Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - புதிய பகுதி

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம்: கண்மணி குணசேகரன் - பெரிய மனுசனை தொலைத்த வாழ்வு

எதுவும் கடந்து போகும்! - புதிய பகுதி

இந்த வாரம்: கண்மணி குணசேகரன் - பெரிய மனுசனை தொலைத்த வாழ்வு

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்
கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

பத்திருபது வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஊரில் ஒரு பெரிய மனுசன் இருப்பார். பட்டாப்பட்டி அண்டராயர் தெரிய வெள்ளை வேட்டியும் தோளில் சரிகை போட்ட நெடும் துண்டுமாய் வீரனார் கணக்காய் மீசையை உருவிவிட்டுக்கொண்டெல்லாம் இருக்கமாட்டார். காரியங்கவையில் ஏதோ கூப்பிட்டார்களென வந்தவராய் ஒப்புக்கு ஒரு மூலையில் குந்தியிருப்பார். இடுப்பில் கோவணத்தை மறைத்து பொட்டைமண் காவியேறிய ஒரு சுருங்கிப்போன வேட்டி. மறந்தும் மேலுக்கு சட்டை போட்டிருக்க மாட்டார். முக்கியமாய் முகச்சவரமெல்லாம் ஊர்சேதிக்குப் போனால்தான் என்பதாய் கோரைக்கரம்பாய் மண்டியிருக்கும். ‘பொண்ணு அழைக்க, தண்ணி ஊத்த, காதுகுத்த’ எனக் குடும்ப நிகழ்வுகளில் பத்தோடு பதினொன்றாம்பேராய் வந்து குந்தியிருக்கும் அவர், நேரம் தாண்டுகிறபோது மட்டும் ஒரு சத்தம் போடுவார். “எலேய் பெரியவன, நேரம் கணதாண்டுது பாரு. இன்னம் என்னாடா சாங்கம் வளத்திக்கிட்டு.”

இடத்திற்குத் தகுந்தபடி “கெடாவ வெட்டுங்க. பூசய குடுங்க. பொண்ண வரச்சொல்லுங்க. காத குத்துங்க.” எகிறும் குரலில் மொத்தக் கும்பலும் திரும்பிப் பார்க்கும். தலமானாய் வரிசைத் தட்டுகளின் முன்னால் குந்தியிருக்கும் ‘பெரியவன்’ எனப் பேர்பட்ட தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது மெம்பர், முக்கியஸ்தரிடமிருந்து “தே ஆச்சி பெரிப்பா.” மறுமொழியாய் பணிவு பதில் வரும். அதுவரை நத்தையாய் நகர்ந்துகொண்டிருந்த நிகழ்வு விசுக்கென்று ஒரு வேகம் பிடிக்கும். சவுக்கு முனையைச் சொடுக்கியது போன்று சரசரவென்று நிறை உச்சநேரத்திலேயே நல்லபடியாய் நிகழ்ந்தேறும்.

பந்தியில் குந்தியிருக்கும்போது “இப்பிடி ரவ கரண்டிய காட்டிட்டுப் போடா சாமி” எனப் பாயச வாளிக்காரனிடம் கெஞ்சாத குறையாய்ச் சொல்வது தவிர மற்றபடி எந்தவொரு எதிர்பார்ப்பும் அவரிடம் இருக்காது. சாப்பிட்ட களைப்பில் யாராவது கிட்டக்க வந்து குந்தினால் “அந்தக் காலத்துல எல்லாம்…” எனப் பழங்கதையைச் சொல்ல ஆசைப்படுவார். இல்லையென்றால் “எல்லாம் அந்த அய்யனார் ஒங்கள ஒன்னும்லெட்சமா வைப்பான். நாங் கௌம்பறன்” வெற்றிலை பாக்குப்பையைச் சுருட்டி இடுப்பில் செருகியபடி அவர்பாட்டுக்குப் போய்க்கொண்டிருப்பார்.

மழையோகம் பார்த்துச் சொல்வார். வெரப்புக்கு, அறுப்புக்கு நாள் சொல்லுவார். உச்சி வெயிலைப் பார்த்து மணியைக் கணிப்பார். நாமாகப் போய் கிட்டக்கக் குந்தி பூராயணமாக நடந்ததைச் சொன்னால் எந்தவித சிக்கலுக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். அவரின் எந்தத் தீர்வும் ஒரு குடும்பத்தின் விளக்கைக் கொளுத்தி வைத்ததாகத்தான் இருக்குமே தவிர, எந்த விளக்கையும் அணைத்ததாக இருக்காது.

எதுவும் கடந்து போகும்! - புதிய பகுதி

இத்தனைக்கும் அவர் மருமகளிடம் சாண் வயித்துக்கு சின்னப்பட்டுக்கொண்டு கிடப்பார். வயதான கிழத்தியிடம் “இன்னம் ஒவமான கத சொல்லிக்கிட்டு பொம்னேட்டி சம்பாரிக்கத்தான் இப்பிடி பெரிய வேஷம் போட்டுக்கிட்டு நிக்கிற.” பொய்யாய் கேழ்வி வாங்கிக்கொண்டு கிடப்பார். சமயத்தில் மகன்களிடம் அடி, உதைகூட வாங்குவார். ஆனபோதும் வெளியிடங்களில் அதன் சூடு சற்றும் வெளித் தெரிந்துவிடாதபடிக்கு அவரது நடவடிக்கைகள் இருக்கும்.

நெடுங்காலத்திய கவுடுசூது அற்ற உழைப்பில் கொஞ்சமாய் முன்னுக்கு வந்த அனுபவங்கள், நெறி தவறா நாணயம் எல்லாமும் அந்தப் பெரிய மனுசத்தன்மையைத் தானாகக் கொணர்ந்து அவர்மீது கவிய வைத்திருக்கும். கூடாத குடும்பங்கள்கூட அவரால் கூடியிருக்கும். ஓடாத தேர்கூட கோயில் ராசபாட்டையில் ஓடியிருக்கும். கோர்ட்டு படியேறியவர்களைக்கூட ‘நீரடிச்சா நீர் வெலகாது. பேசுனா தீராதது ஒன்னும் இல்லடா. வாங்கடா பேசிப் பாப்பும்.’ இட்டுக்கொண்டுபோயி ராசியாக்கியிருப்பார். ஆனால் அதேசமயம் அவர் ஒருபோதும் ‘தலமான் பட்டம்’ கட்டிக்கொள்ள ஆசைப்படவே மாட்டார்.

ஊருக்கு அல்லது தெருவுக்கு ஒருவர் என அந்தப் பெரிய மனுசர் இருக்கறவரைக்கும் ஊர் ஊராக இருந்தது. கோயில், கூத்து என எந்தப் பொது நிகழ்வும் சண்டை, சச்சரவில்லாமல் நடந்தது.

‘எல்லாம் எங்குளுக்குத் தெரியும்’ எனப் புதிதாய்க் கிளம்பிய கீழ்ங்கன்னுகள் முதலில் இந்தப் பெரிய மனுசர்களை ஓரங்கட்டுவதில்தான் மும்முரம் காட்டின. பெரிய மனுசர்களைச் சுருக்கி ‘பெருசு’ ஆக்கியதிலிருந்து தொடங்கிய அந்த இடைவெளி, “ஆமா பெரிய இவுரு வந்துட்டார்டா நாயம் பொளக்க” என்பதில் வந்து நின்றது. ‘யார் சொல்லி யார்ரா கேட்கறது.’ வாக்குத்தத்தங்கள், அடிதடிகள், வழக்குகள், வாய்தாக்கள், நடந்துகொண்டிருக்கிறது காலம்.

இப்போது ஊர்த்திருவிழா என்றாலே முதலில் காவல்நிலையம் போய் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். “எல்லாம் காலாயாங்குட்டி பயலுவோ சார். நீங்க வந்து செத்த கிட்ட இருந்து நடத்திக்குடுங்க. மேல்கொண்டத ஒங்குளுக்கு நாங்க சரி பண்ணிக்கறம்.”

ஊரில் அம்மனுக்கு சாகை ஊற்றி ராத்திரிக்கி சாமி ஊர்வலம். மூன்று கரகாட்ட சுந்தரிகளின் குத்தாட்டங்களோடு கோயில் திடலிலிருந்து முதல் நிகழ்வு தொடங்குகிறது. புழுதி பறக்கும் களரி முனையில் குந்தியிருந்த நல்லுவன் மகன் கரகாட்டக்காரிகள் கிட்டக்க வரும்போதெல்லாம் ஓட்டாஞ்சில்லிகளால் கூர்மார்களைக் குறிவைத்து கெடாசுகிறான். பொறுத்துப் பார்த்துவிட்டு கிட்ட வந்தே சொல்கிறாள் ஆட்டக்காரிச்சி. “வேணுமின்னா சொல்றா தம்பி. எதுக்கு கல்லவுட்டுக் கெடாசிக்கிட்டு? அப்பிடி தனியா வா. அவுத்துக் காட்றன்.”

“அந்தப் பய அப்பிடித்தான்.” எவரும் பொருட்படுத்தவில்லை. பின்னுக்கு நின்றிருந்த நான்தான் அவனைச் சத்தம் போட்டேன். “டேய் பெசா இருடா.”

எடுத்துக்கெடாவிப் பேசுகிறான். “நீங்கல்லாம் எதுக்கு அண்ண இங்க வர்றிங்க. மொதல்ல வூட்டுக்குப் போங்க…”

“பெசாம இருடான்னா. என்ன எதுக்கு இங்க வந்தங்கற…”

“ஆமா அண்ண. நீங்கல்லாம் இங்க வரக்கூடாது. இதுலாம் அறியாப் பசங்க இடம். அப்பிடி இப்பிடிதான் இருக்கும். இதல்லாம் கண்டுக்கக் கூடாது. வூட்டுக்குப் போங்க.” முளைத்து இரண்டு இலைதான் வந்திருக்கும். தலைகால் புரியாத போதையில் பேசுகிறது புதிய தலைமுறை.

பெரியவர்களைத் தலமான்களாய் முன்னிறுத்தி நான் நடத்திய ஊர்த் திருவிழாக்கள், பொதுக்காரியங்களை மனசுக்குள் நினைத்தபடி இப்போதெல்லாம் “இந்தாப்பா எங்க வூட்டு வரி. ஏங் காலம்லாம் இப்ப எடுக்குல. பாத்து நீங்களே செய்யிங்க.” இடைவெளிகளை நானாகவே உருவாக்கிக்கொள்கிறேன்.

தெருவில் விளையாடுவதை விடவும் கோயில்திடலுக்குப் போய் குதித்தாடுவதுதான் மனதிற்குப் பெரும் மகிழ்ச்சி. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கூழ்ப்பானையை உருட்டிவிட்டு ஒரே ஓட்டம்தான் கோயில்பக்கம். கொல்லையிலிருந்து பொழுதுசாய வரும் அம்மா, வீட்டில் இல்லாததைப் பார்த்து தெருவுப்பக்கம் திரும்பிநின்று பெருங்குரலில் கூப்பிடும். “ஏ… கொணசேகரு…”

மூன்று தெருக்களையும், மரமட்டைகளையும் கடந்து கோயிலில் வந்து கல்லுக்குண்டாய் விழும் அம்மாவின் கனத்த குரல். கூட்டாளிகள் சொல்வார்கள். “டேய், ஒங்க அம்மா கூப்புடுறாங்கடா…”

“தே வர்றன் எம்மோவ்...” ஊரைக்கிழிக்கிற சத்தத்தைப் போட்டபடி ஓடி வருவேன்.

“பள்ளிக்கூடம் வுட்டதும் கொல்லிக்கி வராம. குதியாளம் போட கோயிலுப்பக்கம் கௌம்பிட்டியா…” ஊரே ஊமையானதாய் உற்றுக் கேட்கும் எங்கள் உரையாடலை.

பழைய பழக்கத்தில் இப்போது கொஞ்சம் சத்தமாகத் தோட்டத்திலிருக்கும் இளமதியைக் கூப்பிட்டுவிட்டால் போச்சு. “எதுக்குப்பா கத்தற. இங்கதான இருக்கறன்.” மூஞ்சைக் காட்டுகிறான்.

எதுவும் கடந்து போகும்! - புதிய பகுதி

“நா பொறுமையாதான கூப்பிட்டன். ஓங் காதுல...” சொல்லலாமெனத் தான் நினைப்பேன். கேட்டால் தலைவி சண்டைக்கு வரக்கூடும். “அப்பறம் அவஞ்சொல்றமாதிரி எதுக்கு அவட்டம் அடிச்சிக்கிறமாதிரி அடிச்சிக்கிற.” வேறு வழியில்லை. இளம் தலைமுறைகளிடம் மௌனமாய்க் கடந்துபோகக் கற்றுக்கொள்கிறேன்.

அம்மா வௌக்கமாத்தால் முதுகில் வைத்தபோதுகூட செத்தநேரம் அழுதுவிட்டு பிறகு போய் முதல்வேளையாய் கோபம் தீர கூழை, சோத்தைப் போட்டுத் தின்றுதான் சமாதானமாவேன். மீறியும் ரொம்ப கடுமையான விசாரிப்பு என்றால் மட்டும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் கிடப்பேன். அம்மா மட்டும் வாயால் சொல்லாமல் ‘வந்து சாப்பிடு’ என்கிறமாதிரி பார்வையைத் திருப்பும். அப்பா மோசம். “எல்லாம் பசியெடுத்தா வந்து சாப்புடுவான். நீ ஊத்தி மூடிட்டுப் போய் மொடங்கு” அதட்டிவிட்டுப்போய் படுத்துக்கொள்வார். கிடந்துகிடந்து பார்த்துவிட்டு பாஞ்சிராத்திரிக்கு தண்ணி ஊத்தின சோற்றைப் பிழிந்துபோட்டுத் தின்று சாந்தமாகிக்கொள்வேன்.

