Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

திரை இசை மும்மூர்த்திகள்

படிப்பறை

திரை இசை மும்மூர்த்திகள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
முன்பெல்லாம் ஆர்க்கெஸ்ட்ரா என்றால் நாற்பது ஐம்பது பேர் விதவிதமான இசைக்கருவிகளை வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். இன்று, ஒரு பேடு, ஒரு கீ போர்டு, ஒரு ட்ரம்... ஒரு டிஸ்க் போதும்... கச்சேரியை முடித்துவிடுகிறார்கள்.

தொழில்நுட்பம் இசைத்துறையை கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரத்துக்கு நகர்த்திச்சென்றுவிட்டது இன்று. ஆனாலும் எல்லாவற்றுக்கும் இலக்கணமென சில அடிப்படைகள் உண்டு. அந்த அடிப்படையின் மேல்நின்றுதான் எதுவும் இயங்கவியலும். கணினி யுகம் திரை இசையை எளிதான ஒன்றாக மாற்றியிருக்கலாம். ஆனால், சினிமா அறிமுகமான காலகட்டங்களில் இந்த ராஜபாட்டையைக் கட்டமைத்தவர்கள், தங்களை முற்று முழுதாக அர்ப்பணித்துக்கொண்டார்கள். அப்படியான மூன்று இசை ஆளுமைகளான எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் கலையுலகப் பயணத்தை ஈர்ப்பான மொழியில் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் பி.ஜி.எஸ்.மணியன்.

திரைப்படம் ஒலிவடிவம் பெற்ற காலங்களில் பெரும்பாலும் பாடலே கதை சொல்லல் வடிவமாக இருந்தது. பாகவதர், சின்னப்பா காலகட்டங்களில் 40-50 பாடல்களெல்லாம் திரைப்படங்களில் இடம்பெற்றன. பி.யூ.சின்னப்பா நடித்த கண்ணகி படத்தில் 22 பாடல்கள். டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஞானசௌந்தரி படத்தில் 18. அதிக பாடல்கள், அனைத்தையும் ஹிட் பாடல்களாகத் தர வேண்டும். இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி தங்களை நிரூபித்தவர்கள் இந்த இசைமேதைகள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில், ‘காற்றினிலே வரும் கீத’மும் ‘கிரிதர கோபாலா’வும் இப்போது கேட்டாலும் மெய் மறக்கச்செய்கின்றன. இந்தப் பாடல்களை உருவாக்கிய எஸ்.வி.வெங்கட்ராமன், நாடக நடிகர். ‘நள தமயந்தி’ படத்தில் கதாநாயகனாகவும், ‘சந்திரமோகன் (அல்லது) சமூகத்தொண்டு’ படத்தில் வில்லனாகவும் நடித்தவர். ‘நந்தகுமார்’ படத்தில் இசையமைப்பாளரானார். நடிகர்களே பாடல்களையும் பாடிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, பின்னணி பாடும் உத்தி முதன்முதலில் கையாளப்பட்டது ‘நந்தகுமார்’ படத்தில்தான்.

இன்று ஆஸ்கர் நமக்குப் பெரும் கனவாக இருக்கிறது. அந்தக் காலத்தில் ஜி.ராமநாதன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இசையமைத்ததற்காக ஆசிய-ஆப்பிரிக்க திரைவிழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றிருக்கிறார்.

இப்படி, நாம் அறியத் தவறிய நிறைய செய்திகள் இந்த நூலில் உள்ளன. திரைத்துறை, இசைத்துறையினர் மட்டுமல்ல, எல்லோருமே வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

- வெ.நீலகண்டன்

படிப்பறை

திரை இசை மும்மூர்த்திகள்

பி.ஜி.எஸ்.மணியன்

வெளியீடு :

வைகுந்த் பதிப்பகம், 51, டி,இன்னாசி தாணுவன் தெரு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில், இராமன்புதூர், நாகர்கோவில்-629002, தொடர்பு எண்: 9442077268

பக்கங்கள்: 328

விலை: ரூ. 325

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

டந்த பத்து ஆண்டுகளில் நம்பிக்கை தரும் விதமாய் நிறைய பேர் கவிதை எழுதிவருகிறார்கள். கவிதைகள் மட்டுமன்றி கவிதையியல் (Poetics) பற்றியும் யோசிக்கிற, எழுதுகிற சிலர் அபூர்வமாகவே வாய்க்கிறார்கள். அவர்களில் இளங்கோ கிருஷ்ணனை முக்கியமாகக் குறிப்பிடலாம். அவரின் வாசிப்பு முதிர்ச்சி அவரது கவிதைகளின் அழகியலை நீர்த்துப் போகச் செய்யாமல் இருப்பதே அவரின் பாரிய வெற்றி. `காயசண்டிகை,’ `பட்சியன் சரிதம்’, `பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ எனத் தொடர்ந்து நல்ல நூல்களாகவே தருகிறவர்.

படிப்பறை

பொதுவாக முதல் தொகுப்பு வெளியிடும் கவிஞனுக்கு ‘காயசண்டிகை’ போல ஒரு யானைப்பசி இருக்கும், தன்னுடைய எல்லாக் கவிதைகளையும் வெளியிட வேண்டுமென்று. ஆனால், இளங்கோ கிருஷ்ணனின் முதல் தொகுப்பு அதைத் தவிர்த்து தீர்க்கமும் இறுக்கமும், அருமையான தொன்மங்களும் நிறைந்த கவிதைகளைக் கொண்டிருந்தது. இரண்டாவது தொகுப்பு அதிலிருந்து முற்றாக வேறுபட்டு, `பேரன்பின் வேட்டை நிலமாக’ இருந்தது. மூன்றாவது தொகுப்பின் கவிதைகள் எளிமையும் மாயத்தன்மையும் கொண்டவையாக விளங்குகின்றன.

ஒரு கவிஞன் தன் தொடர்ந்த கவிதைத் தொகுதிகளில் வெவ்வேறு முகம் காட்டுவதென்பது அவனது கவி ஈடுபாட்டையும், படைப்பு முதிர்ச்சியையும் சுட்டுகிற விஷயம். அதை இளங்கோ கிருஷ்ணன் சாதித்திருக்கிறார். புதிய தொகுப்பையும் ஆவலுடன் எதிர்நோக்க வைத்திருக்கிறார்.

- கலாப்ரியா

படிப்பறை

ஆளுமை போற்றுதும்!

மிழக முற்போக்கு எழுத்தாளர்களில் தனித்துவமான ஆளுமை ச.தமிழ்ச்செல்வன். `வெயிலோடு போய்...’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பில் வெளியான அத்தனை கதைகளும் சக மனிதர்களின் வாழ்வியலை மிகைப்படுத்துதல் இல்லாமல் அழகாக முன்வைத்தன. `வாளின் தனிமை’ தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் யதார்த்தபாணியிலிருந்து சற்றே விலகி மேஜிக்கல் ரியலிச பாணியைக்கொண்டிருந்தன. மார்க்சிய சித்தாந்தத்தில் ஆழ்ந்த பிடிப்புக்கொண்ட இவர் சமூகச் செயற்பாட்டாளர். `அரசியல் எனக்குப் பிடிக்கும்’ என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்பு அதிக கவனம் பெற்ற நூல். பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் தமிழ்ச்செல்வன், ஆண்கள் சமையலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திவருபவர். அவர் எழுதிய `ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ நூல் சமையல் தொழில் எப்படிப் பெண்கள் தலையில் கட்டப்பட்டது என்பதை விரிவாகப் பேசுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவராக இருக்கும் இவரின் `எசப்பாட்டு’ தொகுப்பில் இருப்பவை பெண்களின் பிரச்னைகளை விரிவாகவும் ஆழமாகவும் தேடிப் பயணித்த கட்டுரைகள். அரசியலை அடிநாதமாகக் கொண்ட இவரது எழுத்துகள் பரவலாக வாசிக்கப்படவும் கொண்டாடப்படவும் வேண்டியவை.

- பாலு சத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism