Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 5 - எங்கே இருக்கிறது தலைமுறை இடைவெளி?

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் மனுஷ்ய புத்திரன், ஓவியங்கள்: நீலன்

எதுவும் கடந்து போகும்! - 5 - எங்கே இருக்கிறது தலைமுறை இடைவெளி?

இந்த வாரம் மனுஷ்ய புத்திரன், ஓவியங்கள்: நீலன்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

தலைமுறைகளுக்கு இடையிலான காலம் வேகமாகச் சுருங்கிக்கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே தலைமுறை இடைவெளி இருந்தது. பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே தலைமுறை இடைவெளி இருந்தது. ஆனால் இன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே, அக்காவுக்கும் தங்கைக்கும் இடையேகூட இந்த இடைவெளிகள் வெளிப்படத்தொடங்கிவிட்டன. அந்த அளவு காலமாற்றம் தீவிரமடைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பமும் நுகர்வுக் கலாசாரமும் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு இடையிலும்கூட வாழ்க்கை முறையிலும் மதிப்பீடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. பேசும் மொழி மாறுகிறது, மன இயல்புகள் மாறுகின்றன.

எப்போதும் முந்தைய தலைமுறைகளுக்கு அடுத்த தலைமுறைகளைப் பற்றிப் புகார்கள் இருந்திருக்கின்றன. அவை மதிப்பீடுகள் சார்ந்தவை, அழகியல் சார்ந்தவை. சில சமயங்களில் ஒழுக்கவியல் சார்ந்தவை. பொதுவாக எனக்கு அத்தகைய புகார்கள் எதுவும் இருந்ததில்லை. ஏனெனில் எல்லா இளைஞர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதோ, எல்லா வயதினரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதோ, ஒரு கட்டத்திற்கு மேல் அர்த்தமற்றதாகிவிடும். நாம் தலைமுறைகளைப்பற்றி உருவாக்கிக்கொள்ளும் பிம்பங்கள் சில சமயம் உண்மை. பல சமயங்களில் கற்பிதம். ஆனாலும் சில பொதுப்பண்புகளை அல்லது ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணக்கிடைக்கிற பண்புகளை வைத்துக்கொண்டு சில பிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

காலம் காலமாகச் சொல்லப்படும் இந்தத் தலைமுறை இடைவெளி எனும் கோட்பாடு இந்தத் தகவல் தொழில்நுட்ப, உலகமயமாதல் சூழலில் மெல்லக் கலைந்து வருவதைப் பார்க்கிறேன். உறவுகள், வாழ்க்கைமுறைகள், மதிப்பீடுகள், அணுகுமுறைகள் எல்லாவற்றிலுமே வயது வித்தியாசங்கள் குறைந்து பொது வாழ்க்கை முறை ஒன்று உருவாகிவருகிறது. இது இதுவரை நிகழ்ந்திராத ஒன்று. கிராமங்கள் – நகரங்கள் என்ற வித்தியாசம் குறைந்துவருவதுபோல வயது சார்ந்த வித்தியாசங்களும் குறைந்துவருகின்றன. ஒரு புறம் வேகமான தலைமுறை மாற்றங்கள். இன்னொருபுறம் தலைமுறைகளுக்கு இடையே இடைவெளிகள் குறைந்துவருவது. இந்தச் சூழல் இந்த யுகத்துக்கு மட்டுமே உரியது.

எனினும் இளைய தலைமுறையினரிடையே மதிப்பீடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் என எதையாவது குறிப்பிட முடியுமா? சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன.

இன்று இளைஞர்களிடையே காணப்படும் மிகப்பெரிய மனச்சிக்கல் சுயமோகம் சார்ந்த தன் முனைப்பு. நார்சிஸம். எந்த நேரமும் நிலைக்கண்ணாடிமுன் நின்றுகொண்டிருப்பதுபோல தங்கள் பிம்பத்தின் முன் நின்றுகொண்டிருக்கிறார்கள். தாங்கள் யாராலாவது கவனிக்கப்படுகிறோமா என்பது இன்றைய இளைஞர்களின் பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. ஆடை அணிகலன்கள், பழக்கவழக்கங்கள் சார்ந்து ஒருவருடைய தேர்வுகள் என்பது அவருடைய சொந்தத் தேர்வுகள் அல்ல. இன்று ட்ரெண்டிங்கில் எது இருக்கிறதோ, அதுவே வாழ்வியல் தேர்வாகியிருக்கிறது. அதனோடு சேர்ந்து ஓட முடியாதவர்கள், அதற்கான வசதி வாய்ப்புகள் அற்றவர்கள், கடும் மன அழுத்தத்தில் வீழ்கிறார்கள். அல்லது அதற்கான அபாயகரமான வழிமுறைகளை நாடுகிறார்கள்.

எதுவும் கடந்து போகும்! - 5 - எங்கே இருக்கிறது தலைமுறை இடைவெளி?

இன்ஸ்டாவில் தன்னைப் பின்பற்றுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இன்று ஒருவர் தன் இருப்பையும் தன் மதிப்பையும் அளவிட முயல்கிறார். அந்த எண்ணிக்கை கூடும்போது அவரது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. அது குறையும்போது அவர் மனதளவில் வீழ்ச்சியைச் சந்திக்கிறார். இது தன் பிம்பத்தைத் தானே வைத்து நடத்தும் சூதாட்டம். ஒவ்வொரு நாளும் தங்களை இன்ஸ்டா புகைப்படங்களாகவும் ரீல்களாகவும் ஃபேஸ்புக் வாட்ஸப் ஸ்டோரிகளாகவும் இடையறாது மாற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் தங்களது சுய பிம்ப வெள்ளத்தில் மூழ்கிப்போகிறார்கள். எந்நேரமும் இது தொடர்பான எண்ணங்கள் அவர்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. தங்கள் உடல் குறித்த ஒரு அதீதமான விழிப்புணர்வு. தான் எப்போதும் ஈர்ப்பூட்டும் வகையில் தோன்றவேண்டுமென்ற பதற்றம். கவன ஈர்ப்பிற்கான இந்தப் பதற்றம் தங்களைவிடக் கவர்ச்சியான உடல்களிடம் ஒரு மானசீகப் போட்டியையும் தாழ்வுணர்ச்சியும் கொள்ளவைக்கிறது. ஆம், தங்களது உடல் மற்றும் தோற்றம் சார்ந்து இளைஞர்கள் கொண்டிருக்கும் பெரும் அப்செஷன் அவர்களை சிந்தனாபூர்வமாக வார்த்துக்கொள்வதிலிருந்தும் சமூகப்பொறுப்புகளிலிருந்தும் வெகுதூரம் பின்னுக்குத் தள்ளுகிறது. இந்த மாய உலகத்தை உண்மை என்று அவர்கள் நம்புகிறார்கள். அது சார்ந்து சில அபாயகரமான சாகசங்களிலும் ஈடுபடத் தயாராகிறார்கள். முக்கியமாக 15 வயதிலிருந்து 21 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் உலகம் மிகவும், குழப்பமானதாக மாறிவிட்டது. அவர்கள் வெகுவேகமாகத் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து அதேசமயம் மனத்தெளிவுள்ள இளைஞர்களாகவும் முதிர்ச்சிபெற முடியாத ஒரு தெளிவற்ற உலகில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இளைஞர்களிடம் இன்று காணப்படும் மற்றொரு முக்கியமான சிக்கல், அதீதமான தன் வெளிப்பாடு. தன்னுடைய ஒவ்வொரு அந்தரங்கத்தேவை அல்லது பிரச்னையையும் பொதுவெளியில் வைத்து விவாதிப்பது. தனது அந்தரங்க உறவுகள், பழக்கவழக்கங்கள், உடலியல் பிரச்னைகள் தொடங்கி ஒரு கைக்கடிகாரம் வாங்குவதாக இருந்தால்கூட என்ன கடிகாரம் வாங்குவது என சமூக வலைதளங்களில் அபிப்ராயம் கேட்பதுவரை அந்தரங்கம் என்ற ஒன்றே இல்லாதவர்களாகிவிட்டார்கள். அதேபோல தனியாக இருக்கிறார்களா, ஒரு உறவில் இருக்கிறார்களா என்பதையெல்லாம் இன்று பொதுவில் வெளிக்காட்டிக்கொள்ளவேண்டிய முனைப்பில் இருக்கிறார்கள். அதேபோல தங்கள் சுக துக்கங்களைக் காட்டிக்கொள்வதில் இருக்கும் அதீத ஆர்வம். சமீபத்தில் திருமணமான என் சிநேகிதி தன் கணவனைக் கொஞ்சுகிற, கொண்டாடுகிற பத்துப் புகைப்படங்களையாவது தினமும் பதிவேற்றுகிறாள். இதன் நோக்கம் என்ன? தான் ஒரு நல்ல உறவில் இருக்கிறேன் எனச் சொல்வது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவா? அல்லது, மானசீகமாகப் பழிவாங்க விரும்பும் யாருக்காவது விடுக்கும் செய்தியா?

இதுபோன்ற சுயகொண்டாட்டப் பதிவுகள் தனிமையில் இருப்பவர்கள், அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. நமது சமூகம் ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியது. நிறைய பேர் ஒன்றுமே இல்லாத ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதற்குள்ளாக நாம் நமது மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் பொது வெளியில் வைப்பது பற்றி யோசிக்கவேண்டும். இது தனிமனிதப் பண்பாடு மற்றும் சமூகப்பொறுப்போடு தொடர்புடையது. தன்னைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவதில் ஆனந்தம் அடைபவர்கள் இருக்கிறார்கள். அது ஒரு மனநோய்.

எதுவும் கடந்து போகும்! - 5 - எங்கே இருக்கிறது தலைமுறை இடைவெளி?

இன்று இளைஞர்களிடம் நிலவும் மற்றொரு முக்கியமான பிரச்னை குழப்பமான அரசியல் பார்வை. முன்பெல்லாம் அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பார்வைக்கேற்பச் செயல்படுவார்கள். அதில் ஒரு குறைந்தபட்ச கோட்பாடு இருக்கும். அது நாம் ஏற்காத கோட்பாடாக இருந்தாலும்கூட! இன்று இளைஞர்களிடம் இரண்டுவிதமான அரசியல் பார்வைகளைப் பார்க்கிறேன்... ஒன்று, தாங்கள் சார்ந்திருக்கும் சாதி அல்லது சமயம் சார்ந்து உருவாக்கப்படும் கருத்தியல்களைக் கண்மூடித்தனமாக நம்புவது. அது சார்ந்த அவதூறுகள் மற்றும் வன்முறைக் கருத்தியல்களை வெளிப்படுத்துவது. வதந்திகளைப் பரப்புவது. மற்றொன்று, எந்த ஒரு அரசியல் கருத்தாக்கத்தையும் நேரடியாகச் சார்ந்திராமல் அன்றைக்கு என்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதற்கேற்ப தன் அபிப்ராயங்களை முன்வைப்பது. நீதிபோதனைகளைக் கூறுவது. தான் சொல்வதை சமூக அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்காமல் மனம்போன போக்கில் கருத்துகளைச் சொல்வது. ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பல்லாயிரம் சொற்குப்பைகள் சமூக வலைதளங்களில் உருவாக்கப்படுகின்றன. எந்த வாசிப்புப் பின்புலமும் இல்லாத கண்டதையும் கேட்டதையும் வைத்து முன்வைக்கப்படும் இந்தச் சொற்புழுதி மூச்சுத்திணற வைக்கிறது.

இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் காணப்படும் மிகப்பெரிய அவலங்களில் ஒன்று மொழிச்சிதைவு. சொற்களை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து சமூக வலைதளங்களில் பயன்படுத்துகிறார்கள். பொருளே இல்லாத சொற்கள் புதிது புதிதாகப் புழக்கத்திற்கு வருகின்றன. தமிழை ஆங்கில வரிவடிவத்தில் கூசாமல் எழுதுவது, ஆங்கிலத்தை குறைந்தபட்ச இலக்கணம்கூட இல்லாமல் பயன்படுத்துவது, பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவது என்பதில் இன்றைய இளைஞர்களில் அநேகர் ஒரு மொழிக்கொலையையே நிகழ்த்தி வருகின்றனர். மொழிதான் சிந்தனையின் ஊற்று. மொழி இவ்வளவு தூரம் சிதைந்திருந்தால் சிந்தனை எப்படிச் செப்பமுறும்?

இன்றைய இளைஞர்கள் எந்த ஒன்றோடும் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொள்வதில்லை. தாங்கள் பணியாற்றுகிற துறை சார்ந்து பெரிய கனவுகளோடு இருக்கக்கூடியவர்கள் மிகக்குறைவு. பணி மற்றும் பணியிடங்களை ஊதியம் சார்ந்து மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இது தவறில்லை. ஆனால் இது போதுமானதல்ல. ஒரு பணியில் படிப்படியாக முன்னேறக்கூடிய வாய்ப்புகள் இருந்தால்கூட ஒரு சிறிய சம்பள உயர்வுக்காக அந்த நிறுவனத்தை விட்டுப் போகக்கூடிய இளைஞர்களைப் பரவலாகக் காணமுடிகிறது. ஒரு வருடத்தில் சம்பந்தமில்லாத நான்கைந்து வேலைகள் மாறுகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். இது அவர்களது தேர்வாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியின்மை எந்த ஒன்றிலும் அவர்களைத் தனித்திறன் வாய்ந்தவர்களாக மாற்றாது.

எதுவும் கடந்து போகும்! - 5 - எங்கே இருக்கிறது தலைமுறை இடைவெளி?

ஆண் – பெண் உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் கடந்த கால் நூற்றாண்டில் இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றன. ஒருபுறம் சாதி ஆணவக் கொலைகள் நடந்துகொண்டிருந்தாலும், ஆண்களும் பெண்களும் பாலியல் உணர்வுகள் சார்ந்து மானசீகமாகவேனும் பெருமளவு தகவல் தொழில்நுட்பத்தாலும் நகர்மயமாதல், கல்வி வளர்ச்சி காரணமாகவும் விடுதலை அடைந்திருக்கிறார்கள். உடனடி காதல்களும் உடனடி பிரேக் அப்களும் உருவாகியிருக்கின்றன. எந்த உறவையும் ஆழமாகப் பற்றிக்கொள்ள வேண்டியதில்லை; அல்லது பற்றிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. மேலும் உணவு, உடை, கேளிக்கைகள் சார்ந்து நிறைய புதிய வாய்ப்புகளும் பண்பாடுகளும் உருவாகியிருக்கின்றன. இளைஞர்களின் பாலியல் சார்ந்த வாய்ப்புகள் மற்றும் சாத்தியங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.

சரி, இதெல்லாம் தலைமுறை இடைவெளிகளை அதற்கு முந்தைய தலைமுறையினரிடம் உருவாக்கியிருக்கிறதா என்றால், அதுதான் இல்லை. மாறாக எல்லோருமே இந்த ஜோதியில் கலக்க விரும்புகிறார்கள். எல்லோருமே தங்களை இளைஞர்களாக மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். யாரும் தங்கள் வயதை நம்ப விரும்புவதில்லை. இளமை கடந்தவர்கள் மிகவும் இளமையான தோற்றமுள்ள புகைப்படங் களுக்காகப் படாத பாடு படுகிறார்கள். அழகு நிலையங்களில் பெருமளவு வாடிக்கை யாளர்களாக இருப்பவர்கள் மத்தியதர வயதினர்தான். ஜிம்களில் அவர்கள் கடுமையாக வியர்வை சிந்துகிறார்கள். டிக் டாக் போன்றவற்றின் பயனாளிகளாகவும் அவர்களே இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அர்த்தமற்று உளறுகிறார்கள்.

இன்று இளைஞர்களிடம் பிரதானமாகக் காணும் பல மாற்றங்களை, குணாதிசயங்களை மத்தியதர வயதினரிடம் மட்டுமல்ல, அந்த வயதைக் கடந்தவர்களிடமும் காணமுடிகிறது. இது ஒரு அபத்தமான சூழலை உருவாக்கியிருக்கிறது. ஒரு பிரமாண்டமான கேளிக்கைக் கலாசாரத்தின் வணிகக் கலாசாரத்தின் பிம்ப உருவாக்கச் சிலந்தி வலைக்குள் எல்லோருமே சிக்கிக்கொண்டிருக்கிறோம். சில சமயம் இது ஆசுவாசத்தையும் சந்தோஷங்களையும் தருகிறது. பல சமயங்களில் அர்த்தமின்மைகளையே அர்த்தமாக்கிக்கொள்ளும் வெற்றுப் பண்பாட்டுச் சூழலுக்குள் நம்மைத் தள்ளுகிறது.

நாம் இந்த அர்த்தமற்ற பண்பாட்டுச் சூழலை அளவுக்கு மீறிப் பயன்படுத்திவிட்டோம். ஆண் பெண் பேதங்கள் குறைந்து, தலைமுறை இடைவெளிகள் குறைந்து ஒரு சமவெளியை நோக்கி வந்திருக்கிறோம். அந்தச் சமவெளியில் நாம் மானுடம் சார்ந்த, பண்பாடு சார்ந்த, அறிவியக்கம் சார்ந்த, சுயமரியாதை சார்ந்த ஒரு புதிய கலாசார வெளியை உருவாக்கவேண்டும். அது நம்மையும் நம் வாழ்வையும் சாரமும் அர்த்தமும் கொண்டதாக மாற்ற வேண்டும். மாறாக நம் நிழல்களை நாமே தொழுது நம் பிம்பங்களை நாமே வழிபட்டுக்கொண்டிருந்தால் நாம் வெறும் சக்கைகளாக வெகுசீக்கிரத்தில் உதிர்ந்துவிடுவோம்.

- இடைவெளி இணைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism