Published:Updated:

“பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்ததுதான் இப்பவும் நடக்குது”

இந்தப் பகுதியில குளிர்கால மழைன்னு ஒண்ணு உண்டு.

பிரீமியம் ஸ்டோரி
“இந்த வருஷம் ஆவணிமழை ரொம்ப நல்லாப் பேஞ்சுச்சு. வழக்கத்தைவிட பயிரெல்லாம் கனமாப் பிடிச்சிருந்துச்சு. ரொம்ப நம்பிக்கையோட இருந்தோம். அறுக்கிற நேரத்துல எல்லாத்தையும் ஒண்ணுமில்லாமப் பண்ணிடுச்சு மழை. ஒவ்வொரு வருஷமும் விவசாயிகளை வதைக்க ஏதாவது ஒண்ணு வந்திடுது தோழர்...” - வருத்தமும் அக்கறையும் நிரம்பியிருக்கிறது நக்கீரனின் வார்த்தைகளில். சூழலியல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியமென எல்லாத் தளங்களிலும் பங்களிக்கிற ஆளுமை. பார்த்ததும், மனம் திறந்து சிரித்து தோளில் கைபோட்டுப் பேசுகிற தோழமை. இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பயணங்கள் தவிர்த்து நன்னிலத்தில் வாசிப்பு, எழுத்து என்றிருந்தவரிடம், கடும் மழையால் ஈரம் நிரம்பிய ஒரு மாலையில் உரையாடினேன்.

“கொரோனா காலம் எப்படிப் போச்சு... புதுசா என்ன எழுதுனீங்க?”

“பயணம் பாதியும், படிப்பு பாதியுமா வாழ்ந்துகிட்டிருந்தவன். வீட்டுக்குள்ளயே முடக்கிப் போட்டுருச்சு கொரோனா. ‘ஏற்கெனவே பைபாஸ் ஆபரேஷன் பண்ணியிருக்கிறதால கொரோனா முடியிறவரைக்கும் வெளியில போகாதீங்க’ன்னு சொல்லிட்டாங்க. நிறைய புத்தகங்கள் வாசிச்சேன். கிட்டத்தட்ட 60,000 பக்கங்கள்... காலை 4 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரைக்கும் படிச்சேன். எதையும் பன்முகத்தன்மையோட பாக்குற பக்குவத்தை இந்த வாசிப்பு ஏற்படுத்தியிருக்கு. ஆயுள் அனுமதிக்கிற காலத்துக்குள்ள நிறைய வேலைகள் செய்யணும்கிற உத்வேகத்தையும் கொடுத்திருக்கு. ஒரு குறுநாவல், ஒரு கட்டுரை நூலை எழுதி முடிச்சிருக்கேன்.”

“காணொலிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாததால்தான் படிக்கவும் எழுதவும் முடிந்தது என்றீர்கள். நவீனத் தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பது சரிதானா?”

“எதைச் செய்தாலும் முழுமையாவும் நேர்மையாவும் செய்யணும். நான் ஒரு காணொலிக் கூட்டத்துல கலந்துக்கணும்னா குறைஞ்சது மூன்று நாளாவது தயாராகணும். சும்மா போய் பொழுதுபோக்கக்கூடாது. அதுக்காகவே தவிர்த்தேன். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்துலகூட கூப்பிட்டாங்க. மறுத்துட்டேன். இன்னைக்கு போன் வெச்சிருக்கிற எல்லாருமே காணொலிக்கூட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதில் ஏன் சிக்கணும்னு நினைச்சேன். கொஞ்சநாள்ல எல்லோரும் ஓய்ஞ்சிருவாங்க. செயற்பாட்டாளர்கள்தான் நிப்பாங்க. அப்போ பார்க்கலாம்.”

“குளிர்காலத்துல கடுமையான மழை... தொடர்ந்து இயற்கைச் சீற்றத்துக்கு உள்ளாகுற காவிரிப்படுகையோட எதிர்காலம் என்னாகும்?”

