Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மருத்துவத்தை அறவழியில் கற்பிக்கும் பல ஆயிரம் ஆண்டுப் பாரம்பர்யம் கொண்ட ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் முக்கியத்துவம் இழந்தன.

படிப்பறை

மருத்துவத்தை அறவழியில் கற்பிக்கும் பல ஆயிரம் ஆண்டுப் பாரம்பர்யம் கொண்ட ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் முக்கியத்துவம் இழந்தன.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

வ்வொரு சமூகமும் தன் தட்பவெப்பச் சூழல் மற்றும் நிலவியலுக்கு ஏற்ப தனித்துவமான மருத்துவ முறையைத் தன்னகத்தே கொண்டிருக்கும். நிலம் சார்ந்த உணவும் உடையும் எப்படித் தனித்துவமானதோ அப்படியே மருத்துவமும் தனித்துவமானது. ஆனால், காலனிய ஆதிக்கம் உலகெங்கும் ஒரே மருத்துவமுறையைப் பரப்பியது. பல நோய்களுக்கும் நவீன மருத்துவம் தீர்வுகளைத் தந்தாலும், நோய்களின் பெருக்கமும் இரக்கமற்ற மருத்துவ வணிகமும் பக்கவிளைவுகளாயின. ஒருகட்டத்தில் அலோபதி மருத்துவமே மருத்துவம் என்றும், மற்றவை நிரூபணமற்ற பயிற்சிகள் என்றும் நிறுவப்பட்டுவிட்டன. மருத்துவத்தை அறவழியில் கற்பிக்கும் பல ஆயிரம் ஆண்டுப் பாரம்பர்யம் கொண்ட ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் முக்கியத்துவம் இழந்தன. இந்தக் கசப்பான பின்னணியை முன்வைக்கும் நாவல்தான் ஆதுர சாலை.

படிப்பறை

ஆதுர சாலை

அ.உமர் பாரூக்

வெளியீடு :

டிஸ்கவரி புக்பேலஸ்

சென்னை

0444855 7525, 87545 07070

விலை : ரூ 400

பக்கங்கள் 376

மருத்துவப் பரிசோதனைகளுக்கான படிப்பை விட்டு வரும் இளைஞனுக்குத் துறைசார்ந்த பேரதிர்ச்சி காத்திருக்கிறது. பின்பற்றப்படாத பரிசோதனை வழிகாட்டுதல்கள், அலட்சியமான கையாளுகை, மருத்துவர்களின் பேராசை ஆகியன அவனை நிலைதடுமாறச் செய்கின்றன. ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டிய மருத்துவத்தை வணிகமாகச் செய்பவர்களின் செயல்பாடுகள் அவனைத் தொந்தரவு செய்கின்றன. ‘உலகம் முழுக்கவே மருத்துவர்கள் இப்படித்தானா’ என்ற சலிப்பு ஏற்படும் நேரத்தில் அவன் டாக்டர் அன்புவை சந்திக்கிறான். மனதில் இருந்த லட்சிய டாக்டரின் படிமமாக அவர் அவனுக்குத் தோன்றுகிறார். அவருடனான தற்கால மருத்துவம் குறித்த விவாதங்கள் பல்வேறு புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் டாக்டர் அன்பு சொல்லும் பல விளக்கங்கள் வாசகனுக்குப் புதியதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளன. கண் மருத்துவம் குறித்த அன்புவின் பார்வை மிகவும் முக்கியமானது. அன்பு சொல்லும் வாழ்வியல் விளக்கங்கள் மற்றும் மருத்துவமுறைகள் வாசிப்பில் கொஞ்சம் நீளமானதாகத் தோன்றுகின்றன. ஆனால் நம் நிலத்துக்கான மருத்துவத்தைத் தொலைத்துவிட்டு அயல்நிலத்தின் மருத்துவத்தைக் கொண்டாடும் சமூகத்துக்கு இப்படி நீட்டி முழக்கிச் சொல்லத்தான் வேண்டும் என்றும் தோன்றுகிறது. கடந்த 300 ஆண்டுகளில் எப்படித் தமிழ் மருத்துவம் ஆங்கில அரசால் கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளும்போது, சமகால இயற்கை மருத்துவர்களின் மீதான ஆளும்வர்க்கத்தின் ஒவ்வாமை அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காகவாவது ஆதுரசாலையை எல்லோரும் வாசிக்க வேண்டும். எழுதிய அ.உமர் பாரூக்குக்கு வாழ்த்துகள்.

சம்பு
சம்பு

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

எப்போதாவது கவிதை எழுதிவந்த சம்பு சமீபமாக தொடர்ந்து எழுதக்கொண்டிருப்பவராகியுள்ளார். தொந்தரவில்லாத எதையாவது எழுதிக் குவித்துத் தன்னைக் கவிஞராக அடையாளப்படுத்திக்கொள்வது அவரது நோக்கமல்ல. சமகாலத்தின் நெருக்கடிகளிலிருந்து தப்பியோட முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அதைத் தன் மொழியால் நேருக்குநேர் எதிர்கொள்கிறார். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய வாழ்க்கை எவ்வளவு நெருக்கடியானது, எத்தகைய கண்காணிப்பின்கீழ் நாம் நெட்டி நிறுத்தப்பட்டுள்ளோம், அதிகாரத்தின் குரூரங்கள், தப்பிப்பதற்கான மனித எத்தனங்கள் என இவரின் பாடுபொருள்கள் வெளிப்படையான அரசியலைக் கொண்டுள்ளன. பாரம்பர்யமென்கிற ஒட்டுடன் தொடரும் பிற்போக்குத்தனங்களுக்கும் நவீனமென வந்து ஆக்கிரமிக்கும் சீரழிவுகளுக்குமிடையே தத்தளிக்கும் மனநிலை மீதான இவரது பரிகாசமும் கோபமும் நம்மை நேரடியாகத் தாக்கவல்லவை. யூகிக்க இடமளிக்காத விதமாகத் தொடங்கி எதிர்பார்க்கவியலாத தருணத்தில் நம்மை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு தன் கவிதையை முடிக்கும் சொல்முறையும் மொழிவளமும் கொண்டவர். இவரது முதல் தொகுப்பு ‘அறம் எனும் ரத்தச் சிவப்புக்கனி.’ ‘காவியேறும் ரத்தம்’ - அடுத்து வரப்போகும் தொகுப்பு.

- ஆதவன் தீட்சண்யா

பொ.வேல்சாமி
பொ.வேல்சாமி

ஆளுமை போற்றுதும்!

பொ.வேல்சாமி, தமிழ் இலக்கிய வரலாறு குறித்த புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சிய அறிவு ஆளுமை. 90களின் இறுதியில் தமிழ்ச்சிந்தனையுலகில் புதிய சிந்தனை உசுப்பல்களை ஏற்படுத்திய `நிறப்பிரிகை' இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். தமிழ் இலக்கிய வரலாறு என்று நாம் அறிந்ததன் இடைவெளிகளில் உள்ள, கண்டுகொள்ளப்படாத செய்திகளைக் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். சனாதன மரபுக்கு எதிராக இருந்ததாலேயே களப்பிரர் காலம் இருண்டகாலமாகச் சித்திரிக்கப்பட்டது என்பதை விளக்கி எழுதிய `பொற்காலங்களும் இருண்டகாலங்களும்', சாதிக்கும் நிலவுடைமைச் சமூகத்துக்கும் இடையிலான உறவை விளக்கும் `கோயில் நிலம் சாதி' போன்ற பல முக்கியமான நூல்கள் இவருடையவை. சிறுபான்மை மதத்தவர்மீதான வெறுப்பு பரப்பப்படும் காலகட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றித் தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார். கால்டுவெல்லின் `திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலின் விடுபட்ட பகுதியைத் தேடிப்பிடித்து அதை முழுமையான பதிப்பாகக் கொண்டுவரக் காரணமாக இருந்தவர், தமிழ் அச்சு இலக்கிய வரலாறு, தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்த நாமறியாத பலரை ஆவணப்படுத்தியது, தமிழில் பெரும் வரலாற்றுத் தொடர்ச்சியுடைய அவைதீக மரபு குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தது என பொ.வேல்சாமி ஆற்றிவரும் பணிகள் போற்றத்தக்கவை.

- சுகுணா திவாகர்