Published:Updated:

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

முன்னோர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் மொழி

தமிழர்க்கு நெடிய வரலாறு இருக்கிறது; ஆனால் வரலாற்றுணர்வு இல்லை. அது இலக்கியத் தளத்திலும் பலவிதமாக வெளிப்பட்டுள்ளது.

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

தமிழர்க்கு நெடிய வரலாறு இருக்கிறது; ஆனால் வரலாற்றுணர்வு இல்லை. அது இலக்கியத் தளத்திலும் பலவிதமாக வெளிப்பட்டுள்ளது.

Published:Updated:
முன்னோர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் மொழி

செவ்வியல் இலக்கியப் பிரதி ஒன்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூட நம்மிடம் கிடையாது. தமிழின் பெருமைக்கு ஆதாரமான நூல் திருக்குறள். இந்நூலை இயற்றிய திருவள்ளுவர் பற்றி ஏதேனும் உருப்படியான தகவல் இருக்கிறதா? சொல்லப்படும் எல்லாமும் ஊகங்கள்தான். அவையன்றி திருவள்ளுவரைப் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. இராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றியும் கதைகளுக்குக் குறைவில்லை. திருத்தக்கதேவர், ஔவையார், காளமேகம் எனப் பெருங்கவிஞர்களைப் பற்றியெல்லாம் விதவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன.

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

ஔவையார் பற்றித் திரைப்படம் எடுத்தபோது, ‘ஜெமினி’ எஸ்.எஸ்.வாசன் பல பேரை எழுதித் தரச் சொல்லி வாங்கினார் என்று சொல்வதுண்டு. அவர் அலுவலகத்தின் ஆபீஸ் பையனாக வேலை செய்தவரிடமும் கேட்டு வாங்கினார் என்பது ஒரு கேலி. எனக்கு அதை வேறுவகையில் பார்க்கத் தோன்றுகிறது. ஔவையார் பற்றி அத்தனை கதைகள் உள்ளன. அவற்றில் எழுதப்பட்டவை குறைவாகவும் மக்கள் வழக்கில் இருப்பவை மிகுதியாகவும் இருந்தன. ஆகவே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை உண்டு. நிலாவில் ஔவைப்பாட்டி வடை சுடுகிறார் என்பது தொடங்கி விரியும் கதைகள்.

சமகால இலக்கியம் பற்றியும் இத்தகைய கதைகள் உள்ளன. தமிழின் முதல் வட்டார நாவல் ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’. இந்த நாவலை அவர் எழுதிய காரணம் பற்றிய இரு கதைகள் உள்ளன. இந்நாவல், 1942-ல் வெளியானது. அது இந்தியச் சுதந்திரம் முடிவாகி, அதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பாகிஸ்தான் பிரிவினை முக்கியப் பிரச்னையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பிரிவினை கூடாது என்பது காந்தியின் கருத்து. பிரிவினை தேவை என்பது ஜின்னாவின் கருத்து. காந்தியின் மீது மிகுந்த பற்றுகொண்டவர், காங்கிரஸ்காரர் ஆர்.சண்முகசுந்தரம். ஓர் எழுத்தாளராக உருவாகிக்கொண்டிருந்த இளைஞருக்கே உரிய துடிப்போடு பிரிவினைக்கு எதிராக ஒரு நாவல் எழுத வேண்டும் எனத் தீர்மானித்து ‘நாகம்மாள்’ எழுதினார். இது ஒரு கதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலவன் பாடினான். பாடல் முடிந்ததும் பந்தல் தீப்பற்றி எரிந்தது. அரசன் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்தான்.

இருபது வயது இளைஞராகிய ஆர்.சண்முகசுந்தரம் வட்டார மொழியில் எழுதிய சில சிறுகதைகள் ‘மணிக்கொடி’ இதழில் வெளியாயின. அவற்றை வாசித்த கு.ப.ராஜகோபாலன் ‘உங்கள் பாஷையில் ஒரு நாவல் எழுதலாமே’ என்று சொன்னதில் உத்வேகம் பெற்று எழுதப்பட்ட நாவல்தான் ‘நாகம்மாள்.’ இது இன்னொரு கதை. இக்கதைகள் எவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ளன? அவர்கள் எழுதியுள்ள நூல்களே முதன்மைக் காரணம். நூல்களின் விஷயம், சுவை, பயில்வு, பரவல் ஆகியவையே அவர்களைப் பற்றிய கதைகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. கதைகளின் நுனியைப் பிடித்துக்கொண்டு சென்றால், அடியே ‘இலக்கியச் சுவை’ என்னும் அம்சத்தை எளிதில் எட்டிவிடலாம். ‘நாகம்மாள்’ பற்றிய கதைகளுக்குச் சில ஆதாரங்களும் இருக்கின்றன. எனினும் நாவலின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டவை அக்கதைகள்.

