கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

குழந்தை இலக்கியத்துக்காக மலர்ந்த உள்ளம்!

அழ.வள்ளியப்பா
பிரீமியம் ஸ்டோரி
News
அழ.வள்ளியப்பா

அழ.வள்ளியப்பா 100

எழுத்தும் இலக்கியமும் பெரியவர்களுக்கானது எனப் படைப்பாளிகள் நம்பியிருந்த காலத்தில், குழந்தைகளுக்காக எழுதிக் குவித்தவர் அழ.வள்ளியப்பா. அவர் எழுதிய ‘மலரும் உள்ளம்' படிக்கும் குழந்தைகளின் இதயம், கற்பனையில் மலர்ந்து விரியும். அவரின் பாடல்கள்தான் 80’ஸ் குழந்தைகளின் உரையாடல்களுக்குள் காந்தியைக் கொண்டு சென்றது. பர்மா ரமணிக்குள்ளும் நீலா மாலாவுக்குள்ளும் வாசித்த குழந்தைகளே பாத்திரங்களாக உலவினார்கள். தான் எழுதியதோடு மட்டுமன்றி, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்தி எழுதவும் வைத்தார். குழந்தை இலக்கியத்தில் அழ.வள்ளியப்பா மரபென்பது நீண்டு இன்றளவும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

1922, நவம்பர் 7-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் பிறந்தவர் வள்ளியப்பா. பெற்றோர், அழகப்பன்-உமையாள். உடன்பிறந்தோர் மூவர். அழகப்பன் வீட்டுக்கு அருகில் வசித்த அழகப்பன்-அலமேலு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. வழக்கமாக செட்டிநாட்டில் குழந்தை இல்லாமல் வாடும் தம்பதியினருக்கு நான்கைந்து குழந்தைகள் வைத்திருப்பவர்கள் தத்துக்கொடுப்பது வழக்கம். வள்ளியப்பாவை அழகப்பன்-அலமேலு தம்பதிக்குத் தத்துக்கொடுத்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளையாகவே வளர்ந்தார் வள்ளியப்பா.

அழ.வள்ளியப்பா
அழ.வள்ளியப்பா

பள்ளிக்காலம் தொட்டே வள்ளியப்பாவுக்குப் பாடல் புனையும் ஆற்றல் இருந்தது. வாசிக்கும் பழக்கமும் ஒட்டிக்கொண்டது. பள்ளிக்கு நடந்துசென்று, பேருந்துக்குத் தரும் காசைச் சேமித்துப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் அளவுக்குத் தெளிவோடு இருந்தார். நடந்துவரும்போது கண்ணில்படும் காட்சிகளையெல்லாம் வைத்துப் பாடலாகப் பாடுவதும், மற்ற பிள்ளைகள் அவரைப் பின்தொடர்ந்து பாடுவதும் இயல்பாக இருந்திருக்கிறது.

பாரதிமீதும் காந்திமீதும் வள்ளியப்பாவுக்குப் பெரும் பற்றுண்டு. 16வது வயதில் ராயவரத்தில் பாரதி வாலிபர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார் வள்ளியப்பா. ஒவ்வோராண்டும் காந்தியடிகள் பிறந்தநாளன்று இந்தச் சங்கம் 1,000 பேருக்கு அன்னதானம் செய்துவந்திருக்கிறது. உயர்நிலைக் கல்வியோடு வள்ளியப்பாவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. எழுத்தாளரும் பதிப்பாளருமான சக்தி வை.கோவிந்தன், தன் சக்தி காரியாலயத்தில் வள்ளியப்பாவைக் காசாளராக நியமித்தார். அக்காலகட்டத்தில் சக்தி, மங்கை, அணில் ஆகிய மூன்று இதழ்களை கோவிந்தன் நடத்தி வந்தார். சக்தியின் ஆசிரியராக தி.ஜ.ரங்கநாதன் இருந்தார். கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டே தி.ஜ.ரவின் உந்துதலால் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் வள்ளியப்பா. ஒரு கட்டத்தில் எழுத்தையே முழுநேரத் தொழிலாகச் செய்ய முனைந்தார். ஆனால், தி.ஜ.ர, ‘‘எழுத்தை நம்பி வாழ முடியாது. பிழைப்புக்கு வேறு வேலை தேடிக்கோ, பகுதிநேரமா எழுது’’ என்று ஆலோசனை சொன்னார். அதன்பிறகு இந்தியன் வங்கியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

குழந்தை இலக்கியத்துக்காக மலர்ந்த உள்ளம்!

