென்னிந்திய சினிமாக்கள் பொய்த்தோற்றங்களை உருவாக்கியிருந்தன. அந்த சரித்திரப்படங்களில் காட்டப்படும் மன்னர்களின் உடைகள், அணிகலன்கள், அரண்மனைகள் எவையுமே நம் தமிழ் வரலாற்றைப் பிரதிபலிப்பவை அல்ல. இதை உடைக்க வேண்டும் என்றுதான் ‘வாளோர் ஆடும் அமலை’ புத்தகத்தை உருவாக்கினேன். நாசரின் ‘தேவதை’ படத்தின் ஒரு சிறுபகுதியில் உண்மையான வரலாற்றுச் சித்திரிப்பைக் கொண்டுவர முடிந்தது. அதன்பின் 2009-ல் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தபோது நான் பணிபுரிவதாக இருந்தேன். பிறகு அது நடக்கவில்லை.

இனி சினிமாக்களில் ஓவியத்தின் பங்கைத் தவிர்த்துவிட முடியாது. ராஜமௌலி, சஞ்சய்லீலா பன்சாலி என்று பிரமாண்ட இயக்குநர்களின் சினிமாக்கள் ஓவியங்களின் துணை கொண்டே உருவாக்கப்படுகின்றன. மேலும் இப்போதெல்லாம் அனிமேஷன், கிராபிக்ஸ் செய்வதற்கான வசதிகள் நிறைய உருவாகிவிட்டன. தனித்தனியாகவே பணிபுரிந்து இணைக்க முடியும். கிராபிக்ஸ், அனிமேஷனுக்கான எல்லா அம்சங்களையும் நாமே உருவாக்கவேண்டியதில்லை. பல விஷயங்கள் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஏராளமான செயலிகள் வந்துவிட்டன.

கிராபிக்ஸ், அனிமேஷன் என்றாலே அது மாயாஜாலம்தான் என்று அர்த்தமில்லை. தத்ரூபமான சித்திரிப்புக்குக்கூட கிராபிக்ஸ் உதவும். 18 ஆண்டுகளுக்கு முன் பாரதி ராஜாவிடம் ‘உங்கள் படங்களுக்கும் கிராபிக்ஸ் தேவைப்படும். காதலனும் காதலியும் பேசிக்கொண்டிருக்கட்டும். அதற்குமேல் உள்ள நிலாவை நான் உருவாக்கித் தருகிறேன்’ என்றேன். எனவே இந்திய சினிமாக்களில் இது சித்திரங்களின் காலம்.”

``பெரியாரியத் தாக்கம் கொண்ட நீங்கள் பெரியார் குறித்த ஓவியங்களை வரைந்திருக்கிறீர்கள். சிற்பி தனபால் வடித்த பெரியார் சிலை புகழ்பெற்றது. ஆனால் ஆதிமூலத்தின் நூறு காந்தி ஓவியங்களைப் போல் நவீன ஓவியங்களில் அதிகம் பெரியார் இடம்பெறாதது ஏன்?’’

“காந்தி நூற்றாண்டுவிழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் அவை. பல்வேறு காந்திய நிறுவனங்கள் வாங்கியதால் அவை பரவலாகச் சென்றடைந்தன. ஆனால் என் ஓவிய முன்னோடிகளான ஆதிமூலம், தனபால், ஆர்.பி.பாஸ்கர், தட்சிணாமூர்த்தி அனைவருமே திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்றவர்கள்; திராவிட இயக்க ஆதரவாளர்கள்தான். மேலும் தமிழ்ச்சூழலில் நவீன ஓவியங்கள் என்பவை சிற்றிதழ்ச்சூழலில் உருவாகி வளர்ந்தவை. அன்றைய சிற்றிதழ்களில் பெரியாரையோ திராவிட இயக்கக் கருத்துகளையோ பிரதிபலிப்பதற்கான சூழல் இல்லாததும் ஒரு காரணம்.”

“சினிமாக்களில் இது சித்திரங்களின் காலம்!”

``இன்றைய தமிழக அரசு புத்தகங்கள், இலக்கியம், கல்வி குறித்துப் பல புதிய முன்னெடுப்புகளை எடுக்கிறது. ஓவியத்தை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க உங்கள் ஆலோசனைகள்..?’’

“பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அறிவுரையின்பேரில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்க்குழந்தைகளுக்காகப் பொதுவான பாடப்புத்தகங்களை உருவாக்க விடுதலைப்புலிகள் முயன்றார்கள். அந்தப் பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்காக ஐரோப்பியப் பாடப்புத்தகங்கள் பலவற்றைப் பார்வையிட்டோம். அப்போதுதான் நம் பாடப்புத்தகங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பது புரிந்தது. தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரை நீண்டகாலம் ஓவியங்களுக்கும் அதற்கும் தொடர்பேயில்லை. எழுத்துகளே பாடப்புத்தகங்களை ஆக்கிரமித்திருந்தன. உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தபிறகு நிறைய மாற்றங்கள் நடந்தன. சித்திரங்களும் பாடப்புத்தகங்களில் இடம்பிடித்தன. அதில் என் பங்கும் உண்டு. இன்னும் நிறைய மாற்றங்களை உருவாக்க வேண்டும்.

ஓவிய வகுப்புகள் வகுப்பறைகளில் நடக்கக்கூடாது. ஓவிய வகுப்புகள் நடைபெறுவதற்கு என்றே கிரியேட்டிவ் ஸ்பேஸ் வேண்டும். அங்கே குழந்தைகள் வரைந்து முடித்ததும் அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதை அடுத்தடுத்து வரும் குழந்தைகள் பார்வையிட வேண்டும். மியூசியங்களையும் கற்பித்தல் முறையையும் இணைக்கவேண்டும். குழந்தைகளை அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச்சென்று மியூசியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புரொஜெக்டர்களை வைத்து ஆவணப்படங்கள், முழுநீளப்படங்களைத் திரையிட்டுக் காட்டவேண்டும். காட்சிவழிக் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய காலகட்டம் இது!”