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

பிரிவினை எண்ணம் எழுவதால் ஒரு குடும்பம் எவ்வாறு சிதைந்துபோகிறது என்பதே நாகம்மாளின் அடிப்படை. அந்நாவல் எழுந்த காலகட்டத்திற்குப் பொருந்திய பிரச்னை. அதுவே முதல் கதையை உருவாக்கியிருக்க வேண்டும். ‘நாகம்மாள்’ நாவலின் சிறப்புக்கு முக்கியக் காரணம் அதன் வட்டார மொழி. இரண்டாம் கதைக்கு இது அடிப்படை. இவ்விதம் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ ஆகிய நாவல்களுக்கும் பல கதைகள் இருக்கின்றன. ‘கம்பராமாயணம்’ பலராலும் விரும்பிப் பயிலப்படுகின்ற நூல். அந்நூலின் நயச் சிறப்புகளே பல கதைகளாக உலவுகின்றன. ஒரு சொல்லுக்குக் கதை, ஒரே ஒரு பாடலுக்குக் கதை, ஒரு படலத்துக்குக் கதை, ஒரு நூலுக்குக் கதை என இலக்கியக் கதைகள் பல. பழந்தமிழ் நூல் எனினும் நவீன இலக்கியம் எனினும் கதைகளின் மூலகாரணம் இலக்கியச் சுவைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலக்கியக் கதைகள் எல்லாவற்றையும் விஞ்சும்படியான ஒரு கதையைப் பெற்றிருக்கும் இலக்கியம் ‘நந்திக் கலம்பகம்’. இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ அரசனைச் சிறப்பிக்கும் நோக்குடன் பாடப்பட்ட நூல். நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு நான்கு மகன்கள். ஆனால் அவர்களுக்குப் பட்டம் சூட்டாமல் இரண்டாம் மனைவிக்குப் (அரசனுக்குரிய பரத்தை என்றும் சொல்வர்) பிறந்த நந்திவர்மனுக்கு ஆட்சியைக் கொடுத்தான் அரசன். பட்டத்தரசியின் மகன்கள் நால்வரும் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடத் திட்டம் தீட்டினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் முயன்றனர். ஒருவன் மந்திரம் கற்றுக்கொண்டான். இன்னொருவன் போர் முறைகளைக் கற்றான். மூன்றாமவன் தந்திர உத்திகளைக் கற்றான். நான்காம் மகன் தமிழ் கற்றுப் புலவன் ஆனான். புலவன் தன் தமையனாகிய நந்திவர்மன்மீது ‘அறம் வைத்து’ ஒரு நூல் பாடினான். ஒருவன் அழிய வேண்டும் என்பதற்காகத் தீய சொற்கள், தீய பொருத்தங்கள் ஆகியவற்றை அமைத்துப் பாடும் முறைக்கு ‘அறம் பாடுதல்’ எனப் பொருள். திறனுடைய புலவன் அறம் பாடினால் அது பலிக்கும் என்பது நம்பிக்கை. ஜெயமோகன் எழுதிய ‘அறம்’ என்னும் கதை இந்நம்பிக்கையின் தொடர்ச்சி இன்று வரைக்கும் இருப்பதைக் காட்டுகிறது.

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

நந்திவர்மன் மீது அறம்வைத்துப் பாடிய அந்நூல்தான் ‘நந்திக் கலம்பகம்’. பாடிய நூலை அரங்கேற்ற இயலவில்லை. அப்புலவனுக்கு ஒரு தாசியோடு தொடர்பிருந்தது. அவளோடு சேர்ந்திருக்கும் சமயங்களில் தன் நூலிலிருந்து ஒவ்வொரு பாடலை எடுத்துச் சொல்லி அவளுக்குக் கற்றுக் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கற்றுக்கொண்ட பாடலிலிருந்து ஒன்றை ஒருநாள் இரவில் அவள் தன் வீட்டு உப்பரிகையில் இருந்தபடி பாடினாள். அப்போது மாறுவேடத்தில் நகர்வலம் வந்த நந்திவர்மன் அப்பாடலைக் கேட்டான். அதன் சுவையில் மனம் பறி கொடுத்தான். கலம்பகப் பாடல் ஒவ்வொன்றிலும் நந்தியின் பெயர் வரும். அவள் பாடிய பாடல் காதலன் பிரிவின்போது துயர் பொறுக்க முடியாத காதலி பாடுவதாக அமைந்ததாகும். இதை அகப்பொருள் இலக்கணம் ‘தலைவி இரங்கல்’ என்று கூறும். நந்திவர்மனை மட்டுமல்ல, கேட்கும் யாரையும் ஈர்க்கும் அந்த அற்புதப் பாடல் இது:

‘செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

சந்தனமென்று யாரோ தடவினார் – பைந்தமிழை

ஆய்கின்ற கோன்நந்தி ஆகம் தழுவாமல்

வேகின்ற பாவியேன் மெய்.’

‘தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்து வாசிப்பவனாகிய நந்திவர்மன் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டான். அவன் மார்பைத் தழுவும் வேட்கைகொண்டு என் உடல் காமத்தீயில் வேகின்றது. உடல் வெம்மையைத் தணித்துக் குளிர்விப்பதற்காக என் தோழியரில் யாரோ ஒருத்தி சந்தனத்தைக் கொண்டுவந்து என் உடலில் தடவுகிறாள். சந்தனமா? செந்தழலைப் பிழிந்தெடுத்த சாறு அது’ என்பது இந்தப் பாடலின் பொருள். பைந்தமிழை ஆய்கின்ற நந்தி, வேகின்ற பாவி, செழுஞ்சீதச் சந்தனம் ஆகிய அழகிய சொற்சேர்க்கைகள் இதில் அமைந்திருக் கின்றன. அவற்றைவிடவும் இப்பாடலை மேன்மைப்படுத்துவது ‘செந்தழலின் சாறு’ என்னும் படிமம்தான். பிழிய முடியாத நுண்பொருளாகிய தீ, ஒரு தேனடைபோலக் காட்சிப்படுத்தப்படுகிறது. அதிலிருந்து பிழிந்தெடுத்த சாறு எப்படிச் செழுஞ்சீதச் சந்தனம் ஆகும்? ஏற்கெனவே வேகின்ற உடலின் மீது மேலும் யாராவது தீச்சாற்றைப் பூசுவார்களா? பூசியவள் யார்? நந்தி நினைவில் உடலும் மனமும் தகிக்கும் அவளுக்கு அது யாரென்றே தெரியவில்லை. ‘யாரோ தடவினார்’ என்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாசி பாடிய இப்பாடலைத்தான் நந்திவர்மன் கேட்டான். இப்பேர்ப்பட்ட பாடலை அதுவரைக்கும் அவன் கேட்டதில்லை. யார் எழுதிய பாடல் இது, இந்த ஒரு பாடல்தானா என்றெல்லாம் அறிய விரும்பினான். மறுநாள் அந்தத் தாசியை அரண்மனைக்கு அழைத்து விசாரித்தான். அவள், விவரம் சொன்னாள். ‘கலம்பகம்’ என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பல வண்ண மலர்களைச் சேர்த்துக் கட்டிய கதம்ப மாலை போலப் பலவிதமான கருப்பொருள்களையும் செய்யுள் வடிவங்களையும் பலவகை உறுப்புகளையும் பயன்படுத்தி எழுதப்படும் இலக்கிய வகை அது. கடவுளின் மேல் பாடப்பட்டால் நூறு பாடல்கள்; அரசன் மீது பாடப்பட்டால் தொண்ணூறு பாடல்கள். இந்த வகையில் நந்திக் கலம்பகமே முதல் நூல். ஆகவே இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் அதற்கு இல்லை. தன்மீது பாடப்பட்ட இனிய பாடல்கள் கொண்ட நூல் அது என நந்திவர்மன் அறிந்தான். ஒரு பாடலே இத்தனை சுவையுடன் இருக்கிறதே, மீதமுள்ள பாடல்கள் எல்லாம் இன்னும் எவ்வளவு சுவையுடன் இருக்குமோ என வியந்தவன் நூல் முழுவதையும் கேட்க விரும்பினான்.

முன்னோர் மொழி - 4 - செந்தழலின் சாறு

சில நாள்களுக்குப் பிறகு, தாசியைத் தேடி வந்த புலவனைக் காவலர்கள் அரசனிடம் அழைத்து வந்தனர். கலம்பகத்தின் எல்லாப் பாடல்களையும் கேட்க வேண்டும் எனப் புலவனிடம் கோரிக்கை வைத்தான் அரசன். புலவனோ நிபந்தனை விதித்தான். தான் பாடிய கலம்பகம் நூறு பாடல்கள் கொண்டது; அவற்றைக் கேட்க வேண்டுமானால் அரண்மனையிலிருந்து மயானம் வரைக்கும் நூறு பந்தல் அமைக்க வேண்டும்; நூறாவது பந்தல் சிதையாக இருக்க வேண்டும்; சிதையின் மேல் படுத்தபடி அரசன் நூறாவது பாடலைக் கேட்க வேண்டும்; சிதை எரிந்து அரசன் இறக்க நேரும் எனப் புலவன் தெரிவித்தான். ஒருபாடல் சுவை கொடுத்த மயக்கத்திலிருந்து விடுபடாத நந்திவர்மன் புலவனின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டான். யார் தடுத்தும் அவன் கேட்கவில்லை. புலவன் நிபந்தனைப்படி பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பந்தலின் முன்னும் ஒவ்வொரு பாடலைப் புலவன் பாடினான். பாடல் முடிந்ததும் பந்தல் தீப்பற்றி எரிந்தது. அரசன் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்தான். இறுதியாகச் சிதையின் மேல் ஏறிப் படுத்தான். அப்போது பாடப்பட்ட பாடல், அவன் இறப்புக்காகப் பாடப்பட்ட கையறுநிலை என்னும் இரங்கல் பாடல். அப்பாடல் பாடப்பட்டதும் சிதை தீப்பற்றி எரிந்தது. அருமையான இலக்கியத்தைக் கேட்ட நிறைவுடன் நந்திவர்மன் உயிர் துறந்தான். அப்பாடல் இது:

‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

வையகம் அடைந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்தவுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்

செந்தழல் புகுந்ததுன் மேனி

யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்

எந்தையே நந்தி நாயகனே.’

கலைஞன் ஒருவன் இரங்கிப் பாடுவதாக அமைந்த இப்பாடல் மிகுந்த நுட்பம் வாய்ந்தது. நந்திவர்மனின் சிறப்புகள் ஒவ்வொன்றும் அவன் இறப்புக்குப் பிறகு உயர்ந்த இடம் அடைந்து நிலைபெற்றன என்பது ஒருவகைப் பொருள். ‘நந்தியாகிய நீ இறந்தாய்; செந்தழலில் உன் மேனி எரிந்தது. இப்போது நீ எங்கே? உன் முகம் நிலாவாயிற்று; உன் புகழ் பூமிக்காயிற்று; வீரமோ புலியைச் சேர்ந்தது; கொடை கொடுக்கும் கரங்கள் தேவலோகத்துக் கற்பக மரத்தை அடைந்தன; உனக்குச் சேவகம் செய்துவந்த செல்வலட்சுமி திருமாலைச் சென்று சேர்ந்தாள்; நீ இல்லாததால் ஆதரிக்க யாருமற்று நான் வறுமை அடைந்தேன். என் வறுமையைப் போக்கிக்கொள்ள எங்கே செல்வேன் என் தந்தையும் தலைவனுமாகிய நந்தியே’ என்பது அது. இல்லாதிருந்தவை எல்லாம் பெற்று நன்மை அடைந்தன; நான்தான் ஒன்றும் பெறாதவனாக இருக்கிறேன் என்பது உட்கிடை.

இன்னொரு வகையிலும் பொருள் சொல்லலாம். ‘உலகத்தில் உயர்ந்த அம்சங்களைப் பெற்றிருந்த ஒவ்வொன்றும் அவற்றை உனக்குக் கொடுத்துவிட்டுத் துயருற்றிருந்தன. உன் இறப்பால் அவை தத்தம் அம்சங்களை மீண்டும் பெற்று நிம்மதி அடைந்தன. நானும் என் வறுமையும்தான் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம்’ என்பதும் பொருந்துகிறது. ‘இந்த உலகத்தில் உயர்ந்த அம்சங்களைப் பெற்றிருந்தவை எல்லாம் அவற்றுக்குப் போட்டியாக நீ இருந்த காரணத்தால் சோபை அற்றிருந்தன. இப்போது போட்டி இல்லை; அவையவை அவற்றுக்குரிய பெருமையைப் பெற்றுவிட்டன. எனக்குத்தான் ஒன்றும் கிடைக்காமல் என் வறுமையோடு அல்லல் படுகிறேன்’ என்றும் விளக்கலாம். நந்திவர்மனின் பெருமைகளைப் பலவிதமாக எடுத்துரைத்து வருந்தும் கையறுநிலைப் பாடல். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கையறுநிலைப் பாடல்களை வேண்டுமானால் இதற்கு நிகராகச் சொல்லலாம். இப்படி ஒரு பாடலுக்காக உயிரைக் கொடுக்கலாம் என நந்திவர்மனுக்குத் தோன்றியிருக்கிறது. கலைமனம்கொண்ட எவருக்கும் தோன்றும்தான்.

இலக்கியச் சுவைஞனான அரசன் ஒருவன், தன் உயிரைக் கொடுத்து வாழ்வித்த இலக்கியம் ‘நந்திக் கலம்பகம்’.

இலக்கியச் சுவைஞனான அரசன் ஒருவன், தன் உயிரைக் கொடுத்து வாழ்வித்த இலக்கியம் ‘நந்திக் கலம்பகம்.’ இந்தக் கதை பெரும்புனைவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தப் புனைவுக் கட்டமைப்புக்கு நந்திக் கலம்பகப் பாடல்களின் சிறப்பே காரணம். இந்த இரு பாடல்கள் மட்டுமல்ல, இன்றைக்கு 114 பாடல்கள் நந்திக் கலம்பகப் பாடல்களாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் சிலவற்றை மிகைப்பாடல்கள் எனக் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் எல்லாப் பாடல்களும் மிகுந்த படைப்பாற்றலோடு பாடப்பட்டவை. ஒரு பாடலைக்கூட இது தேறாது என்று ஒதுக்க முடியாது. பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப்போல வரும் வெண்ணிலாவே, ஓடாத தேரில் வெறும் கூடு வருகுதென்று கூறுங்கோள், காமுகர் பயங்கொளப் புகுந்தது பருவ வாடை, உரை வரம்பிகந்த உயர்புகழ்ப் பல்லவன் என்பன போலக் காணும் இடமெல்லாம் நகரவியலாமல் கட்டிப்போடும் தொடர்களைக்கொண்டவை இந்நூல் பாடல்கள். தேர்ந்த சொல்லாட்சி, வியக்கும் சொற்சேர்க்கை, ஆற்றொழுக்கான தொடரமைப்பு, தித்திக்கும் சந்தம், தமிழ் இலக்கிய இலக்கண மரபில் செம்மாந்த புலமை எல்லாம் இயைந்து உச்சபட்சப் படைப்பாற்றலோடு எழுதப்பட்ட நூல் இது.

இத்தகைய நூலுக்கு நல்ல பதிப்பும் இதுவரை வரவில்லை. 1872-ம் ஆண்டு ‘விவேக விளக்க அச்சுக் கூடம்’ வெளியிட்டதுதான் முதல் பதிப்பு எனத் தெரிகிறது. பதிப்பாசிரியர் யார் என்பது தெரியவில்லை. பிறகு 1927-ம் ஆண்டு பண்டித அ.கோபாலையர் பதிப்பித்து மதுரை தமிழ்ச் சங்க வெளியீடாக வந்துள்ளது. பின்னர் பலர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள். எனினும் இத்தனை உயரிய நூலுக்குச் ‘செம்பதிப்பு’ ஒன்று இதுவரை வரவில்லை என்பது வருத்தம் தருகிறது. அது மட்டுமல்ல, இத்தனை சிறப்புடைய நூலைப் படைத்த ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நந்திவர்மனின் தம்பி என்று கூறுகின்றனர்; பெயர் கிடைக்கவில்லை. என்ன செய்வது, கதைகளில் வாழ்கிறது தமிழ் இலக்கியம்.

பார்வைக்குச் சில நூல்கள்:

1. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பாகம், 2005, மறுபதிப்பு, சென்னை, தி பார்க்கர்.

2. சோ.அருணாசல தேசிகர் (உரையாசிரியர்), நந்திக் கலம்பகம், 1968, மூன்றாம் பதிப்பு, சென்னை, பாரி நிலையம்.

3. பு.சி.புன்னைவனநாத முதலியார், செ.ரெ.இராமசாமி பிள்ளை (உரையாசிரியர்கள்), நந்திக் கலம்பகம், 1968, மறுபதிப்பு, கழக வெளியீடு.

4. தமிழ்ப் பெரியசாமி (உரையாசிரியர்), நந்திக் கலம்பகம், 2013, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

5.கதிர்முருகு (உரையாசிரியர்), நந்திக் கலம்பகம், 2006, சென்னை, சீதை பதிப்பகம்.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism