Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருப்பது திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான்.

படிப்பறை

இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருப்பது திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

1992-ல் முதன்முதலாக க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளியானபோதே பரவலாகப் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அதே அகராதி, விரிவாக்கித் திருத்தப்பட்டு மூன்றாம் பதிப்பாக 2019, நவம்பர் 13-ம் தேதியன்று வெளியானது.

முதல் பதிப்பு வெளியானபின், 16 ஆண்டுகள் கழித்து மேம்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008-ல் வெளியானது. 16 ஆண்டுகளில் உருவான புதிய மாற்றங்களோடு வந்த அந்தப் பதிப்புக்குப் பிறகு, 12 ஆண்டுகள் கழித்து இப்போது வெளியாகியிருக்கிறது இந்தப் பதிப்பு. கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் தன்னளவில் மொழியைப் பயன்படுத்துவதில் பற்பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒரு கோடி தமிழ்ச்சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் இந்தப் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 23,800 தலைச் சொற்கள், 40,200 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் / தொடர்கள் ஆகியவற்றுடன் 2,650 ஈழத்தமிழ் வழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. 400-க்கும் மேற்பட்ட சொற்களுக்கான படங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது சிறப்பு.

படிப்பறை

முந்தைய பதிப்பில் இருந்த சில சொற்கள், வழக்கில் இல்லாமல் போய்விட்டதால் நீக்கப்பட்டும், சில சொற்கள் திருத்தப்பட்டும் இருக்கின்றன. தவிரவும், ‘பெருகிவரும் வழக்கு’, ‘அருகிவரும் வழக்கு’ என்று சில குறிப்பிட்ட சொற்களின் பயன்பாட்டுக் குறியீடுகளிலும் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். பொருள் விளக்கத்திலும், ஆங்கிலப் பொருளிலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியாகியிருக்கிறது இந்த அகராதி.

இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருப்பது திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான். சட்ட ஆவணங்களிலிருந்தும், திருநங்கை/ திருநர் சமூக எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் தேர்வு செய்து சேர்த்திருக்கிறார்கள்.

மூன்று முறை இப்படி ஒரு மொழியகராதியைத் திருத்தம் செய்து விரிவாக்கி வெளியிடப்படுவது ஒரு முக்கியமான செயல்பாடாகும். “ஆங்கிலம் தெரிந்தாலும், ஒவ்வொரு ஆங்கிலேயரின் வீட்டிலும் அகராதி இருக்கும். அதேபோல தமிழ் தெரிந்த அனைவர் வீட்டிலும் இந்த அகராதி இருக்கவேண்டும்” என்பார் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன். கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த காலத்திலும் இதற்கான பணியை மேற்கொண்டு மருத்துவமனையிலிருந்தே இந்த மூன்றாம் பதிப்பை வெளியிட்டார் அவர். அவரது உழைப்பின் சான்றாக உள்ள இந்த அகராதி வரவேற்கப்பட வேண்டியது.

பரிசல் கிருஷ்ணா

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

தமிழ் - தமிழ் - ஆங்கிலம் விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு

பக்கங்கள்: 1270

விலை: ரூ. 895.

முகவரி, Cre-A புதிய எண்: 2, பழைய எண்: 25, 17வது கிழக்கு வீதி, காமராஜர் நகர், திருவான்மியூர் சென்னை 600041

email:crea@crea.in

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

டந்த பத்தாண்டு எழுத்தில் என் வாசிப்பிற்கும், மனதிற்கும் மிகவும் நெருக்கமாயிருக்கிறார் நரன். `கேசம்’, `சரீரம்’ என்ற இரு சிறுகதைத்தொகுப்புகளும், `மிளகு பருத்தி யானை’ என்ற ஒரு கவிதைத்தொகுப்புமென நரன் படைப்புலகம் விரிகிறது. மெனக்கெடாத எழுத்து, தீவிர வாசிப்பின் முற்றல் இழந்த வாழ்வின் சாரம், விருப்பமின்றி நிகழ்ந்த இடப்பெயர்வு என நரனின் படைப்புகளை ஒன்றிணைத்துவிட முடியும். அவருடைய ‘கேசம்’ கதைதான் தமிழ் வாசகர்களை அவரை கவனிக்க வைத்தது. கவிதைகளிலும் நரனுக்கான மொழி சுலபமாக சாத்தியப்பட்டிருக்கிறது.

- பவா செல்லத்துரை

தமிழவன், நரன்
தமிழவன், நரன்

ஆளுமை போற்றுதும்!

ல்விப்புலம் சார்ந்த தலைசிறந்த பேராசிரியராகவும் அதே வேளையில் தீவிர இலக்கியப் பரப்பில் காத்திரமான படைப்பாளராகவும் திகழ்பவர், தமிழவன். கார்லோஸ் சபரிமுத்து என்னும் இயற்பெயர் கொண்ட தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து, வார்ஸா பல்கலைக்கழகம் மற்றும் திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்விப் பணியாற்றியவர். 80-களில் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வின் முக்கியத்துவத்தைப் பேசியதோடு அவற்றுக்கான நூல்களைத் தமிழில் கொடுத்தவர். குறிப்பாக அமைப்பியல் முறையிலான ஆய்வைத் தமிழ் ஆய்வுலகில் பரவலாக்கியதோடு அதுசார்ந்த நூல்களையும் உருவாக்கிக்கொடுத்தவர். அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் உருவாக்கிய தமிழ் அடையாளம் குறித்த இவரது கட்டுரைகள் முக்கியமானவை. கட்டுரைகளைப் போலவே புனைவுகளிலும் தனக்கான தனித்துவமான மொழி அடையாளத்தையும் கதை சொல்லல் தன்மையையும் தக்க வைத்துக்கொண்டவர். இவரின், ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மாறுபட்ட முறையில் தொன்மப் பயன்பாடுகளோடு பின்நவீனத்துவக் கதை சொல்லலைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. அதன்பின் வெளியான, ‘சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்’, ‘ஜே.கே எழுதிய மர்ம நாவல்’, ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ ஆகிய நாவல்களும் ‘இரட்டைச் சொற்கள்’, ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் முக்கியமான படைப்புகள். படிகள், இங்கே இன்று, மேலும், வித்யாசம், சிற்றேடு போன்ற தமிழ்ச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து நடத்தியும் எழுதியும் வரும் தமிழவன், போற்றப்பட வேண்டிய ஆளுமை.

சைலபதி