தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பண்பாடு வரலாறு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும் பாடுபடும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அத்தகைய எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு எட்டு எழுத்தாளர்களின் நூல்களை அரசுடைமையாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மறைந்த தமிழ் அறிஞர்களான நெல்லை கண்ணன், சோமலே, கந்தர்வன், ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகிய ஐவரின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல வாழும் தமிழ் எழுத்தாளர் செ.திவான், நா.மம்மது, விடுதலை ராசேந்திரன் ஆகியோரின் நூல்களை அரசுடைமையாக்கி அனைவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையால் நெல்லை பாளையங்கோட்டையில் வசிக்கும் தமிழ் அறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான் மகிழ்ச்சியடைந்துள்ளார். 70 வயது நிரம்பிய அவர் வரலாறு, பண்பாடு, திராவிட இலக்கியம், பக்தி இலக்கியம், எனப் பல்வேறு தலைப்புகளில் 150 நூல்களை எழுதியுள்ளார். தனது வீட்டின் மாடியையே நூல்களை வைப்பதற்காக ஒதுக்கியுள்ளார். அவரது வீட்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. பாரதியார், வ.உ.சி உள்ளிட்ட பலரின் கையெழுத்துப் பிரதிகளையும் வைத்துள்ளார்.

தனது நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டது குறித்துப் பேசிய செ.திவான், ”விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்களின் பங்கு, வ.உ.சியும் பாரதியும், திராவிட இயக்கம், வரலாற்றுக் குறிப்புகள், பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி, கட்டபொம்மனும் கலெக்டர் ஜாக்சனும், திராவிட இலக்கியம் என 150 புத்தகங்களை எழுதியுள்ளேன்.
சிறுவயது முதலாகவே எனக்கு திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு அதிகம். எனது திருமணத்தை கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்தார். வ.உ.சி பற்றி மட்டும் 25 நூல்களை எழுதியிருக்கிறேன். அதற்காக நான் பல இடங்களில் ஆய்வு செய்து அரிய தகவல்களைத் திரட்டினேன். நான் எழுதியதற்குப் பிறகு அவரது வரலாற்றை யாரும் அதிகமான தகவல்களை எழுதவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் நிறைய தகவல்கள் இன்னும் வெளிக்கொண்டுவரப்படாமல் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இளம் எழுத்தாளர்கள் தேடிக் கண்டுபிடித்து உண்மையான வரலாற்றை எழுத வேண்டும். நான் 50 வருடங்களாக வாழ்ந்துவரும் பாளையங்கோட்டை நகரத்தைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொண்டுவரும் வகையில் புத்தகம் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
எனது நூல்களை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கியிருப்பது எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதற்காக தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுத்தாளர் செ.திவான் தெரிவித்தார்.