கல்யாண்ஜியின் 14 கவிதைத் தொகுதிகளின் தொகுப்பு.
தமிழில் நவீன இலக்கியம் உருவானபோது முன்னோடிக் கவிஞராக இருந்தவர் கல்யாண்ஜி. அதற்குப் பின்னால் எழுதிய பல கவிஞர்களின் முன்னுதாரணமாகத் திகழும் கல்யாண்ஜியின் கவிதைகள் தொகுக்கப்பட்டுப் பெரும்நூலாக வாசிப்பது என்பது குறிப்பிடத்தக்க அனுபவம். வாழ்க்கையின் அற்புதத் தருணங்களை முன்வைக்கும் கல்யாண்ஜியின் மென் உணர்வுக் கவிதைகளை ஒரு போக்காகவே எடுத்துக்கொண்டு இப்போதும் எழுதிவரும் கவிஞர்கள் ஏராளம்.
கல்யாண்ஜியின் கவிதைகளில் இருப்பது அனுபவ ஊற்று. இடையறாத மெய்ம்மையறிதல். கதகளியில் ஒரு சிறிய பகுதி உண்டு. தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படும் கணங்கள் அவை. அப்போது நடிப்பு நின்று, அந்தத் தீவிர கணத்தில் நடிகர் முழுமூச்சாக நடனத்தில் ஈடுபடுவார். அப்படி ஒன்றிப் போவது மாதிரி அனேக கவிதைகள் இதில் இருக்கின்றன.
அடிப்படையான ஒரு உண்மை அல்லது சாராம்சத்தை நாம் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இதில் தேடிக்கண்டடையலாம். அப்படிப் பார்த்தாலும், கல்யாண்ஜி எங்கே தொடங்குகிறார் எங்கே முடிக்கிறார் எனப் பிரிப்பது கடினமானது. எல்லாமே ஒன்றோடொன்று கலந்திருக்கிறது.
பூக்களும், அத்தைகளும், விருப்பத்துக்குரிய பறவைகளும், இளவேனில் காலமும், ரயில் வண்டியும் அவர் கவிதைகளில் வந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையைக் கண்டு கொள்ளுதலும் அதன் அற்புதத்தை வியத்தலும் இந்தக் கவிதைகளின் பாடுபொருளாக இருக்கின்றன. அதேநேரத்தில் தனக்கே உரிய அந்தரங்கத் தருணங்களும் இந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளன.
விலைமதிக்க முடியாத கவிதைகளின் சிறப்புக்கு முன் இதன் விலை ஒரு பொருட்டல்ல. சொல்ல நினைப்பதும் சொல்லில் வருவதும் ஒன்றாக அவரிடம் நடந்திருக்கிறது. அந்த அழகே பேரனுபவம்!

கல்யாண்ஜி கவிதைகள்
வெளியீடு:
வ.உ.சி நூலகம்,
G-1 லாயிட்ஸ் காலனி,
அவ்வை சண்முகம் சாலை,
ராயப்பேட்டை, சென்னை- 600014 தொடர்பு எண்: 9840444841
பக்கங்கள்: 766
விலை:ரூ.800