Published:Updated:

படிப்பறை

கார்த்தி

தொண்ணூற்று ஆறு கழிஞ்சதுன்னா கொஞ்சம் விட்டு வைப்பானாம் எமன்’ எனத் தொகுப்பில் எழுதியிருக்கிறார் கி.ரா.

பிரீமியம் ஸ்டோரி
`கதைங்கறது நினைக்கும்போதே வளரும் மாறும்.’ 98 வயதான கி.ராஜநாராயணன், அவரின் புதிய தொகுப்பான மிச்சக் கதைகளில் எழுதியிருக்கும் வரி இது. அந்தப் புத்தகம் குறித்த ஒரு வரி விமர்சனமும் இதுதான்.

புதுவைக் கடற்கரையில் மண் அரிக்காமல் இருக்க, பெரிய அளவிலான கற்களைப் போட்டிருப்பார்கள். அதில் தேங்கி நிற்கும் நீர்போல, நூறாண்டு வாழ் அனுபவத்தின் வழி என்றோ தேங்கி நின்ற சொற்களுக்கு இதில் உயிரூட்டியிருக்கிறார். இந்தத் தொகுப்பு சிறுகதையா, கட்டுரையா, வாழ்வியல் அனுபவங்களா எனப் பிரிக்கவியலா வண்ணம் எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது. கடல் துப்பும் நீராய், நினைவுகளைத் துப்பும் வரிகள் ஆங்காங்கே கதைகளை விதைத்துக்கொண்டே வருகின்றன. கு.அழகிரிசாமி, பாரதிராஜா, தி.ஜானகிராமன் என எல்லோரும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறார்கள்.

‘இட்லர் போனார் மீசை இருந்தது’ கதை அறுபதுகளின் ட்விஸ்ட் என்றால், ‘ஜமுனா’ என்னும் கதையிலோ கதாபாத்திரங்களைத் தேடுகிறார்கள் வாசகர்கள். தாத்தனின் வரிகள் ஆங்காங்கே வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான விஷயங்களையும் பேசுகிறது. ‘என்ன இது’ எனச் சுதாரிப்பதற்குள், ‘கெட்ட வார்த்தைக் கதைகளை ஆபாசமில்லாமல் பேசமுடியுமா’ என அடுத்த ஆயுதத்தை இறக்குகிறார். சின்னச் சின்னக் கதைகளை மேலும் அழகாக்குகின்றன, புதுவை இளவேனில் எடுத்த கி.ரா புகைப்படங்கள். எழுத்துகளினூடே விரிந்து படர்ந்திருக்கும் அந்தப் புகைப்படங்கள் தனியாய் ஒரு கதை சொல்கின்றன. அவரின் குரலிலேயே ஒவ்வொரு வார்த்தையும் காதுகளுக்குள் நுழைந்து தங்கிப்போகிறது.

‘தொண்ணூற்று ஆறு கழிஞ்சதுன்னா கொஞ்சம் விட்டு வைப்பானாம் எமன்’ எனத் தொகுப்பில் எழுதியிருக்கிறார் கி.ரா. எமன்கள் இன்னும் கொஞ்ச காலம் ஓய்வெடுக்கட்டும். கரிசல் இலக்கிய மேதையின் தற்காலங்களை புதுவை பொக்கிஷமாக்கிக் கொண்டிருக்கிறது.

படிப்பறை

மிச்சக் கதைகள்

கி ராஜநாராயணன்

அன்னம்

மனை எண் 1, நிர்மலா நகர்,தஞ்சாவூர்-613 007

செல்: 9943059371

விலை: ரூ.300/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு