Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இரண்டாவது ஈழப்போர் காலகட்டத்தில் இலங்கையில் பிறந்து அகதியாகத் தமிழகம் வந்து பின் ஜெர்மனி சென்றவர் தனுஜா.

படிப்பறை

இரண்டாவது ஈழப்போர் காலகட்டத்தில் இலங்கையில் பிறந்து அகதியாகத் தமிழகம் வந்து பின் ஜெர்மனி சென்றவர் தனுஜா.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இலக்கியத்தில் எப்போதும் தன்வரலாற்றுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. வெற்றிபெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் எழுதுவது மட்டுமே தன்வரலாற்று நூல் என்ற நிலை கடந்த பல ஆண்டுகளாக மாறிவருகிறது. ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வருபவர்கள் தங்கள் தன்வரலாற்றை முன்வைக்கும்போது சமூகப் பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்தவகையில் ‘தனுஜா’ என்னும் ஈழத்திருநங்கையின் தன்வரலாற்று நூல் கவனம் பெறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாகத் திருநங்கைகள் தமக்கான குரல்களை ஒலிக்கும் வெளி உருவாகியிருக்கிறது. திரைப்படங்களிலும் நாடகங்களிலும் சமூகப்பொதுவெளியிலும் கேலிப்பொருளாகப் பார்க்கப்பட்டவர்கள் தங்களுக்கான பெயரைத் தாங்களே தேர்வு செய்தது மட்டுமல்லாது, அதை அரசே அங்கீகரித்ததும் தமிழக வரலாற்றில் முக்கியமான நகர்வுகள். ஓயாது ஒலித்த திருநங்கைகளின் குரலே இந்தச் சிறிய அளவிலான வெற்றியையாவது சாதித்துள்ளது. சமூக ஊடகங்களிலும் பொது ஊடகங்களிலும் திருநங்கைகள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் காலமிது.

படிப்பறை

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’, ரேவதியின் ‘வெள்ளை மொழி’ ஆகிய தன்வரலாற்றுப் புத்தகங்கள் தமிழ்ச்சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தின. இந்த அளவுக்குக்கூட ஈழத்தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகள் குறித்த உரையாடல்கள் பரவலாகாத காலகட்டத்தில், முதல் ஈழத்திருநங்கை தன்வரலாறாக வெளியாகியிருக்கிறது ‘தனுஜா.’

இரண்டாவது ஈழப்போர் காலகட்டத்தில் இலங்கையில் பிறந்து அகதியாகத் தமிழகம் வந்து பின் ஜெர்மனி சென்றவர் தனுஜா. மூன்று நிலப்பரப்புகளிலும் தான் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். குடும்ப உறவுகளிலிருந்து பள்ளி சக மாணவர்கள், இணையதள நண்பர்கள் வரை நிகழ்த்திய பாலியல் சுரண்டல்களையும் தனது ஒருதலைக்காதல்களையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.திருநங்கைகள் கூடிவாழும் ‘ஜமாத்’தில் நடைபெறும் சுரண்டல்களையும் இந்த நூல் பேசுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு இப்போது சுகாதாரத்துறை மாணவியாக இருக்கும் தனுஜாவின் இந்த நூல், சமூகம் தன்னை மறுவிசாரணை செய்துகொள்ள உதவும்.

‘என் உடல் காரணமாக நான் நிராகரிக்கப்படுவது அநீதியிலும் அநீதி. ஆகாயம்போல, வானவில்போல, அருவிபோல, அலைபோல என்னுடைய பிறப்பும் இயற்கையாலானது. இயற்கையை தண்டிக்கமுடியாது’ என்ற தனுஜாவின் மன உணர்வைப் புரிந்துகொள்பவர்கள் பெருகுவதே இந்த நூலுக்கான வெற்றி.

தனுஜா - ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்

- தனுஜா சிங்கம்

வெளியீடு :
கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600005

பக்கங்கள் : 352

விலை : ரூ. 330