Published:Updated:

நவீன இலக்கியம் சிரிக்குமா?

மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

தொகுப்பு: இரா.செந்தில் கரிகாலன் - ஓவியங்கள்: ரமணன்

நவீன இலக்கியம் சிரிக்குமா?

தொகுப்பு: இரா.செந்தில் கரிகாலன் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில், கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சிலரைத் தவிர்த்து, நகைச்சுவை உணர்வை மையமாகக்கொண்ட படைப்புகளை உருவாக்க யாரும் முனையவில்லை. சாதாரண உரையாடலில் நண்பர்களிடம் நகைச்சுவை ததும்பப் பேசும் இலக்கியவாதிகள், தங்கள் படைப்புகளில் அவற்றின் சாயல் வந்துவிடாமல் மிகக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்கள். இதற்குப் பின்னிருக்கும் உளவியல் பின்னணி, விமர்சன யதார்த்தங்கள், படைப்பாளிகளின் இயல்பு... எனப் பல கேள்விகள் கேட்டோம். நம் இலக்கியவாதிகள் மிகத் தீவிர பாவனையில் அதற்குப் பதிலளித்தார்கள்!

“சிரிப்பாய் சிரித்தது போதும்!”

மனுஷ்ய புத்திரன்

நவீனத் தமிழ் இலக்கியத்தில், நகைச்சுவை உணர்ச்சி உண்டா என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பொதுவாக எந்தவொரு துறைசார்ந்த எழுத்தாளரின் படைப்புகளிலும் அவலச்சுவைப் போலவே நகைச்சுவையும் இணைந்தே இருக்கும். புதுமைப்பித்தன் அதற்கு சாட்சி. மனித உணர்வின் பல்வேறு சாரங்களில் வெளிப்படுத்தும் படைப்புகளில் நகைச்சுவை எப்படி இல்லாமல் போகும். ஆனால், நகைச்சுவை நகைச்சுவைக்காக மட்டும் இருக்கிறதா அல்லது ஒரு படைப்பின் ஆதாரமான அழகியலின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி. சிரிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நகைச்சுவை வடிவங்கள் இருக்கின்றன. நகைச்சுவை சொற்பொழிவுகள், துணுக்குகள், கடி ஜோக்குகள், கிராமியக் கலைகள், நாட்டார் பாடல்கள், சபா நாடகங்கள், திரைப்படங்களில் காமெடி டிராக்குகள், தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் என நகைச்சுவையின் பிரத்யேகத் தளங்கள் ஏராளம். சங்கப் பாடல்கள் தொட்டு, வஞ்சப்புகழ்ச்சியாகவும் இன்னபிற வடிவங்களிலும் இலக்கியப் பிரதிகளில் நகைச்சுவை உணர்வு தொடர்ந்து பதிவாகியிருக்கிறது. தனிப்பாடல் திரட்டுகளில் அவற்றை நாம் பரவலாகக் காணலாம். நவீன கவிஞர்களில் சி.மணி, ஞானக்கூத்தன் முதலானோர் அங்கத உணர்ச்சியை தம் கவிதைகளில் தமது கருத்தியலுக்கு ஏற்றாற்போல வெளிப்படுத்தியிருக்கின்றனர். மீராவின் ‘ஊசிகள்’ போன்ற தொகுப்புகள் ‘வானம்பாடி’ இயக்கத்தில் சமூக விமர்சனக் குரலோடு இயைந்த அங்கதத்தைக் கொண்டிருந்தன.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

வெகுஜன தளத்தில் கல்கி, சாவி, தேவன் போன்றவர்கள் உருவாக்கிய அங்கத மரபு பிரபலமானது. சுஜாதா எதைப்பற்றி எழுதினாலும் அதில் ஓர் அங்கதத்தின் நீரோடையை இடையறாது பரவச் செய்தார்.

இன்றைய நவீன புனைவுகளிலும் சரி, கவிதைகளிலும் சரி, நகைச்சுவை சிரிக்கவைப்பதற்கான ஒரு தனித்த இலக்கிய வடிவமாக அல்லாமல், அவை வாழ்வின் அபத்தங்களின் மீதான பரிகாசங்களாகவும் சுய எள்ளலாகவும் கலந்திருக்கிறது. எந்தவொரு முதன்மையான நவீனப் படைப்பாளியின் புனைவை கவிதைகளை எடுத்துக்கொண்டாலும், அவர்களின் எழுத்துகளில் கத்திமுனைபோன்ற அங்கதம் வெளிப்படுவதைக் காணலாம். ஆதவனின் கதைகளில் வெளிப்படும் நுண்பரிகாசத்தை அங்கதக் கதைகளின் வரிசையில் சேர்க்க முடியுமா? இசையின் கவிதைகளில் வெளிப்படும் பரிகாச உணர்வு, நவீனத்துவ வாழ்க்கைப் பார்வையோடு கூர்மைபெறுகின்றன. சாருநிவேதிதாவின் எழுத்துகளில் எப்போதும் ஊடுருவியிருக்கும் அங்கதம், ஒரு தனித்த முத்திரையை அவருக்குப் பெற்றுத் தந்தது. வாமு.கோமுவின் எழுத்துகளிலும் நவீன மனம் அடையும் அங்கதத்தின் சாரத்தைக் காணலாம்.

இணையம் சார்ந்த எழுத்துகளும் எழுத்தாளர்களும் உருவான பிறகு, தமிழ் எழுத்தில் அங்கதம் ஒரு பெரும்போக்காக உருவாகிவிட்டது. இணையம் வழி உருவாகி வந்த அராத்து, பேயோன் எனப் பலரும் ஒரு வெகுஜன தளத்திற்கான அங்கதத்தை உருவாக்கி வந்திருக்கிறார்கள். விநாயக முருகன், சரவண கார்த்திகேயன் எனச் சில இளம் படைப்பாளிகள் தம் புனைவுகளுக்கு வெளியே எழுதும் பதிவுகள், அங்கதத்தின் உச்சத்தைத் தொட்ட தருணங்கள் ஏராளம்.

இங்கு இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். தமிழர்களின் உளவியலில் அங்கத உணர்வு ஏற்கெனவே அளவுக்கு மீறிவிட்டதோ என்ற சந்தேகம் உண்டு. ‘எதைப் பற்றியும் பொருட்படுத்திச் சிந்திக்கவோ கவனம்கொள்ளவோ தேவையில்லை; எல்லாவற்றையும் பார்த்து ஒரு நிமிடம் கேலி செய்துவிட்டு நகர்ந்து விடலாம்’ என்கிற மனப்பான்மை அரசியல், சமூகம், தனிமனித வாழ்வியல் என அனைத்தின் மீதும் கவிந்திருக்கிறது. இவ்வளவு சிரிப்பு ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல; எல்லா இடத்திலும் இந்த வெற்றுச் சிரிப்பு சத்தம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. கேளிக்கையே கலாசார உணர்வென்று நம்பும் காலம் இது.

மற்றொன்று, இங்கு மிகவும் சீரியஸான படைப்புகள் என்று நம்பி எழுதப்படும் அநேக எழுத்துகள், பெரும் சிரிப்பை வரவழைக்கக்கூடியதாக இருக்கின்றன என்பதையும் ஒரு புன்னகையோடு நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம்!”

