லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மண்டோதரியின் தீபாவளி!

மண்டோதரியின் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்டோதரியின் தீபாவளி!

தீப நாயகி

ராவணனைக் கொன்றழித்து, சீதையை மீட்ட ராமன் தன் துணைவி மற்றும் சகோதரனுடனும் அனுமன், சுக்ரீவன் மற்றும் கிஷ்கிந்தையின் வானர சேனையுடனும் அயோத்திக்குத் திரும்புகிறார்.

தங்களின் தலைவனையும் தலைவியை யும், அயோத்தி மக்கள் அனைவரும் தீப ஆரத்தி எடுத்து அகமகிழ்வுடன் வரவேற்க... அந்தத் தீப ஒளியில் ஜொலித்த சீதாபிராட்டியின் முகத்தைப் பார்த்த கணத்தில் அனுமனின் மனதில் ராவணன் மனைவி மண்டோதரியின் முகம் ஒருமுறை மின்னி மறைந்தது.

வனவாசத்தின்போது, சீதையை ராவணன் கவர்ந்து சென்றதைத் தொடர்ந்து சீதையைத் தேடி, தெற்கு நோக்கி நீண்ட தூரம் பயணித்த அனுமன், இலங்கைக்குள் நுழைந்து அங்கு அனைத்து இடங்களிலும் தேடியபின், ராவணனின் அந்தப்புரத்திலும் தேட, அங்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய மங்கை ஒருத்தி உறங்குவதைக் காண்கிறார்.

நிலவையும் விஞ்சும் ஒளியுடன் இருந்த அப்பெண்ணின் முகத்தில் அன்பும் தாய்மையும் பொங்கி வழிய, அமைதியாக உறங்கும் அந்தப் பெண் சீதைதான் என்றெண்ணி ஆனந்தத்தில் அங்குமிங்கும் உலவினார் என்கிறது கம்பராமாயணம்.

ராவணனின் மனைவி மண்டோதரி, தேவசிற்பியான மயனின் மகள். பேரழகி. மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய இடையாள் என்று பொருளாம். தேவ கன்னிகையான மண்டோதரி, பார்வதி தேவியின் சாபத்தால் தவளையாகப் பிறந்து, பல வருட தவத்துக்குப் பிறகு, சாப விமோசனம் பெற்றவள் என்றாலும், மீண்டும் அவள் தேவலோகம் செல்ல முழுத் தகுதி அடையும்வரை அவள் அசுரகுலத்தில் வாழ நேர்ந்தது என்கின்றன புராணங்கள்.

அழகு, அறிவு, மதிநுட்பம், பொறுமை, துணிவு என அனைத்து குணங்களிலும் சிறந்து விளங்கினாள் மண்டோதரி. ஆய கலைகளையும் கற்றுவித்து, அவளை ஒரு ராஜகுமாரியாகவே வளர்த்தார் மண்டோதரியின் தந்தை மயன்.

தேவலோகத்தின் செல்வத்தை எல்லாம் கவர்ந்த ராவணன், இந்திரபுரியையும் விஞ்சும் ஒரு மாநகரை தனக்காக இலங்கையில் நிர்மாணிக்கும் பொருட்டு, சிற்பி மயனை சந்திக்கச் சென்றபோது, வழியில் மண்டோதரி யைக் காண்கிறான். அவள் அழகில் மயங்கி, அவள்மீது மிகுந்த காதல் கொண்டு அவளை மணக்க விரும்புகிறான்.

ராவணன் சிறந்த வீரன் மட்டுமல்லன், தேர்ந்த கலைஞன் என்பதாலும், தன்னைப் போலவே அவனும் ஒரு சிவபக்தன் என்பதாலுமே அவனை மணக்கச் சம்மதிக்கிறாள் மண்டோதரி. தந்தை மயனும் இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணத்தை நடத்திவைக்க, மனைமாட்சியுடன் அவள் வாழ்ந்த காரணத்தால் பஞ்ச கன்னிகைகளுள் ஒருவராகவும் கொண்டாடப்படுகிறாள் மண்டோதரி.

அசுரகுல வழக்கத்தின்படி நாகர் குலத்திலும், அசுரர் குலத்திலும், இறை குலத்திலும் சிறந்த மண்டோதரியின் குணநலனில் மகிழ்ந்து அவளை பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி மகிழ்ந்தானாம் ராவணன். தன்னையும் அறியாமல் தவறான செயல்களை ராவணன் செய்ய விழைந்தபோதெல்லாம், அவனுக்கு நல்வழிகளைப் போதித்து நடத்தி வந்தாள் மண்டோதரி.

இந்திரஜித், அதிகாயன், அக்‌ஷயகுமாரன் என்ற தன் மூன்று தவப்புதல்வர்களையும் வீரதீர பராக்கிரமங்களில் சிறந்தவர்களாகவும் நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் வளர்த்தாள். மூத்த மகனான இந்திரஜித் அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் பல அரிய வித்தைகளைக் கற்றான். தனது கடும் தவத்தின் பயனாக பிரம்மனிடம் பிரம்மாஸ்திரம் உட்பட பல அபூர்வ அஸ்திரங்களைப் பெற்றான். தன் தவத்துக்குத் தடையாக இருந்த இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்தையும் பெற்றான். அவனை நல்வழிப்படுத்தியது மண்டோதரிதான். தன்னுடன் பிறந்த சகோதரர்கள் மாயாவி, தந்துபி இருவரையும் அன்பால் நேர்வழிப்படுத்திய மண்டோதரி, முற்றிலும் தோற்றது கணவன் ராவணன் சீதையைக் கவர்ந்து வந்தபோதுதான்.

சீதையை சிறைபிடிக்கும் விஷயத்தில் கணவனிடம் முரண்படுகிறாள் மண்டோதரி. ராமனிடம் சீதையைக் கொண்டு சேர்க்கும்படி கண்ணீருடன் மன்றாடிப் பார்க்கிறாள். அறிவுரைகள் வழங்குகிறாள். பெரும் தீங்குகள் நிகழக் கூடும் என்பதையும், அவன் தவமிருந்து பெற்ற `ஆகாஷ் காமினி' என்ற விண்ணில் பறக்கும் வித்தையையும் `மிருத்ய சஞ்சீவினி' என்ற சாகாவரத்தையும் இழக்க நேரிடும் என்று ராவணனை எச்சரிக்கிறாள். அவன் கற்றறிந்த மருத்துவம் அவனுக்கே பயனளிக்காமல் போகக் கூடும் என்று உரைக்கிறாள். ஆனால், மண்டோதரி மேற்கொண்ட சாம, பேத, தான, தண்ட யுக்திகள் அனைத்தும் தோற்றுப் போகின்றன. என்றாலும் கணவனை விட்டுப் பிரியாமலும் வாழ்கிறாள் அவள்.

பின்னாளில், அவள் உரைத்தபடியே ராவணனின் நீதியற்ற செயல்களால் பெரும் யுத்தமும் பேரிழப்புகளும் நிகழ, இழக்கக் கூடாதவற்றை எல்லாம் ராவணனின் தவற்றால் இழக்கிறாள் மண்டோதரி.

மண்டோதரியின் தீபாவளி!

அனுமன் கையால், ஆசைமகன் அக்‌ஷயகுமாரன் மரணிக்க, அதிகாயன் லட்சுமணனின் பிரம்மாஸ்திரத்தால் கொல்லப் படுகிறான். தாயின் குணத்தையே தன் குணமாகக் கொண்ட தலைமகன் இந்திரஜித்தோ, தான் செய்வது தவறு என்று உணர்ந்தும், தந்தைக்காக போர்க்களம் சென்று அனுமன், நீலனை வென்று நாகபாசம், மாயப்போர் எனத் தன் வித்தைகளால் ராம லட்சுமணனை திகைக்க வைத்தாலும் இறுதியில் லட்சுமணனிடம் தோற்று இறக்கிறான். மண்டோதரியின் அறிவுரைகளை ஏற்காமல், ராமனுடன் போர் புரிந்து, இறுதியில் ராமனின் பிரம்மாஸ்திரம் ஏந்திய புனித அம்பு ராவணனின் நெஞ்சில் புக, மரணத்தைத் தழுவுகிறான் இலங்கேஸ்வரன்.

ஈரேழு உலகிலும் எவராலும் வெல்லப்பட முடியாத ராவணனின் உயிரை ராமனின் அம்புகொண்டு சென்றது. கணவன் இறந்த செய்தி கேட்டு, அவன் வீழ்ந்து கிடக்கும் இடத்துக்குப் பாய்ந்தோடி வந்த மண்டோதரி கணவனின் உடலைப் பார்த்து அலறுகிறாள்.

`வெள்ளெருக்கம்பூ மாலையணிந்த சிவ பெருமானுடைய கயிலை மலையையே பெயர்த்தெடுத்த உனது அழகிய உடம்பில், சீதையின் எண்ணம் எங்காவது துளியேனும் இருக்கக் கூடாது என்பதால், உனது அழகிய உடல் முழுவதும் எள்ளின் முனையளவுகூட விடாமல், துருவித் துளைத்ததோ ராமனின் அம்பு...' என்று கணவன் உடல்மீது விழுந்து கதறித் துடித்த மண்டோதரி, அங்கேயே தனது உயிரை விடுகிறாள்.

அனைத்தும் முடிந்து, ராம, லட்சுமண, சீதாபிராட்டியுடன் அயோத்தி திரும்பிய அந்த இரவில், தீபங்களின் சுடரொளியில் சீதையின் முகத்தைக் கண்டவுடன், அனுமனின் மனதில் மண்டோதரியின் முகம் மின்னி மறைந்தது.

‘ராவணன் அந்த ஒரு தவறு மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் மண்டோதரியும் இப்போது சீதையைப்போல மகிழ்வுடன் இருந்திருப்பாளல்லவா’ என்ற எண்ணம் அனுமன் மனதில் தோன்றி மறைகிறது‌.

எந்தவொரு காவியத்தை வாசிக்கும்போதும், அதன் தாக்கம் நமக்குள்ளே இருந்துகொண்டு தான் இருக்கும். அதுபோலத்தான் தலைவன், தலைவியின் குணங்களைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது மண்டோதரியின் காதலும் தியாகமும்.

ராவணனை வென்று சீதையுடன் ராமன் நாடு திரும்பிய நாளையே விளக்கேற்றி தீபாவளி என்று சிலர் கொண்டாடுகிறார்கள். சீதையின் தீபாவளி ராமனின் அறத்தையும் சீதையின் அன்பையும் காட்டும் அதேநேரம், மண்டோதரியின் தீபாவளி அவளது பொறுமையையும் தியாகத்தையையும் ஒளியாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.