Published:Updated:

வேஷங்கள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஆ.பூங்கொடி, ஓவியம்: ரவி

வேஷங்கள் - சிறுகதை

ஆ.பூங்கொடி, ஓவியம்: ரவி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
ஆ.பூங்கொடி
ஆ.பூங்கொடி

``நீ பார்க்கறதையெல்லாம் உண்மைனு நம்பிடறே ஸ்ரீ. அதான் உங்கிட்ட இருக்கற மிகப் பெரிய பலவீனம். அதனாலதான் உன்னை எல்லாரும் ஏமாத்திடறாங்க. நீயும் அவங்ககிட்ட சுலபமா ஏமாந்திடற. அப்படி இருக்காதே. இந்த உலகம் ரொம்ப மோச மானது. சுலபமா உன்னை ஏமாத்திட்டு போயிடும்” - ஆபீஸில் லஞ்ச் டைமில் என் கொலீக் சந்தோஷ் சொன்னபோது அமைதியாக அவரையே பார்த்தேன்.

``பாரு... நேத்து ஒருத்தன் உங்கிட்ட பசிக்குதுனு காசு கேட்டிருக்கான். நீயும் கொடுத்திருக்கே. அதுவும் சுளையா நூறு ரூபா. அவன் அடுத்த நிமிஷமே அதை எடுத்துக்கிட்டு போய் டாஸ்மாக் வாசல்ல நிக்கறான். இத்தனைக்கும் சின்ன வயசு பையன் அவன். கொடுக்கற சரி. கம்மியா கொடுக்க மாட்டியா... ஒரு ரூபாய்க்கு நாம எவ்வளவு கஷ்டப்படறோம். இந்தக் காலத்துல ஏன் இப்படி இருக்கே ஸ்ரீ...”

``இல்லே சார்... அவன் ரொம்ப பசியா இருக்குன்னான். பார்க்கவே பாவமா இருந்தது. ஒருத்தர் பசின்னு வந்து என்கிட்ட கேக்கறப்ப மனசு இளகிடுது. பாவம்னு தோண்றது. அதான் கொடுத்துடறேன்.”

``அதான் நீ பண்ற தப்பு. பார்த்ததுமே இந்தக் காலத்துல யாரையும் நம்பிடாதே. இங்க இருக்கறவங்களுக்கு அப்பப்ப ஒரு முகம். அப்பப்ப ஒரு வேஷம். எது உண்மையான முகம்னு காட்டிக்கவும் மாட்டாங்க. நமக்கும் தெரியாது.”

வேஷங்கள் - சிறுகதை

``உண்மைதான் சார்.. நான் ஏமாந்துடறேன் தான்'' - அவரிடம் பேசினால் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் மனம் லேசாகி விடும். அவர் தட்டில் கத்திரிக்காய், முருங்கைக் காய் சாம்பாரும், உருளைக்கிழங்கு பொரியலும் மணத்தது. என்னுடையதில் அவரைக்காய் சாம்பார், கோஸ் பொரியல்.

``கத்திரிக்காய் சாம்பார்... போட்டுக்கறியா ஸ்ரீ... இந்தா உருளைக்கிழங்கு பொரியல்...எடுத்துக்கோ” - கின்னத்தை நகர்த்தி வைத்தார்.

என்னுடைய அவரைக்காய் சாம்பாரையும் பொரியலையும் நகர்த்தினேன். சாப்பிட்டவர் முகம் மலர்ந்தது.

‘‘ஆஹா... தேன் மாதிரி இனிக்குது ஸ்ரீ... ருசி அபாரம்... கோஸ் பொரியல்... ஆஹா... சான்சே இல்லை... என்ன ருசி... வீட்ல சமையல் நீதானே?..”

``ஆமா சார்...”

``அருமையான கைப்பக்குவம் உனக்கு. சமைச்ச கைக்கு தங்க மோதிரம்தான் போட ணும்...” - அவர் பாராட்டில் உச்சி குளிர்ந்தது எனக்கு.

இதையேதான் காலையில் என் கணவரும் சாப்பிட்டார். ஒரு வார்த்தை பாராட்ட வேண்டுமே... எதிர்பார்த்த இடத்தில் கிடைக் காத பாராட்டு, எதிர்பார்க்காத இடத்தில் இருந்து கிடைத்த மகிழ்ச்சி. சந்தோஷின் மனைவி அதிர்ஷ்டக்காரி என்று நினைத்துக் கொண்டேன்.

``ரொம்ப தேங்க்ஸ் சார்... உங்க சாப்பாடும் டேஸ்ட்டாதான் இருக்கு. மேடம் செமயா செய்து இருக்காங்க” என்றேன்.

நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கனகா வந்தாள். எங்கள் செக்‌ஷன்தான். நாங்கள் மூவரும் சேர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம்.

புதிய பச்சை நிற புடவை. மேட்ச்சிங்காக அதே கலர் ஜாக்கெட். அம்சமாக இருந்தாள்.

``வாவ்... என்ன கனகா. இன்னிக்கு தேவதை மாதிரி ஜொலிக்கறே... என் கண்ணே பட்டுடும் போல... இந்த டிரஸ் உனக்கு உண்மைலயே சூப்பரா இருக்கு.”

தன்னுடைய டிரஸ்ஸை புகழ்ந்ததும் அவளுக்கு ஒரே குஷி. விகல்பம் இல்லாமல் பேசக்கூடியவர் சந்தோஷ் என்பது அவளுக்கும் தெரியும். நான் நன்றாக டிரஸ் செய்து கொண்டு வந்தாலும் பாராட்டுவார். அந்த பேச்சில் கொஞ்சமும் விகல்பம் தெரியாது. உண்மையான புகழ்ச்சி மட்டுமே இருக்கும்.

சந்தோஷின் செல் ஒலிக்க... ‘‘மேனேஜர் பேசறார்” என்றவர், செல்லை எடுத்து ``ஹலோ... ஓகே சார்... இதோ உடனே வந்துடறேன் சார்” என்றவர் கிளம்பினார்.

வேஷங்கள் - சிறுகதை

``நல்ல மனுஷன்... நம்ம கொலீக்கா அமைய நாம கொடுத்து வச்சிருக்கணுமில்ல ஸ்ரீ...’’ என்றாள் கனகா.

``ஆமா கனகா... இவர்கிட்டதான் மனசுவிட்டுப் பேச முடியுது.’’

``உண்மைதான்..”

``என்ன... என்னமோ நான் வர்றதுக்கு முன்ன பேசிட்டிருந் தீங்க போல...’’

``ஆமாப்பா... என்னை திட்டிக்கிட்டிருந்தார்...”

``உன்னையா... எதுக்கு?..”

``நேத்து நடந்த விஷயம் ஒண்ணு கனகா. நான் ஆபீஸுக்கு வந்துட்டிருந்தேன். அப்போ ஒரு ஆள் வந்து பசிக்குதுனு பணம் கேட்டான். பார்க்கவே பாவமா இருந்தது. பசிக்குதுனு வேற கேட்டானா...”

``நீ அப்படியே மனசு இளகிட்டியாக்கும்...”

``ஆமாம்பா... நம்மகிட்ட ஒரு ஆத்மா பசின்னு வந்து கேக்கறப்ப அதை அலட்சியப்படுத்திட்டு கடந்து போக மனசு கேக்க மாட்டேங்குது... அது என் பலவீனமா என்னன்னு தெரியலை. இத வச்சே நான் நிறைய பேர்ட்ட ஏமாந்து போயிருக்கேன்... நேத்தும் அப்படிதான்... ஒருத்தன் வந்து பசின்னு கேட்டதும் மனசு கஷ்டமாயிடுச்சு... அதான் நூறு ரூபா கொடுத்தேன்.”

``என்னது... நூறு ரூபாயா?” - கனகா அதிர்ச்சி காட்டி னாள்.

``ஆமாம்பா... கைக்கு வந்ததை எடுத்துக் கொடுத்துட்டேன். வயிறு நிறைய சாப்பிடட்டும்னுட்டு.”

``சரி... இது நல்ல விஷயம்தானே ஸ்ரீ... இதுக்கு போய் சந்தோஷ் சார் எதுக்கு உன்னை திட்டறார்?”

``அப்பதான் சந்தோஷ் சார் வந்துண்டிருந்தார். நான் பணம் கொடுக்கறதை அவரும் பார்த்தார். அப் புறம் ஆபீஸ் வந்துட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வேலையா வெளில போயிருக்கார். அப்ப போற வழியில இருந்த ஒரு டாஸ்மாக்க பார்த்தா அவருக்கு ஷாக். என்கிட்ட பணம் வாங்கின வன் அங்க நின்னுட்டிருந்திருக் கான். அப்பதான் அவன் ஏமாத்துப் பேர்வழின்னு அவருக்கு புரிஞ்சிருக்கு.”

வேஷங்கள் - சிறுகதை

``அடப்பாவி... அப்புறம்..?’’

``அவங்கிட்ட போய் நல்லா திட்டி விட்டுட்டு வந்திருக்கார். அவனை அங்க திட்டிட்டு இங்க வந்து என்னைத் திட்டினார். `நீ பார்க்கறத எல்லாம் உண்மைனு நம்பறே ஸ்ரீ. உண்மை எது, பொய் எதுனு உனக்கு தெரியல. உலகம் அதோட பொய், வேஷம் எதை யும் உன்னால புரிஞ்சிக்க முடியற தில்லை'னு திட்டினார்.”

``அது உண்மைதான் ஸ்ரீ. அவர் சரியா தான் சொல்லியிருக்கார். நீ அப்படித்தான் இருக்கே...”

``மாத்திக்க முயற்சி பண்றேன் கனகா” - ஸ்ரீ சொல்லிக் கொண்டிருக்கும்போதே சந்தோஷ் வந்து விட்டார்.

``என்ன சார்... போன வேலை முடிஞ்சுடுச்சா? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?’’

``ஆமா கனகா... ஒரு முக்கியமான விஷயம் அந்த ஸ்ரீராம் கான்ட்ராக்ட் ஃபைல் விஷயமா... அத பத்தி பேசறதுக்குதான் கூப்பிட்டிருந்தார்... அவரோட டவுட்டை கிளியர் பண்ணிட்டு வந்துட்டேன்.’’

ஒரு வாரம் போயிருந்தது. அன்று மதியம் லஞ்ச் இடை வேளையில் சந்தோஷ் சொன்னார்... ``ஸ்ரீ... கனகா... வர்ற சண்டே எங்க ஊர்ல திருவிழா. மதியம் எங்க வீட்ல விருந்து கண்டிப்பா வந்துடணும்...”

``நாங்க இல்லாமலா? கண்டிப்பா வந்துடறோம்...” என்றோம் கோரஸாக...

அடுத்த ஞாயிறு... சந்தோஷ் சாரின் வீட்டில் இருந்தோம் நானும் கனகாவும்... சந்தோஷ் வந்திருந்த ஆண் நண்பர்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.

மதிய சாப்பாட்டு வேளை. நானும் கனகா வும் சாப்பிட அமர, சந்தோஷின் மனைவி விமலா பரிமாறினாள். அசைவ சாப்பாடு. பிரமித்துப்போனேன். ஆஹா... என்ன ருசி..!

``பிரமாதங்க விமலா... நல்ல ருசி... நான் கூட இப்படி ருசியா சமைச்சது இல்ல...” மனதார பாராட்டினேன்.

விமலாவின் கண்கள் விரிந்தன. பார்வையில் ஒரு சந்தோஷம். முகத்தில் அப்படி ஒரு பரவசம். இதுவரை கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்று கிடைத்ததைப் போன்ற சந்தோஷ பிரவாகம்.

வேஷங்கள் - சிறுகதை

``உண்மையாவா சொல்றீங்க..?” அவள் வார்த்தையில் அவ்வளவு பரவசம்.

``ஆமாங்க... உங்க கணவர் எப்படி பாராட்டப் போறார்னு பாருங்க...” - நான் சொல்ல விமலாவின் முகம் சிறுத்துப்போனது.

``யாரு... அவரா... நல்லா சொன்னீங்க போங்க... உயிரைக் கொடுத்து சமைப்பேன். இதுவரை ஒரு வார்த்தை பாராட்டி சொன்னது இல்லை. எத்தனை நாள் எதிர்பார்த்து ஏமாந்திருப்பேன் தெரியுமா... வெறுத்துப் போயிடும்” - அவள் சொல்ல அதிர்ச்சியாகப் பார்த்தேன் நான். என்னால் நம்ப முடிய வில்லை..

``வீட்ல பொண்டாட்டி நமக்காகக் காத்திருக்காளே... அவளுக்காக நேரத்தை ஒதுக்குவோம்... அவ கூட அன்பா நாலு வார்த்தைப் பேசுவோம்னு ஒரு புருஷனுக்கு தோணாதாங்க... எது பேசினாலும் ‘ம்’னு ஒரு வார்த்தை தான். பேசவே மாட்டார். நானும் பொண்ணுதானே... புருஷன் அன்பா பேசணும். ஆதரவா இருக்கணும்னு எதிர்பார்க்கறது தப்பா சொல்லுங்க. பொண்டாட்டி யோட உணர்ச்சிகளை, அவ ஆசைகளை மதிக்கறவன்தானே நல்ல புருஷன்... புது டிரஸ் போட்டுட்டு வருவேன்... ‘எப்படி இருக்கு... நல்லா இருக்கானு கேட்டா, `ம்...’னு ஒரு வார்த்தைதான் வரும். சந்தோஷம், உற்சாகம் எல்லாம் தொலைஞ்சு ‘சப்’னு ஆயிடும்.”

விமலா பேசிக்கொண்டே இருந்தார்.

நான் அயர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்... பேச நா எழவில்லை.

மறுநாள் லஞ்ச் டைம்... நேற்று வாங்கிய சப்போட்டா பழங்களை எடுத்து வைத்தேன்.

கையில் எடுத்த சந்தோஷ், ``வழக்கம்போல் இந்தப் பழத்தையும் வாங்கறப்ப ஏமாந்திருப்பியே” என்றார்.

அவரை இரண்டு நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு சொன்னேன்... ‘‘நீங்க, ‘பார்த்ததுமே இந்தக் காலத்துல யாரையும் நம்பிடாதே. இங்க இருக்கறவங்களுக்கு அப்பப்ப ஒரு முகம். அப்பப்ப ஒரு வேஷம். எது உண்மையான முகம்னு காட்டிக்கவும் மாட்டாங்க’னு அடிக்கடி சொல்வீங்க. அதுதான் சார் நிஜம். நமக்குத் தெரிஞ்ச பல விஷயங்கள்ல நேர்ல பார்க்கறப்ப ஏமாந்து போவதைவிட... நமக்கு தெரியாத சில விஷயங்கள்ல ஏமாந்துபோறது தப்பில்லைனு நினைக்கறேன்’’ - சொல்லிவிட்டு சாப்பிட ஆரம் பித்தேன்.

எடுத்த பழத்தை அப்படியே கீழே வைத்தார் சந்தோஷ்.

கனகா என்னையே பார்த்துக் கொண்டிருந் தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism