Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் சரவணன் சந்திரன்

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

இந்த வாரம் சரவணன் சந்திரன்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்
எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

நடுவீட்டின் இடது மூலையில் இருந்த மரப் பரணின் படிக்கட்டிற்குக் கீழே அமர்ந்திருந்தேன். குண்டு மஞ்சள் பல்பின் ஒளி எல்லோர்மீதும் படர்ந்திருந்தது அப்போது. ஒருபொந்தில்கூட உடலை மடக்கி அமர்ந்துவிடலாம் என்பது போன்ற வயது எனக்கு. வீட்டில் எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மேலே இருந்து யாரோ தலையில் நங்கெனக் குட்டிய வலி விண்ணென வலித்தது. எதற்காக, யார் கொட்டினார்கள் என நிமிர்ந்து பார்த்தேன். என் சித்தப்பா ஒருத்தர் மேலே இருந்து, “காலாட்டுற சொகுசு கேட்குதால. இன்னும் நாலெழுத்து படிச்சு முடிக்கலை. அதுக்குள்ள பேங்க் ஆபீசரு மாதிரி கால்மேல் கால் போட்டு ஸ்டைலா ஆட்டுறது” என்றார் கோபமாக. எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பேச்சு சுவாரசியத்தில் கால்மேல் கால் போட்டுச் சுகமாக ஆட்டிக்கொண்டு இருந்திருக்கிறேன். அது ஒரு கொலைபாதகச் செயலா? ஆம், ஒரு காலகட்டத்தில் அதற்கு நிகரான செயல்தான் அது. பெரியவர்கள் முன்பு அவ்வாறு செய்வது மரியாதைக் குறைவு.

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

இந்த மாதிரி செய்கிற புதுப் பணக்காரனை ஊரே எளிதில் கண்டுபிடித்துவிடும். “ஆட்டற சைஸே சரியில்லை. சனியன் வந்து இடுப்பில ஏறி உக்காந்திட்டார்” என்பார்கள். எதற்காகச் சொல்கிறேன் எனில், அச்சிறு செய்கைக்கு ஊருக்குள் இருக்கிற பிரதி மதிப்பைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். அச்செயல் ஒரு குறியீடு, அவ்வளவுதான்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு படிநிலையை உருவாக்கி அவற்றிற்கு மரியாதை கொடுக்க, நாய்களைப் போல எங்களைப் பழக்குவித்தார்கள். எழுந்து நிற்க வேண்டும், வேட்டியை மடித்துக் கட்டக் கூடாது, தலைமுடியை ஒட்ட வெட்ட வேண்டும் என இன்னபிற. அவர்கள் உண்பது உடுப்பது, பெண் பிள்ளைகளோடு பேசக் கூடாது என எல்லா விஷயங்களிலுமே எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தினர்.

நாங்கள் அவர்கள் சொல்வதைச் செய்கிறோமா என்பதைப் பின்பற்றி நோட்டம் விட்டுக் கொண்டும் அலைந்தனர். தம்வீடுதான் என்றில்லை. பக்கத்து வீட்டு ஆச்சிகள், தாத்தாக்கள், அத்தாச்சிகள், அண்ணன்கள், பெரியப்பா வகையறாக்கள், பேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கிற அண்ணன்கள், சூப் கடை போட்டிருக்கிற மாமாக்கள் என ஒரு பெரிய கண்காணிப்பு வளையமே எங்களைப் போர்த்தியிருக்கும். சர்க்கஸிலெல்லாம் காட்டக் கூடிய உக்கிரமான நெருப்பு வளையம் அது.

கடையில் நிம்மதியாய் நின்று ஒரு டொரினோ குடிக்க முடியாது. நாம் போய்ச் சேர்வதற்குள் செய்தி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்துவிடும். சிகரெட் கடையில் நின்று டொரினோ குடித்தேன் என்று சொன்னால் நம்பவா போகிறார்கள்? ஒரு பத்து நாளைக்கு தெருவே கூடிப் பேசும். “அவங்க குடும்பத்து கௌரவத்தைக் கெடுக்க இப்டீ ஒரு புள்ளை. அவங்கப்பாரு குனிஞ்ச தலை நிமிர மாட்டாரு” என்ற ஒரு அத்தையைப் பார்த்து, “ஏட்டி, டொரீனோதான குடிச்சேன். ஏதோ சாராயம் குடிச்ச மாதிரி பில்டப் தர்றீயே” எனக் கத்தியிருக்கிறேன்.

