Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 18 - தேவை பெற்றோரின் விடுதலை!

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் சமூக செயற்பாட்டாளர் ஓவியா, ஓவியங்கள்: நீலன்

எதுவும் கடந்து போகும்! - 18 - தேவை பெற்றோரின் விடுதலை!

இந்த வாரம் சமூக செயற்பாட்டாளர் ஓவியா, ஓவியங்கள்: நீலன்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்
ஓவியா
ஓவியா

முதியோருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்படும் முரண்களை மட்டுமே தலைமுறை இடைவெளியாகக் கருத முடியாது. உண்மையில் தலைமுறை இடைவெளி என்பது அறிவியல்பூர்வமாகத் தவிர்க்க முடியாத நிகழ்வேயாகும். ‘ஒருவரின் வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கின்றது’ என்றார் காரல் மார்க்ஸ். வாழ்நிலைகள் மாறும்போது சிந்தனைகளும் மாறுவது இயற்கையின் விதி. ஆனால், ஒரு சமுதாயத்தின் மாந்தர்களிடையே போக்கில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்திக்க வேண்டிய கடமை முதியோர், இளையோர் என்று எல்லாத் தரப்பினருக்கும் இருக்கிறது. எனவேதான் அறுபதிலிருக்கும் நான் இதனை எழுத வேண்டியது கடமையாகிறது. நான் கடந்துபோன காலத்தின் குரலாய்ப் பேசவில்லை. நிகழ்காலத்தின் தேவையிலிருந்தே எழுதுகிறேன்.

நிச்சயமாக இந்தத் தலைமுறையினரிடையே நம்மைக் கவலைப்படுத்தக்கூடிய பல விஷயங்களும் நாளும் நம் முன் வந்துகொண்டே இருக்கின்றன. போன தலைமுறையினரிடமிருந்த தயக்கம், கூச்சம், அவநம்பிக்கை போன்ற பல தடைகளை இந்தத் தலைமுறை கடந்து நிற்கிறது என்பது நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்தான். ஆனால், அந்த ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் இவர்களைப் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்துவிட்டுப் போக முடியவில்லை. இன்று இளைஞர்களிடையே வளர்ந்திருக்கும் கல்வி, தனிமனித ஆளுமை, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பெருமிதமாகக் கருதுகிறோம். ஆனால், இவை போன தலைமுறையினரின் உழைப்பு என்பதே உண்மை. அதேபோல் இந்தத் தலைமுறையினர் என்னவிதமாகத் தங்கள் அடுத்த தலைமுறையினரை உருவாக்க இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பெரும்பான்மையான மக்களை மனதில் கொண்டே இதை எழுதுகிறேன். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் (பெண்ணுக்கு இந்த மரியாதை கிடையாது) என்ற முதுமொழி நமக்குண்டு. எனவே வயது கூடக் கூட பழகும் தன்மையில் வேறுபாடு வரவேண்டும் என்பது தெரியாத சமுதாயமல்ல நாம். பல குடும்பங்களில் மகனை ‘அவர்’ என்று விளிக்க பெற்றோர் இயல்பாகத் தயாராகிவிடுவது அன்றிலிருந்து நடந்துவருவதுதான். எனவே நாம் இப்போது முன்வைக்கும் விஷயங்கள் பிள்ளைகளை எப்போதும் தம் பிடிக்குள் வைத்திருக்க நினைக்கும் மனநிலையிலிருப்போர் சார்ந்து அல்ல. அதேபோல் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையிலிருக்கும் பெற்றோருக்கானது அல்ல. வெளிநாடுகளில் பணி செய்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பெற்றோருக்குமானதும் அல்ல. இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிற, இனிமேலும் இந்த மண்ணில் வாழப்போகிற எளிய மக்களைப் பற்றியது.

இது மின் ஊடகங்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் மற்றும் சமூக ஊடகங்களின் காலம். பெற்றோரின் கரங்களைவிட வலிமையானதாக இவற்றின் கரங்கள் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் என்னவாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல பெற்றோர்களால் கணிக்க இயலவுமில்லை. நேரமுமில்லை. ஒரு நபர் தனது நேரத்தை முழுமையாகக் கொடுத்து, எல்லா நேரமும் அருகிலிருந்து குழந்தையைக் கவனித்தாலன்றி அந்தக் குழந்தையின் மன உலகம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்று பெற்றோர் அறிய வாய்ப்புகள் மிகக் குறைவு.

இன்னொரு புறம் இன்றைய இளம் பெற்றோருக்கு இருக்கும் மனித உறவுகள் சார்ந்த மன முதிர்ச்சியும் மிகவும் கேள்விக்குரிய ஒன்றேயாகும். கொட்டிக் கிடக்கும் அறிவியல் சாதனங்களால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் உலகம் வேட்டையாடப்படுகிறது. இப்போது பகுத்தறிவாளர்களுக்கு, அறிவியல்தான் சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு என நம்புகின்ற எங்களுக்கு ஒரு மிகப் பெரிய கேள்வி வருகிறது. அறிவியல் எப்படி விரோதியாக முடியும்? உண்மையில் பிரச்னைக்குக் காரணம் அறிவியல் அல்ல, சமுதாய அமைப்புதான் இப்போதும் பிரச்னைக்குக் காரணம். இன்றைய குழந்தை பிறந்தவுடன் சந்திக்கும் முதல் பிரச்னை, தன் வயதொத்தவர்களின் துணையில்லாத தனிமைதான். பிறந்த குழந்தைக்கு இது பொருந்தாது எனினும் வளரும் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் வரையிலும் இதுவே குழந்தைகளின் முதல் பிரச்னை. அடுத்த சோதனை, பெரியவர்களுக்கும் முழுமையாகக் கவனம் செலுத்த நேரமில்லை. எனவே, குழந்தைகளைச் சுற்றிக் காணாமல் போய்விட்ட மனிதர்களின் இடத்தைச் சிறு வயதிலிருந்தே அலைபேசிகளே இட்டு நிரப்புகின்றன. அதில் அவை பெரும் வெற்றி பெற்றுவிடுவதுடன் அதன்பின் அக்குழந்தைகள் மனதில் மனிதர்களுக்கு இரண்டாம் இடமே கிடைக்கிறது.

இன்னொரு புறம் பெரும்பாலும் ஒரே குழந்தை என்றானபடியால், அதீத சிறப்புக் கவனத்துக்கு ஆளாகும் குழந்தைகள் இயல்பாகவே தம்மை மட்டுமே மையப்படுத்திச் சிந்திப்பவர்களாக வளர்கிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் சாதனங்களைத்தான் அறிவியல் முன்னேற்றம் தந்திருக்கிறதே தவிர, நம் மனநிலை அறிவியல் சார்ந்ததாக இல்லை. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதை உணர்த்தத் தவறுகின்ற மனநிலை எவ்வாறு அறிவியல் மனநிலையாக இருக்க இயலும்?

எதுவும் கடந்து போகும்! - 18 - தேவை பெற்றோரின் விடுதலை!

கல்வியிலும் ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் என்கின்ற முக்கோண உறவு இன்று பெரிதும் சேதாரத்துக்குள்ளாகி இருக்கிறது. எப்போது இவ்வளவு கறாராகப் பெற்றோர்களுக்குக் கதவுகளடைக்கும் பள்ளிக் கலாசாரம் தொடங்கியது எனத் தெரியவில்லை. ஆனால் இன்று நடப்பது எண்ணிப் பார்க்கவியலாத உரிமை மறுப்பு. இன்று பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டுமெனில் அதற்கெனத் தனித் திட்டமிடல் அவசியப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இது மிகவும் பொருந்தும். மேலும், பள்ளிகளை மாற்றிக்கொள்வது, இடையில் வேறு ஒரு பள்ளியில் சேருவதெல்லாம் மிகவும் கடினம். இவையெல்லாம் முன்பு இவ்வளவு பிரச்னைக்குரியதாக இல்லை. அதனால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள்மீது ஒரு கூட்டுப் பொறுப்பு இருந்தது. இன்று அது இல்லை. மாணவர்களின் பள்ளி உலகத்துக்குள் பெற்றோரின் இடம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. பணம் கட்ட மட்டும் அவர்கள் வேண்டும், அவ்வளவுதான்.

இன்று மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி வளாகங்களில் முதல் இடங்கள் என்று மதிக்கத் தக்க இடங்களில் தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களைத் தவிர மற்ற பலரின் கற்றல் திறன் மற்றும் பணியாற்றும் திறன் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் குறித்துச் சொல்லவே முடியவில்லை. தொழில் சார்ந்த படிப்புகளான மருத்துவம், இன்ஜினீயரிங், ஆடிட்டிங், ஊடகத்துறை போன்றவை தவிர்த்து பிற படிப்பு முடிக்கும் மாணவர்களுக்குப் பணித்திறன் மிக மோசமான அளவில் கீழே இருக்கிறது. ஆனால், இவர்களில் பலர் தங்கள் வாழ்வில் ஐந்து அல்லது ஆறு வருடங்களை இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயாராவதற்காகச் செலவிடுகிறார்கள். சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் என்பவை நியாயப்படி அதுவரை அவர்கள் படித்ததிலிருந்து சோதனைக் கேள்விகள் வைத்துத் தேர்வு செய்வதாகவே இருக்க வேண்டும். பாடத்திட்டம் என்னவோ அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகு குறைந்தது இரண்டு வருடங்களாவது பணம் கட்டித் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றால்தான் தேர்வாக முடியும் என்று சொல்கிறார்கள். அதுவும் வேறு வேலைக்குப் போய்க்கொண்டு படிக்கவெல்லாம் முடியாது. முழு நேரம் வீட்டிலிருந்து பயிற்சி பெற வேண்டும். நான்காயிரம் பணியிடங்கள் இருந்தால் நாற்பது லட்சம் பேர் இப்படி உட்கார்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பல தேர்வுகள் இப்படித்தான் இருக்கின்றன. முப்பது வயது வரை இளைஞர்கள் படிக்கிறேன் என்றிருப்பதையும் எழுபது வயது பெற்றோர் உழைத்துக்கொண்டிருப்பதையும்கூடக் காண முடிகிறது.

சரி. இவ்வளவு சுமைகளைப் பெற்றோர் ஏன் தாங்குகிறார்கள்? பாசத்தினால் மட்டும்தானா! பிள்ளைகளைத் தங்கள் நீட்சியாகப் பெற்றோர் பார்க்கிறார்கள். அவர்களும் தாங்களும் ஒன்று என நினைக்கிறார்கள். சமுதாய அமைப்பில் முதுமையிலிருந்தும் நோயிலிருந்தும் தங்களைப் பாதுகாக்கும் ஒரே சக்தியாக அவர்களை மட்டும்தான் நினைக்கிறார்கள். அதெல்லாம் அவர்கள் நினைத்தபடி நடக்குமா என்பது வேறு விஷயம். ஆனால், மீண்டும் மீண்டும் நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அதுதான் சமுதாய அமைப்பு. தனிநபர்களைச் சாராமல் வாழ்வதற்கான ஒரு வெளியை, பாதுகாப்பைத் தருவதற்குத்தான் ஒரு கூட்டுச் சமுதாயம் நமக்குத் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட வெளிகளைத் தனி மனிதர்களுக்கு ஏற்படுத்தித் தருவதில் நாம் இன்னும் முழு வெற்றியடையவில்லை. ஐரோப்பியச் சமுதாயங்கள் நம்மைவிட மேம்பட்ட நிலையிலிருக்கின்றன. இப் பொறுப்புகளை அங்கு அரசுகள் எடுத்துக் கொள்கின்றன.

எதுவும் கடந்து போகும்! - 18 - தேவை பெற்றோரின் விடுதலை!

உண்மையில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் எழும் முரண்பாட்டின் மையப்புள்ளிக்கு யாரும் வருவதேயில்லை. பிள்ளைகளின் பரிபூரண சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அதேவேளையில், பெற்றோரின் முதுகெலும்புகள் வளைந்து தொங்கிக்கொண்டிருப்பதை நாம் ஏன் காணத் தவறுகிறோம்? நம் நாட்டில் பிள்ளைகளின் கல்விக்காலம் மிக நீண்டதாக இருக்கிறது. நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசி இக்கட்டுரையைத் தொடங்கினோம். அவற்றை வைத்து விரைவில் தங்களுக்கான பொறுப்பை இளைஞர்கள் எடுத்துக்கொள்ளுமாறு ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கினாலே, முக்கால்வாசி முரண்பாடுகள் தீர்ந்துவிடும். தோளுக்கு மேல் வளர்ந்துவிடுவதால் மட்டுமல்ல, தோள் கொடுக்கத் தொடங்கினால்தான் தோழனாக முடியும். தோள்மேல் உட்கார்ந்திருப்பவன் தோழனாக முடியாது.

அடிப்படைக்கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு தளங்களிலும் நாம் மாற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சரியான சமுதாய அமைப்புகளை உருவாக்கி, நியாயமான, பொறுப்பான சம வாய்ப்புகளை வழங்கக்கூடிய வாழ்க்கையை இளைஞர்கள் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்தினாலே மனநிலை சார்ந்து வரக்கூடிய முரண்கள் இயல்பாகவே களையப்படும். சுமைகளேயில்லாத சுகபோகங்களும் கடமைகளேயில்லாத உரிமைகளும் ஒருபோதும் மனிதர்களை நல்வழிப்படுத்தாது.

பிள்ளைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையை ஏற்கெனவே நிறைய பேர் எழுதிவிட்டதால், நான் அந்தப் பக்கத்தைத் தவிர்த்திருக்கிறேனே தவிர, எனக்கு அதிலும் உடன்பாடில்லை என்று பொருளில்லை. நான் அடுத்த பக்கத்தை எழுதியிருக்கிறேன்... அவ்வளவுதான்!

- இடைவெளி இணைப்போம்