பாரதியும் கவிமணியும்தான் வள்ளியப்பாவின் ஆதர்சம். அவர்களின் வழியில், குழந்தைகளின் இயல்புக்கேற்ப, வார்த்தைகளால் வதைக்காத, சந்தம் மிளிரும் பாடல்களைப் புனைவதையே பெரிதும் விரும்பினார். வங்கியில் பணியாற்றியபடி பாடல்கள் எழுதினார். முதற்கட்டமாக தான் எழுதிய 23 பாடல்களையும் தன்னூரைச் சேர்ந்த நண்பன், ‘பழனியப்பா பிரதர்ஸ்' பழனியப்பனிடம் தர, அவர் படித்துப் பாராட்டியதோடு தானே நூலாகக் கொண்டுவருவதாகவும் சொன்னார். ‘மலரும் உள்ளம்' என்ற பெயரில் நூல் வந்தது.

ஆனாலும் வள்ளியப்பாவுக்குத் திருப்தியில்லை. நூலின் கட்டமைப்பும் வடிவமுமே குழந்தைகளை ஈர்க்க வேண்டும் என்று விரும்பினார். ‘படங்கள் இல்லாத குழந்தைகளுக்கான நூல், பூக்கள் இல்லாத நந்தவனம்' என்பார் வள்ளியப்பா. அடுத்து அவர் எழுதிய 100 பாடல்களைத் தரமான காகிதத்தில் வண்ணப்படங்களுடன் அழகிய கட்டமைப்பில் வெளியிட விரும்பினார். பிறர் அதற்கு இணங்கமாட்டார்கள் என்று கருதி தானே ‘குழந்தை புத்தக நிலையம்' என்ற பதிப்பகம் தொடங்கி, அந்த நூலை வெளியிட்டார். குழந்தைகளுக்கென அழகிய கட்டமைப்போடு வந்த அந்த நூலுக்கும் ‘மலரும் உள்ளம்’ என்றே பெயர் வைத்தார் வள்ளியப்பா.

குழந்தை இலக்கியத்துக்காக மலர்ந்த உள்ளம்!

‘‘நகரத்தார் வீடுகளில் ஆண் குழந்தைகளின் முதல் பிறந்தநாளை புதுமை விழாவாகக் கொண்டாடுவார்கள். பாரம்பர்யமாக நடக்கும் அந்த விழாவில் உறவினர்களெல்லாம் கூடுவார்கள். பெரிய விருந்து நடக்கும். அந்தக் காலத்திலேயே சில லட்சங்கள் செலவாகும். எங்கள் அண்ணன் அழகப்பனுக்குப் புதுமை விழா நடத்தவேண்டிய சூழல். ‘அதற்குச் செலவாகும் பணத்தை வைத்துப் பதிப்பகம் தொடங்கிவிடலாமா' என்று அப்பா கேட்க, ‘நீங்கள் என்ன நினைக்கிறீ்ர்களோ அதைச் செய்யுங்கள்' என்று அம்மா சொல்லியிருக்கிறார்கள். புதுமை விழாவைத் தவிர்த்துவிட்டு அந்தப் பணத்தில்தான் அப்பா பதிப்பகம் தொடங்கி ‘மலரும் உள்ளம்' நூலைக் கொண்டு வந்தார். வழக்கமாக பெண்கள் மரபு சார்ந்த விஷயங்களில் தீவிரமாக இருப்பார்கள். அம்மாவுக்கு அப்பாவின் எழுத்தின்மீது மிகுந்த மரியாதை இருந்தது. நிறைய விட்டுக்கொடுத்து இறுதிக்காலம் வரைக்கும் அப்பாவின் எழுத்து வாழ்க்கைக்குத் துணை நின்றார்’’ என்று நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அழ.வள்ளியப்பாவின் மகளும் குழந்தை எழுத்தாளருமான முனைவர் தேவி நாச்சியப்பன்.

குழந்தை புத்தக நிலையம், நிறைய படங்களோடு பெரிய எழுத்துகளில் குழந்தைகளுக்கான நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டது. ‘நல்ல நண்பர்', ‘குதிரை சவாரி', ‘அம்மாவும் அத்தையும்', ‘எங்கள் பாட்டி' எனப் பல நூல்கள் அப்போது குழந்தைகளின் உலகை நிறைத்தன. வள்ளியப்பா தன் கதைகள் மூலம் நீதி போதித்ததில்லை. வாசிக்கும் குழந்தைகளின் சிந்தனைகளையும் கற்பனையையும் விரியச் செய்வதே அவர் பாணி. கதைகளின் பாத்திரங்களாகக் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்வார். கல்கியில் குழந்தைகளுக்கான ‘பர்மா ரமணி' தொடர்கதையை எழுதினார். கோகுலம் இதழில் அவர் எழுதிய ‘நீலா மாலா' தொடர் பிற்காலத்தில், பொதிகையில் தொலைக்காட்சித் தொடராக வந்தது.

குழந்தை இலக்கியத்துக்காக மலர்ந்த உள்ளம்!

'சின்னஞ்சிறு வயதில்', 'பெரியோர் வாழ்விலே', ‘பிள்ளைப் பருவத்திலே' போன்ற நூல்கள் அழ.வள்ளியப்பாவின் மிகச்சிறந்த பங்களிப்புகள். முன்னோடி மனிதர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியதோடு சிறுவயதில் அவர்களை முன்னகர்த்திய விஷயங்களையும் குழந்தைகள் விரும்பும் மொழியிலும் வடிவத்திலும் வழங்கினார் வள்ளியப்பா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 40 கதைகள், 3 முழுநீள நாவல்கள், 9 கட்டுரை நூல்கள், ஒரு நாடக நூல், 6 மொழிபெயர்ப்புகள் என வள்ளியப்பா குழந்தை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் பங்களிப்பு போற்றத்தக்கது.

இந்தியன் வங்கி பரிவர்த்தனை நடைமுறைகளைத் தமிழுக்கு மாற்றத் தொடங்கிய காலத்தில் வங்கியியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கித் தந்திருக்கிறார் வள்ளியப்பா. பாரத வங்கியின் நடைமுறைகளைத் தமிழுக்கு மாற்றவும் பெரும் பங்களிப்பு செய்தார். வங்கியில் பணியாற்றிய காலத்திலேயே தென்மொழிகள் புத்தக டிரஸ்ட், இந்தியன் வங்கியிடம் ‘பணி மீள் உரிமை' கோரி அவரைத் தன் நிறுவனத்துக்கு அழைத்தது. ஐந்தரை ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் குழந்தை இலக்கியச் சிறப்பு அலுவலராகப் பணியாற்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளின் குழந்தை இலக்கிய மேம்பாட்டுக்குப் பங்களித்தார். பிறகு மீண்டும் வங்கிப்பணிக்கு வந்து மண்டல மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தேவி நாச்சியப்பன்
தேவி நாச்சியப்பன்

‘‘குழந்தைகளுக்கான இலக்கியத்தை வளமாக்குவதற்காக அப்பா செய்த பணிகள் முக்கியமானவை. 1950, தமிழ்ப்புத்தாண்டு அன்று குழந்தை எழுத்தாளர் சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தார். 1956-ல் தமிழகத்தின் முதல் புத்தகக் கண்காட்சியை, குழந்தைகள் புத்தகக் காட்சியாக நடத்தினார். குழந்தை எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து நூல் கொண்டுவந்தார். குழந்தைகளுக்கான நாடகவிழா நடத்தினார். இவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் அப்பா குடும்பத்தையும் நிறைவாகப் பார்த்துக்கொண்டார். வழக்கமாக ஆண்களின் 60வது பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடுவார்கள். அம்மாவின் 60வது பிறந்த நாளை அப்பா பிரமாண்டமாகக் கொண்டாடினார். எழுத்தாளர்கள் சிரமப்பட்டால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவர் பலரது மனங்களில் இன்றும் வாழ்கிறார்...’’ என்கிறார் தேவி நாச்சியப்பன்.

வள்ளியப்பாவின் மனைவி பெயர் வள்ளியம்மை. அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள், தேவி என ஐந்து பிள்ளைகள். ஆசிரியையான தேவி அப்பாவைப் போலவே குழந்தைகளுக்காக எழுதிக்கொண்டிருக்கிறார். தேவியின் குழந்தை இலக்கியப் பங்களிப்புக்காக 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கர் விருது வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வள்ளியப்பாவுக்குத் தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது வழங்கியது. ஓய்வுக்குப் பிறகு, அப்பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார். 1989, மார்ச் 10-ம் தேதி செனட் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வள்ளியப்பா, குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்திப் பேசிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். அப்படியே மயங்கிச் சரிந்தார். மருத்துமனையில் சேர்க்கப்பட்ட வள்ளியப்பா, மார்ச் 16-ம் தேதி காலமானார்.

வள்ளியப்பா பிறந்த நூறாவது ஆண்டு இது. காலம் உள்ளவரை தமிழ் அவரை நினைவில் தாங்கியிருக்கும்!