டொரினோவிற்கே இந்தக் கதி என்றால் வேறு விஷயங்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன?

ஓர் ஆழமான கண்காணிப்பு வளையத்திற்கு நடுவே வளர்ந்தோம். ஒருகட்டத்தில் இந்த மிதமிஞ்சிய கண்காணிப்பு எங்களையும் மூச்சுமுட்டச் செய்திருக்கிறது. அதிலிருந்து தப்பித்து ஓட முயன்றவர்களும் உண்டு. மறைந்து திரிந்து குடித்துச் சுகித்தவர்களும் உண்டு. அப்போதெல்லாம் அடிக்கடி ஊரிலிருந்து யாராவது பையன்கள் டிரெயின் ஏறிச் சென்னைக்குத் தப்பித்துப் போய்விடுவார்கள். வந்த கொஞ்ச காலத்திற்குத்தான் இரண்டு தரப்பிற்குமே கையும் வாயும் சும்மா இருக்கும். பிறகு இரண்டு தரப்புமே மீண்டும் முறுக்கிக் கொள்ளும். ஓர் ஆடுபுலி விளையாட்டு தொடரும்.

அது ஒரு பரந்த மைதானம் போலத்தான். நாங்கள் ஆடும் அழகை எல்லோரும் கேலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். அங்கே எவர் பார்வையில் இருந்தும் நாங்கள் தப்பவே முடியாது. குற்றாலத்தில் புளியருவியில் தலையைக் கொடுத்து நிற்கும்போதுகூட இன்னொரு தலையைச் சந்தேகமாகத்தான் உற்று நோக்க வேண்டும். ஒன்றுவிட்ட அத்தானின் தலையாக அது இருக்கக்கூடும்.

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

அதனால் கவனம், கவனம் எதிலும் கூடியிருக்கும் எங்களுக்கு. பூனைகளைப் போல நைச்சியமாய் நடைபோடும் தலைமுறை எங்களுடையது. எங்களுக்கு முந்தைய தலைமுறை கற்றுக்கொண்டதிலிருந்து சில விதிகளை உருவாக்கி எங்களை அதை நோக்கிப் பயிற்றுவித்தது.

பெரும்பாலும் கற்றுத் தந்தவர்களுள் சிதறல் கொண்ட மனங்களை அங்கே நான் பார்த்ததே இல்லை. எல்லா மனங்களுமே நல்வாழ்வைப் பற்றி மட்டுமே போதித்தன. தலைப் பிரட்டைகளைப் போலத்தான் அப்போது நாங்கள் சுற்றி அலைந்துகொண்டிருந்தோம்.

ஒரே மைதானத்தில்தான் எல்லோரும் விளையாடினோம். விதிகளைப் பின்பற்றியவர்களை மைதானம் வாரியணைத்துக் கொண்டது. மீறியவர்களை அது துள்ளத்துடிக்கத் தூரே எறிந்துவிட்டது. இந்தச் சுழற்சியை நான் உற்றுக் கவனித்திருக்கிறேன். ஊரே கொண்டாடிய விளையாட்டு வீரனான நண்பன் ஒருத்தன், மைதானத்தில் மீறல்களை நிகழ்த்தியதால் பின்னாள்களில் தற்கொலை செய்துகொண்டான்.

அந்தச் சாவு ஊர்வலத்தில் நானும் என் இன்னொரு நண்பனும் உரையாடினோம். “ஒழுங்கா இரு இருன்னு ஊரே போட்டு நம்மளை அடிச்சுச்சேல. அப்ப எரிச்சலா இருந்தது. இன்னைக்கு அது எவ்ளோ நல்லா இருந்திருக்கு பாரேன்” என்றான் மனம் கசிந்து. “ஆமடா, என்னையெல்லாம் அப்டீ கண்டிஷனா வளர்க்காமப் போயிருந்தாங்கன்னா, தரிசாத்தான் போயிருந்திருப்பேன்” என்றேன்.

என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து அதைச் சொன்னதை உணர்ந்தேன். கரை சேர்கிறவர்களின் காலம் எங்களுடையது. அந்தக் காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி ஓர் ஊரே எங்களை அடித்துத் திருத்தி வளர்த்தி ருக்கிறது. ``கண்ண மட்டும் விட்டிருங்க. மிச்ச தொலி எல்லாத்தையும் உரிச்சிருங்க” என்று சொல்லித்தான் பள்ளியில் ஒப்படைப்பார்கள். இதைக் கேட்டுவிட்டு வாத்தியார்கள் சும்மா இருப்பார்களா?

