Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 9 - அடுத்த தலைமுறையிடம் கற்றுக்கொள்வோம்!

எதுவும் கடந்து போகும்!
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்!

இந்த வாரம் பெருமாள் முருகன், ஓவியங்கள்:நீலன்

எதுவும் கடந்து போகும்! - 9 - அடுத்த தலைமுறையிடம் கற்றுக்கொள்வோம்!

இந்த வாரம் பெருமாள் முருகன், ஓவியங்கள்:நீலன்

Published:Updated:
எதுவும் கடந்து போகும்!
பிரீமியம் ஸ்டோரி
எதுவும் கடந்து போகும்!
பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

முந்தைய தலைமுறையினர் இந்தத் தலைமுறைமீது அதிருப்தி கொள்வதும் குறைகளாகக் கொட்டுவதும் பொதுவழக்கம். தாத்தா பாட்டிகளுக்கு என் தாய் தந்தையர் காலம் ஏற்புடைய தாக இல்லை. பெற்றோருக்கு என் காலம் உவப்பாக இல்லை. சொந்த ஊரிலிருந்து ஐம்பது கிலோ மீட்டரைத் தாண்டிச் செல்லாத அம்மாவுக்கு நான் பல கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று கல்வி பயின்றதையும், ரயில் போன்ற வாகனங்களை எளிதாகப் பயன் கொண்டதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்போதும் அச்சத்துடனே என்னை அணுகினார். வெளியிலிருந்து ஏதேதோ பூதங்களைக் கொண்டு வந்து ஏவி விடுவேன் என்று நினைத்தார். எனக்கு என் பிள்ளைகளின் காலம் வெகுவான தூரத்தில் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிடுகிறார்கள். பாவனைகளை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ‘உனக்குப் புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்லேப்பா’ என்பது என் மகன் அடிக்கடி சொல்லும் அறிவுரை.

ஒவ்வொருவருக்கும் முப்பது வயதுக்குள் ஏதோ ஒருவிதமான வாழ்க்கைப் பார்வை உருவாகிவிடுகிறது. கல்வி, ஒழுக்கம், குடும்பம், வேலை உள்ளிட்ட அனைத்தைப் பற்றிய விழுமியங்களையும் அப்பார்வை நிறுவி நிலைபெற வைக்கிறது. அவற்றைச் சுமந்தபடியே தம் மீதி ஆயுளைக் கழிக்கின்றனர். கால மாற்றத்துக்கேற்பப் புற அளவில் சிற்சில மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுண்டு. அகத்தில் பெரிதாக மாற்றம் ஏற்படுவதில்லை. ஒவ்வொரு மாற்றத்தையும் பதற்றத்தோடு அணுகுகின்றனர். புறநிர்பந்தம் சிலவற்றைத் திணிக்கிறது. எனினும் உள்ளே புதுக்காற்றை விடாமல் புழுங்கித் தவிக்கின்றனர்.

நான் ஐம்பது வயதைக் கடந்தவன். ஆசிரியராக இருப்பதால் எப்போதும் பதின்வயது மாணவர்களின் சிந்தனைகளையும் போக்குகளையும் கவனித்து வருபவன். அவற்றோடு இயைவதற்குக் கொஞ்சம் மனப்போராட்டம் செய்ய வேண்டியிருக்கும். அதைக் கடந்துவிட்டால் நவீன உலகின் இளமை வாரி அணைத்துக்கொள்ளும். புதிதாகப் பிறந்துவிடலாம். ஒவ்வொரு தலைமுறையும் கூடுதலான சுதந்திரத்தை நோக்கிச் செல்கிறது என்பது என் அனுமானம். மன மலர்ச்சிக்கு அடிப்படை சுதந்திர உணர்வு. நமக்குக் கிடைக்காத சுதந்திர வெளி அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கிறது. நம்மைவிட மகிழ்ச்சியாக அவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பரந்த வெளிச்ச வெளியில் நமக்குப் பங்கு வேண்டுமானால் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுக’ வேண்டும். புதியவற்றை முதலில் புரிந்துகொள்ளவும் நம் காலத்து விழுமியங்களை ஓரமாக ஒதுக்கித் தள்ளவும் தைரியம் வேண்டும்.

எதுவும் கடந்து போகும்! - 9 - அடுத்த தலைமுறையிடம் கற்றுக்கொள்வோம்!

ஒருகாலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது என்றிருந்தது. பிறகு படிக்கலாம், ஆனால் பையன்களோடு பேசக்கூடாது என்றானது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிக் கல்வி நிறுவனங்கள் உருவாயின. 1990களில் இன்னும் கொஞ்சம் பார்வை விரிவாகி இருபாலர் கல்வி நிறுவனங்கள் அமைந்தன. ஏற்கெனவே ஆண்கள் மட்டும் பயிலும் கல்லூரிகளாக இருந்தவை இருபாலர் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. பள்ளிகளில் அப்படி நடக்கவில்லை. ஒரே ஊரில் அருகருகில் தனித்தனிப் பள்ளிகள் இருந்த காரணத்தால் அவை அப்படியே தொடர்ந்தன. இருபாலரும் ஒன்றாகப் படிக்கலாம், ஆனால் தனித்தனிப் பகுதியில் உட்கார வேண்டும், பேசிக்கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடுகள் அமைந்தன. பேசிக்கொள்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. தனித்தனிப் பகுதி என்பது இன்றுவரை நிலவுகிறது. இப்போது ‘ஏன் தனித்தனிப் பகுதி?’ என்னும் கேள்வி வந்துவிட்டது. வகுப்பறை தவிர்த்த அரங்கம் முதலிய இடங்களில் சேர்ந்து உட்கார்கின்றனர். சில பல்கலைக்கழகங்களில் தனிப்பகுதி முறை ஒழிந்துவிட்டதையும் பார்க்க முடிகிறது.

1990கள் வரை தனித்தனிப் பள்ளிகளில் பயின்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களால் தம் காலத்து மதிப்பீடுகளைக் கடந்து வர முடியவில்லை. இருபாலர் கல்வி நிறுவனங்களில் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க அஞ்சுகின்றனர். பிள்ளைகளோ அவற்றையே விரும்புகின்றனர். ஆண்பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர்கூடப் பெண்பிள்ளைகளை அனுப்பத் தயங்குகின்றனர். ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வது, பேசுவது, நட்பாக இருப்பது, ஒருவர் வீட்டுக்கு ஒருவர் செல்வது ஆகியவற்றை எல்லாம் இயல்பாகப் பார்க்க முடியவில்லை. இந்தத் தலைமுறைக்கு அது இயல்பான விஷயம் என்பதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆசிரியர்களுக்கும் அந்த மனநிலையே இருக்கிறது. ஓர் ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டு நடந்து போனால், தொட்டு அடித்துக்கொண்டால், வாய் விட்டுச் சிரித்தால் அதைக் காணும் ஆசிரியரின் மனம் சுருங்கிப்போகிறது. ‘கலிகாலம்’ என்று முனகுகின்றார். ஏதாவது சந்தர்ப்பத்தில் அவர்களைப் பழிவாங்கும் எண்ணமும் மனதில் தோன்றிவிடுகிறது.

தம் காலத்து மதிப்பீடுகளைக் கொண்டே இந்த மாற்றத்தையும் பார்க்கின்றனர். அதனால் எப்போதும் கண்காணிப்பு, எச்சரிக்கை உணர்வு, குற்றப் பார்வை ஆகியவற்றுடன் இந்தத் தலைமுறையைக் காண்கின்றனர். பல ஊர்களில் பள்ளிப் படிப்புடன் பெண்பிள்ளைகளை நிறுத்தி விடுகின்றனர். உயர்கல்விக்குச் சென்றால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொள்வர் என்னும் அச்சமே காரணம். எதிர்பாலினருடன் இணைந்து பயிலும் வாய்ப்பு தமக்குக் கிடைக்காத பொறாமை உணர்வும் இதில் கலந்திருக்கிறது. தமக்குக் கிடைக்காத சுதந்திர வெளி அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கக் கூடாது என்பதே ஆழ்மன எண்ணம்.

அதேபோல நவீனக் கருவிகள் தரும் சுதந்திரத்தையும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘இன்றைக்குச் சமூகத்தில் நிலவுபவை அனைத்தும் சீர்கேடுகள்; அவற்றுக்குக் காரணம் செல்பேசிகள்’ என்பது பொதுச்சமூகத்தின் முடிவு. பொதுச்சமூகத்தில் இளைய தலைமுறைக்கு இடமில்லை. எதையும் தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இல்லை. சரி, செல்பேசிகளைத் தவிர்க்க முடியுமா? அது இயலாது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. செல்பேசிகளை எளிதாக இளைய தலைமுறையினர் கையாள்கின்றனர். முந்தைய தலைமுறைக்கும் பேசிகள் பெரிய வடிகாலாக இருக்கின்றன. ஆனால் கையாள்வது அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகளையும் வடிவங்களையும் பேசிகள் பெறுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள இயலாமல் பழந்தலைமுறை தடுமாறுகிறது. இளையவர்களோ சில நொடிகளில் அவற்றைக் கற்றுக்கொள்கின்றனர்.