இப்போதெல்லாம் மொடுக்கென்று வாயைத் திறக்க முடியவில்லை. மோடி வைத்துக்கொண்டு சாப்பிடாமல் குந்திக்கொண்டுவிடுகின்றன இளம் தலைமுறைகள். நாலு நாள்கள் பட்டினியாய்க் கிடந்தாலும் இறங்கி வர மறுக்கிறார்கள். நாமாகக் கெஞ்சிக் கூத்தாடினால்தான் உண்ணாவிரதம் முடிவுக்கு வருகிறது. நாமும் இறங்கவில்லையென்றால் எக்குத்தப்பாய் முடிவெடுத்துவிடுகிறார்கள். மெய்தான், இடைவெளிகளை நாமே புரிந்து நடந்துகொள்வதுதான் நமக்குச் சிறப்பு.

கலியபெருமாள் அப்பா எழுபது வயதில் திகைத்துப்போய் நிற்கிறார். முன்பெல்லாம் கொல்லையில் ஒரு வாசல் அளவுக்குக் களைவெட்டு கிடக்கிறமாதிரியிருந்தால்கூட ‘பாவம் இதுக்கோசரமா ஒரு குடியானவன நாளைக்கி தனியா ரெண்டு ஆளு வைக்க வுடறது. ஆளுக்கு ஒரு கை மெனைய சேத்துக் கொத்துங்க.’ தாங்களாகவே எட்டி கொத்தி வேலையை முடிப்பார்கள். அறுப்பு நடவு எல்லாமும் இப்படியான அனுசரணை புரிதலில்தான் ஓடியது அந்தக் காலம்.

இப்போது புதிய தலைமுறைப் பெண்கள் வாசல் அளவுக்குக் குறைவாக மெனை கிடந்தால்கூட அப்படியே வேலையை அரக்கி கூடுதலாய்க் கிடக்கச் செய்து “வெய்ய ஏறிப்போச்சிங்க. இதுக்குமேல எங்க வெட்டறது. நாளைக்கி ரெண்டு ஆளு வச்சி வெட்டிக்குங்க.” பத்தரை பஸ் வந்தாலே களைக்கொட்டை சுரண்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சூழலைப் புரிந்துகொண்டு கலியரே சொல்லிவிடுகிறார். “ஒரு ஆள் கூலிய சேத்துக் குடுக்கறன். கையோட கையா கொத்திட்டிப் போங்க.” கூடுதல் கூலி என்றதும் வெயிலுக்கு இரக்க குணம் வந்துவிடுகிறது. தலைமுறைகளின் கறார்களில் மலைத்துப்போகிறார் கலியபெருமாள். ஆம்பளை ஆட்களும் இப்படியேதான், அரக்கி ரேட்டுப் பேசுகிறார்கள்.

“இந்த மண்ணுல வுழுந்து ஒழ பறிச்சிதான் ஒங்களலாம் படிக்கவைச்சம். வளத்து ஆளாக்கினோம். இன்னைக்கி வேலைக்கி பூட்டிங்கங்கறதுக்காக அப்பிடியே கொல்லிவோலாம் கெடந்தாப் போவுதுன்னா என்னா அர்த்தம்” மனம் பதைக்கிறார்கள் மண் பாலகர்கள்.

“கொண்டாந்து குடுக்கற காசிக்கி வெளையிலன்னாலும் பரவாயில்ல. எங்கள திரும்பவும் இந்த மண்ணுல மடக்கிப்போட்டு எங்க எலும்ப முறிக்க வைக்க வேணாம் வுட்டுடுங்கப்பா” மகன்கள் மறுதலிக்கிறார்கள்.

தலைமுறைகளின் இடைவெளி உரையாடலை அசகுலையாது பார்த்துக்கொண்டு குந்தியிருக்கிறார் வயக்காட்டு மூலையில் தோண்டிகுலத்து அய்யனார். அவருக்கிருக்கிற ஒரே ஆறுதல் நல்ல நாள், பெரிய நாள் என குறுக்கநெடுக்க அடிக்கடி இல்லையென்றாலும் பொங்கல் கரிநாளில் கையில் வாழைப்பழம் வெற்றிலையோடு புதிய தலைமுறைகள் வந்து மறக்காமல் கற்பூரம் ஏற்றிக் கும்பிடுவதில் அவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

பெரிய ஆம்பிளைகளைக் கண்டால் திண்ணையில் குந்தியிருக்கிற பெண்கள் பொட்டென்று இறங்கிவிடுவார்கள். “திண்ணைவோ இல்லன்னாலும் நாற்காலியை இழுத்துப்போட்டு சம்பமா குந்திக்கொள்கிறாளுவோ…” குறைப்பட்டுக்கொள்கிறார் தொண்ணையப் படையாட்சி.

“நாங்கதான் ஒங்களவுட்டா வேற கெதி இல்லன்னு கெடந்தம். இப்பத்திய படிச்சப் புள்ளிவோ, வேலைக்கிப் போறதுவோ. அப்பிடித்தான் ஒக்காந்துருக்கும். நாமதான் நெல்லா இருந்தா கண்ணுக்கு அழகுன்னு பாத்தும் பாக்காமப் போவுணும். இப்ப பாத்துட்டு ஏந்திரிச்சிட்டா மட்டும் அப்பிடியே கிரிகிடமா வந்துடப் போவுது ஒனக்கு” குப்பு ஆயாவின் பேச்சில் இடைவெளிகளை மேலும் அதிகரிக்கக்கூடதென்கிற அக்கறை அதிகம் தெரிகிறது.

‘அந்தி இழவு’ என்று ஒரு சடங்கு உண்டு. இறந்தவருக்குப் பதினாறாம் நாள் அல்லது பதினோராம் நாள் செய்யும் சடங்கு வரை மேற்படி வீட்டிற்கு தெருவு சனங்கள் அந்தி வேளையில் சென்று இறந்தவரின் அம்மாவை, மனைவியைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். தாமாக வலியச் சென்று, துயருற்று இருக்கும் பெண்டிரை அழவைத்து மன இறுக்கத்தைத் தளரவைப்பதுதான் நோக்கம். குறுகிய நாள்களில் இழப்பிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுப்பதற்கான ஒரு நிகழ்வு.

ஒப்பாரிகளைத் தொலைத்த புதிய தலைமுறைகள் அந்தி இழவுகளை முற்றிலும் மறந்தேபோய்விட்டன. புதைத்த, எரித்த அக்கணமே பிடியின் விரல்களை உருவிவிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பிவிடுகிறார்கள். இறப்புக் கொடுத்தவர்கள் தாமாகத்தான் இன்று மேலேறி வரவேண்டும். இடைவெளிகளை இட்டு நிரப்பப்படாமல் கிடக்கின்றன இன்றைய ஆதரவுகள்.

“பசங்க போவ வேணாம்னுதான் சொல்றானுவோ. ஏதோ எங்க காலத்த மேல் வரப்பு கீழ் வரப்புன்னு பாத்து ஓட்டிட்டம். ஒங்க காலத்துக்கு வேணுமின்னா நிறுத்திக்கிங்கன்னு சொல்லிட்டு வந்தன்…” சாவுக்கு மேளம் அடிக்க வந்த குயிலான் சொல்கிறார். அவர் சொல்வது போலவேதான் மூன்று தப்புகளும் ஒன்பது சட்டிகளுமாய் ஒரு தீர்மானம் வைத்து அடித்தால் ஊரே அமளிதுமளியானது ஒரு காலம். இன்று ஒரு தப்பும் இரண்டு சட்டிகளுமாய், அதுவும் இன்றைக்கோ நாளைக்கோ எனத் தட்டுத் தடுமாறி நிற்கின்றன முதுமைகள்.

நாளை அந்த மேளங்களும் இல்லாமல்போகும். அவசியம் இல்லாமல்தான் போகவேண்டும். ஆனால் இதைப் புறந்தள்ளுகிற இளம் தலைமுறைகள் வேறு வடிவில் உள்நுழைகின்றன. தப்பட்டை, நாட்டுப்புறக்கலை என்கிறார்கள். வானம் கிழிந்துவிடுமளவு போட்டு சாவு வீட்டு வாசலில் சாத்து சாத்து என சாத்துகிறார்கள். ‘தொடர்புக்கு அணுகவும்’ என மேளத்தின் தட்டுத்தாளில் வட்டமாய் எழுதி விளம்பரப்படுத்தவும் செய்கிறார்கள்.

எந்த சாவும் யாதொரு மேளச்சத்தமும் இல்லாமல் மௌனமாகப் பயணிக்க வேண்டுமென்பதுதான் இளம் தலைமுறைகளுடைய இடைவெளிகளின் இலக்காக இருக்க வேண்டும்.

- இடைவெளி இணைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism