கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

எங்கள் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்! - வடசென்னை படைப்பாளிகள்

ஷாலின் - பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாலின் - பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி

வாழ்க்கை

`வடசென்னை... உழைப்பின் நிறத்தால் நிறைந்த நிலம். ஒடுக்கப்பட்ட மக்களின் கொண்டாட்டமும் பண்பாட்டு வாழ்க்கையும் இதன் இயல்பு. ஆயிரம் வண்ணங்கள் கொண்ட இந்த உலகத்தின் பலமே பன்முகத்துவம்தான் என்பதற்கான எடுத்துக்காட்டு, வடசென்னை. வெவ்வேறு மொழி பேசும், வெவ்வேறு பண்பாட்டுப்பின்னணி கொண்ட மக்கள்குழுக்கள் இணைந்து இயைந்து வாழும் பகுதி வடசென்னை. இதை அழுக்குப்பகுதியாகவும் குற்றப்பிரதேசமாகவும் சித்திரித்த பிம்பங்கள் உடைந்து, அதன் அசல் அழகையும் வாழ்க்கையையும் காட்டும் திரைப்படங்களும் இலக்கியங்களும் இப்போது உருவாகிவருகின்றன. வடசென்னையைச் சேர்ந்த கரன்கார்க்கி, பாக்கியம் சங்கர் மற்றும் ஷாலின் மரிய லாரன்ஸ் என்னும் மூன்று முக்கியமான படைப்பாளி களுடன் வடசென்னை வாழ்க்கை குறித்த உரையாடலை நிகழ்த்தினேன்.

கரன்கார்க்கி : வடசென்னைன்னாலே அது ஒரு காலத்தில பூங்காக்களால் ஆன நகரம். மைலேடீஸ் பார்க் என்கிற மிகப்பெரிய பூங்கா சால்ட் குவாட்டர்ஸ்ல தொடங்கி, இப்போ நாம் நிற்கும் இடம் வரைக்கும் இருந்தது. இது வட சென்னையோட முக்கியமான அடையாளங்களில் ஒன்றுதான். இதுக்குப் பேரு ‘பீப்புள்ஸ் பார்க்.’ 1883-ம் ஆண்டு கட்ட அனுமதிக்கப்பட்டு 1888 - 1900-க்குள்ளாகக் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம். இது இந்தோ சாரசெனிக் பாணியில கட்டியிருக்காங்க. இந்தக் கட்டடம் கட்டியபிறகு இங்கு முக்கியமான கூட்டங்கள் நிறைய நடந்திருக்கு. விவேகானந்தர், காந்தியடிகள் எல்லாம் இங்க வந்திருக்காங்க. கோபால கிருஷ்ண கோகலே, பாரதியார், வல்லபாய் படேல் ஆகியோர் கூட்டம் நடத்தியிருக்காங்க. மெட்ராஸில் முதன்முதலில் சினிமா திரையிடப்பட்டதும் இங்கதான். அந்த அளவுக்கு இந்த இடம் பல வரலாறுகளோடு தொடர்புடைய இடம். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற கலைஞர்கள் இங்க நாடகமும் நடத்தியிருக்காங்க.

எங்கள் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்! - வடசென்னை படைப்பாளிகள்

பாக்கியம் சங்கர் : சரிதான். வட சென்னையோட நிலவியலே இப்போ மாறியிருக்கு. திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் கரையிலிருந்து ஜாபர்கான்பேட்டை வரை ஒருகாலத்துல வட சென்னைதான். முழுக்க முழுக்க உழைக்கும் மக்கள் வாழ்ந்த பகுதி. வடசென்னையைப் பற்றி வெளியாகியிருக்கும் படைப்புகளோ, சினிமாக்களோ உள்ளிருந்து பார்க்கப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. கற்பனையாக சித்திரிக்கப்பட்டவைதான். தமிழ் சினிமாவில் வட சென்னையின் ஆண் என்றால் ஏமாற்றுக்காரனாக இருப்பான். பெண் என்றால் சோகமாக, ‘என் புருஷன் கைவிட்டுவிட்டுப் போய்விட்டான். அதனால் நான் இப்படியிருக்கிறேன்’ என்பது போலப் பாடிக்கொண்டிருப்பாள். ஏன், ஜெயகாந்தனின் `சினிமாவுக்குப் போன சித்தாளு' கூட வடசென்னைக்கு வெளியே இருந்து பார்த்துப் படைக்கப்பட்ட நாவல் என்பதுதான் என் கருத்து.

உழைக்கும் மக்களின் வாழ்வில் காதல் இருக்கு; மகிழ்ச்சி இருக்கு; கொண்டாட்டம் இருக்கு; துரோகம் இருக்கு, துயரம் இருக்கு; பகை இருக்கு. ஆனா, இதையெல்லாம் விட்டுவிட்டு ஒண்ணு ரௌடி இல்லைன்னா, ஏமாற்றுக்காரன் என்றால் அது சரியில்லை. அதனால்தான் நான் உழைக்கும் மக்களோட வாழ்வியலை எழுத ஆரம்பிச்சேன். `இதெல்லாம் வாழ்க்கையான்னு பாக்கிற பார்வைக்கு எதிரா இந்த வாழ்க்கையில் என்னெல்லாம் இருக்கு பாரு’ன்னு எழுத ஆரம்பிச்சேன். இதுபோலவே உள்ளிருந்து வருகிற குரல்கள் சமீப காலமாக அதிகமாகவே பதிவாயிருக்கு. அதுதான் மண்ணிலிருந்து புறப்படுகிற குரல். அது முக்கியம்னு நினைக்கிறேன்.

ஷாலின் : சென்னைங்கிறது உடல்னு சொன்னா, இங்க இருக்கிற சேரிகள்தான் அதோட நரம்பு மண்டலங்கள். வெளியூரிலிருந்து சென்னைக்கு வர்றவங்க சென்ட்ரல் ஸ்டேஷனில் சந்திக்கும் ஒரு மனிதனை, அவர் ரிக்‌ஷாக்காரராக இருக்கலாம் அல்லது ஆட்டோக்காரராக இருக்கலாம், அவர்களை வைத்து ஒரு பெரும் மக்கள் கூட்டம் பற்றிய முடிவுக்கு வர்றாங்க. சேரி என்பது ஒரே மாதிரியான ஏழை மக்கள் வாழும் பகுதின்னு அவங்களாகவே முடிவு செய்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. என்னோட பெரியப்பா ஒருவர் தாசில்தாரா இருந்தார். அதே குடும்பத்தைச் சேர்ந்த சித்தப்பா ஒருவர் வீட்டு வேலை செய்கிறவராக இருந்தார். இதைப் புரிஞ்சிக்கணும்னா இங்க வரணும்... பார்க்கணும்... வாழணும். அது இல்லாமல் இந்த மக்களை அவர்கள் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளாமலேயே அதைப் பற்றிய அபிப்ராயத்தையும் எழுத்துகளையும் உருவாக்குவதுதான் பிரச்னை.

வடசென்னையைப் பொறுத்த அளவில் வெள்ளைக்காரர்கள் காலத்துல கொண்டாடப்பட்ட பகுதியா இருந்திருக்கு. இன்னைக்கு நீங்க சேரின்னு சொல்லி ஒதுக்குறீங்க. ஆனா, அன்னைக்கு அவன் கோட்டையைச் சுத்தி மில்களைச் சுத்தி மக்களைக் குடியேற்றினான். காரணம், மக்கள் முதலாளிகளை நம்பியிருந்ததைப்

போலவே வெள்ளைக்காரனும் உழைக்கும் மக்களை நம்பி இருந்தான். அவனிடமிருந்து இந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற பல விஷயங்கள் கிடைச்சது. அதை மறுக்க முடியாது. இதையெல்லாம் தெரிஞ்சவங்க எழுதும்போதுதான் உண்மையான வடசென்னை பத்தின ஆவணப்படுத்தல் கிடைக்கும். இங்க இருக்கிற கே.எம் கார்டன் பகுதில புனித வெள்ளிக்கு முந்தின பெரிய வியாழன் அன்னைக்கு இரவு ஒரு முப்பது நாற்பது பேர் சேர்ந்து வழிபாடு செய்வாங்க. அதுவும் லத்தீன் மொழில பாடல்கள் பாடுவாங்க. கேட்கவே உருக்கமா இருக்கும். இந்த வழக்கம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்குது. அவங்க யாருக்கும் லத்தீன் தெரியாது. ஆனா, வழிவழியா இந்த வழக்கம் வருது. இந்த அற்புதமான விஷயத்தை எழுத இங்க இருக்கிறவங்களாலதான் முடியும். அதைத்தான் நாங்க செய்றோம்.

ஷாலின் - பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி
ஷாலின் - பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி

பாக்கியம் சங்கர் : இங்க இருக்கிற மணியக்கார சத்திரத்தோட வரலாற்றைக் கேட்டா அவ்ளோ ஆச்சர்யமா இருக்கும். 1782-ம் வருஷம் கடுமையான பஞ்சம். அப்போ மக்கள் பசியப் போக்க மணியக்காரர்ங்கிறவர் ஒரு கஞ்சித்தொட்டியைக் கட்டினார். யார் வேணும்னாலும் வந்து கஞ்சி குடிச்சிட்டுப் போகலாம். இதைப்பார்த்த ஆற்காடு நவாப், அந்தக் காலத்துலேயே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்கிறார். இந்தச் சத்திரத்துக்கு வந்து பார்த்த ஜான் அண்டர்வுட் என்ற ஆங்கிலேயர், இந்த மக்களுக்காக இங்க ஒரு மருத்துவமனையையும் கட்டினார். அதுதான் இன்னைக்கு இருக்கும் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவமனை. இதைப்போல நெகிழவைக்கும் எவ்வளவோ விஷயங்கள் வடசென்னையோட இருக்கு.

கரன்கார்க்கி : கஞ்சித்தொட்டி மட்டுமா, அங்கங்கே தண்ணீர்த் தொட்டியும் கட்டிவச்சாங்க. உழைப்பாளர்கள் குளிக்க, குடிக்கக் கட்டினாங்க. இதையெல்லாம் செய்தது வட இந்தியர்கள்தான். வட இந்திய சேட்டுகளுக்கும் எளிய மக்களுக்குமான தொடர்பு அலாதியானது. நீங்க எதை வேணும்னாலும் கொண்டுபோய் அடகு வச்சுப் பணம் வாங்கிடலாம். சின்ன வயசுல வீட்ல இருக்கிற புடவைகளைக் கொண்டு போனக்கூட அதை வாங்கிக்கிட்டு பத்துரூபா தருவாங்க. காரணம் நம்பிக்கை. எப்படின்னாலும் இந்த ஜனங்க திருப்பிடுவாங்கங்கிற நம்பிக்கை.

பாக்கியம் சங்கர் : வடசென்னையில் வள்ளலார் வாழ்ந்தார்; பட்டினத்தார் ஜீவசமாதி இருக்கு. அதேபோலத்தான் இங்க தொண்டியார் சமாதியும் இருக்கு. தொண்டி மரபு எனப்படும் சூஃபி மரபு ஞானிகள் இங்க இருந்தாங்க. அவங்களில் முக்கியமானவர் குணங்குடி மஸ்தான் சாகிப். அவரோட சமாதி தண்டையார்பேட்டைலதான் இருக்கும். தொண்டியார் பேட்டைதான் தண்டையார்பேட்டை ஆகிடுச்சி. மஸ்தான் சாகிப் சமாதில சந்தனம்தான் பிரசாதம். இன்னைக்கும் பழநியிலிருந்து இங்க விபூதி வருது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைன்னு பேசுறாங்களே அது வேர்விட்டு நிக்கும் இடம் வட சென்னை.

ஷாலின் : பௌத்த மரபும் வடசென்னையில் உண்டு. சௌத் இண்டியன் புத்திஸ்ட் அசோஷியேஷன் இங்க இருந்துதான் தொடங்குறாங்க. கே.ஜி.எப் வரை நீளும் தமிழ் பௌத்த மரபுக்கு வடசென்னைதான் தொடக்கப் புள்ளி. நிறைய புத்த மடங்களும் உள்ள இடம்தான் வடசென்னை.

பாக்கியம் சங்கர் : மீனவர்களின் வாழ்வுக்காக உழைத்த சிங்கார வேலரும் உழைப்பாளர்களுக்காகவே வாழ்ந்த ஜீவாவும் வடசென்னையின் பெருமைதானே.

கரன்கார்க்கி : ஆனா, இன்னைக்கு அந்தப் பெருமைகள் எதுவும் வெளிய தெரியலை. இந்த மக்களோட குறைகள்தான் பூதாகாரமா ஊடகங்களால பெரிதுபடுத்தப்படுது. அதுவும் குறைகள்னு சொல்லமுடியாது. ஊர்ல இருந்து சென்னைக்கு வந்து இறங்குவாங்க. கிராமங்களில் அந்தக் காலத்தில கூலி கிடையாது. சேவையாத்தான் வேலை செய்யணும். அவங்கவங்க செய்யும் சேவைக்கு ஏற்ப அறுவடையின்போது படியளப்பாங்க. ஆனா, சென்னை வந்து இறங்கினதும், இங்க இருந்து பெரம்பூர் போகணும்னு சொன்னா, ‘ரெண்டு ரூபா’ கொடுன்னு கூலி கேட்பான். என்னடா, வேலைக்கு முன்னாலேயே கூலிபற்றிப் பேசுகிறார்களே என்கிற ஒரு கலாசார அதிர்ச்சி ஏற்படும். ‘இஷ்டம்னா குந்து, இல்லைன்னா நகரு’ன்னுட்டு போய்க்கிட்டே இருப்பான். இதைப்பார்த்து பயந்துதான், மெட்ராஸ்னா மரியாதை இல்லாத ஊர்னு ஆயிடுச்சி. ஆனா, அவன் தன்னோட உரிமையைக் கேட்கிறான். அதுதான் அவங்களுக்கு அச்சமூட்டுது.

பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி -  ஷாலின் -
பாக்கியம் சங்கர் - கரன்கார்க்கி - ஷாலின் -

பாக்கியம் சங்கர் : இவங்கள அடாவடின்னா, அப்புறம் யார் ஒழுக்கம்? இங்க இருக்கிற மனுஷங்க கிட்ட ஓர் அறம் இருந்தது. எனக்கு அவர்களை எழுதணும்னு தோன்ற அதுதான் காரணம். திருப்பால்னு ஒரு மனுஷன். பிணம் அறுக்கிறவர். அவருக்கு இரண்டு மனைவி. நல்ல சுவாரஸ்யமான மனிதர். சினிமாப் பாட்டு கேட்டுக்கிட்டே அறுப்பாரு. இதெல்லாம் அவரை எழுதணும்னு தோண வைக்கல.

ஒரு அரசியல் கொலை. அந்த உடம்பை முதல்ல போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கொடுன்னு அசிஸ்டன்ட் கமிஷனர் வந்து கேக்குறாரு. “இதுக்கு முன்னாடி மூணு பாடி இருக்குது. அது முடிச்சிட்டுதான் இது”ன்னு சொல்றார் திருப்பால். உடனே அந்த கமிஷனர், “நான் யார் தெரியுமா?”ன்னு ஒரு மிரட்டு மிரட்டினார். ஆனா திருப்பால் அசால்ட்டா சொன்னார், “இது என் இடம். நான் வரிசையாத்தான் செய்வேன். உனக்கு வேணும்னா நீயே அறுத்துக்கோ”ன்னு பிளேட நீட்டினார். அந்த ஆபீசர் சத்தமே இல்லாம மரியாதையா வெளில போய்ட்டார்.

திருப்பால் ஓர் உதாரணம்தான். இப்படி இவங்க செய்ற வேலையை வச்சு அவங்களை டாமினேட் பண்ண நினைத்தால், அவங்க திமிராத்தான் நடந்துப்பாங்க. அவங்களுக்குள்ள செயல்படுகிற அறம்தான் அதுக்குக் காரணம்.

இன்னைக்கு வடசென்னைன்னா வாளும் கத்தியுமா காட்டுறாங்களே, ஆனா, அந்தக் கலாசாரம் வட சென்னைக்குப் புதுசு. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ‘கைமால்’ என்கிற ஒண்டிக்கு ஒண்டி போடுற சண்டைதான் வழக்கம். இங்க பாக்ஸிங் ரொம்ப முக்கியமான வீர விளையாட்டு. கித்தேரி முத்துன்னு ஒரு வீரர் இருந்தார். அவரோட சண்டையைப் பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஒருமுறை எம்.ஜி.ஆர் அவர் சண்டையப் பார்த்து அசந்துபோய் அவரைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டார். அடுத்த படத்துல சண்டைக் காட்சில ஒரு வசனம் வைக்கிறார். ‘இந்தா கித்தேரி முத்து குத்து’ அப்படின்னு சொல்லி வில்லனைக் குத்துவார். அந்த அளவுக்குப் பிரபலமான விளையாட்டு வீரர்கள் இருந்த இடம் இது. அப்படிப்பட்டவங்க கிட்ட கத்தியக் கொடுத்ததே அரசியல்வாதிங்கதான்.

நான் வருத்தத்தோட சொல்றேன். இப்போ மறுபடி வடசென்னைல போதைக் கலாசாரம் பரவ ஆரம்பிச்சிருக்கு. இளைஞர்கள் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையா இருக்காங்க. அதற்காகக் கொலைகூடச் செய்யற நிலைக்குப் போறாங்க. இதெல்லாம் மாறணும்.

ஷாலின் : இளைஞர்கள் தங்களுக்குன்னு ஒரு வரலாறு இல்லைன்னு நினைக்கிறாங்க. அமெரிக்காவுல நியூயார்க் நகரில் ஹார்லம் என்கிற இடம் இருக்கு. கிட்டத்தட்ட நம்ம வடசென்னைபோலத்தான். கடந்த 30 ஆண்டுகளா, இங்க வாழ்கிற கறுப்பின மக்களைக் குற்றப் பரம்பரையா சித்திரிச்சு சித்திரிச்சு, வளரும் தலை முறையும் அப்படி ஆனாங்க. அதை மாற்ற அவர்களுக்குக் கறுப்பின வரலாற்றைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோலத்தான் வடசென்னையின் வரலாற்றையும் பேச வேண்டிய அவசியம் இருக்கு.

பாக்கியம் சங்கர் : நான் தடத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அதோட தலைப்பு ‘உப்புக்கண்டம் நெய்ச்சோறு.’ அப்போ ஒரு இலக்கியவாதி நண்பர் வந்து கேக்குறார். ‘வடசென்னையில் நெய்ச்சோறெல்லாம் சாப்பிடுவீங்களா’ன்னு. நெய்ச்சோறு மட்டுமா, விதம்விதமா சாப்பிடுவோம்னு சொன்னேன்.

ஷாலின் : மாட்டுக்கறியிலேயே விதம்விதமா சாப்பிடுற ஆள்கள்னு சொல்றதுதானே. இங்க போர்ச்சுகீஸ் ஸ்டைல்ல விந்தாலுன்னு ஒண்ணு பண்ணுவாங்க. பீப், உருளைக்கிழங்கு, வினிகர் இதெல்லாம் சேர்த்து செய்றது. அவ்ளோ டேஸ்டா இருக்கும். கருக்கல்னு ஒரு உணவு. தெருவுக்குத் தெரு ஆயாங்க உட்கார்ந்து வறுத்துக்கிட்டு இருக்கும். அது வேற ஒண்ணும் இல்ல. மாட்டோட கொழுப்பை மட்டும் எடுத்து கருக்கி செய்றது. அப்புறம் ஆட்டுக்கால் பிரியாணி, அதாவது ஆட்டோட பாதத்தை மட்டும்போட்டு செய்றது. இதெல்லாம் வடசென்னையோட ஸ்பெஷல் டிஷ்.

கரன்கார்க்கி : இதைப் பேசணும். எழுத்துலையும் கொண்டுவரணும். அதுதான் வளரும் தலைமுறைக்கு நம்பிக்கைக் கொடுக்கும். நான் நாவல் எழுதியிருக்கேன் என்கிற பெருமையைவிட என்னோடு சேர்ந்து பாக்கியம், ஷாலின்னு ஒரு இளைஞர் கூட்டமே எழுத வந்திருக்காங்க.

வடசென்னை இளைஞர்கள் நல்லா படிச்சி நல்ல வேலைல இருக்காங்க. எழுத்துல இருந்து சினிமாத்துறை வரைக்கும் சாதிக்கிறாங்க. விளையாட்டிலும் சாதிக்கிறாங்க. இரண்டு வருடம் தொடர்ந்து கேரம்போர்டுல உலக சாம்பியன் என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப்பொண்ணு. புட்பால் ஜூனியர் சாம்பியன்ஷிப்புக்கு ஐரோப்பாவுக்குத் தொடர்ந்து போறாங்க. போன ஆண்டு வியாசர்பாடி ஜூனியர் டீம் சுவீடனை ஜெயிச்சிட்டு வந்தாங்க. ஆனா, எந்த மீடியாவும் கண்டுக்கல. ஆனால், எத்தனை நாள் அப்படியே இருக்கும்? இதையெல்லாம் சொல்லவும் எழுதவும்தான் நாங்க இப்போ முன்வந்திருக்கிறோம்.

உறுதி தொனிக்கிறது உழைப்பு மண்ணின் மைந்தர்களிடம்.