Published:Updated:

Tamilnadu, Tamizhnadu... 'தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது சரி?

 'ழ'கரம்
'ழ'கரம்

தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் ஒலிப்பது பலவேளைகளில் வேறுபடும். எனவே, ஆங்கில மொழிக்கேற்ப தமிழ்ச் சொற்கள் அமையாது. 'ழ'கரம் என்பதை ஆங்கிலத்தில் 'ZH' என்று எழுதுவதனால் அது 'ழ'கரமாகிவிடாது

மதுரையைச் சேர்ந்த காந்தி தியாகராஜன் என்கிற வாசகரிடமிருந்து விகடன் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில், 'தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் TAMILNADU என்று எழுதுகிறோம். ஆனால், இது பிழையாகவும் களங்கமாகவும் உள்ளது. தமிழின் சிறப்புகளில் ஒன்று ழ. இதைப் பெருமைப்படுத்தும் வகையில் THAMIZHNADU என்று மாற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படியெல்லாம் பேசப்படுவது, எழுதப்படுவது, கருத்துகளை முன்வைப்பதுகுறித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவருமான 'ஔவை' நடராசனிடம் கேட்டோம்.

''தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் ஒலிப்பது பலவேளைகளில் வேறுபடும். எனவே, ஆங்கில மொழிக்கேற்ப தமிழ்ச் சொற்கள் அமையாது. 'ழ'கரம் என்பதை ஆங்கிலத்தில் 'ZH' என்று எழுதுவதனால் அது 'ழ'கரமாகிவிடாது. மற்ற மொழியில் 'ழ' எழுத்து இல்லாமல் இருப்பதால்தான் ழகரத்துக்கே சிறப்பு. இந்தநிலையில், Tamilnadu என்று எழுதுவதுதான் சரியாக இருக்கும். 'ழ'-வுக்கு 'ZH' பயன் படுத்துவதன் நோக்கமே நம்மவர்கள் 'ழ'கரத்தைப் பிரித்தறிய வேண்டும் என்பதற்காகத்தான் என்பது சரியான வாதமல்ல. நம்மவர்களுக்கு 'ழ'கரம் என்பதை தமிழிலேயே புரிந்து கொள்ளவைப்பதுதான் சரியானது.

 'ழ'கரம்
'ழ'கரம்

உதாரணத்துக்கு அன்பழகன், பழனியப்பன் என்ற பெயர்களை Anbalagan, Palaniyappan என எழுதினால் ஆங்கிலேயர்கள் எளிதாக, சரியாக உச்சரிப்பார்கள். Anbazhagan என்று 'ZH' பயன்படுத்தினால் அன்பஸ்கன், அன்பாஷகன், ஷ், ஹ் என்று உச்சரிக்க நேர்ந்து பெயரே மாறிவிடும். பழனியப்பன் என்பதை ஆங்கிலத்தில் 'பஸனியப்பன்' என்று உச்சரிப்பதைவிட, 'பலனியப்பன்' என்று உச்சரிப்பதில் தவறில்லை. ஸ என்பதைவிட ல என்பது கிட்டத்தட்ட 'ழ'வுக்கு நெருக்கமாக இருக்கும்.

நடராசன் என்ற பெயரை ஆங்கிலத்தில் Natarajan என்று எழுதுகி றார்கள். ஈழத்தமிழர்கள் Nadarasan என்று எழுதுகிறார்கள். Mudali என்று நாம் போடுகிறோம். Moodley என்று தென்னாப்பிரிக்காவில் எழுதுகிறார்கள். எனவே, தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில ஒலிப்புகள் இப்படிக் குறையுடையதாகத்தான் அமையும். Peter என்பதை பீட்டர், பீற்றர், பேதுரு என்று பலவிதமாக எழுதுகிறார்கள். இவையெல்லாம், சம்பந்தப்பட்ட பெயர்களின் உண்மையான பொருளை மறைத்து விடும். எனவே, சரியான உச்சரிப்புடன்தான் எழுதவேண்டும். அப்போதுதான், அது அந்நிய மொழிச் சொல் என்பதும் தெளிவாக விளங்கும். அதேசமயம், ஒரு சொல்லைத் தமிழ்ப்படுத்துவதில் தவறில்லை. உதாரணத்துக்கு, கம்ப்யூட்டர் என்பதை கணிப்பொறி, கணினி என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளோம். இதில் தவறில்லை. இது தமிழ் தெரிந்தவர்களுக்காகச் செய்யப்படும் மாற்றம். அதேசமயம், ஒரு நாட்டின் பெயரை 'செருமன்' என்று தமிழ்ப்படுத்தும்போது, அது தவறாகவே மனதில் பதியும்'' என்றார் விளக்கமாக. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2FXnIYY

அதேசமயம் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனின் கருத்து வேறுமாதிரியாக இருக்கிறது. ''அடிப்படையில் நான் ஒரு தனித்தமிழ் ஆர்வலர். திராவிட மொழிஞாயிறு பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்களிடமிருந்து தனித்தமிழ் உணர்வை, கல்லூரி நாள்களிலேயே பெற்றவன் நான். இருப்பினும்கூட, சில இடங்களில் நாம் சொற்களை எப்படி எழுதலாம் என்பதற்கு எனக்குச் சில கருத்துகள் உண்டு. வினைச் சொற்களையும் பெயர்ச்சொற்களையும் ஒரே மாதிரி பாவிக்க முடியாது என்று நினைக்கிறவன் நான். வினைச் சொற்கள் அல்லது பெயர்ச்சொற் களிலும்கூட வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்வதுதான் சரியானது.

 'ழ'கரம்
'ழ'கரம்

அதாவது, அந்தப் பெயர்ச் சொற்களிலும், இப்போது 'டிவி' என்று சொல்ல வேண்டியதில்லை, தொலைக்காட்சி என்பது சரி. இன்னமும் நான் இன்றைய உலகுக்கு வந்தால், 'புலனம்' என்று வாட்ஸ்அப்பைச் சொல்வதும் 'கீச்சகன்' என்று ட்விட்டரைச் சொல்வதும்தான் சரி என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், ஜப்பான் என்பதை 'சப்பான்' என்று எழுத வேண்டியதில்லை. ஆகஸ்ட் என்பதை ஆகஸ்ட் என்றே எழுதலாம் என்று நான் கருதுகிறேன். இங்கே என்ன சிக்கல் வருகிறது என்றால், ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ என்று வருகிற இந்த ஐந்து வட எழுத்துகளை நாம் பயன்படுத்துவதா அல்லது நம்முடைய பழைய இலக்கணப்படி 'வடவெழுத்து ஒரீ இ' நம்முடைய தமிழ் எழுத்துகளை எழுதுவதா என்பதுதான். இன்றைக்கு இந்த ஐந்து எழுத்துகளும் பல இடங்களில் நம்முடைய பெயர்ச் சொற்களோடும் கலந்து நிற்கின்றன.

நான் இன்றுவரையில் எம்.ஜி.ஆரை எம்.சி.ஆர் என்று எழுதவில்லை, எம்.ஜி.ஆர் என்றுதான் எழுதுகிறேன். தென்மொழி போன்ற தனித்தமிழ் ஏடுகள், அவர் பெயரை இப்போதும் ம.கோ.இரா என்றுதான் எழுதுகிறார்கள். அன்று தொடங்கி இன்று வரையில் ம.கோ.இரா என்று எழுதுகிறபோது அது மக்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்கிற கவலை எனக்கு உண்டு. அதேபோல ராஜாஜி என்றுதான் எழுதுகிறேன். ஜப்பான் என்றுதான் எழுதுகிறேன். லத்தீன் அமெரிக்கா என்றுதான் எழுதுகிறேன். இலத்தீன் என்று எழுதுவதில்லை.

இருந்தாலும், இப்படிப்பட்ட பெயர்களை, இன்னமும் சொன்னால் மருத்துவத்துறையில் மாத்திரைகளின் பெயர்களையெல்லாம் இப்போது, 'Sompraz D' என்பதைத் தமிழாக மாற்றி எழுதினால் அது பயன்படுமா? அதில் சிக்கல்கள் நேரும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன். எனவே, நல்ல தமிழில் நாம் எழுதுவதற்கு, நம்மிடம் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது நாம் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. நாம் நம்முடைய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தலாம். அவை எளிய சொற்களாக இருப்பது இன்னமும் நல்லது. அதே நேரத்தில் சில இடங்களில், வட எழுத்துகள் என்று சொல்லப்படுகிற அந்த 5 எழுத்துகளையும் இப்படிப் பயன்படுத்திக்கொள்வதும் நடைமுறையாக இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். 'ரெங்கம்மா சத்திர'த்தை இரங்கம்மா சத்திரம் என்றால் சரியாகவா இருக்கும்? இதற்குச் சில எதிர்ப்பு விமர்சனங்கள் உண்டு என்பதை நான் அறிவேன். 'இரிடி' என்றொரு சொல்லைப் பார்த்தேன். அது 'ரிஷி'யாம். அதற்கு ரிஷி என்றே எழுதிவிட்டுப்போகலாம்'' என்றார்.

- ஜூ.வி 2020 சிறப்பிதழில் சிவராஜ் எழுதியுள்ள சிறப்பு அலசல் கட்டுரையை முழுமையாக வாசிக்க > நல்ல தமிழில் எழுதுவோம்! https://www.vikatan.com/arts/literature/write-good-tamil-language

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு