Published:Updated:

இசை: இளையராஜா - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஆடம்தாசன், ஓவியங்கள்: செந்தில்

இசை: இளையராஜா - சிறுகதை

ஆடம்தாசன், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

புதிய தயாரிப்பாளர் ஒருவருக்குக் கதை சொல்லும் பரபரப்பில் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிகாலமே எழுந்து கதையை எங்கே தொடங்கி எப்படி முடிப்பது, முதன்மைக் கதாபாத்திர நட்சத்திரங்கள், படத்திற்கான தயாரிப்புச் செலவு என ஒரு முழு ஒத்திகை செய்து தீர்த்துவிட்டேன். தட்டிவிட்டால் போதும், இரண்டு மணி நேரம் தங்கு தடையின்றிக் கதையைச் சொல்லிவிடலாம். ஆனாலும் அவருடைய மனநிலை அறிந்து சுருக்கமாகச் சொல்லவேண்டும் எனகிற ரீதியில் மனம் அதன் போக்கில் வழிநடத்திக்கொண்டிருந்தது. காலைச் சூரியன் சமையலறையில் நுழைந்து மதிய உணவு கட்டித்தரும் மீனா மீது பட்டு ஒளியாகியிருந்தாள். நாளும் லேப்டாப்பில் கண்விழிக்கும் ஐ.டி வேலை செய்யும் இல்லத்தரசி. இயக்கிய முதல் திரைப்படம் கவனம் பெறாத படமென்றால் மற்றவர்களைப் பொறுத்தமட்டில் அது தோல்விப் படம், சினிமாவில் மரியாதை இருக்காது, உங்களை நிராகரிப்பார்கள். ஆனால் எச்சூழ்நிலையிலும் அரவணைக்கும் ஒரே ஜீவன் மனைவி. இவள் நம்பிக்கைக்காகவாவது இந்த வாய்ப்பு அமைந்து ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணவோட்டங்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்துபோனபடி இருந்தன.

என் கவனம் ‘ஒரு பூங்காவனம் புதுமனம்’ பாடலைக் கீ போர்டில் இசைக்கும் 12 வயது மகன், முதல் இடையிசையில் வரும் புல்லாங்குழல் தொடக்கக் குறிப்பை சற்று வேகமாக இசைத்ததில் சென்றது. அது ஒரு நத்தை ஊர்ந்து செல்லும் வேகத்தில் வரவேண்டும் என்பது அப்பாடலைக் கணக்கின்றிக் கேட்டமையால் நானறிந்த ஒன்று. அந்த அவசரத்திலும் அவனிடம் கைப்பேசி தந்து, ‘ஸ்பாட்டிஃபையில் அந்த இடையிசையை மீண்டுமொருமுறை கேள்’ என்றேன். அவன் அப்பாட்டைத் தேடிய கணம், அதில் 15 நொடிக்கு ஒன்றென இரண்டு விளம்பரங்கள் வந்தன. பொறுமையிழந்து கைப்பேசியை மேஜையில் போட்டான். வந்தது கோபம். ஒரு 30 நொடிக்கு சிறு பொறுமைக்கூட இல்லையே என்பதோடும், கைப்பேசியில் ஏற்கெனவே விழுந்த கீறல், சீராயில்லாத மனநிலை, எல்லாம் கொண்டு அவனைக் கோபமாகத் தலையில் அடித்தேன். அவன் முகம் மாறியது. இருவரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் பைக்கில் கிளம்பினேன்.

இசை: இளையராஜா - சிறுகதை

இப்படிப் புறப்பட்டுச் செல்கிற மற்ற நாள்களில் தலைக்கவசத்திற்குள்ளே இளையராஜா பாடலோடு பயணிப்பேன். ஸ்பாட்டிஃபை அறிமுகமான பிறகு அவருடைய சிறந்த பாடல்கள் பட்டியலில் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும்கூட ஒட்டிக்கொண்டன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மனைவியின் பணிநிமித்தம் சோழிங்கநல்லூருக்கு இடம்பெயர்ந்துவிட்ட பிறகு கோடம்பாக்கம் அருகாமையாகிவிட, இடையிலுள்ள ஒவ்வொரு திருப்பத்திலும் இரவிலும் பகலிலும் அடுத்தடுத்த பாடல்களுடன் இளையராஜா உடன்தொடர்கிறார். இப்பொழுதுள்ள இந்த மனநிலையில் பாடல் கேட்கத் தோன்றவில்லை.

பள்ளிக்கரணை சதுப்புநில இணைப்புச் சாலை போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

பல சமயங்களில் இப்படி உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக மகனை அடித்திருக்கிறேன், இரவில் வேலை முடிந்து வரும் என்னை, எல்லாம் மறந்து பாசத்தோடு அணைத்து குற்ற உணர்வுக்கு ஆளாக்குவான். இதோ மீண்டும் அவனை அடித்துவிட்டேன். என்ன சொல்லி அவனைத் தேற்றுவது..? என்ன செய்தால் சமாதானமடைவான்..? எப்படி அவனிடம் உணர்த்துவது..? மனம் கட்டுப்பாடின்றி பெருங்காற்றில் அலையும் சிறகானது.

உண்மையில் இது கோபமா? வெறுப்பா? ஆற்றாமையா?

இருந்தாலும் பிள்ளை முப்பது நொடிக்கூடப் பொறுமையில்லாது இருக்கிறானே! என்னுடைய பன்னிரண்டாம் வயதில் ஒரு முழு வாரமும் காத்திருந்து வியாழக்கிழமை ரேடியோவில் ஒலிபரப்பாகும் நேயர் விருப்பப் பாடலுக்கு நடராஜ் பெரியப்பா வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தது நினைவிலாடியது,

நீங்கள் கேட்க இருப்பது கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன் குரலில் ‘அரங்கேற்ற வேளை’ திரைப்படத்திற்காக என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ‘ஆகாய வெண்ணிலாவே’ பாடல் ஆரம்பிக்கும். உள்ளபடியே அது பெரும்பரவசம்! உடன் சரணத்தில் யேசுதாசுடன் கல்லூரி செல்லும் ராஜாண்ணன் இணைந்து பாடுவார். ஆம்ஸண்ணன் இறுதிப் பல்லவியில் இணைந்து உமா ரமணனில் முடிப்பார். தொடரும் பாடல் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி’யை எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடியிருக்கலாம். ஆனால் ராஜாண்ணன் எஸ்.பி.பி-யையே ஓவர் டேக் செய்து அதை மெய்ப்பித்துக்காட்டுவார். அப்படியே ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாடும்போது இளையராஜாவாகவே மாறிவிடுவார்.

நதியா கம்மல், அடர்கூந்தல், வட்டமுக மாநிற ஜெயாக்கா பீடி சுற்றியபடியே ரேடியோவில் வரும் ‘தேவனின் கோவில் மூடிய நேர’த்தைப் பாடும்போது மேலும் அழகாய்த் தெரிவாள். பிரிந்தே வாழும் நதிக்கரைபோல தனித்தே வாழும் நாயகி அவ்வரியை உடன் சேர்ந்து அவள் பாடி, இலைவெட்டி, தூள் எடுத்துச் சுற்றி, வால் மடக்கி, பீடிக்கட்டை அளவு பார்த்து நூல் சுற்றி, சுளவில் எறியும் காட்சி இதுவரை எந்த உலக சினிமாவிலும் பதிவாகவில்லை. அக்காவுக்கு அவள் விரும்பிய அண்ணனே வாழ்க்கைத்துணையாக அமைந்து அவள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று ஜெபத்தில் வைத்திருக்கிறேன். கூரை வீட்டில் தன் காதல் கதையின் அத்தியாயங்களை மறைத்தே வைத்திருந்தாள். அவளுடைய மனநிலைக்கேற்ப அவ்வப்பொழுது அந்த ரேடியோ பாடுவதை நிறுத்திக்கொள்ளும்.

இசை: இளையராஜா - சிறுகதை

அப்படியான தருணங்களில் பாடல் கேட்கும் வாய்ப்பு தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் திருமணம் நடந்தால் மட்டுமே சாத்தியம். தெரு முழுதும் அலங்கார விளக்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற துரை சித்தப்பா கல்யாணத்தில் தூத்துக்குடி எஸ்.ஆர்.ஜி செட் காரர்கள் உயர்ந்த ரக ஸ்பீக்கர்களை எங்கள் தெருவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். மிகத்துல்லியமாகக் கேட்ட அப்பாடல்களில் மயங்கி, வீட்டை மறந்து நானும் வக்கட்டயானும் சின்ன பெருமாள், பெரிய பெருமாளும் அந்தத் திருமண வீடே கதி என்று கிடப்போம். ஸ்பீக்கர் முன்னால் சத்தமாகச் சண்டையிட்டு சித்ரா-ஜானகி, எஸ்.பி.பி-மனோ குரல் வித்தியாசம் அறிந்தோம். இசை தந்த அற்புத உணர்வால் இளையராஜாவை உணர்ந்தோம், வியந்தோம். ரேடியோ செட் காரர்களுக்கு உதவியாக சீரியல் பல்புகளைச் சுமந்துகொண்டு, போணியில் தண்ணீர் வாங்கித் தந்து முழு நேர உதவியாளனாக வலம் வந்தோம். காரணம், பாடலை அவர்கள்தான் போடுகிறார்கள், அமத்துகிறார்கள். அந்த மகிழ்ச்சி இரண்டுநாள் தாண்டாது. ஸ்பீக்கர், குழாய், சீரியல் செட் கழற்றும்போது மனம் மீண்டும் பாடலுக்கு ஏங்கும்.

வீரை காந்திமதியில் மறுவெளியீடான நாயகன் போஸ்டரை இப்படி வாசித்தான் வக்கட்டயான். கமல், சரண்யா, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்த நாயகன், ஈஸ்ட்மெண்ட் கலர், செவிக்கினிய பாடல்கள், சண்டைக் காட்சிகள் நிறைந்தது. ‘‘ஏல, இந்த மற்றும் பலருங்கவேன் எல்லாம் படத்துலயும் நடிக்காண்டே.” நான் இதைச் சொன்னதும் புதுப்பொண்ணு பாக்கியம் மைனி சிரித்த சிரிப்பில் சீனியாரம் பனங்காடே அதிர்ந்தது. கண்ணு மைனிக்கும், பாக்கியம் மைனிக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. பாக்கியம் மைனி வீட்டில் பிலிப்ஸ் ரேடியோ வைத்திருந்த ஒரே காரணத்தால் பாக்கியம் மைனி வீட்டில் ஒட்டிக்கொள்வேன். அந்த மகிழ்ச்சி இயற்கைக்குப் பொறுக்கவில்லை. மைனியின் ரேடியோ பழுதடைந்து பாய்கடையில் காயில் மாற்றச் சென்றது. அறுவடை முடிந்த கையோடு பாக்கியம் மைனி ஆசீர் அண்ணனுடன் பம்பாய் சென்றாள். அந்த ரேடியோ பாய் ரேடியோ கடையிலேயே நிரந்தரமாகத் தன் வாழ்வை முடித்துகொண்டது.

ஒரு கதவடைத்த இயற்கை மறுகதவைத் திறந்து விட்டது. அந்தப் பொங்கலுக்கு பம்பாயிலிருந்து ஊர் வந்த முத்துராமண்ணன் வீட்டு பம்பாய் ஸ்பீக்கரில் மைக் மோகன் பாடல்களைக் குதூகலம், காதல், விரக்தி, சோகம், மென்சோகம் எனப் பிரித்து வழங்கினார். மோகனின் அந்த மைக்கைப் பிடுங்கிக் கடலில் எறிந்த மக்கள் நாயகன் ராமராஜன் பாடல்களும் அண்ணனின் காதல் நிமித்தம் நன்கொடையாகக் கிடைத்தன.