“இந்தப் பகுதியில குளிர்கால மழைன்னு ஒண்ணு உண்டு. இடையில அது காணாமப்போயிடுச்சு. இப்போ திரும்பவும் வந்திருக்கு. வழக்கமா 5 சதவிகிதம் பெய்யும்... இப்போ 15 சதவிகிதம் பேஞ்சிருக்கு. இது ஒருவித இயற்கை விபத்து. இதுமாதிரி காவிரிப்படுகை மக்கள் நிறைய பார்த்திட்டாங்க. வரலாறு காணாத மழைங்கிறதெல்லாம் உண்மையில்லை. 1924-ல இங்கே மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கு. வெள்ளம் பாஞ்சு ஆறடிக்கு வயல்கள்ல மணல் படிஞ்சிருக்கு. இதுமாதிரியான வெள்ளம், வறட்சியெல்லாம் வந்து போய்க்கிட்டுதான் இருக்கும். ‘எட்டு வருஷத்துக்கு ஒண்ணு மொட்டை வருஷம்’னு எங்க பகுதியில ஒரு பழமொழியே இருக்கு. ஆனா, நாம கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், பருவநிலையோட தன்மை மாறிக்கிட்டே இருக்கு. ஏன் மாறுது, இதை எதிர்கொள்ள என்ன செய்யணும்னு யோசிக்கணும். வெறும் நிவாரணங்களை மட்டும் கொடுத்துக்கிட்டிருக்கிறதுல பயனில்லை.”

“காவிரிப்படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமா அரசு அறிவிச்சது நல்ல முன்னெடுப்புதானே?”

“சின்ன ஆசுவாசம், அவ்வளவுதான். காவிரிப்படுகை பற்றி அரசுக்கு சரியான புரிதல் இருக்காங்கிறதே கேள்விதான். இந்த மக்களுக்கு விவசாயம் தொழில் மட்டுமில்லை... வாழ்க்கையோட பல கூறுகள்ல அது நிறைஞ்சிருக்கு. மறைமுகமா நிறைய விஷயங்கள் பறிபோய்க்கிட்டிருக்கு. ‘பதினெட்டாம் பெருக்கு’ன்னு ஒரு பண்டிகையையே நாங்க இழந்திருக்கோம். ஆத்துல தண்ணி வந்ததும் இந்தப் பண்டிகை வரும். காவிரிக்கரை நெடுக திருவிழாக்கோலமா இருக்கும். இன்னைக்கு பைப்படியில கொண்டாடும் ஒரு பண்டிகையா அது மாறிடுச்சு. இது எவ்வளவு பெரிய பண்பாட்டு இழப்பு!”

நக்கீரன்
நக்கீரன்

“டெல்லியில போராட்டம் தொடர்ந்துகிட்டிருக்கு. விவசாயிகளை அரசு கையாள்கிற விதம் சரிதானா?”

“அவநம்பிக்கையைத்தான் உருவாக்குது. போராடாமல் எதுவும் கிடைக்காதுங்கிற நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் இன்னைக்கு மக்களைக் கொண்டுவந்து வெச்சிருக்காங்க. அரசியலமைப்புச் சட்டம் நியாயமான நமக்குத் தர்ற உரிமைகளைக்கூட போராட்டம் நடத்தியே வாங்க வேண்டியிருக்கு. வரலாறு படிச்சவன்ங்கிற அடிப்படையில சொல்றேன், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல நடந்ததெல்லாம் இப்போ நடக்குது.”

நக்கீரன்
நக்கீரன்

“கொரோனா மாதிரி நோய்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளோட விளைவுதான்னு சொல்லப்படுதே?”

“உண்மைதான். பெரு நாட்டுல ஒரு ஆய்வு பதிவாகியிருக்கு. அங்கே ஒரு சதவிகிதம் காடு அழிக்கப்பட்டபோது, நகரத்தில் கொசுக்களோட அளவு எட்டு சதவிகிதம் அதிகமாகியிருக்கு. விலங்குகளின் வாழிடத்தை அழிக்கும்போது அதை ஓம்புயிரா கொண்ட நுண்ணுயிரிகள், மனிதர்களைத் தொத்திக்கும். சார்ஸ்ல இருந்து கொரோனா வரை எல்லா வைரஸ்களும் அப்படித்தான் நம்மகிட்ட வந்திருக்கு. இதைப்போல பல்லாயிரம் நுண்ணுயிர்கள் விலங்குகள் மேல இருக்கு. நாம சீண்டாதவரை பிரச்னையில்லை. மேலும் மேலும் சீண்டினா இன்னும் மோசமான விளைவுகளை எதிர்கொள்வோம். இன்னைக்கு கோவிட். நாளைக்கு வேறொண்ணு வரும்.”

“தடுப்பூசிங்கிறது பன்னாட்டு நிறுவனங்களோட மருத்துவச் சதின்னு ஒரு தரப்பு சொல்லுதே... அது சரியா?”

“தடுப்பூசி வேணுமா, வேணாமாங்கிறதுக்கு அப்பால் தடுப்பூசி வணிகம், அதைத் தயாரிக்கிற நிறுவனங்களோட நோக்கத்துலதான் எனக்குப் பிரச்னை. என்னை நாய் கடிச்சா நிச்சயம் நான் போய் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்குவேன். அதுல எனக்குப் பிரச்னையில்லை. ஜோனஸ் சால்க் முதன்முதல்ல போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடிச்சப்போ, ‘இதுக்குக் காப்புரிமை வாங்குவீங்களா’ன்னு கேட்டாங்க. ‘சூரியனுக்கு யாராவது காப்புரிமை வாங்கமுடியுமா’ன்னு கேட்டார். ‘இது பொதுவானது, யாரும் சொந்தம் கொண்டாடமுடியாது’ங்கிறதுதான் அதன் பொருள். இந்த வார்த்தைகளை பில்கேட்ஸ் சொல்வாரா? இன்னைக்கு இருக்கக்கூடிய தடுப்பூசி வணிகம் எல்லாத்துக்கும் பின்னணியில பில்கேட்ஸ்தான் இருக்கார். கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை, எப்படி உருவாக்கணும், எவ்வளவு காலம் சோதனை செய்யணும்னு நிறைய விஷயங்கள் இருக்கு. அதை முழுமையா செய்யாம தடுப்பூசியைப் போடும்போது அந்த விளைவு கொரோனாவைவிடப் பெரிசா இருந்திடக்கூடாதுங்கிறது தான் எங்க கவலை. அலோபதி மருத்துவர்களும்கூட இதை வலியுறுத்துகிறார்கள்.”

“சூழலியலாளர்கள் மேல வைக்கப்படுகிற குற்றச்சாட்டு ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்பது. இதை எப்படி எதிர்கொள்றீங்க?”

“நேத்துவரை வளர்ச்சின்னு பேசிக்கிட்டிருந்தவங்க இப்போ ‘நீடித்த வளர்ச்சி’ன்னு பேச ஆரம்பிச்சிருக்காங்க. காரணம் என்ன? நீங்க இதுவரைக்கும் சொன்ன ‘வளர்ச்சி’ தப்புங்கிறதுதானே? இது நுகர்வுப் பொருளாதாரம். தேவைக்கு அதிகமா உற்பத்தி செஞ்சு கொட்டுறாங்க. அதனால அழிவும் அதிகமாகுது. பத்து வருஷத்துக்கு உழைச்ச ஒரு பொருளை ரெண்டு வருஷத்தோட பயனற்றுப் போறமாதிரி செஞ்சதுதான் இவங்களோட வளர்ச்சி. ஆரம்பத்துல அஞ்சு வருஷம் உழைச்ச செல்போன் இப்போ ரெண்டு வருஷத்துல செயலிழந்துபோகுது. இதன்மூலம் விற்பனை ரெண்டு மடங்காகுது. இன்னும் தரமா செல்போனைத் தயாரிச்சா சூழல் பாதிப்பும் செலவும் குறையும். அதுதான் நீடித்த வளர்ச்சி. ஆனா, எந்த அளவுக்கு நுகர்வுக் கலாசாரத்தை திணிக்கிறாங்களோ அந்த அளவுக்கு நிறுவனங்களுக்கு லாபம். வளர்ச்சிங்கிறது நிறுவனங்களின் லாபத்தைக் குவிக்கக்கூடியதாவும், மக்களை நுகர்வோரா மாத்தக்கூடியதாவும் இருப்பதாலதான் இவ்வளவு சிக்கல். இதையெல்லாம் பேசினா வளர்ச்சிக்கு எதிரானவர்கள்னு முத்திரை குத்துவாங்க.

சேலத்துல இருக்கிற ஒரே ஒரு பாக்சைட் சுரங்கத்துக்குப் போய்ப் பாருங்க... எவ்வளவு சூழலியல் அழிவுன்னு தெரியும். விமானம் தயாரிக்க, பாத்திரம் தயாரிக்கப் பயன்படுத்துறதுல பிரச்னையில்லை. ஆனா, கோலா டின்னாவும், பேக்கிங் குப்பையாவும் ஹோட்டல் குப்பைத்தொட்டிகள்ல குவியுது அலுமினியம். இதுதான் வளர்ச்சியா? அதைத் தயாரிக்கத்தான் எங்க வாழ்வாதாரத்தை அழிச்சீங்களா? இதுபத்திப் பேசுறதெல்லாம் தப்புன்னா தொடர்ந்து அதைச் செய்வோம்!”

உறுதியில் வலுக்கிறது நக்கீரனின் குரல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு