Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 19 - காத்திருப்பு கரைந்த காலம்!

காத்திருப்பு கரைந்த காலம்
பிரீமியம் ஸ்டோரி
காத்திருப்பு கரைந்த காலம்

இந்த வாரம் எழுத்தாளர் போகன் சங்கர்

எதுவும் கடந்து போகும்! - 19 - காத்திருப்பு கரைந்த காலம்!

இந்த வாரம் எழுத்தாளர் போகன் சங்கர்

Published:Updated:
காத்திருப்பு கரைந்த காலம்
பிரீமியம் ஸ்டோரி
காத்திருப்பு கரைந்த காலம்

‘இதுவும் கடந்து போகும்’ என்ற பிரபலமான வாக்கியத்துக்கு உண்மையில் ஆயுசு இரண்டாயிரம் ஆண்டுகளாவது இருக்கலாம். பெர்சியாவிலிருந்தோ யூத நாட்டுப்புறக் கதைகளிலிருந்தோ இதன் மூலம் வந்திருக்கலாம் என்கிறார்கள். வாழ்வின் நிலையாமையைச் சுட்டுகின்ற வரி. ‘எதுவும் கடந்துபோய்விடும்’ என்கிற வாக்கியமோ தொனி மாறுபாடுடையது. முன்னது எச்சரிப்பது. பின்னது, ரொம்ப அலட்டிக்கொள்ளவேண்டாம் என்பது. இது கிரேக்கத்தில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய stoicism என்ற தத்துவப் பார்வையின் சாயல் கொண்டது. ஒரு stoic எப்படி இருப்பார் என்பதை அதன் ஆசிரியர்களில் ஒருவரான Epictetus இவ்வாறு விவரிக்கிறார். ‘நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மகிழ்ச்சி. ஆபத்து சூழ்ந்த இடத்திலும் மகிழ்ச்சி. சாகும்போதும் மகிழ்ச்சி. நாடு கடத்தப்பட்டாலும் மகிழ்ச்சி. அவமானப்படுத்தப்பட்டாலும் மகிழ்ச்சி.’

போகன் சங்கர்
போகன் சங்கர்

எந்தவொரு தருணத்திலும் நிலைகுலையாத தன்மை மனிதர்கள் அடையவேண்டிய உயர்ந்த லட்சியமாக இவர்களால் கருதப்பட்டது. ரோம அரசர் மார்க்கஸ் ஆரேலியஸ் எழுதிய Meditations இதை விளக்கும் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாகும். அவர் சொல்கிறார், ‘காலை எழுந்ததும் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்... இன்று முழுவதும் நன்றியில்லாத, வன்முறை நிரம்பிய, துரோகம் செய்யக்கூடிய, பொறாமை மிகுந்த, தர்ம சிந்தனை இல்லாத நபர்களை நான் சந்திக்கப்போகிறேன். ஆனால் இது எதனாலும் நான் பாதிக்கப்படப்போவதில்லை. அவர்களை நான் வெறுக்கவும்போவதில்லை. ஏனெனில், நாமிந்த உலகத்திற்கு சேர்ந்து வேலை செய்யவே வந்திருக்கிறோம்.’

எனது ஐம்பது வருடச் சிறிய வாழ்வில் எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன் என்று யோசிக்கும்போது அது பிரதானமாக இரண்டு பகுதிகளாக, இரண்டு காலகட்டங்களாகப் பிரிந்திருப்பதாக உணர்கிறேன். முதல் பகுதியில் நான் எல்லாவற்றுக்காகவும் காத்திருந்தேன்... கல்விக்காக, வேலைக்காக, காதலுக்காக. நான் மட்டுமல்லாமல் என் தலைமுறையே எதற்காகவோ காத்துக்கொண்டிருந்தது. 1980-ல் கே.பாலசந்தர் இயக்கி வெளிவந்த படம் ‘வறுமையின் நிறம் சிவப்பு.’ அதில் எனக்கு நினைவில் இருக்கிற முக்கியமான காட்சி. அதில் டெல்லியில் குட்டிச்சுவரின் மீது கமல் மற்றும் அவரின் நண்பர்கள் அமர்ந்துகொண்டு ஏதாவது வேலை கிடைக்கிறதா என்று காத்துக்கொண்டிருப்பார்கள். எல்லோருமே பட்டதாரிகள். அந்தக் காலகட்டத்தின் பிரதான சித்திரம் இதுதான். வேலை என்றில்லை, ரேஷன், பேருந்து, ரயில், கடிதம், மின்சாரம், காதல், கல்யாணம் என்று எல்லாவற்றுக்கும் மனிதர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு காத்திருந்தாலும் எதுவும் வரும் என்று நிச்சயமும் கிடையாது.

இதே காலகட்டத்தில் வந்த பெங்காலித் திரைப்படம் ‘ஏக் தின் ப்ரதி தின்.’ (ஒரு நாள், மற்றொரு நாள்). மிருணாள் சென் இயக்கியது.எப்படியோ வேலை கிடைத்து வேலைக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு கல்கத்தா நகரவாசிப் பெண் ஒரு நாள் மாலை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவளுக்காக அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவளது வீடிருந்த வளவே உறங்காது காத்திருக்கிறது. அவள் மட்டும்தான் அந்தக் குடும்பத்தில் சாப்பாட்டுத் தட்டுக்கு ரொட்டியை இழுத்துக் கொண்டுவருகிற ஒரே நபர். அவளுக்கு என்ன நடந்திருக்கும்? ஒருவேளை விபத்து ஏதேனும் நிகழ்ந்திருக்குமா? மதக்கலவரங்களில் மாட்டிக்கொண்டிருப்பாளா? யாருடனும் ஓடிப்போயிருப்பாளோ? அறிந்துகொள்ள வழியே இல்லை. டெலிபோன் இணைப்புக்காக மந்திரிகளின் சிபாரிசு தேவைப்பட்ட காலகட்டம். லைசன்ஸ் ராஜ் என்று அழைக்கப்பட்ட காலகட்டம். நீங்கள் ஒரு சைக்கிள் வைத்திருக்க, ரேடியோ வைத்திருக்க, தொழில் தொடங்க... எல்லாவற்றுக்கும் அரசிடமிருந்து லைசன்ஸ் வாங்கவேண்டும்.

எதுவும் கடந்து போகும்! - 19 - காத்திருப்பு கரைந்த காலம்!

நகரங்கள் இப்படி என்றால் கிராமங்கள் இன்னும் மோசமாக இருந்தன. இதே காலகட்டத்தில் (1982) வெளிவந்த கலாப்ரியாவின் எட்டயபுரம் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதை ஒன்று இப்படிப் போகிறது...

குலுங்கிக் குலுங்கி/ கிராமத்துப் புழுதி / கிளப்பிப் போகும்/ டவுன் பஸ்ஸின்/ டிரைவருக்கு/ கை காமிக்கப்/ பிள்ளைகள் நழுவும்/ பாதையோரம்/ கும்மாளமிட்டு நிற்கும்.

ஒரு கிராமத்துக்குப் பேருந்து வருவது ஒரு அரிய நிகழ்வு. அதை ஓட்டி வருகிற டிரைவர் ஒரு மாயாஜாலக்காரர். வேறொரு உலகத்தின் பிரதிநிதி. தமிழ்நாட்டில் இப்படியெனில் அதே நேரம் அண்டை மாநிலமான கேரளத்தில் படகுக்காகக் காத்திருந்தார்கள். நீர் சூழ்ந்த பல கேரள கிராமங்கள் ஒரு பேருந்தைக்கூட அதுவரை கண்டிருக்கவில்லை. எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ நாவலில் நாயகன் சேதுமாதவன் படிப்பை முடித்துவிட்டு அவனது சிதிலமடைந்து விழுந்துகொண்டிருக்கும் வீட்டிலிருந்தபடி, வாரமொரு முறை வள்ளத்தில் கொண்டு வந்து தரப்படும் ஒரு கடிதத்தின் மூலமாக ஒரு வேலையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இப்படி கிராமங்களில் காலம் நகரங்களை விடவும் மோசமாக உறைந்து காற்றேயற்ற ஒரு கோடைக்கால மதியம் போல் உயிரற்று எதற்கோ காத்துக் கிடந்தது.

இந்தக் காலகட்டம் நக்சல்பாரி இயக்கங்களின் இரண்டாம் காலகட்டமுமாகும். சஞ்சய் காந்தி கொண்டுவந்த மாருதி காருக்கு புக் செய்து டெலிவரிக்குக் காத்திருந்தவர்களிடையே, ஒரு புரட்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் இந்தியா முழுக்க ஆங்காங்கே நடத்திய தாக்குதல்கள் பற்றிய செய்திகளால் செய்தித் தாள்கள் நிரம்பியிருந்தன.நான் என் வாழ்வில் முதல்முறையாகத் தொலைக்காட்சி எனும் சாதனத்தை ஏறக்குறைய ஒன்பது வயதில் பார்த்தேன். அன்று அது பெரும்பாலும் மாலைப்பொழுதுகளில் இந்தி மட்டுமே பேசிக்கொண்டிருந்தது. அல்லது ஆங்கிலம். தொலைக்காட்சிகளில் தமிழ் கேட்கவேண்டும் எனில், உங்கள் ஆண்டெனாவை இலங்கை நோக்கித் திருப்பவேண்டும். அவ்வப்போது காற்றில் கரைந்துபோய்விடும் சிக்னலால் புள்ளிமழை பெய்யும் திரையில் அரைகுறையாக நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘சூரியகாந்தி.’ முத்துராமனும் ஜெயலலிதாவும் நடித்தது.

ஜெயலலிதா பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எனக்கு மட்டுமல்லாமல் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. சோவியத் யூனியன் உடையும் என்று தமிழ் அறிவுஜீவிகள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஈழப்போராட்டம் தோல்வியடையும் என்றும் நாங்கள் நினைத்திருக்கவில்லை. காங்கிரஸ் தீனமடைந்து பா.ஜ.க அதன் இடத்தைப் பிடிக்கும் என்று யாருமே யூகிக்கமுடியவில்லை. தமிழ் சினிமாவில் இன்று பெரிய நடிகர்களாகக் கோலோச்சி வரும் விஜய், அஜித்தின் முதல் படங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள் என்று யாரும் யூகித்ததாகத் தெரியவில்லை. இதை சரித்திரத்தின் எதிர்பாராத தன்மை என்று கொள்ளலாமா, அல்லது பொதுவாக அறிவுப்புலத்தின் போதாமை என்று கொள்ளலாமா? தெரியவில்லை.

எதுவும் கடந்து போகும்! - 19 - காத்திருப்பு கரைந்த காலம்!

லைசன்ஸ் ராஜ் அதிகாரபூர்வமாக நரசிம்மராவின் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த பிரகடனத்துடன் 1990-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இந்தியர்களின் வாழ்க்கை வேறொரு தாளகதிக்கு மாறியது. டெலிபோன்கள் மொபைல் போன்களாக மாறின. மாறியபிறகு அவை ஒலிப்பதை நிறுத்தவே இல்லை. பிறகு அவை ஸ்மார்ட் போன்களாகவும் மாறின. இப்போது எதற்கும் காத்திருக்கவேண்டியதில்லை. கரண்ட் பில் அடைப்பதிலிருந்து காமப்பூர்த்தி வரை எல்லாவற்றையும் நமது போனிலேயே தடவித் தடவி அடைந்துவிடலாம்.

நான் முதல்முதலாக ஒரு கணினியை எனது பள்ளிக்கூடத்தில் பார்த்தேன். எனது பள்ளிப் பருவத்தில்தான் பள்ளிகளில் முதல்முறையாக கணினிப் பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, விவசாயிகள் அதிகம் நிறைந்த நாட்டுக்குக் கணினியின் வரவு ஒரு வரமல்ல; சாபம் என்று சொல்லப்பட்டது. விவசாய நிலங்களுக்குள் டிராக்டர்கள் முதல்முதலாக வந்தபோது காந்தியப் பொருளாதார அறிஞரான ஜே.சி.குமரப்பா ‘டிராக்டர்கள் சாணம் போடுமா?’ என்று கேட்ட கேள்வியை ஒத்த கேள்விகள் எழுந்தன. அது ஓரளவு உண்மைதான் என்று முதலில் தோன்றியது. விவசாயிகளின் மகன்கள் நிலங்களைக் கைவிட்டுவிட்டு கணினித் தொழில்நுட்பம் படிக்கப்போனார்கள். இப்போது நிறைய கணினித் துறையைச் சார்ந்தவர்கள் அந்த இயந்திர வாழ்க்கை பிடிக்காமல் விட்டுவிட்டு வந்து இயற்கை விவசாயம் செய்கிறார்கள்.

முதல் காலகட்டத்தில் consumers goods எனப்படும் வீட்டு உபயோகப்பொருள்களின் சந்தை மிகச்சிறியதாக இருந்தது. உதாரணத்துக்கு ஒருவர் பல் துலக்க விரும்பினால் கோல்கேட் என்ற சர்வதேச பிராண்ட் ஒன்றும் பயோரியா, விக்கோ வஜ்ரதந்தி போன்ற சில உள்ளூர் பிராண்டுகளின் பற்பொடிகளும் பற்பசைகளும் மட்டுமே இருந்தன. இன்று நூற்றுக்கணக்கான தெரிவுகள் உள்ளன. நீங்கள் வெளிநாட்டிலிருந்து கூட உங்களுக்குப் பிடித்ததைத் தருவித்துக் கொள்ளலாம். நீங்கள் ‘நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை’ குழுவினராயிருந்து உங்கள் வீட்டருகே வேப்பமரங்கள் இல்லை என்றாலோ, மரமேறத் தெரியாது என்றாலோ கூட கவலையில்லை.வேப்பங்குச்சிகளை ஆன்லைனில் வாங்கிப் பல் தேய்க்கலாம்.

முன்புபோல் ஒரு கடிதத்துக்காக ஒரு வாரம் காத்திருந்து படகில் போய் வாங்கிவர வேண்டியதில்லை. நீங்கள் இமயமலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தாலும் ஏதாவது ஒரு அலைபேசி நிறுவனத்தின் கோபுரம் மூலமாக நீங்கள் தொடர்பு வலைக்குள்தான் இருக்கிறீர்கள்.

முன்புபோல இல்லாமல் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் வேலைப் பாதுகாப்பு இல்லை. ஓய்வூதியம் போன்ற பயன்களை நிறுத்தவேண்டும் என்று பேசுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அரசுத்துறைகளில்கூட ஒப்பந்தப் பணியாளர்களும் தற்காலிகப் பணியாளர்களுமே நிறைந்திருக்கிறார்கள்.அவர்களது உரிமைகள் பற்றிப் பேச யாருமே இல்லை. ஒரு பணியாளர் கல்யாணம் முடிந்த இரண்டாம் நாளே பணிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். மதியம் இறந்துபோன தந்தையை, தாயை மாலை மின் மயானத்தில் எரித்துவிட்டு வழக்கம் போல் மறுநாள் காலையில் வேலைக்குப் போய்விட்ட, போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நண்பர்கள் சிலர் எனக்குண்டு.எனது பணியே அப்படித்தான் இருக்கிறது.எல்லாவிடத்திலும் hire and fire என்கிற முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் கலாசாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சேவை என்ற சொல்லின் பொருள் இன்று மாறிவிட்டது. எல்லாமே விற்கக்கூடிய, வாங்கக்கூடிய சேவைகளாக மாறிவிட்டன. தேர்தல் முடிவுகளே கட்சிகளின் வாங்கும் சக்தியைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.கொள்கைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அந்தக் கொள்கைகளை மக்களிடம் சரியாக விற்க விற்பனை நிறுவனங்களும் ஆலோசகர்களும் தோன்றிவிட்டார்கள். இன்றைக்கு உண்மையான கிங் மேக்கர்கள் காமராஜர்கள் இல்லை. பிரஷாந்த் கிஷோர்கள் போன்றவர்கள்தான்.

இணையமும், சமூக ஊடகங்களும் பூமியில் எந்தவொரு பாகத்தில் எந்தவொரு பிரபலத்தின் வீட்டில் படுக்கையறைச் சாவி திருகப்பட்டாலும் அந்தத் தகவலை அதே நேரத்தில் நேரலைக் காட்சியாக நமக்கு அளித்துவிடுகின்றன. ஆனால் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. இந்தத் தகவல்பெருக்கம் நமக்கு எந்த ஒரு ஆழ்ந்த அறிவையும் அளிப்பதில்லை. இவை நமக்கு, ‘எல்லாம் அறிந்தவர்’ என்கிற போலி ஆறுதலை அளிக்கின்றன. ‘மின் மடல்களை, குறுஞ்செய்திகளை நொடிக்கொரு தடவை அனுப்புவதன் மூலம் படிப்பதன் மூலம் நாம் ஏதோ ஒரு தீவிரமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் என்கிற பிரமையைப் பெறுகிறோமே தவிர, உருப்படியாக எதுவும் நடப்பதில்லை’ என்கிறார் Deep work என்கிற நூலின் ஆசிரியர் Call Newport. எந்த ஒரு துறையிலும் ஆழ்ந்து செயல்பட விரும்புகிறவர் விடாது துரத்தும் இந்தத் தகவல்தொடர்பு ஊடகங்களின் கிண்கிணிச் சத்தங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலமாவது முற்றிலுமே விலகிப் போய்விடவேண்டுமென்கிறார்.

எதுவும் கடந்து போகும்! - 19 - காத்திருப்பு கரைந்த காலம்!

இந்தத் தொழில்நுட்ப, சமூக ஊடக யுகம் இந்தத் தலைமுறையில் கொண்டுவந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, ஆண்-பெண் உறவுகளில் ஏற்பட்டிருப்பது. முன்போல் காதலைச் சொல்லாமலே இதயம் முரளிகள் செத்துப்போவதில்லை. கவிஞர் நகுலனின் காதல் பற்றிய செய்தி கடைசிவரை சுசீலாவிடம் போய்ச் சேரவில்லை. ஆனால் இன்று கவிஞர்களுக்குக் காதலிகளும் காதலிகளுக்குக் கவிஞர்களும் சுலபமாகவே கிடைக்கிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று காதல்கள், காதல் முறிவுகள் எல்லார் மொபைல் போனிலும் இருக்கின்றன. இந்தத் தலைமுறை எல்லாவற்றையும் காலை நேர டிராபிக் நெருக்கடியில் காணும் விபத்து போல் அவசரமாகப் பார்த்துவிட்டுக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறது.

நேர்மறையான விஷயங்களும் இல்லாமலில்லை. சற்றே கற்றல் குறைபாடுடைய என் மகளின் போனில் Read along என்ற செயலியைப் பார்த்தேன். அரசே இதை அளித்திருக்கிறது. அது தமிழையும் ஆங்கிலத்தையும் என் மகள் வாசிப்பதைக் கேட்டுக் கேட்டுப் பொறுமையாகத் திருத்துகிறது. பாராட்டவும் செய்கிறது. முன்பே பதிவு செய்யப்பட்ட ஒரு இயந்திரப் பெண் செயலியின் குரல்தான். ஆனால் அது அவளுக்கு மிகப் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.

அவள் முகத்திலிருக்கும் புன்னகை எனக்குச் சிறிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் கொண்டுவந்திருக்கிற பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் இந்தத் தொழில்நுட்பங்களே கொண்டுவரலாம். அல்லது நாம் எல்லாவற்றுக்கும் பழகியதுபோல இவற்றுக்கும் பழகிவிடலாம்.

முன்சொன்ன கலாப்ரியாவின் கவிதை இப்படித்தான் முடிகிறது.

பழகிப்போகும்
பஸ்ஸுக்குப் பாதையும்
பாதைக்கு பஸ்ஸும்.

- இடைவெளி இணைப்போம்