அம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்? #DoubtOfCommonMan

அம்பேத்கர், பெரியார் போன்ற செயற்பாட்டாளர்களின் / களப்பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றியல்லாமல் அவர்களின் கருத்துருவாக்கம் பற்றிப் படிப்பதும் உரையாடுவதும் அவசியம்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``அம்பேத்கரையும் பெரியாரையும் பற்றித் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் வாசகர் சிவக்குமார். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட தலைவர்களே தம் செயல்பாடுகளால் காலத்தை விஞ்சி, மக்கள் மனதில் நிறைந்திருப்பர். இந்தியாவிலும் பல தலைவர்கள் மக்களின் சமத்துவத்துக்காக, விடுதலைக்காக, சமூகநீதிக்காகப் போராட்டங்கள், களச்செயல்பாடுகள் எனப் பங்காற்றியுள்ளனர். சிலரின் பெயர்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றன. பலரின் பெயர்கள் மறைக்கப்படுகின்றன. நமது தேசத்தில் மக்களின் விடுதலைக்காக, வாழ்க்கை மேம்பாட்டுக்காகப் போராடிய இருபெரும் ஆளுமைகள் அம்பேத்கரும் பெரியாரும்.

அம்பேத்கரைப் பற்றி அறிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என எழுத்தாளர் ம.மதிவண்ணனிடம் கேட்டோம்.
``அம்பேத்கரைத் தெரிந்துகொள்வது என்பது இரு விதமாகத் தெரிந்துகொள்ள நினைப்பது. ஒன்று, அவரை ஓர் ஆளுமையாக (Personality) அவரது தனிப்பட்ட வாழ்க்கை வெற்றி, தோல்வி குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புவது. மற்றொன்று, அவரின் கருத்தியல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதற்காக நூல்கள் படிப்பது. அம்பேத்கர் போன்ற செயற்பாட்டாளர்களின் / களப்பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றியல்லாமல் அவரின் கருத்துருவாக்கம் பற்றிப் படிப்பதும், உரையாடுவதும்தான் அவசியமாக நான் பார்க்கிறேன். அம்பேத்கரே `மூக்நாயக்' என்ற பத்திரிகையை நடத்தினார். பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் 37 தொகுதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1. 'விசாவுக்காகக் காத்திருக்கிறேன்' என்ற அம்பேத்கர் எழுதிய நூல்.
2. Dr.Babasaheb Ambedkar ( Life & Mission ) - Dhananjay Keer.
3. புலம் பதிப்பகம் வெளியிட்ட அன்பு செல்வம் எழுதிய அம்பேத்கர் நாட்குறிப்பு.
4. அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு
5. அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும்

6. அம்பேத்கரின் 37 தொகுதிகள் NCBH-ன் அம்பேத்கர் பௌண்டஷன் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் எத்தனை தொகுதிகள் கிடைக்கிறதோ அத்தனையையும் படிக்கலாம்.
உள்ளிட்ட நூல்களைப் படிப்பதன் வழியே அம்பேத்கரையும் அவரது கொள்கைகளையும் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
பெரியார் குறித்து தெரிந்துகொள்ள என்னென்ன நூல்கள் வாசிக்க வேண்டும் என எழுத்தாளர், பத்திரிகையாளர் `விடுதலை' ராஜேந்திரனிடம்கேட்டோம். ``பெரியாரைப் பற்றி படிப்பது என்பது அவரது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்வது, அவரது கொள்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, அவர் மீதான விமர்சனங்களுக்கான எதிர்வினையைப் படிப்பது எனப் பல தளங்களில் வாசிக்கலாம்.
1. பெரியாரின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள தமிழர் தலைவர் என்ற சாமி.சிதம்பரனார் எழுதிய புத்தகம்.
2. பெரியாரைப் பற்றிய ஆழமான வாசிப்புக்கு எஸ்.வி.ராஜதுரை மற்றும் வ.கீதா எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. பெரியாருடைய பெண் உரிமை பற்றித் தெரிந்துகொள்ள பெரியார் எழுதிய `பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் முக்கியமானது.
4. பெரியாரின் கட்டுரைகளை சிறு தொகுதிகளாகத் தொகுத்து `உயர் எண்ணங்கள்' எனத் திராவிடர் கழகம் நூலாகப் பதிப்பித்திருக்கிறார்கள்.
5. பெரியாரைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் தரும் விதமாய் `திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி?' என நான் (விடுதலை ராஜேந்திரன்) எழுதிய புத்தகம்.
6. விடியல் பதிப்பகம் வெளியிட்ட `பெரியார் அன்றும் இன்றும்.'
இந்த நூல்கள் பெரியாரைப் பற்றி அவர் கொள்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும். இவை தவிரவும் நிறைய நூல்கள் உள்ளன" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்.