இசை: இளையராஜா - சிறுகதை

90 கேஸட்டில் இளையராஜா காதல் பாடல்களைத் தெக்கூர் கவிதாக்காவுக்குத் தந்து தன் காதலை வளர்த்தார். குரங்குப்பெடல் போட்டு, பாடல் பட்டியல் அடங்கிய கேஸட்டோடு கவிதாக்காவுக்குக் காதல் கடிதம் தருவதும், பதிலுக்கு அவள் தரும் காதல் கடிதத்தை அண்ணனிடம் தருவதும் என் பகுதிநேர வேலையாகவே இருந்தது. முப்பிடாதியம்மன் கோவில் கொடையின்போது கவிதாக்காவின் உறவினர்கள் முத்துராமண்ணனையும், தவமணி சித்தியையும் வீடு புகுந்து அடித்தார்கள். அண்ணனின் டேப்ரிக்கார்டர், கேஸட்டுகளைத் தெருவில் போட்டு உடைத்தார்கள். பழுது பார்த்த டேப்ரிக்கார்டரில் மலையோரம் வீசும் காற்றை அண்ணன் ஒலிக்கவிட்டுத் தேய்த்தான். நடவு ஆரம்பித்த சில நாள்களில் கவிதாக்கா வேறு ஒருவருடன் திருமணமாகி தென்காசிக்குக் குடிபோனாள். அன்று முத்துராமண்ணனைக் காணவில்லை. எல்லோரும் தேடினார்கள், தண்ணியில்லாத கிணற்றில் செத்த தவளை போலக் கமுந்து கிடந்தான். கிணறெல்லாம் ரத்தம். மதி, முருகன், பண்டாரம் அண்ணன்கள் வெளியே தூக்கி வந்தார்கள். ‘பிழைப்பது கடினம்’ என்றான் மதியண்ணன். பரவாயில்லை, ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியிலிருந்து பிழைத்து வந்தான், ஆனால் கொஞ்ச நாளில் புத்திசுவாதீனமற்றுப்போனான். தவமணி சித்தி அவ்வப்போது இரவுகளில் அண்ணனுக்கு மிகவும் பிடித்த `மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும்’ பாட்டை ரேடியோவில் எடுத்துக்கொண்டு ஓடுவாள். அவனுக்குப் போட்டுக் கேட்க வைப்பாள். அவன் குணமாக வேண்டி கோவில் கோவிலாகச் சுற்றி இறுதியில் சித்தி கிறிஸ்துவுக்குள் மதம் மாறினதுதான் மிச்சம்.

அறுவடைக்கால நடுச்சாமத்தில் மேற்கிலிருந்து வரும் காற்று ‘பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ஜ ஜம்ஜம்’மை இழுத்துக்கொண்டு வந்த அந்த நொடி, பாட்டு வரும் அந்த திசை நோக்கி நாய், பேய், இருளையும் பொருட்படுத்தாமல், கன்னடியன் கால்வாய் வழி தன்னந்தனியாக நடந்து சென்று காந்தி சிலை அருகே நடக்கும் கச்சேரியை முதல் வரிசையில் அமர்ந்து நவ நாகரிகமான ஆண், பெண் பாடகர்கள் மற்றும் வாத்தியக்கருவிகளை மிகநெருக்கமாகப் பார்த்தது வாழ்வின் வசந்தம். சோகம், அந்த இரவிலும் தனக்குள் ஒரு உரையாடலுடன் முத்துராமண்ணன் எங்காவது போய்க்கொண்டிருப்பார்.

சின்னதம்பி பாடல்கள் எங்கும் ஒலித்தது. திருஞான சம்பந்தர் நடுநிலைப்பள்ளியில் உடன் படித்த பிள்ளைமார் தெரு சண்முகம் வீட்டில் டி.வி, டெக் வாடகை விடுவார்கள். படம் பார்க்க எல்லா நாளும் அவன் வீட்டை வட்டமடிப்பேன். நான் கீழத்தெருப்பையன் என்பதை அவன் வீட்டினர் அறிவார்கள். அவன் அழைத்த ஒரு மதிய வேளையில் சின்னதம்பி படம் பார்க்கச் சென்றேன். அன்றைய தினம் வீட்டு உள்ளே என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை, கதவடைத்து விட்டார்கள். உள்ளே படம் பாடலில் தொடங்கி ஓடுகிறது. நான் வெளியே இருந்து கதவிடுக்கில் வரும் சத்தத்தில் முழுப்படத்தின் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். அப்பாடல் வரிகளை அறிந்துகொள்ளும் ஆவலில், மாட்டுக்கறி வாங்கச் செல்ல வாடகை சைக்கிளுக்குக் கிடைக்கும் பல நாலணாக்கள் சேர்த்து, பாடல் புத்தகம் வாங்கும் பழக்கம் தொற்றி, அதன் பயிற்சியில் தமிழ் கற்றதோடல்லாமல், வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் நடக்கும் பல்சுவை நிகழ்வில் பாரதியார் பாடல்களுக்கு மத்தியில் சினிமாப் பாடல்களையும் பாடினேன். நல்வரவேற்பு கிடைத்தது.

அலட்சியப் பார்வை, மான்விழி முத்துலட்சுமியை வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் காதலித்தோம். விளைவு, வெள்ளிக்கிழமைகள் இளையராஜா காதல் பாடல்களால் நிரம்பி வழிந்தன. பாடல்களின் தாக்கத்தால் சினிமா பார்க்கும் மோகம் அதிகமானது. விளைவு, தளவாய், நயினாருடன் தியேட்டரில் சுவர் ஏறிக் குதித்துப் படம் பார்க்கும் அளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தேன். படம் ஆரம்பிக்கும் முன்பாகவே சுவர் ஏறி, பெண்கள் கழிவறைக்குள் ஒளிந்துகொள்வோம். சிறிது நேரத்திற்குப் பிறகு பெண்கள் அரங்கினுள் செல்லும்போது அவர்களுடன் சேர்ந்து சென்றுவிடுவோம்.

ஒரு சுபநாளில் வீரை காந்திமதியில் ‘இன்று முதல் அக்னி நட்சத்திரம்’ என்று போஸ்டர் ஒட்டியிருந்தான். அப்படப் பாடல்களின் உந்துதலால் மாலை ஆறுமணிக் காட்சி தியேட்டரில் நான் தனியாக சுவர் ஏறிக்கொண்டிருந்தேன். பெண்கள் கழிவறையில் இறங்கி ஒளிந்து கொண்டேன். படம் ஆரம்பித்துவிட்டது. அன்றைய தினம் பெருங்கூட்டம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. கழிவறைக்குள் அக்காக்கள் வரவும் வெளியே வந்தேன். இரண்டு தியேட்டர் ஊழியர்கள் என்னைப் பிடிக்க முன் திட்டத்துடன் வெளியே தயாராக நின்றிருந்தார்கள். அடி வயிற்றில் இடி இடித்தது. இரண்டு பேரும் கை கோத்துக் கபடி வீரர்கள்போலப் பாய்ந்து வந்தார்கள். வேடன் குறியில் தப்பிய பறவைபோலச் சிட்டாய்ப் பறந்தேன். தாவி வந்து தலைமுடி பிடித்தான் ஒருவன். தலைசிலுப்பி தியேட்டருக்குள் புகுந்தேன். கண்களிரண்டும் திரைக்குத்தான் முதலில் சென்றது. இளையதிலகம் பிரபு பாக்சிங் ரிங்கில் ஒருவன் முகத்தில் கடுங்கோபமாகக் குத்திக்கொண்டிருந்தார். தரை டிக்கெட்டில் அமர்ந்திருந்த பெண்களை மிதித்து ஓடினேன், இருவரும் பின்னால் துரத்தினார்கள். அரங்கு நிறைந்த காட்சி. தரை டிக்கெட் ஆண்களை மிதித்துக் குறுக்கும் நெடுக்குமாக ஓடினேன். இவர்களிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என மன உறுதியுடன் ஓடினேன்.வெளியே ஓடினால் மாட்டிக் கொள்வோம், கூட்டத்தில் கலந்துதான் தப்பிக்க வேண்டும். திரையில் ஒரு அடர்ந்த இருள் வந்த நொடி, ஓரிடத்தில் பட்டென அமர்ந்துவிட்டேன். தேடி வந்த இருவரும் நின்றபடி தேடினார்கள். ஜனரஞ்சக சினிமா எனக்கு திகில் சினிமாவாக மாறிய கணம் அது. ஊர்ந்து சென்று திரை அருகில் தீ வாசகம் பொறித்த சிவப்பு மணல் வாளி அருகே கால் நீட்டி மல்லாந்து படுத்துக்கொண்டேன். மேலே திரையில் பிரபு கார்த்திக் சட்டையைப் பிடித்து ஒருவரை ஒருவர் முறைத்து நின்றார்கள். இடி இடிப்பதுபோலப் பின்னணி இசை. படுத்துக்கொண்டே படத்தைத் தாழ்க்கோணத்தில் பார்த்தேன். இன்று படுத்தபடியே முழுப்படத்தையும் கண்டுகளிப்போம் என பாடல்களுக்காகக் காத்திருந்தேன். அடுத்து வந்த ஜனகராஜின் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா காட்சியில் அரங்கமே சிரித்தது. என் முகத்தில் டார்ச் விளக்கு ஒளி வந்து கண்கூசியது. அடுத்த நொடி என் வயிற்றில் ஒரு மிதி. பெருவலி நீங்கும்முன் ஒருவன் தலைமுடி பிடித்துத் தூக்கினான். அடித்து இழுத்துச் சென்றார்கள். திரையரங்கமே என்னை அன்று பார்த்திருக்கும். இன்று முத்துலட்சுமி மட்டும் தியேட்டருக்கு வந்திருக்கக் கூடாது என ஆபத்துக் காலத்தில் கர்த்தரை நினைத்தேன்.

முறுக்கு கேன்டீன் அருகே சென்றதும் பின்னால் வந்தவன் முதுகில் மிதித்தான். நிலை தடுமாறி முட்டி தேய்த்து விழுந்தேன். மற்றொருவன் பின்னந்தலையில் பைத்தியமாகும் அளவுக்கு அடித்தான்.

‘‘செரிக்கியுள்ள ஓட்டங்காணிக்க, இதே வேலையாச் செய்தியோ. உங்கொப்பன் தேட்டரால, எங்கருந்துல வார?’’ என்று மீண்டும் தலையில் அடித்தான்.

‘‘கேக்கம்லா, சொல்லுல.’’

‘‘எலவடித்தெருணே.’’

‘‘யார் மவம்ல?’’

‘‘தாசன் மகன்.’’

‘‘தாசம்னா..?’’

‘‘ரொம்ப தாடி வச்சிருப்பாரு...’’

‘‘கொரங்கு வளப்பானே அவன் மவனா...?’’

தலையாட்டினேன்.

என்னுடன் படித்த, என் வயதை ஒத்த, இப்போது பேருந்து நிலையத்தில் பங்க் கடை வைத்திருக்கும் தெக்கூரு கொம்பையாகூட பள்ளியில் படிக்கும் சமயத்தில் அப்பாவை தாசன் என்று பெயர் சொல்லியே அழைத்தான்.

‘‘இன்னொருக்கா இப்டி வந்தேனு வையி, கை கால ஒடச்சிருவேன்’’ எனக் கையைத் திருகினான். கண்கள் இருளாகி வெளிறியது. அவன் மிதித்ததில் கீழே விழுந்தேன்.

‘‘அம்மச்சத்தியமா இனிமே இப்படிச் செய்ய மாட்டேன், என்னை மன்னிச்சிருங்கணே, என்னை மன்னிச்சிருணே’’ என்று அவன் கால்களைப் பிடித்தேன்.

தியேட்டர் முறுக்கு வாடையால் பசி வயிற்றைக்கிள்ளியது.

‘‘சட்டயக் கழட்டுல.’’

கழற்றினேன். ‘‘டவுசர் அவுருல.’’ யோசிக்கவே இல்லை, உடனே அவிழ்த்தேன். தாமதித்தால் மிதிப்பான். காக்கி டவுசர், அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்கியது.

ஆபரேட்டர் ரூம் அருகிலுள்ள ஓர் அறையில் அடைத்துச் சென்றான். காற்றே இல்லாத அந்த அறையில் சினிமா போஸ்டர், கோந்துவாளி, பழைய டைனமோ சைக்கிள், சாப்பாட்டுத் தூக்குச்சட்டிகள் இருந்தன. மானம் மறைக்க எதுவும் இல்லை. ஆனால், படத்தின் ஒலி துல்லியமாகக் கேட்டது. பின்னணி இசை வீணையில் ஒலித்தது. வசனங்கள் தெளிவாகக் கேட்டன. சில நிமிடத்தில் எனது விருப்பப் பாடலான, பள்ளியில் பாடின ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடல் ஒலித்தது, மனம் மகிழ்வாக உணர்ந்தேன். ஒரு படப் பாடல் போல, படத்தில் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை பாடல் வந்துகொண்டே இருந்ததது, அதில் காலையில் மகன் வாசித்த ‘ஒரு பூங்காவனம்’ பாடலும் அடக்கம். படம் முடிந்தது, கதை புரிந்தது. கையை முறுக்கிய ஆசாமி சில நிமிடங்களில் வந்தான். முகத்தில் அவனுக்குப் பழைய கோபமில்லை. சிரித்த முகமாக இருந்தான். காரணம் தெரியவில்லை.

‘‘இனிமே வந்தனு வை, ஸ்டேசன்ல புடிச்சிக் குடுத்துட்ருவோம், பாத்துக்க.’’

‘‘அந்தா கெடக்கு பாருல, எடுத்துப் போட்டுட்டு போ’’ என்று கதவைத் திறந்துவிட்டு அடுத்த காட்சி வேலை நிமித்தம் சென்றான்.

தியேட்டர் வளாகத்தில் வாடைக்காற்று வீசியது. தியேட்டர் வெளியே வந்து வீட்டை நோக்கி நடந்தேன். குளம் நோக்கி மிக முக்கிய வேலை இருப்பதுபோலக் கைவீசியபடி முத்துராமண்ணன் போய்க்கொண்டிருந்தான்.

இசை: இளையராஜா - சிறுகதை

அச்சிறுவயதில் ராகதேவனின் பாடல்களால் பண்பட்டு, இளமையில் ஏழ்மையைக் கடந்து அவருடைய பாடல்களுடன் பயணப்பட்டு, எந்த வேலையிலும் லயிக்காமல் வழிகாட்டுதலின்றி சென்னை, பம்பாய் என தேசாந்திரியாகத் திரிந்த என்னை, அன்புள்ளத்தோடு வாரி அரவணைத்தது இசைத்தாய் இளையராஜாவின் பாடல்கள்.

பாடல் வந்தால் அதை நகர்த்திக் கதையை மட்டும் பார்க்கும் இத்தலைமுறையான என் மகனிடம், பாடல் கேட்க அக்காலத்தில் செருப்பில்லாத காலோடு வெயில் மழை பாராமல் பல மைல்கள் நடந்து சென்று கச்சேரி கேட்ட கதை, அவனைப் பொறுத்தமட்டில் அது ஒரு கதை.

நினைவுகளில் நீந்தி, தயாரிப்பாளரின் அலுவலகம் வந்தேன். முகப்பில் இளையராஜா, பாலுமகேந்திரா புகைப்படங்கள் வரவேற்றன. நம் ரசனையுடன் இந்தத் தயாரிப்பாளரும் இருக்கிறார், நிச்சயம் நம் கதை இவருக்குப் பிடித்துவிடும் என மனம் மகிழ்ந்தேன். அடுத்த நொடி தயாரிப்பாளர் வந்தார். ‘அவசர வேலையிருக்கிறது, இப்போது கதைகேட்க நேரமில்லை’ எனக் கூறி, திரைக்கதை புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு, ‘அவசியம் இன்று இரவு வாசித்துவிடுகிறேன்’ என்று புரட்டினார். அதில்,

வான் கண்டேன் திசைகண்டேன்

இசை

இளையராஜா

என்றிருந்தது. என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்.

சிறுநம்பிக்கையுடன் அலுவலகத்து வெளியே வந்தேன். பணமுதலீடு செய்கிற தயாரிப்பாளர்கள் மற்றவர்கள் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என எனக்குள் நொண்டிச் சமாதானம் சொல்லிக்கொண்டேன். இதற்காகவா இவ்வளவு ஆயத்தமாக வந்தோம் எனவும் எண்ணினேன். இரவு தாமதமாக வீடு திரும்பினேன்.

இசை: இளையராஜா - சிறுகதை

மடிக்கணினியில் மும்முரமாக இருந்தாள் மனைவி. கீபோர்டு அமைதியாக இருந்தது. படுக்கையில் மகன் படுத்திருந்தான், ஆனால் அவன் தூங்கவில்லை. அவனருகில் அமர்ந்தேன், அவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டான். அமைதி காத்தேன். அவன் காதருகே ரகசியம் சொல்வதுபோல, ‘கிளம்பும் அவசரத்தில் உன்னை அடித்துவிட்டேன், இனி ஒருநாளும் அப்பா உன்னை அடிக்க மாட்டேன். என்னை மன்னித்துவிடு’ என்று அவன் தலை கோதி விட்டேன். அவன் என் முகம் பார்க்காமல் என்னைக் கட்டிக்கொண்டு சத்தமில்லாமல் கண்மூடி அழுதான். அவனுடைய கண்ணீர் என் தோள்பட்டையை நனைத்தது. கண்மூடி அவனைக் கட்டியணைத்தேன். சிறிது நேரத்தில் அவன் தூங்கிப்போனான். அருகில் திரும்பினேன். மனைவியும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். இருவரையும் பார்த்தபடி படுத்திருந்தேன். அந்த நள்ளிரவில் எங்கேயோ தூரத்திலிருந்து காற்றில் கலந்து வந்தது முத்துராமண்ணனுக்குப் பிடித்த அந்த `மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு’ பாடல்.