இயலும் இயலும் இசையும் இசையும்
`வரலாற்றைவிட, உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பது கவிதை’ என்றார் மாமேதை பிளேட்டோ. ஆனால், வரலாற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கவிதைக்குக் கொடுப்பதில்லை என்பதே இங்கு யதார்த்தம். இருப்பினும், ஈடுபாட்டோடு கவிதையை நேசிப்பவர்களும் எழுதுபவர்களும் தமிழகத்தில் அதிகமான அளவில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஸுஜாதா விஜயராகவன். பொதுவாக புதுக்கவிதை, மரபுக்கவிதை, பாடல்கள் என அந்தந்த வடிவில் கவிதைகள் வெளியாவது வழக்கம். இந்தத் தொகுப்பில் இவை எல்லாமே இருக்கின்றன. அவற்றோடு, சிறுவர் பாடல்களும்! சமூகம், பெண்ணியம், சிறார் உலகம், ஆன்மிகம் என அனைத்துத் தளங்களையும் தொட்டிருக்கும் எளிய கவிதைகள்.

நூலிலிருந்து...
வரவேற்பறை
ஸ்டிக்கர் கோலம்
பிளாஸ்டிக் மாவிலை
நைலான் செடிகள்
ஸிந்தெடிக் மனிதர்கள்
***
ஆளில்லாக் கோட்டையிலே
வௌவால்கள் அரசாட்சி
வௌவால்கள் ஆட்சியிலோ
எல்லாமே தலைகீழே.
***
சேற்றின் மேல் தவம்
செங்கை கூப்பும் தாமரை
சூர்ய அஞ்சலி
***
எத்தனையோ என் அவதாரம்
கலியுகத்தில் நான் கைபேசி.
***
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ், தபால் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-600 017. போன்: 74022 22787. பக்கங்கள்: 144. ₹ 110

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
மனம் உதிரும் காலம்
சிவகாசியில் ஆசிரியராகப் பணிபுரியும் கல்பனா ரத்தன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஆண் பெண் உணர்வுகள், இயற்கை, சமூகப் பிரச்னைகள் என தன் மனதுக்குச் சரியெனப்பட்டதையெல்லாம் கவிதைகளாக்கியிருக்கிறார். எடுத்தவுடன் ஒரே வாசிப்பில் படிக்கத் தூண்டும் நல்ல கவிதைகள்.

நூலிலிருந்து...
காலியாவதே இல்லை
ஏக்கத்தின் கோப்பை
தளும்பும் போத்தலில்
சிதறித் தெறிக்கிறது
காத்திருப்பின் வாதை
***
பூனையை பூனையாக
ரசிக்கும் உலகம்
யானையை பொம்மையாகக்
கையாள்வது வலிமிகு சாபம்
***
முழுமையாகத்தான்
இருந்தது
அந்தக் கல்
சிற்பி செதுக்கும் வரை.
***
மரமொன்றின் வாழ்வு
விதை சுமந்த
சிறு பட்சியின்
மென் கால்களில்.
***
வெளியீடு: கல்பதரு பதிப்பகம், 7, சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி - 626 123. போன்: 97910 65284. பக்கங்கள்: 96. ₹ 100