எதுவும் கடந்து போகும்! - 9 - அடுத்த தலைமுறையிடம் கற்றுக்கொள்வோம்!

செல்பேசிகளை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடாது என்று பல கல்வி நிறுவனங்கள் தடை விதித்த காலம் உண்டு. கொரானோப் பெருந்தொற்றுக்குப் பிறகு அப்படி ஒரு விதியை யாராலும் போடவும் முடியாது; கடைப்பிடிக்கவும் இயலாது என்னும் நிலை. இப்போது நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டாலும் செல்பேசிப் பயன் பாட்டை விடச் சாத்தியமில்லை. வகுப்புகள் தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள், குறிப்புகள் என அனைத்தையும் செல்பேசி வழியாகப் பகிர்ந்தாக வேண்டிய நிலை. உடனடித் தகவல் தொடர்புக் காலம்.

நகலெடுக்கும் வசதி இல்லாத காலத்தில் அனைத்தையும் கையால் எழுதினோம். சில பாடப்புத்தகங்கள் அச்சில் இருக்காது. ஒரே ஒரு பிரதியைக் கொண்டு ஆசிரியர் சொல்லச் சொல்லக் குறிப்புகள் எழுதுவோம். கிட்டத்தட்ட முழுப் புத்தகத்தையும் எழுத வேண்டி யிருந்தது. நகலெடுக்கும் வசதி வந்தவுடன் எழுத்துச் சுமை குறைந்தது. அப்போது எங்கள் ஆசிரியர்கள் ‘எழுத்துப் பழக்கமே இல்லாத போயிருமே, அப்பறம் எப்படித் தேர்வு எழுதுவீங்க?’ என்று கவலைப் பட்டார்கள். இப்போது நகலும் வேண்டியதில்லை. செல்பேசிகளில் நூல்களைச் சேமித்து வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. ஏதோ ஒரு தளத்திற்குச் சென்று பி.டி.எப் எடுத்துக் கொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் கற்பித்தலுக்குப் பேசியைப் பயன்படுத்தும் உத்தியை எனக்குச் சொல்லிக்கொடுத்தவர் ஒரு மாணவர். வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது அவர் தைரியமாக செல்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ‘என்னப்பா, பாடத்த கவனிக்காம செல்போன நோண்டிக்கிட்டு இருக்கற?’ என்று கேட்டேன். ‘நோண்டுதல்’ என்பது இழிவான சொல். ‘நோண்டறயா?’, ‘நோண்டிக்கிட்டு இருக்கறயா?’ என்று ஏளனமாகக் கேட்கும் வழக்கு உண்டு. அதைத்தான் நானும் பயன்படுத்தினேன். நான் நடத்திக்கொண்டிருந்த குறுந்தொகைப் பாடல் பகுதியைத் தன் பேசியில் எடுத்துக்காட்டி அம்மாணவர் எனக்கு விளக்கினார்.

பி.டி.எப் வடிவம் போக நான்கைந்து தளங்களில் வெவ்வேறு உரைகளையும் காட்டினார். என் பேசியில் எப்படி எடுப்பது, சேமிப்பது என்பவற்றையும் சொல்லிக் கொடுத்தார். அவரிடம் கற்றுக்கொண்டேன். அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பலமுறை கேட்டுக் கேட்டுக் கற்றுக்கொண்டேன். இந்த விஷயத்தில் எனக்கு அவர்தான் ஆசிரியர். பின்னர் நான் புத்தகம் எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டேன். புத்தகம் இல்லாத மாணவர்களைக் கடிந்துகொள்வதையும் நிறுத்தினேன். பெரும்பாலான மாணவர்களிடம் பேசி இருந்தது. அவர்களுக்கு அனுப்பி வைக்க முடிந்தது. புலனம் வந்தவுடன் இது இன்னும் எளிமை ஆயிற்று. ஆனால் இன்று வரைக்கும் ‘பிள்ளைங்க கையில இருந்து செல்போனப் புடுங்கணும். அப்பத்தான் நாடு உருப்படும்’ என்று கவலையுடனும் கோபத்துடனும் பேசுவோர் இருக்கின்றனர்.

செல்பேசி என்றதும் ஆபாசப் படங்கள், தளங்கள்தான் முந்தைய தலைமுறையின் நினைவுக்கு வருகின்றன. இந்தத் தலைமுறைக்கோ பேசியில் அதுவும் ஒரு பகுதி, அவ்வளவுதான். ஆற்றங்கரையில் நின்ற பெண்ணைத் தன் தோள் மேல் தூக்கிச் சென்ற குருநாதர் அடுத்த கரையில் இறக்கிவிட்டுவிட அதை ஏற்றுக்கொள்ள முடியாத சீடனோ நாள் முழுக்க அந்தப் பெண்ணை மனதில் சுமந்த கதையே நினைவுக்கு வருகிறது. பாடநூல்கள் பத்தாண்டு இருபதாண்டுப் பழைமையுடன் இருக்க, இன்றைய தேவைக்கான கல்வியை இணையம் வழியாக எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர்.

திரைப்படத்தை மோசமானதாகக் கருதிய காலத்தில் திருட்டுத்தனமாகப் பார்க்க நேர்ந்த தலைமுறையினருக்கு, தாம் விரும்பும் படத்தை உடனே கைப்பேசியில் பார்த்துக் களிக்கும் தலைமுறையைப் பார்க்கத் தாங்க முடியவில்லை. திரைப்படம் என்பது உயர்ந்த கலைவடிவம் என ஏற்கப்பட்டுப் பார்வை மாறிவிட்டதுகூட முந்தைய தலைமுறைக்குத் தெரியவில்லை. சிறுசுற்றுலா செல்ல ஏற்பாடானபோது ஓரிடத்தில் மாணவர் ஒருவர் வந்து எனக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தைவிட சென்று சேரத் தாமதம் ஆகிவிட்டது. போனதும் ‘சாரிப்பா. வர நேரம் ஆயிருச்சு. காத்திக்கிட்டு இருக்க வெச்சிட்டன்’ என்றேன். அவர் சொன்னார், ‘அதான் கைல போன் இருக்குதே, ஒன்னும் பிரச்சின இல்லைங்கய்யா.’ காத்திருந்து வெறுத்துப்போன காலமும் காக்க வைத்து வசை வாங்கிய நாள்களும் நினைவுக்கு வந்தன. காத்திருப்பு ஒரு விஷயமே இல்லை என்றாகிவிட்டது. எத்தனை பெரிய விடுதலை!

தொலைக்காட்சி வந்ததும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் போய்விட்டது என்று கவலைப்பட்ட தலைமுறையினர் உண்டு. இப்போது கைப் பேசியால் வாசிப்புப் பழக்கம் போய்விட்டது என்று புலம்புகின்றனர். ஆனால் புத்தகக் கண்காட்சிகளில் இளைய தலைமுறையினர்தான் மிகுதியாகப் புத்தகங்கள் வாங்குவதைப் பார்க்க முடிகிறது. நூல் விமர்சனத் தளங்களை இளையவர்கள் நடத்துகின்றனர். நூல்களை அறிமுகப்படுத்தி அவர்கள் பேசும் பேச்சு அழகாக இருக்கிறது. மின்னூல்களை வாசிக்கின்றனர். தினமும் முகநூலிலோ புலனத்திலோ சில வரிகளையாவது எழுதுகின்றனர். பல பேர் எழுதுவதை வாசிக்கின்றனர். முந்தைய காலத்தைவிட அதிக புத்தகங்கள் விற்பனையாகின்றன. பதிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எழுத்தாளர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கிறது. என்றைக்கும் இல்லாத வகையில் இவ்வாண்டு கவிதைத் தொகுப்புகள் நிறைய விற்பனையாகிக் கவிஞர்களுக்கு உரிமைத்தொகை கிடைத்ததை முகநூலில் பதிவிட்டு மகிழ்ந்தவர்களைக் காண முடிந்தது.

எதுவும் கடந்து போகும்! - 9 - அடுத்த தலைமுறையிடம் கற்றுக்கொள்வோம்!

ஆனாலும் ஏன் முந்தைய தலைமுறை புலம்பிக் கொண்டேயிருக்கிறது? கல்வி பயின்றது ஒரு சாதனை; வேலை செய்வது ஒரு சாதனை; குடும்பம் நடத்துவது ஒரு சாதனை என இன்று சாதாரணமாகிவிட்ட செயல்களை எல்லாம் சாதனையாகப் பாவித்து முப்பது வயதுக்குள் முடங்கிப்போனதே காரணம்.

- இடைவெளி இணைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism