ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“உடனே வா!” - க்ரைம் ஸ்டோரி

“உடனே வா!” - க்ரைம் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
News
“உடனே வா!” - க்ரைம் ஸ்டோரி

- தேவிபாலா

வீடே பரபரப்பாக இருந்தது. நாளை, காலை கல்யாண மண்டபத்துக்குப் புறப்பட வேண்டும். இன்று பரபரப்பாக பேக்கிங் நடந்துகொண்டிருந்தது.

தேவிபாலா
தேவிபாலா

ஜனனிக்கு கல்யாணம். அப்பா மத்திய அரசு உத்தியோகம், இன்னும் ஒரு வருஷ சர்வீஸ். அம்மா தனியாரில் வேலை, நாலு வருஷத்தில் ரிடையர்மென்ட். இவர்களுக்கு மூன்று பெண்கள்... வெளி நாட்டில் மூத்தவள், அடுத்தவள் உள்ளூரில், கடைசியாக ஜனனி. சொந்த அத்தை மகன் கோபியை அவளுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள்.

கோபி சூப்பர் மார்க்கெட் வைத்து சம்பாதிக்கிறான். படிப்பு பள்ளிக்கூடம் தாண்டவில்லை. ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் முதலில் வேலை பார்த்து அதில் நிறைய கற்றுக்கொண்டு சொந்த மாகக் கடை வைத்து நன்றாக சம்பாதிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டான்.

ஜனனி பட்டதாரி. ஒரு கணிப்பொறி சென்டரில் வேலை. அங்கு வந்த விசுவிடம் முதலில் நட்புடன் பழகி அது காதலாக, இவர்கள் காதலுக்கு வயது இரண்டு. ஜனனி - கோபி கல்யாணத் தைப் பெற்றவர்கள் தீர்மானிக்க... ஜனனி, விசுவிடம் தனக்குள்ள காதலைச் சொல்ல, பெற்றோர் தீர்மானமாக மறுத்துவிட்டார்கள். ஜனனி பலவிதமாகப் போராடிப் பார்த்தாள்... நடக்கவில்லை. அம்மா தற்கொலை வரை போக, அப்பா கடுப்பாக, உள்ளூர் அக்கா வசை பாட, ஜனனியால் மீற முடியவில்லை.

“விசு, எம்.காம். படிச்சு வெளிநாட்டுல ஏஜென்சி எடுத்து சம்பாதிக்கிறார்.”

“அவனுக்கு அப்பா, அம்மா இல்லை. ஏன்னு கேக்க நாதி யில்லாத ஒருத்தன், இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆக முடியாது.”

“கோபி படிக்கலை.”

“ஆனா, பாரம்பர்யம் இருக்கு. சொந்தமா கடை நடத்தி, லட்சங்கள்ல சம்பாதிக்கிறார். நீ இதை மறுத்தா, நாங்க ரெண்டு பேரும் தூக்குல தொங்குவோம்.”

உடைந்துபோனாள் ஜனனி. படிப்பு, பணம் சம்பாதிக்கும் ஆற்றல், அழகு எல்லாமே விசுவுக்கு இருந்தாலும் அவன் அநாதை. அவன் பக்கம் பேச ஆளில்லை. அவன் தங்குவது மேன்ஷனில். பேங்க் பேலன்ஸ் பல லட்சங்கள். பேங்க் ஸ்டேட்மென்டை அவளுக் குக் காட்டியிருக்கிறான். அவளுக்காக வைர நெக்லஸ், வளையல்கள் வாங்கி வைத்திருக் கிறான். அவளால் அதை வீட்டில் காட்ட முடி யாது. அவளது கல்யாணத்தை பெரியவர்கள் தீர்மானிக்கும் நேரம், ஜனனி நொந்து போக...

“நீ இப்ப உன் வீட்டு பெரியவங்களை எதிர்த்தா, வாழ்நாளில் நாம ஒண்ணு சேரவே முடியாது. நீ சம்மதி. எல்லாத்துக்கும் தலை யாட்டு. கல்யாணத்துக்கு முதல் நாள் நாம ஓடிப்போயிடலாம்.”

“மாட்டினா?”

“மாட்டிக்காத அளவுக்கு நீ அவங்களை நம்ப வெச்சு நடிக்கணும். நான் விமான டிக் கெட் புக் பண்றேன். மும்பை போயிட்டா, அங்கிருந்து வெளிநாட்டுக்குப் போயிடலாம். உன்னை யாரும் சந்தேகப்படாத அளவுக்கு நீ நடிக்கணும்.”