இசை

துப்பாக்கியேந்திய பொதுவுடைமைப் போராளியான சேகுவேரா, கவிதை வாசிக்கும் வீடியோ ஒன்று யூ-டியூபில் கிடைக்கிறது. அற்புதமான புன்னகையோடு மகிழ்ச்சியும் பரவசமும் மிக்க கொண்டாட்டமான நிகழ்வாக அதை ஆக்குகிறார் சே. ஆனால் நமது போராளிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் எவ்வளவுக்கெவ்வளவு உம்மனா மூஞ்சியோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்கிற எண்ணம் நிலவுகிறது. பொதுவாகவே நமது எழுத்தாளர்களின் சிரிக்கும் படங்கள் சொற்பம். அவரது நூலின் அட்டைப் படத்தில் அது ஏறுவது அதனினும் சொற்பம். கடந்த பத்தாண்டுகளில்தான் அப்படியான சிரிக்கும் படங்கள் மிக அரிதாக அட்டையேறுகின்றன என்று நினைக்கிறேன்.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

‘நகை தீவிரத்திற்கு எதிரானது’ என்கிற எண்ணம் இங்குப் பரவலாக இருக்கிறது. இத்தனைக்கும் நவீன சிறுகதை எழுத்தின் பிதாமகரான புதுமைப்பித்தன் கதைகளில் பகடி உண்டு. பகடி, தீவிரத்தைக் கூராக்குமே அன்றி மழுங்கடிக்காது என்பதற்கு புதுமைப்பித்தனிலிருந்து ஷோபாசக்தி வரை நிறைய சான்றுகளைக் காட்டமுடியும். “ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும்” என்றெழுதியிருக்கிறார் பிரபஞ்சன்.

எந்தவொரு நல்ல எழுத்தாளனும் ‘ஜோக்’ அடிக்க வேண்டும் என்பதற்காக எழுதத் துவங்குவதில்லை. ‘நகையும் பகடியும் நைந்த சிரிப்பும்’ நமது வாழ்வில் உண்டு. அது இயல்பாகவே சிலரின் எழுத்திற்குள்ளும் புகுந்துவிடுகிறது அவ்வளவே.

‘நகை, அழுகை, இளிவரல், மருட்கை...” என்று எண்வகை மெய்ப்பாடுகளில் நகையை முதலில் வைத்துப் பேசுகிறது ‘தொல்காப்பியம்’. ஆனால், நமது தமிழ்க் கவிதை ‘தனிப்பாடல்களின்’ காலத்தில்தான் நன்றாகச் சிரிக்கிறது. அதற்கு முன்பான காலங்களில், நகைச்சுவையை நுண்ணோக்கி கொண்டு தேடவேண்டியிருக்கிறது.

நகையும் பகடியும் எழுத்தில் வெகு கவனமாகக் கையாளப்பட வேண்டியவை. அது கொஞ்சம் அரிதான வித்தைதான். பாரதி தன் உரைநடைகளில் பகடியில் வெளுத்து வாங்குகிறான். ஆனால், அவன் கவிதைகளில் பகடியைத் தேடிச் சலிக்க வேண்டியிருக்கிறது. கவிதைகளில் நகையை மேலும் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அடிக்கடி சொல்வது போல், “டீ கடைப் பெஞ்சில் அமர்ந்து பகடி பேசுவதும் கவிதைக்குள்ளிருந்து பகடி பேசுவதும் ஒன்றல்ல”. இந்தப் புரிதல் மிக முக்கியம்.

நமது எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம். “அன்றலர்ந்த தாமரையாக அல்லையென்றாலும் ஆறு நாள் முன்பலர்ந்த தாமரையாகவேனும்”. ‘நகை’ மிளிரவே செய்யும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கதம், முடியாத விஷயமாக இருக்கிறதா?”

லஷ்மி சரவணகுமார்

“தங்களைத் தீவிர இலக்கியவாதிகளாக நம்புகிறவர்களிடமும் அப்படியாகச் சொல்லிக்கொள்கிறவர்களிடமும் நகைச்சுவை என்பது மிகவும் மலினமான ஒன்று என்ற பார்வை இருக்கிறது. அதேவேளை, தீவிர இலக்கியவாதிகள் நம்புகிற, எழுதுகிற அங்கதம் மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஷோபாசக்தி, எழில்வரதன் என ஒரு சிலர் மட்டுமே அதில் விதிவிலக்காக இருக்கிறார்கள்.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

எழில்வரதன் மிகச்சிறந்த அங்கத எழுத்தாளர். அவரின் கதைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். ‘அங்கதம்’ என்றால் வெறுமனே கிச்சுகிச்சு மூட்டும் நகைச்சுவையாக மட்டுமல்லாமல், சக மனிதர்களின் குணங்களையும் மனங்களையும் சின்னச் சின்ன கோணல்களையும் பிசிறுகளையும் மிகச்சிறப்பாக எழுதியவர் அவர். அவர் வணிக எழுத்தாளராக மட்டுமே அறியப்பட்டதால், அவரைப் பற்றித் தீவிர எழுத்தாளர்கள் யாரும் பேசவில்லை.

இலக்கியத்துக்கு எல்லாமும் அவசியம். அதில் அங்கதம் மிகமுக்கியமானது. ஷேக்ஸ்பியரின் படைப்புகள் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு மிக முக்கியக் காரணமே, அவரின் படைப்புகளில் இருக்கும் அங்கத உணர்வுதான். இன்று உலகமே கொண்டாடும், மார்டன் நாவல்களில் முதல் நாவலாகக் கருதப்படும் ‘டான் குய்க்ஸாட்’ மாதிரியான ஓர் அங்கத நாவலை இன்றளவும் பார்க்கமுடியாது.

உலகம் முழுவதுமே அங்கதத்தை எழுதுவதில் எழுத்தாளர்கள் தீவிர ஆர்வம் காட்டிவருகிறார்கள். தமிழ் எழுத்தாளர் களுக்கு மட்டும் அங்கதம் வேண்டாத ஒரு பொருளாக இருக்கிறதா அல்லது முடியாத ஒரு விஷயமாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்று பெரும்பாலான வாசகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அங்கதமாக ஒரு கதை எழுதினால், ‘உங்களின் எழுத்துகள் முன்புபோல் இல்லையே’ என்கிறார்கள். அங்கதத்தோடு எழுதப்படுகிற கதைகள், வணிகக் கதைகளாக மாற்றப்பட்டுவிடுகின்றன. ஆனால், அப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன். மிகவும் சோகமான, இறுக்கமான மனநிலையை உருவாக்குகிற கதைகள்தான் தீவிர இலக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஆரோக்கியமான ஓர் இலக்கியத்துக்கு அங்கதம் மிக முக்கியம் என்றே கருதுகிறேன்.”

“நகைச்சுவைக்கு அரசியல் சூழல்தான் தடையாக இருக்கிறது!”

போகன் சங்கர்

“நகைச்சுவையாக எழுதப்படுவதற்குப் பின்னால் ஓர் அரசியல் எப்போதும் இருந்திருக்கிறது. முன்பெல்லாம் ஆண்-பெண் உறவுகள், குறிப்பிட்ட தொழில் சார்ந்த, சமுதாயம் சார்ந்த பகடிகள் எல்லாம் அதிகமாக வெளிவரும். தற்போது, அதற்கான சூழல் சினிமாவிலேயே குறைந்து வருகிறது. தற்போது நாம் அரசியல் நுண்ணுணர்வு மிகுந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். தற்போது, நாம் வாசிக்கும் ஒவ்வொரு பிரதியையுமே அரசியல் பிரதியாகத்தான் வாசிக்கிறோம். அதில் நகைச்சுவை என்பது, இருமுனைக் கத்தியாக மாறிவிடுவதற்கான அபாயம் இருக்கிறது. அது ஒரு சமூகத்தையோ கட்சியையோ அல்லது அரசாங்கத்தையோ புண்படுத்தும் ஒன்றாக மாறிவிடுகிறது. இலக்கியத்தில் நகைச்சுவைக்கான வெளி, தற்போது அதிகமிருந்தாலும் இந்த அரசியல் சூழல்தான் அதற்குத் தடையாக இருக்கிறது. ஒருவித அச்சத்தையும் கொடுக்கிறது. அது தவிர, இணையதளங்களில் எல்லா விஷயங்களுமே பகடியாக மாற்றப் படுவதால், தீவிர இலக்கியத்தில் ஆழமான நகைச்சுவைக்கு இடமில்லாமல் போய்விட்டது.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

பொதுவாகத் தமிழ் இலக்கியவாதிகள், இயல்பாகவே ஒரு துயரமான, நெருக்கடியான வாழ்க்கை உடையவர்கள். அவர்க ளிடமிருந்து நகைச்சுவையாக ஒரு படைப்பு வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. ‘பேயோன்’ போன்ற ஒருசிலர் நன்றாக எழுதிவருகிறார்கள். ஆனால், நகைச் சுவையாக எழுதுவதாலேயே, அவரைத் தீவிர இலக்கியவாதியாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

தீவிரத் தமிழ் இலக்கியம், சினிமாவை வெறுக்கக்கூடிய ஓர் இடத்தில்தான் இன்றும்கூட இருக்கிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை கொண்டாடப்படுவதாலேயே, தீவிரத் தமிழ் இலக்கியத்தில் அது கொண்டாடப் படுவதில்லை. ஆனால், மலையாளத்தில் அப்படி இல்லை.

சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள இடைவெளிதான், தீவிர இலக்கியத்துக்கும் நகைச்சுவைக்குமான இடைவெளியாக இருக்கிறது. ஆனால், நகைச்சுவை மிகப் பெரிய ஆயுதம் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. நூறு பக்கம் எழுதவேண்டியதை, கூர்மையான நகைச்சுவையின் மூலமான, வெகு எளிதாகக் கடத்திவிடமுடியும். ஜேம்ஸ் தர்பர், ஆஸ்கார் வைல்டு ஆகியோரை நாம் உதாரணமாகச் சொல்லமுடியும். ஆனால், நகைச்சுவைப் பாரம்பர்யத்தைக்கொண்ட நம் மொழியில், அது தேய்ந்து இறுதிக்குப் போய்விட்டது என்றுதான் சொல்லமுடியும்.’’

“வாழ்வினுள்ளிருக்கின்ற பகடிகளை எழுத்தாக்க வேண்டும்!”

பாக்கியம் சங்கர்

“வாழ்க்கையில் நாம் பட்ட மிகப்பெரும் துயரத்தை, சில வருடங்கள் கழித்துச் சொல்லும்போது, நகைச்சுவையாகச் சிரித்துக்கொண்டே சொல்வோம். வாழ்க்கையே ஓர் அவல நகைச்சுவைதான். நகைச்சுவை இல்லாத இடமே கிடையாது. சாவு வீடும்கூட அதற்கு விதிவிலக்கல்ல. சாவு வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து ஒரு டீ குடிப்பதிலிருந்து நகைச்சுவை ஆரம்பித்துவிடுகிறது; சிரிப்பதற்கான வாய்ப்பு உருவாகிவிடுகிறது. சிரிப்பதற்காகத் தனியாக எழுதவேண்டிய அவசியமில்லை. அதேசமயம் வாழ்வின் நுட்பமான விஷயங்களை நகைச்சுவையாக் கொண்டுவருவதும் இலக்கியம்தான்.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

என்னுடைய கதைகளில்கூட அப்படிப் பல சம்பவங்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இறந்துபோன சேட்டின் வயிற்றில், அவருக்கு மிகவும் பிடித்தமான பாஸந்தியை வைத்துத் தைத்து, அவரைச் சந்தோசமாக வழியனுப்பிய மனிதன் உண்டு. நமக்குத்தான் அது நகைச்சுவையான சம்பவம். அவனைப் பொறுத்தவரை அது அவனின் அன்றாட வாழ்க்கை. அதைப் பதிவுசெய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. கி.ராவின் எழுத்துகளில் அவ்வளவு நகைச்சுவை இருக்கும். அதற்காக, நாம் அவரை நகைச்சுவை எழுத்தாளர் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மண்ணைப் பற்றி மனிதர்களைப் பற்றி எழுதும்போது, கண்டிப்பாக நகைச்சுவையான சம்பவங்கள் வந்தே தீரும். போலியாக நகைச்சுவை உணர்வை உற்பத்தி செய்யும்போதுதான் அது ரசிக்கும்படி இருக்காது.

நான் என் எழுத்துகளில் நகைச்சுவையை வேண்டுமென்றே உற்பத்தி செய்வதில்லை. ஆனால், ‘இலக்கியத்தில், நகைச்சுவையின் வாயிலாக வாழ்வின் தீரா சோகங்களைக்கூட கடத்திவிட முடியும். சார்லி சாப்ளினின் படங்களை வெறும் நகைச்சுவையான படங்களாக மட்டும் கடந்துவிட முடியாது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட சோகத்துக்கும் பிறகு, ஒரு சின்ன புன்னகை மிச்சமிருக்கும்.

சக மனிதனின் வாழ்வுக்குள் இருக்கின்ற பகடிகளை எழுத்தாகக் கொண்டுவர வேண்டும். போகிற போக்கில் அதை மக்களிடம் கடத்தவேண்டும். அப்படிச் செய்தவர்களாக ஜெயகாந்தன்,

ஜி.நாகராஜன், அசோகமித்ரன் எனப் பலரை நாம் உதாரணமாகச் சொல்லமுடியும். தீவிர இலக்கியத்தில் நகைச்சுவையைக் கொண்டுவருவது சிரமமான காரியம்தான். ஆனால், அதைச் சரியாகக் கையாண்டு எழுத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் அது மிகச்சிறந்த இலக்கியமாக இருக்கும். தற்போது அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.”

“வாழ்க்கை பெரிதும் என்ன உணர்வைக் கொடுக்கிறதோ, அதைத்தான் எழுத முடிகிறது!”

கணேசகுமாரன்

“நகைச்சுவையோடு எழுதக்கூடிய சமூகச் சூழல் தற்போது இல்லை. மக்கள் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது நகைச்சுவையோடு ஒரு விஷயத்தை எழுதினால், சமூகப் பொறுப்பற்ற வர்களாகவே பார்க்கப்படுவோம். அதனால், இப்போது ஓர் எழுத்தாளன் எதை எழுதவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்போதே, அதை எப்படி எழுதவேண்டும் என்பதையும் தீர்மானித்து விடுகிறான்.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தை நகைச்சுவையோடு எழுதலாம். ஆனால், படிப்பவர்களுக்கும் அந்த உணர்வு வரவேண்டும்; சிரிப்பு வரவேண்டும். என்னுடைய காலத்தில் லஷ்மி சரவணகுமார், நகைச்சுவை கலந்து எழுதக்கூடியவர். பெரும்பாலும் அது அவலநகைச்சுவையாக இருக்கும். எழில்வரதன் மிகவும் நகைச்சுவையாக எழுதக்கூடியவர். அதேசமயம் அவரின் கதைகள் மிகவும் நெகிழ்ச்சியோடு முடியக்கூடியவை.

என்னுடைய கதைகள் மட்டுமல்லாது, தற்போது எழுதும் பல எழுத்தாளர்களின் கதைகளில் துன்பியல் நிகழ்வுகள்தான் அதிகமாக இருக்கின்றன. அதற்குக் காரணம், வாழ்க்கை பெரும்பாலும் நமக்கு என்ன உணர்வைக் கொடுக்கிறதோ, அதைத்தான் பதிவுசெய்ய முடிகிறது. வாழ்வில் சந்தோஷமான சில விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் அவை படைப்புகளா வதில்லை.”

“துன்பம் வரும் வேளையிலே ஹஹ்ஹஹ்ஹா!”

ஜான் சுந்தர்

“இலக்கியத்தில் மட்டுமல்ல. வாழ்வியல் பரப்பில் காணக்கிடைக்கிறவற்றில் கணிசமானவை நகைச்சுவைக் காட்சிகள்தாம். இலக்கணத்தில் தேடினால் தொல்காப்பியர், ‘நகை’ என்பதை மட்டுமே எள்ளல், இளமை, பேதமை, மடன் என்று நான்கு வகையாகப் பிரிக்கச் சொல்கிறார். அவலத்தின் மறுமுகமே நகைச்சுவை. வாட்ஸ் அப்பில் ‘சிரித்தே செத்துவிடுவீர்கள்’ என்று ஓடுகிற வீடியோக்களில் பலதும் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்கத் துயரங்கள்தானே? சாப்ளினுடைய ஷூக்கள் சிரிக்கவைப்பவைதான் சந்தேகமில்லை. அவை எங்கிருந்து வந்தன என்பது தெரிந்தால் சிரித்துக்கொண்டிருக்கிற முகம் உறைந்துபோகுமா இல்லையா? அப்புறம் காலம்... காலத்தில் சாயம் வெளுக்கக் கூடியவைதான் அவலமும் நகைப்பும் எல்லாமும். போலவே, ‘எப்படிப் பார்க்கிறோம்’ என்பதையும் பொறுத்ததுதான் நகைச்சுவை.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

நவீன இலக்கியத்துக்கும் நகைச்சுவைக்கும் ‘பெரிய இடைவெளி’ இருக்கிறது என என்னால் தலையாட்ட முடியவில்லை. வாசிப்பிலும் கேள்வியிலும் நானறிந்துகொண்ட வரையில்

அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, இசை, போகன் சங்கர், இளஞ்சேரல், வாமு.கோமு, கண்மணி குணசேகரன், சுகா என்று ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த வரிசையில் பின்னிருந்து முன்னே போனீர்கள் என்றால், வட்டார வழக்கில் இந்த ஆள்கள் செய்திருக்கும் அட்டூழியங்கள் எத்தனை தெரியுமா?

ஓர் எழுத்து என்ன சுவையைத் தரவேண்டும் என்று முடிவுசெய்ய வேண்டியது கருப்பொருளும் எழுதுபவரும்தானே? மேலும், காலம் கடந்து நிற்கிற நகைச்சுவை வடிவம் ஏதேனும் இருக்கிறதா எழுத்துருவில்?

இணையத்தில், கட்டுரைகளில் கிச்சுக்கிச்சு, நகைச்சுவை, அங்கதம் இப்படிப் படிநிலைகள்கொண்ட எழுத்துகளைப் பார்க்கவே செய்கிறேன். ஆனால் முழுப்படைப்பாக இருக்கிறதா? என்கிற கேள்வி எனக்கும் உண்டு. எல்லா எழுத்துகளும் (எழுத்தாளர்களும்கூட) மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டே பேசவேண்டியதில்லை என்கிற கருத்திலும் உடன்பாடு உண்டு.

சினிமா, மாவூடகம் என்பதால் சினிமாவில் மட்டும் நகைச்சுவை அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கலை வடிவங்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஊடகங்களும் அவலங்களுக்குத்தானே பறக்கின்றன? கேமராக்கள் காத்துக் கொண்டிருப்பது ஒரு கேலிக்கூத்துக்குத் தானே? அரசியல் கலை, நாளொரு நகைச்சுவையை கேலிச்சித்திரக் காரருக்கும், மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கும் தந்துகொண்டுதானே இருக்கிறது. ‘சர்வாதிகாரி சரிந்தான்’ என்று நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் பட்டத்துயானை காரியக் கோமாளிக்கு மாலையைச் சூட்டிவிடுகிறது. ‘துன்பம் வரும் வேளையிலே ஹஹ்ஹஹ்ஹா’ என்பதுதான் நமது தாரக மந்திரம். தப்பிக்கும் வழியும் அதுதான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism