Published:Updated:

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

உ.வே.சாமிநாதையர்
பிரீமியம் ஸ்டோரி
உ.வே.சாமிநாதையர்

காலத்தைக் கடந்து நிற்பது, நிலைபேறு உடையது நல்ல இலக்கியம் என்று சொல்வதுண்டு. காலத்தைக் கடந்து நிற்பது என்றால் என்ன அர்த்தம்? காலம் இலக்கியத்தைத் தூக்கிச் சுமந்து வருவதில்லை. காலம் என்பது ஆகுபெயர். அது தலைமுறைகளைக் குறிக்கும்.

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

காலத்தைக் கடந்து நிற்பது, நிலைபேறு உடையது நல்ல இலக்கியம் என்று சொல்வதுண்டு. காலத்தைக் கடந்து நிற்பது என்றால் என்ன அர்த்தம்? காலம் இலக்கியத்தைத் தூக்கிச் சுமந்து வருவதில்லை. காலம் என்பது ஆகுபெயர். அது தலைமுறைகளைக் குறிக்கும்.

Published:Updated:
உ.வே.சாமிநாதையர்
பிரீமியம் ஸ்டோரி
உ.வே.சாமிநாதையர்

டுத்தடுத்த காலத்தைச் சேர்ந்த தலைமுறையினரும் ஓர் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசித்து வருவார்களானால், அவ்விலக்கியம் தொடர்ந்து வாழ்ந்துவரும். ஒருகாலத்தில் இயற்றப்பட்ட நூல், அக்காலத்து வாழ்க்கை முறை, மனவோட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஆகவே சமகாலத்தவர் ஆர்வத்துடன் வாசிக்க நியாயமுண்டு. அடுத்தடுத்த காலத்திலும் அதாவது பல நூற்றாண்டு கடந்தும் ஒரு நூல் வாசிக்கப்படுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? பல காரணங்கள் இருக்கலாம். மனித மனத்தின் காலங்கடந்த பொதுத்தன்மையைப் பற்றி வைத்திருப்பதாலும் எப்போதும் ரசிக்கத்தக்க கற்பனைகளைக் கொண்டிருப்பதாலும் நிலைபேறு அடையலாம் என்பதும் இலக்கியத்தின் கூறுகளான கற்பனை, உணர்ச்சி, சொல்லாட்சி முதலியவற்றைச் சிறப்பாகக் கையாண்டி ருக்கும் ஒரு நூல், கட்டாயம் காலங்கடந்து நிற்கும் என்பதும் உண்மைதான்; ஆனால் ஓரளவே. முழு உண்மை அல்ல.

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

ஒரு நூல் காலங்கடந்து வர இலக்கியமல்லாத புறக்காரணிகள் பலவும் உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும்போது, அதற்கு மதம் முக்கியமான காரணமாக இருப்பது தெரிகிறது. சமணக் காப்பியமாகிய ‘சீவக சிந்தாமணி’யைப் பதிப்பிக்கத் தொடங்கிய உ.வே.சாமிநாதையர், அந்நூல் கதை உட்பட எதுவும் புரியாமல் குழம்பித் தவித்தார். அப்போது கும்பகோணத்தில் சமணர்கள் வசிக்கிறார்கள் என்பதை நண்பர் ஒருவர் மூலமாக அறிந்து, அவர்கள் தெருவுக்கு நண்பருடன் போனார். ஒரு வீட்டில் வாழை, தோரணம் எல்லாம் கட்டியிருப்பதைக் கண்டார். விசாரித்தபோது ‘சீவக சிந்தாமணி’ப் பாடமும் பாராயணமும் ஆறு மாதமாக நடந்துவருவதை அறிந்தார். அங்கிருந்த சமணர்கள் மூலமாகவே உ.வே.சா.வுக்கு அந்த நூல் பற்றிய தெளிவு பிறந்தது. ‘சீவக சிந்தாமணி’யை ஓர் இலக்கியமாக அல்லாமல், சமண மத நூலாகக் கருதியே அம்மதத்தினர் போற்றிப் பாராயணம் செய்துவந்தனர். அதன் காரணமாக அந்நூல் பாதுகாக்கப்பட்டது. மதக் கருத்துகளைச் செய்யுள் நடையில் பாடிவைத்த எத்தனையோ நூல்கள் இலக்கியச் சிறப்பில்லாமலும்கூடக் காலத்தைக் கடந்துவந்திருக்கின்றன; அவற்றை இன்றைக்கும் மடங்கள் உள்ளிட்ட மத நிறுவனங்கள் தொடர்ந்து அச்சிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

மதத்தின் காரணமாக அழிந்த நூல்களும் உள்ளன. ஒரு மதத்தைச் சார்ந்தவர், இன்னொரு மதம் சார்ந்த நூலை (அது இலக்கியமாகவே இருப்பினும்) வாசிக்கக் கூடாது என்னும் வழக்குக் கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. மதம் செல்வாக்கு இழக்கும்போது, அம்மதம் சார்ந்த நூல்கள் அனைத்துமே செல்வாக்கு இழப்பதும் வாசிப்பிலிருந்து விலகிப்போவதும் அழிவதும் இயல்பாக நடந்திருக்கின்றன. அதைக் கடந்து சில நூல்கள் தப்பி வருவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்கோடு இருந்தமைக்குச் சான்றுகள் நிறைந்துள்ளன. அம்மதம் சார்ந்து பலவகை நூல்கள் உருவாகியிருப்பதும் தெரிகிறது. ஆனால் இன்றைக்கு ‘மணிமேகலை’ காப்பியமும் ‘வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலுமே காலங்கடந்து வந்திருக்கின்றன. பௌத்த சமயத் தத்துவங்களை மிகச் சிறப்பாகத் தமிழில் தந்திருக்கும் ‘மணிமேகலை’ அதன் காரணமாகவே காணாமல் போயிருக்கக்கூடும். ஆனால் வெகுஜன வழக்காகப் பரவிவிட்ட சிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைத் தொடர்ச்சியாக ‘மணிமேகலை’ இருப்பதாலேயே அது காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசர்களைப் பாடும் நூல்கள் அரச பரம்பரையினரால் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘பதிற்றுப்பத்து’, ‘பரிபாடல்’ ஆகியவற்றை அக்கோணத்தில் பார்க்கலாம். வகைப்பாட்டுக்குள் அடக்கப்பட்ட நூல்கள் அதன் காரணமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றன. ‘பதினெண் கீழ்க்கணக்கு’ எனப்படும் பதினெட்டு நூல்களில் பல இவ்வகைப்பாட்டுக்குள் அடங்காமல் இருந்திருந்தால், காலங்கடந்து வந்திருக்குமா என்பது ஐயமே. ஏதோ ஒருவிதத்தில் முக்கியமான தகவலைப் பொதிந்து வைத்திருக்கும் நூல் அத்தகவல் காரணமாகவே வாழ்வதுண்டு. ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் இலக்கண நூல், பெரும்பாலும் பயிலப்படுவதில்லை. ஆனால் அதன் உரையில் இடம்பெறும் முச்சங்கம் பற்றிய தகவலின் காரணமாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இலக்கணத்தால் காப்பாற்றப் படுவதும் உண்டு. சங்க இலக்கிய அகநூல்கள் பலவும் தொல்காப்பிய இலக்கணத்திற்குச் சான்றாவன. தொல்காப்பியத்தைப் பயில்வோர், சங்க இலக்கியம் நோக்கிச் செல்வது தவிர்க்க இயலாதது.

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

இவ்விதம் ஒருநூல் காலங்கடந்து நிலைபெற்று வருவதற்கு ஒற்றைக் காரணம் மட்டும் இல்லாமல் வெவ்வேறு காரணங்களும் சேர்ந்திருக்கக்கூடும். ஒருநூல் மறைந்து போவதற்கான காரணங்களையும் இவ்வாறு பலவாக நாம் காணலாம். சில நூல்கள் மறைந்துபோனதற்கான காரணத்தை அறிய இயலாமல் மயங்கித் தவிக்கவும் நேரலாம். இது சுவாரசியமான ஆய்வு விளையாட்டு. அப்படி விளையாடத் தமிழ் இலக்கியப் பரப்பில் நிறையக் களங்கள் உள்ளன. மறைந்துபோனமைக்கு எந்தக் காரணமும் பிடிபடாத ஒரு நூலின் பத்து விழுக்காடு பாடல்களை மட்டும் வாசக உள்ளம் ஒன்று காப்பாற்றித் தந்திருக்கிறது. அவற்றில் மூன்று பாடல்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

இயற்கை வருணனைக்குத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. சட்டென்று மனதைப் பற்றும் கற்பனை மூலமாக இரண்டு காட்சிகளை இணைத்து விந்தை செய்யும் பாடல் இது. சேர நாடு அது. நஞ்சுபோல உடனடியாகக் கொல்லும் கூரிய நுனி கொண்ட வேலைக் கையிலே வைத்திருக்கும் சேர மன்னன் ஆட்சி செய்யும் நாடு. எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் தவழும் நாடு. காரணம் அங்கே இருக்கும் நீர்வளம். நீரிருப்பின் அங்கே எல்லாம் இருக்கும். நீரின்றி அமையாது நாடு. நெல் நடுவதற்காக உழுதுபோட்டிருக்கும் சேற்று வயலில் தேங்கிய நீரில் ஆம்பல் என்னும் கொடிகள் அங்கங்கே முளைத்து வளர்ந்து செழித்தி ருக்கின்றன. ஒருநேரத்தில் அரக்குபோன்ற நிறம்கொண்ட செவ்வாம்பல் மொட்டுக்கள் வாயவிழ்ந்து விரிகின்றன. செக்கச் சிவந்த செவ்வாம்பல் மலர்கள் ஒருசேர மலர்ந்ததும், சிவப்பு நிறம் பிரதிபலித்து வயல்நீரே தீப்பற்றி எரிவதுபோலத் தோற்றம் தருகிறது. ஆம், நீர் தீப்பற்றி எரிகிறது.

ஆண்மகனாகிய மாறன் உன்மேல் அமர்ந்திருக்கும்போது, உனக்குக் கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?

அப்போது தம் குஞ்சுகளுடன் வயலுக்குள் இரை பொறுக்கிக்கொண்டிருக்கின்றன பறவைகள். குஞ்சுகளோ இந்தக் காட்சியைக் கண்டவை அல்ல. இவ்வுலகுக்குப் புதியவை. சட்டென வயல்நீர் தீப்பற்றி எரிவதைக் கண்டு அஞ்சுகின்றன. குஞ்சுகளும் குழந்தைகளும் புதிய காட்சிகளைக் கண்டு அஞ்சுவது இயல்பு. அவற்றின் அச்சத்தைப் போக்கும் பொருட்டு, பறவைகள் தம் கையாகிய இறக்கையை விரித்து, குஞ்சுகளை வேகமாக உள்ளே அழைத்துக்கொள்கின்றன. அச்சத்தோடு தாய்ப் பறவையைத் தேடி ஓடிவரும் குஞ்சுகளின் கதறல் ஓசை வெகுதூரம் கேட்கிறது. இத்தகைய தன்மை கொண்டது சேரநாடு எனக் கூறுகிறது இப்பாடல்.

‘அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

இயற்கையை உற்று நோக்கிச் செய்த அழகிய கற்பனை. அதை அனுபவிப்பதோடும் நின்றுவிடலாம். இப்படிச் செழுமை தரும் கற்பனையச்சத்தால் உருவாகும் கதறல் தவிர, வேறெந்தத் துயரக் கதறலும் இல்லாத நாடு அது எனக் கவிஞன் வைத்திருக்கும் உட்பொருளை அறிந்தும் இன்புறலாம்.

இந்தக் கவிஞர் சேர நாட்டு வளத்தை மட்டும் சொல்லவில்லை. சோழநாட்டு வளத்தையும் விவரித்துள்ளார். சோழ மன்னன் மேல் காதல்கொண்ட பெண்ணொருத்தி, நாரையைத் தூது செல்லக் கோருவதாகப் புனையப்பட்ட பாடல். சோழ மன்னன் வசிப்பது அந்நாட்டின் தலைநகராகிய உறந்தை நகரத்தில். அந்தப் பெண் வசிக்கும் ஊரிலிருந்து உறந்தை வெகுதூரம். அவள் தனியாகப் போக முடியாது. வீட்டாரும் அனுமதிக்க மாட்டார்கள். ஆகவேதான் இந்த ‘நாரை விடு தூது.’ எதைத் தூதாக அனுப்புகிறோமோ அதன் சிறப்புகளைப் புகழ்ந்து பாராட்டி விளிப்பது தூது மரபு. ‘செங்கால் மடநாராய்’ என்று விளிக்கிறாள் அப்பெண். சிவந்த கால்களையும் இளமையையும் உடைய நாரையே என்கிறாள். தோற்றத்தையும் இளமையையும் பாராட்டும் புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்? இந்தப் புகழ்ச்சியைக் கேட்ட நாரை, நிச்சயம் அவள் பேச்சைக் கேட்கும் என்று நம்பலாம்.

ஆனாலும் இந்த நாரை நாம் சொல்வதைக் கேட்டுத் தூது செல்லுமா என அவளுக்குச் சந்தேகம். ‘நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும்’ என்கிறாள். ‘நீயே என் தெய்வம்; தெய்வமாகிய உன் கால்களை என் இரண்டு கைகளால் பிடித்துக் கேட்கிறேன்’ என்கிறாள். அதற்குப் பின்னும் அவள் வேண்டுதலை நாரையால் மறுக்க முடியுமா? அபலை மனதின் காதலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காத உலகம் இது; ஆகவே நாரைக்குக் கொஞ்சம் ஆசை காட்டுகிறாள். நீ செல்லப் போகும் ஊர் இங்கிருந்து தென்பகுதியில் இருக்கும் உறந்தை நகரம்; நீர்வளம் நிறைந்த ஊர். அங்கே போவாயானால் உணவுக்குக் கஷ்டமே இருக்காது. நல்ல வயல்களை ஒட்டிய நீர்நிலைகளின் ஓரத்திற்கு மீன்கள் வந்து வந்து கரையை உரசிப் பின் துள்ளிக் குதிக்கும். மீன்கள் துள்ளும்போது கரை மேலேயே வந்து விழும். இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டுப் பின், ‘அங்கே இருக்கும் காவிரிநீர் நாடனாகிய சோழ மன்னனிடம் நான் அவன்மீது கொண்ட காதலால் படும் துன்பத்தைச் சொல்வாயா?’ என்று கேட்கிறாள். சோழ நாட்டு நீர்வளத்தைச் சொல்வதோடு, காதல் கொண்ட பெண்ணின் மனநிலையையும் செயல்களையும் விவரிப்பதாகப் பாடல் அமைந்துள்ளது.

செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்

நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால்

கரையுறிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்கு

உரையாயோ யானுற்ற நோய்.

சோழநாட்டு வளத்தை மெச்சியும் காதல் கொண்ட பெண்ணின் மனநிலை, நாரையிடம் நைச்சியமாகப் பேசும் அவள் திறன் ஆகியவற்றைக் கவிஞர் பிடித்திருக்கும் நுட்பத்தை உணர்ந்தும் பாடலை ரசிக்கலாம்.

முன்னோர் மொழி - 3 - செங்கால் மடநாராய்

சேர சோழ நாடுகளின் வளத்தைக் காட்டிய கவிஞர், பாண்டிய நாட்டையும் விட்டுவிடவில்லை. அதன் வளத்தையும் பலபடப் பாராட்டிப் பாடல்களைப் புனைந்துள்ளார். பாண்டிய மன்னன் மேல் காதல்கொண்ட பெண்களின் சுவையான கூற்றுகளையும் பாடல்களாக்கியுள்ளார். பாண்டிய மன்னன் ஏறிச் செல்லும் பட்டத்து யானையை, பிடி யானையாகக்கொண்டு அதை நோக்கிச் சொல்வதாக அமைந்த பாடல்கள் சில உள்ளன. அதில் ஒன்றைப் பார்ப்போம்.

நாரையை அழைப்பதுபோலவே ‘எலாஅ மடப்பிடியே’ என்று விளிப்பதாகப் பாடல் தொடங்குகிறது. ‘எலாஅ’ என்பது ‘ஏய்’ என்பது போன்ற விளிச்சொல். ‘எலா’ என்பது அளபெடுத்து ‘எலாஅ’ என்றாகிறது. இது சேய்மை விளி. தூரத்தில் இருக்கும் யானையை விளிப்பதல் ‘எலாஅ’ என நீட்டி அழைக்கிறாள். மடப்பிடியே என்றால் இளமையான பிடி என்றும் பொருள்; பெண்களுக்குரிய மடம் என்னும் குணத்தைக்கொண்ட பிடி என்றும் பொருள். யானையிடம் சொல்கிறாள்: ‘எங்களது கூடல் நகரமாகிய மதுரையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்பவன், ரத்த வாடையடிக்கும் நெடிய நல்ல வேலைக் கையிலேகொண்ட மாறன் என்னும் பாண்டியன். நகரில் உலாப் போகும்போது அவன் உன்மீது ஏறிச் செல்கிறான். அப்பேர்ப்பட்ட ஆண்மகனாகிய மாறன் உன்மேல் அமர்ந்திருக்கும்போது, உனக்குக் கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா? மெல்ல நடக்கத் தெரியாமல் தோற்று ஓடுகின்றாயே. நீயும் பெண்ணா? உன் பெண்மை ஐயத்திற்குரியது.’ பாடல்:

எலாஅ மடப்பிடியே எங்கூடற் கோமான்

புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால்

பைய நடக்கவும் தேற்றாயால் நின்பெண்மை

ஐயப் படுவ துடைத்து.

பட்டத்து யானையைப் பெண்ணாக்கிப் பேசும் இப்பாடலில், யானையின் மீதான பொறாமையும் அவன்மேல் காதல்கொள்ள பிற பெண்கள் யாருக்கும் உரிமை கிடையாது என்னும் விலக்கல் மனநிலையும் நுட்பமாகப் பொதிந்திருக்கிறது.

தொள்ளாயிரம் பாடல்களைக்கொண்ட நூல், இலக்கியச் சுவையுடைய நூல், மூவேந்தர்களைப் பாடிய நூல் - எப்படி மறைந்துபோனது?

இந்த மூன்று பாடல்களும் சிறந்த கற்பனை வளம், அருமையான சொல்லாட்சி, ஆற்றொழுக்கான நடை, வெண்பாவுக்குரிய தடையற்ற ஓசை எல்லாம் ஒருசேர அமைந்து ஈர்க்கின்றன. இப்படிப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக்கொண்ட நூலின் பெயர் ‘முத்தொள்ளாயிரம்.’ சேர சோழ பாண்டியர் என மூவேந்தரைப் பற்றியும் முந்நூறு முந்நூறு பாடல்கள். மூவேந்தர், முப்பிரிவு என்பதையும் தொள்ளாயிரம் என்னும் எண்ணையும் தலைப்பில்கொண்டு அமைந்த நூல். நூலை எழுதிய அந்த மாகவியின் பெயர் கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய எந்த விவரமும் நம்மிடமில்லை. நூலின் ஒரு பகுதிதான் இப்போது இருக்கிறது. ஆம், இந்தக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து இப்போது 109 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றைக் காப்பாற்றிக் கொடுத்தவர் தமிழ் இலக்கியப் பரப்பின் ஆழ்ந்த வாசகராகிய ‘புறத்திரட்டு’ ஆசிரியர். புறத்திரட்டிலிருந்து கிடைத்த பாடல்களைத் தொகுத்து, 1905ஆம் ஆண்டு, தமிழறிஞர் இரா.இராகவையங்கார் ‘முத்தொள்ளாயிரம்’ என்னும் நூலாக அச்சில் பதிப்பித்தார். அதன்பின் பாடல்களின் எண்ணிக்கையைக் கூட்டியும் சில பதிப்புகள் வந்துள்ளன. ரசிகமணி டி.கே.சி இந்த முத்தொள்ளாயிரப் பாடல்களில் மனம் பறிகொடுத்தவர். இப்பாடல்களுக்கு உரையெழுதி நூலாக்கியுள்ளார். இதை சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் ஒருசேர மொழிபெயர்த்தவர் ஏ.வி.சுப்பிரமணியன்.

தேன் உண்ணும் நாக்கு இன்னும் இன்னும் என்று கேட்பதுபோல இப்பாடல்களை வாசிப்போருக்கு ‘இன்னும் சில பாடல்கள் இருந்திருக்கலாமே’ என்று தோன்றும். தொள்ளாயிரம் பாடல்களைக்கொண்ட நூல், இலக்கியச் சுவையுடைய நூல், மூவேந்தர்களைப் பாடிய நூல் - எப்படி மறைந்துபோனது? ஏன் இந்நூலைக் காலம் காப்பாற்றி வைத்திருக்கவில்லை? மூவேந்தருள் ஒருவரைப் பற்றி மட்டுமே பாடியிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்குமா? அதுவும் கோதை, வளவன், மாறன் என மூவேந்தரின் பொதுப்பெயர்களைச் சுட்டாமல் தனிப்பெயர் சுட்டிப் பாடியிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்குமா? நூல் மறைந்துபோக வேறேதேனும் அகக் காரணம் இருந்திருக்குமா? இப்படியெல்லாம் யோசித்து மயங்கும் மனதைத் ‘திரும்பத் திரும்ப வாசித்து மகிழும்படி கிடைத்திருக்கும் 109 பாடல்கள் போதாதா’ என்று கூறிச் சமாதானம் செய்ய வேண்டியதுதான்.

பார்வைக்குச் சில:

1. ரா.இராகவையங்கார் (பதிப்பாசிரியர்), முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், 1935, இரண்டாம் பதிப்பு, மதுரை, மதுரை தமிழ்ச் சங்கம்.

2. எஸ்.வையாபுரிப்பிள்ளை (ப.ஆ.), புறத்திரட்டு, 2001, மறுபதிப்பு, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம்.

3. ந.சேதுரகுநாதன் (உரையாசிரியர்), முத்தொள்ளாயிரம், 1946, திருநெல்வேலி, கழக வெளியீடு.

4. டி.கே.சிதம்பரநாத முதலியார் (உ.ஆ.), முத்தொள்ளாயிரம், 1957, மூன்றாம் பதிப்பு, திருக்குற்றாலம், பொதிகை மலைப் பதிப்பு.

5. ரெ.முத்துக்கணேசன் (உ.ஆ.), முத்தொள்ளாயிரம், 1957, சென்னை, பாரிநிலையம்.

6. A.V.SUBRAMANIYAN (Translator), MUTTOLLAYIRAM, 1993, MADRAS, THE KUPPUSAMY SASTRI RESEARCH INSTITUTE.

(தொடரும்...)6. A.V.SUBRAMANIYAN (Translator), MUTTOLLAYIRAM, 1993, MADRAS, THE KUPPUSAMY SASTRI RESEARCH INSTITUTE.

(தொடரும்...)