“உடனே வா!” - க்ரைம் ஸ்டோரி

ஜனனி நடிக்கத் தொடங்கிவிட்டாள். இதோ நாளை கல்யாண மண்டபத்துக்குப் போக வேண்டும். மாலை ரிசப்ஷன், மறுநாள் கல்யாணம். ஜனனியின் நடிப்பை குடும்பமே நம்பிவிட, அவளும் வெளியே போகாமல் போனில் தகவல் தந்து அவனது உத்தரவுகளைச் செயல்படுத்திக் கொண்டிருந்தாள்.

நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நன்றாக நடித்தாள். கோபி அவளை வெளியே அழைக்க, அவனுடன் போனாள். ஊரை சுற்றினாள், ஹோட்டலில் சாப்பிட்டாள். சகல விவரங் களையும் விசுவுக்கு தெரிவித்தாள். இன்னும் சொன்னால், இந்த யோசனையை அவளுக்கு சொன்னதே விசுதான்.

“கோபி என் அத்தை மகனாக இருந்தாலும், உன்னைக் காதலிச்சிட்டு அவனோட சுத்தறது எனக்குப் பிடிக்கலை.”

“அதுல எனக்கு எந்த தடையும் இல்லை. எல்லாரையும் நீ நம்ப வைக்க இதையெல்லாம் செஞ்சாதான், நாம நினைச்சபடி ஓட முடியும்.”

“என் மேல உனக்கு அத்தனை நம்பிக்கையா விசு?”

“நம்பிக்கைதான் வாழ்க்கை ஜனனி. உனக் காக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்க நான் காத்துக்கிட்டிருக்கேன்.”

ஜனனி உருகிவிட்டாள். அவளை குடும்பம் நன்றாக நம்ப, இதோ கல்யாணம் வரை வந்து விட்டது. மகளுக்காக அப்பா, அம்மா செய்து வைத்திருந்த 100 சவரன் நகை, முதல் நாள் லாக்கரிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டது. தவிர கல்யாணச் செலவுக்காக, அப்பா 40 லட்சம் வரை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்தார்.

இதையெல்லாம் ஜனனி சொல்ல... “எல்லாம் உனக்கானது தானே... எடுத்துக்கிட்டு வந்துடு!”

“அய்யோ, எதுக்கு விசு?”

“நான் கேக்கலை. எனக்குத் தேவையும் இல்லை. இதைவிட பல மடங்கு உனக்கு செய்ய என்னால முடியும். நீ என் கூட ஓடி வந்து, இந்தக் கல்யாணம் நின்னு, உன் குடும்பம் அவமானப்பட்டா, எல்லாம் நாளைக்கு உன் சகோதரிகளுக்குப் போகும். எதுக்கு நீ விட்டுத் தர்றே? உன் அக்கா புருஷன்கள் எல்லாரும் படிச்சவங்க. உன்னை படிக்காத ஒருத்தனுக்கு கட்டி வெச்சு, உன்னை பெத்தவங்க செய்யற துரோகத்துக்கு அவங்களை நீ தண்டிக்க வேண் டாமா? நான் உன் காதலன்னு தெரிஞ்சப்ப, என்னை ஆளை வெச்சு உதைச்சு, போலீஸ்ல புகார் தந்து, லாக்கப்ல வெச்சு, லாடம் கட்டி, எப்படியெல்லாம் துன்புறுத்தினாங்க... காத லிச்சது அத்தனை பெரிய குற்றமா ஜனனி? எனக்கு கிடைச்ச தண்டனைகள், உனக்கு ஏற்பட்ட அவமானங்கள்... புரியுதா? முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். இப்படிப்பட்ட வங்களை நீ எப்படி தண்டிக்கப்போறே?”

ஜனனி யோசிக்கத் தொடங்கினாள்... அது நியாயமாகப்பட்டது.

“காதலிச்சவனுக்கு எல்லா தகுதிகளும் இருந்தும், அவனோட சேர்த்து வைக்காம, இவங்க ஆடின வன்முறை ஆட்டம் கொஞ்ச மில்லை. இவங்களுக்கு நான் பதிலடி தந்தா எந்தத் தப்பும் இல்லை. என் எந்த ஒரு கெஞ்ச லுக்கும் செவி சாய்க்கலை. இவங்க பண்ணின எமோஷனல் ப்ளாக் மெயிலுக்கு நான் பதிலடி தந்தே ஆகணும்” - அவன் சொன்னதை செயல்படுத்த முடிவு செய்துவிட்டாள்.

“நாளை காலை மண்டபத்துக்குப் போக வேண்டும். இன்று இரவு 11 மணிக்கு விமானம். பத்து மணிக்காவது விமான நிலையத்தில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து பதினைந்து நிமிஷ பயணத்தில் விமான நிலையம் வந்து விடும். சரியாக ஒன்பது முப்பதுக்கு தெருக் கோடிக்கு வந்து விடு” என்றான் விசு.

வீட்டில் சீக்கிரமே சாப்பிட்டு ஆண்கள் ஆளுக்கொரு வேலை பார்க்க, பெண்கள் மெகந்தி போடும் மும்முரத்தில் இருக்க, ஜனனி அதைப் பயன்படுத்திக் கொண்டாள். எட்டு மணிக்கே அவள் தன் கைகள் கால்கள் என மெகந்தியை முடித்துக்கொண்டாள்.

“அம்மா, நான் போய் படுக்கறேன். யாரும் தொந்தரவு பண்ணாதீங்க.”

“சரிம்மா. நாளைக்கு நீ புத்துணர்ச்சியோட இருக்கணும்.”

மற்ற அத்தனை பெண்களும் மெகந்தியும் அரட்டையுமாக இருக்க, ஜனனி உள்ளே வந்து பீரோ திறந்து, நகைகள், பணத்தை எடுத்து, வைத்திருந்த பெட்டியில் பேக் செய்தாள். ஏற்கெனவே அவளது துணிகள் வைத்திருந்த பெட்டி. துணிகளை எடுத்து கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு ஒரே ஒரு மாற்று உடை மட்டும் வைத்து நகைகள், பணத்தை அதில் பேக் செய்தாள்.

விசுவின் செய்தி, உடனே புறப்படு என வர... வீட்டில் உள்ள அனைவரும் பேக்கிங் மற்றும் மருதாணியில் இருக்க, வெகு கவன மாகத் தன் பெட்டியுடன், படபடக்கும் நெஞ்சை கையில் பிடித்தபடி, சர்வ ஜாக்கிரதை யாக வெளியே வந்துவிட்டாள்.

தெருக்கோடியில் காருடன் காத்திருந்தான் விசு. அவள் படக்கென ஏறிக்கொள்ள, “பிரச்னை எதுவும் இல்லையே?”

“மருதாணி வேலைல மும்முரமா இருக் காங்க. தப்பிச்சு வந்துட்டேன். ஏர்போர்ட்ல இதை ஸ்கேன் பண்ணும்போது மாட்ட மாட் டோமா?”

“அதுக்கெல்லாம் வேற ஏற்பாடுகளை நான் செஞ்சிருக்கேன். கவலைப்படாம வா. இங் கிருந்து விமானம் கிளம்பிட்டா, அப்புறமா நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாம இப்ப குறுக்கு வழிலதான் விமான நிலையத் துக்குப் போறோம்.”

சரக்கென கார் நிற்க, இருவரும் பார்க்க, குறுகலான ரோட்டை மறித்து மூன்று ஆட்கள்!

“யார் இவங்க? டிரைவர், ஏன் காரை நிறுத்தினே?”

அடுத்த நொடியே ஆட்கள் இவர்கள் இரு வரையும் இழுத்து வெளியே போட்டு, பெட்டி யைப் பறிக்க, அதைத் தராமல் விசு போராட, அவனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக ஆட்கள் தாக்க, குறுக்கே ஜனனி பாய, அவளையும் அடிக்க, விசுவுக்கு பலமான அடி.

“இவனை சாகடிச்சு பெட்டியைப் பறிங்கடா...”

விசு ரத்த வெள்ளத்தில் மிதக்க, ஜனனி மயங்கிக்கொண்டிருந்தாள்.

ஜனனி கண் விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தாள். ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. மாஸ்க் போடப்பட்டு சகல இடங்களிலும் ட்யூப் செருகப்பட்டிருக்க...

ஒரு தனியார் கோடவுனில் அந்த அடி யாட்கள், பெட்ஷீட் விரித்து பெட்டி திறந்து நகைகள், கரன்சிகளை வெறியுடன் பார்க்க...

“இதோட மதிப்பு என்ன தல?”

“நூறு சவரன் மதிப்பு, இன்னிக்கு 40 லட்சம் ரூபாய், தவிர 40 லட்சம் ரொக்கம்டா” என்ற குரல் கேட்க, அடியாட்கள் திரும்ப, தலை, கை கால்களில் கட்டுடன் விசு நின்றான்.

“ஏண்டா டேய், உருட்டுக் கட்டைல துணி அடைச்சு டம்மியா நான் ரெடி பண்ணியிருந் தாலும், ஓங்கி அடிக்கும்போது வலிக்காதா? ரத்த மேக்கப் வேற! இதுக்கான செலவே இரு பதாயிரம் எனக்கு. அடியாட்கள் என்னை அடிச்சு கொல்ற மாதிரி அவளுக்கு முன்னால சீன் போட்டேன் பாரு!”

“உடனே வா!” - க்ரைம் ஸ்டோரி

“அந்தப் பொண்ணு என்ன ஆனா?”

“சாகலைன்னா, ஆஸ்பத்திரில இருப்பா. அதுவும் உடனே யாராவது சேர்த்திருந்தா, தப்பிக்கலாம்! இவளை மாதிரி இதுவரைக்கும் நாலு பேரை ஏமாத்தியாச்சு. இவகிட்ட ரெண்டு வருஷம் வேஸ்ட். வைர நகைனு அவளை நம்ப வைக்க போலி நகைகள், போலி பேங்க் ஸ்டேட்மென்ட், விமான டிக்கெட் மாதிரி டூப்ளிகேட், ரெண்டு வருஷத்துல இவளால ஏகப்பட்ட செலவு.”

“நீ மாட்ட மாட்டியா மாப்ளே?”

“அவ கண் முழிச்சா, நான் அடிபட்டதையும் சொல்லுவாளே. என்னை இன்னமும் அவ நம்புவா. யாரோ வழிப்பறி ஆட்கள் அடிச் சிட்டாங்கனு போலீஸ் வலை வீசும். நான் எல் லார் கண் முன்னாலயும் நல்லவனா பகிரங்கமா நடமாடி, அடுத்த பொண்ணுக்கு வலை வீசு வேன். பார்ட்டி ஊர்மிளா இப்பவே தயார்!”

சகலத்தையும் பேக் செய்துகொண்டு இவர்கள் புறப்படத் தயாராக, போலீஸ் உள்ளே நுழைந்தது. அவர்களுடன் கோபியும், ஜனனியின் அப்பாவும். ஓட முயன்ற அத்தனை பேரையும் மடக்கிப்பிடித்தார்கள். கோபி, விசுவை நெருங்கி ஓங்கி அறைந்தான்.

“மாமா, ஒரு நாளைக்கு இவன்கூட ஜனனி போன்ல பேசறது என் காதுல விழுந்தது. ஒரு மாசம் முன்னாலதான். அப்பவே நான் உஷா ராயிட்டேன். இவனை கையும் களவுமா பிடிக் கணும்னு தொடர்ந்து வாட்ச் பண்ணினேன். முந்தா நாள் இவன்கிட்ட பேசிட்டே ஜனனி பீரோ திறந்து நகை, பணத்தை எடுத்துப் பார்க்க, என் சந்தேகம் வலுத்தது. ஜனனி பெட் டில ஒரு எலெக்ட்ரானிக் டிவைஸ் வெச்சிட் டேன். அவ மொபைல்ல ஸ்பை ஆப் பொருத்தி னேன். இவங்க திட்டம் புரிஞ்சது. ராத்திரி தாக்குதல் நாடகம் முடிஞ்சு இவன் தப்பிக்க, என் ஆட்களை வெச்சு பின்பற்றினேன்.”

“மாப்ளை... படிக்காத நீ, இத்தனை தூரம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பெரிய மோசடிக் கும்பலை பிடிச்சிட்டியே? என் மகளை நீ இத்தனை நடந்த பிறகும் ஏத்துப்பியா?”

“அவ குணமாகி வந்த பிறகு, அதைப் பற்றி பேசலாம் மாமா. இந்த அயோக்கியன்கிட்டே இனிமே இன்னொரு பெண் மாட்டக் கூடாது.’’

கம்பீரமாக நடந்தான் கோபி.`