இப்போது யோசித்தால் வாங்கிய அந்த அடிகளும் குட்டுகளுமே எங்களது தலைகளை உயர வைத்தன என்பதை அடியாழத்தில் இருந்து உணர்கிறேன். இப்போதும் ஈகா சலூன் அண்ணனை மெல்லிய புன்னகையுடன் பார்க்கிறேன். “அப்பா அம்மாவை நல்லாப் பார்த்துக்கோப்பா” என்கிறார் அவர். “சரிண்ணே” என மறு பேச்சில்லாமல் தலையடங்கவே சொல்கிறேன். அவை வெறும் அடிகள், குட்டுகள் மட்டும்தானா?

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

அதில் கரிசனமும் அக்கறையும் இருந்தது என்பதை வளர்ந்த பிறகுதான் உணர முடிந்தது.

அவர்கள் மடியில் கதகதப்போடு கிடக்கிற மயில் முட்டைகள் நாங்கள். பாம்புகளிடமிருந்து பொத்திப் பாதுகாத்திருக்கிறார்கள் என்கிற முடிவிற்கு அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தேன். என்னைமாதிரியே ஒரு தலைமுறையும்கூட இந்த எண்ணத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இந்தத் தொடர் ஓட்டத்தில் நாங்கள் இப்போது மையப்பகுதிக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு அடுத்த தலைமுறையை மேலே இருந்து உற்றுக் கவனிக்கிறோம். உண்மையிலேயே பதற்றமாக இருக்கிறது. எல்லாக் கண்காணிப்பு வளையங்களையும் மோதி உடைக்கிற தலைமுறையைப் பார்த்தால் இன்னொரு கோணத்தில் வியப்பாகவும் இருக்கிறது.

சமூகச் சுழற்சியின் படிநிலையில் ‘குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்கிற மேம்பட்ட புள்ளியில் வந்து நிற்கிறோம். குழந்தை வளர்ப்பு என ஏதோ ஒன்றைக் கற்றும் கொண்டிருக்கிறோம். இதைக் கொண்டுதான் இன்னொரு புதிய தலைமுறையை உருவாக்கியும் கொண்டிருக்கிறோம்.

அந்தத் தலைமுறையின் பிரதிநிதிகளைத் தொடர்ந்து நான் சந்திக்கிறேன். அங்கே என்ன நடக்கிறது என்பது குறித்த செய்திகளையும் பெறுகிறேன். எங்களுடைய குழந்தைப் பருவம் போல இக்காலமில்லை என்பதைச் சட்டென உணர்கிறேன். பிற்போக்குத்தனமாகச் சிலநேரங்களில் சிந்திக்கக்கூடத் தலைப்பட்டு விடுகிறோம்.

ஆனால் நிதானமாக இந்தப் புதிய காலத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன். எங்களுடையதைப் போல இங்கும் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. ஆனால் இங்கு எவரும் எவர் விளையாட்டையும் பார்ப்பதில்லை. ஒழுங்காக விளையாடுகிறவனுக்கான பெறுமதிகளும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. தவறான ஆட்டம் வாழ்க்கையின் இன்னொரு முனைக்குத் தள்ளிவிடும் என்பதற்கு உதாரணங்களும் இருக்கின்றன.

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

புதிய தலைமுறை தொடும் வெற்றியின் உச்சங்கள் உள்ளத்தை மகிழ வைக்கின்றன. அதேசமயம் அவர்கள் வாழும் காலத்தின் பொல்லாத்தனங்களையும் அவர்கள் கடந்துவர வேண்டுமென்கிற பதற்றமும் எழுகிறது.

புதிய தலைமுறையைச் சேர்ந்த பையன் ஒருத்தனைச் சமீபத்தில் சந்தித்தேன். அவன் நண்பர்களில் ஐந்து பேர் கடந்த சில மாதங்களில் மிகையான போதையின் காரணமாகச் செத்துப்போயிருக்கிறார்கள். அனைவரும் மத்திய வர்க்கத்தினர். ஐந்து பேரில் ஒருத்தர் இளம்பெண்.

போதையின் உச்சத்தில் அம்மாவைக் கொல்பவர்கள், குழந்தைகளைக் கொல்பவர்கள், செயினை அறுப்பவர்கள் என ஓர் இளைஞர் கூட்டம் பெருகியிருக்கிறது. எல்லாக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இதில் இருக்கிறார்கள். சில விஷயங்கள் சொல்லும்போது சங்கடத்தைத் தரும். ஆனால் விளைவுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டுமெனில், புதிய காலம் கொஞ்சம் பொல்லாததுதான். கொஞ்சம் அசந்தால் வாழ்க்கையை வாரிச் சுருட்டி வேறு திக்கில் போட்டு விடும். ஆனால் இதையெல்லாம் வெளிப்படையாக உரக்கக் கேட்டுவிட முடியாது. ஏனெனில் இந்த வகைப் பதற்றங்களின் சாயலில் பிற்போக்கின் நிறமும் ஒட்டியிருக்கிறது.

வேறு என்னதான் செய்வது? குழந்தை வளர்ப்பில் எங்கே பிசகுகிறோம்? ஆற அமர, நிதானமாக இதைச் சுற்றி யோசிக்க வேண்டிய காலம். கண்காணிப்பின் எல்லை எதுவரை என ஊர்ஜிதப்படுத்த வேண்டிய நேரம்.

பொதுவாகவே இங்கே சூழல் முழுக்கவே சாம்பல் மணம் படிந்திருக்கிறது. பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் வரை எல்லாமும் மீறல்களை அனுமதிக்கும் இடமாக மாறியிருக்கின்றன. அந்த அமைப்புகளின் கண்காணிப்பு வளையமே தவிடுபொடியாகி இருக்கிறது. எதிரே சீனப் பெருஞ்சுவரை வைத்தால்கூட உடைத்து எறிந்துவிடும் இந்தத் தலைமுறையை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது?

நாங்கள் ஒரு காலத்தில் தலைப் பிரட்டைகளாக இருந்தோம். இப்போதுள்ள தலைமுறை வந்து சேர்ந்திருக்கும் நுட்பமான இடத்தையும் உற்று நோக்கினேன். காது என்கிற உறுப்பு இல்லாத தலைமுறையாகப் பரிணாமத்தில் வளர்ந்திருக்கிறது. காதே இல்லாத தலைமுறையிடம் எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? திக்கித் திணறுகிற பெற்றோரை வழிப்பாதை எங்கும் சந்திக்கிறேன்.

காட்டுக் கோழிகள் நாட்டுக் கோழிகளாகி பிராய்லர் கோழிகளின் யுகம் தொடங்கியிருக்கிறது. பிராய்லர்தான் இப்போது எல்லோராலும் விரும்பப்படுவதும். ஆனால் அந்தக் கோழிக்கே உரிய அத்தனை சாதக பாதக அம்சத்துடன் புதிய தலைமுறை ஊடாடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன்.

எதுவும் கடந்து போகும்! - 2 - குட்டுகளால் நிமிர்ந்த தலை!

அதிலிருந்து மூச்சு முட்டி வெளியே வந்து விழுபவர்களையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். சிறு பிழையொன்றின் வழியாக ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பவர்களையும் கண்டிருக்கிறேன். எல்லாக் காலத்திலும் இக்காட்சி இருந்திருக்கிறதுதான். ஆனாலும் இக்காலம் அப்படியான காட்சிகளை நிகழ்த்துவதற்கு ஏதுவான காலமாகி இருக்கிறது. ஏனெனில் இது காட்சிகளின் காலம். எல்லாவிதமான காட்சிகளையும் மௌன சாட்சியாக நாம் உற்று நோக்கத்தான் வேண்டும்.

ஏனெனில் இந்தப் புதிய தலைமுறை உலவும் வெளியைப் படைத்து அளித்தது நாம்தான். காற்று தொடங்கி கல்வி வரை ஒரு சீரழிந்த அமைப்பையே உருவாக்கிக் கையளித்திருக்கிறோம். பாது காப்பில்லாத, நிச்சயமில்லாத, பதற்றங்கள் சூழ்ந்த வெளியை உருவாக்கியது நாமல்லாமல் வேறு யாராம்? நவீனத் தொழில்நுட்ப உலகில் நிறைய கால்மேல் கால் ஆட்டங்கள். என்ன செய்வது? குழப்பத்தில் திகைப்பில் மறைந்திருந்து உற்றுப் பார்க்கின்றன, கண்கள்!

- இடைவெளி இணைப்போம்!