Published:Updated:

ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!

சாரோன்
பிரீமியம் ஸ்டோரி
சாரோன்

இந்த ஆவணப்படத்துக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தேன். ஒருகட்டத்தில் கடனை அடைக்க என் நிலத்தை விற்றேன்

ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!

இந்த ஆவணப்படத்துக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தேன். ஒருகட்டத்தில் கடனை அடைக்க என் நிலத்தை விற்றேன்

Published:Updated:
சாரோன்
பிரீமியம் ஸ்டோரி
சாரோன்

`வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத சமூகம் வரலாற்றைப் படைக்காது' என்றார் அம்பேத்கர். தமிழ்ச்சமூகம் எத்தனையோ விஷயங்களில் முன்னேறியிருந்தாலும் வரலாற்றை அறிந்துகொள்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் பின்தங்கியே இருக்கிறது. ஆளுமைகள் பலர் இன்னும் ஆவணப்படுத்தப்படாமலே இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கல்லூரிப் பேராசிரியர் வேலையைத் துறந்து, கடன்பட்டு, சொத்தை விற்று ஆவணப்படங்கள் எடுத்திருப்பவர் சாரோன். தன் பணிகள் குறித்தும் நடைமுறையில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசினார்.

‘‘எனக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்மீது ஆர்வம் அதிகம். ஒருமுறை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கடையில் பட்டுக்கோட்டையாரின் அபூர்வமான புகைப்படத்தைப் பார்த்தேன். கடையில் இருந்த பெண்மணிக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் அப்பா பட்டுக்கோட்டையாரின் ரசிகர் என்பதை மட்டும் சொன்னார். தமிழர்களின் ஆன்மாவில் ஊடுருவிய பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டையார். 20 வயதுவரை அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதற்குப் பிறகு கற்று, கவிதைகள், பாடல்கள் எழுதியவர். திரையிசைப்பாடல்களில் சிவப்புச்சிந்தனைகளை விதைத்தவர். ‘என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று தெரியாது. ஆனால் நான்காம் கால் பட்டுக்கோட்டையார்' என்று ஒருமுறை எம்.ஜி.ஆர் கூறினார். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த பட்டுக்கோட்டையார் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று 2006 முதல் 2014 வரை உழைத்தேன்.

ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!

பட்டுக்கோட்டையாரின் நண்பர் கே.என்.ராமச்சந்திரன் ஓர் ஓவியர். நூற்றுக்கணக்கான படங்களின் விளம்பர டிசைன்களில் பணிபுரிந்தவர். அவர் பட்டுக்கோட்டையார் வாழ்க்கைச் சம்பவங்களைப் படமாகவே வரைந்து தந்தார். அதை ஆவணப்படத்தில் அப்படியே பயன்படுத்தினேன். இப்போது அவர் இல்லை. அவர் மட்டுமில்லை, நான் பதிவு செய்யும்போது இருந்த பல மனிதர்கள் இப்போது உயிருடன் இல்லை.

இந்த ஆவணப்படத்துக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தேன். ஒருகட்டத்தில் கடனை அடைக்க என் நிலத்தை விற்றேன். ஆவணப்பட முயற்சிகளுக்காகப் பேராசிரியர் வேலையையும் விட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டாலும், அந்த ஆவணப்படம் தமிழர்களைச் சென்றடையவில்லை. ஆனாலும் மனம் தளராமல் விந்தன், ஜீவா, எம்.ஆர்.ராதா குறித்த ஆவணப்படங்களை முடித்துவிட்டேன்’’ என்கிறார்.

“ஆவணப்பட இயக்குநர்களுக்கு ஏராளமான சவால்கள். எம்.ஆர்.ராதாவுடன் நாடகத்தில் நடித்த, அவருக்கு உதவியாளர் போலிருந்த பாடகர் சதானந்தம் என்பவர் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்துவந்தார். அவருடன் மூன்றாண்டுகள் தொடர்பிலிருந்தேன். சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் மருமகள்தான் அழுதுகொண்டே சதானந்தம் இறந்த தகவலைச் சொன்னார். ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் நுழையவோ படம் பிடிக்கவோ எளிதில் அனுமதி கிடைப்பதில்லை’’ என்று ஏராளமான பிரச்னைகளை அடுக்கினார்.

‘‘பட்டுக்கோட்டையார் ஆவணப் படத்துக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் எனக்கு விருதளித்தார்கள். அந்த விருதுப்பணமான 5,000 ரூபாயை வைத்து ஜீவா குறித்த ஆவணப்படத்தைத் தொடங்கினேன். அதேபோல் எழுத்தாளர், பத்திரிகையாளர் விந்தன் குறித்த ஆவணப்படத்தை இயக்கினேன். அதற்கு அவர் மகன் ஜனார்த்தனன் பெரிதும் உதவினார்.

எம்.ஆர்.ராதா தமிழ்ச்சமூகத்தின் அபூர்வக் கலைஞன். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால் கலையுலகில் மாபெரும் கலகங்களை நிகழ்த்தியவர். இறுதிவரை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அதற்காக அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவருடன் நடித்த நடிகர்கள் யாரும் உயிருடன் இல்லை. நடிகைகளில் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம் என்று பலரிடம் பேசினேன்.

ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!
ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!

நாடக இலக்கணங்களை உடைத்தவர் ராதா. எழுதப்பட்ட வசனங்களைத் தாண்டி அவராகவே அன்றைய சூழலைப் பொறுத்துப் பேசும் வசனங்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஒரே நாடகம், ஒரே கதை என்றாலும் ‘இன்று ராதா என்ன பேசுவார்' என்பதைக் கேட்பதற்காகவே தினமும் கூட்டம் திரளும். எம்.ஆர்.ராதா வெறுமனே நடிகர் மட்டுமல்ல, எலெக்ட்ரீஷியன், மெக்கானிக், டிரைவர் என்று பல துறைகளில் நிபுணர். பிரமாதமான சமையல்காரர். பெரியாருக்குப் பிடிக்கும் என்று பிரியாணி செய்து அதற்குத் ‘திப்புசுல்தான் பிரியாணி' என்று பெயர் வைத்துப் பரிமாறுவாராம். இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த ஆவணப்படத்தில் உண்டு.

எம்.ஆர்.ராதாவின் வாரிசான நடிகை ராதிகா பல அபூர்வப் புகைப்படங்களையும் வீடியோவையும் தந்து உதவினார். பலரையும் சந்திப்பதற்கு நடிகர் ராதாரவி ஏற்பாடு செய்ததுடன் எனக்குப் பணமும் தர முன்வந்தார். ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன். பொதுவாக, பணம் வாங்கிக்கொண்டு ஆவணப்படம் எடுத்தால் நாம் விரும்புகிறபடி சமரசமில்லாமல் எடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒருவரின் பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கை வரலாற்றை அப்படியே பதிவு செய்வது ஆவணப்படம் இல்லை. இன்றைய தலைமுறைக்கும் அவர் ஏன் தேவை, அவரை ஏன் நாம் சமகாலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பதிவு செய்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது. பராசக்தி, ரத்தக்கண்ணீர் படங்களைத் தயாரித்தவர் பி.ஏ.பெருமாள். சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரை அறிமுகப்படுத்திய, கலைஞர், எம்.ஆர்.ராதா போன்ற ஆளுமைகளின் திரையுலக வாழ்க்கையில் முக்கியப்பங்களித்த அவரைப் பற்றி நாம் ஆவணப்படுத்தவே இல்லையே?’’ என்று ஆதங்கத்துடன் கேள்விகளை முன்வைத்து மௌனமாகிறார்.

ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!
ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!
ஆவணப் படங்களில் உயிர்பெறும் வரலாறு!

‘அடுத்தடுத்த திட்டங்கள் என்னென்ன?' என்றவுடன் மீண்டும் உற்சாகமாகிறார். ‘‘கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்கவயலில் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்கள் ஏராளம். மலேசிய, பர்மா தமிழர்கள் பற்றி இருக்கும் பதிவுகள்கூட கர்நாடகத் தமிழர்களுக்கு இல்லை. கே.ஜி.எப் தமிழர்களைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறேன். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையை உருவாக்கிய ஐடா உள்ளிட்ட, திருமணமே செய்துகொள்ளாமல் இந்தியக் கல்வி, மருத்துவப்பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஐந்து பெண்களைப் பற்றி ‘5 ஏஞ்சல்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். ஆவணப்பட இயக்குநர்களுக்கு அரசு அங்கீகாரமும் இல்லை. முற்போக்குக் கலை இலக்கிய அமைப்புகளும் திரைப்படங்களுக்கு விருது கொடுத்துப் பாராட்டுகிறார்களே தவிர, ஆவணப்படங்களை கவனிப்பதில்லை. டி.வி.டி என்னும் வடிவம் ஒழிந்துவிட்டதால் மேலும் சிக்கல். எம்.ஆர்.ராதா ஆவணப்படத்தை ஓ.டி.டி-யில் திரையிட முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் சாரோன்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து எல்லாவற்றையும் காணொலிகளாகவே காணும் தலைமுறை உருவாகிவிட்டது. நம் கடந்தகால ஆளுமைகளை ஆவணப்படம் எடுப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதை நாம் உணராவிட்டால் வரலாற்றுக்கு துரோகம் செய்வதாக அர்த்தம்.