Published:Updated:

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

கி.ராஜ நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
கி.ராஜ நாராயணன்

நேத்து ஒருத்தர் வந்தார். ‘இடைச்செவல் போனேன். என்னா செழிப்பு, அடேயப்பா...’ன்னு சிலாகிச்சார்.

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

நேத்து ஒருத்தர் வந்தார். ‘இடைச்செவல் போனேன். என்னா செழிப்பு, அடேயப்பா...’ன்னு சிலாகிச்சார்.

Published:Updated:
கி.ராஜ நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
கி.ராஜ நாராயணன்
ந்தச் சிறிய அறையில் தவிலுடன் பிணைந்த நாகஸ்வரத்தை இசைத்துக் கொண்டிருக்கிறது கேரவான் ரேடியோ. கைக்கெட்டும் தூரத்தில் பேனாக்கள், காகிதக்கத்தைகள், நாளிதழ்கள். மேலேற்றப்பட்ட படுக்கையில் சாய்ந்தபடி கண்மூடி இசையில் லயித்திருக்கிறார் கி.ராஜ நாராயணன். 60 ஆண்டுகளுக்கு மேல் கதையும் எழுத்துமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கி.ராவுக்கு 98 வயது. முதுமை உடலுக்குத்தான். உற்சாகமும் எள்ளலும் குறையவில்லை.

கையெழுத்துப் பிரதியாகவே சுற்றுக்கு விடப்பட்ட ‘அண்டரெண்டப் பட்சி’ நூல் பல ஆயிரம் பிரதிகள் டவுன்லோடாகியிருக்கிறது. அடுத்து வெளியிட ‘மிச்சக் கதைகள்’ அச்சில் இருக்கிறது. தன் படைப்புகளின் உரிமையை தம் பிள்ளைகளோடு சேர்த்து, தன்மேல் பேரன்பு காட்டும் வாசகரான புதுவை இளவேனிலுக்கும் எழுதிவைத்துப் புதிய பாதை வகுத்திருக்கிறார் கி.ரா.

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தேன். ‘மிச்சக்கதை’களில் இருந்து தொடங்கியது உரையாடல்.

“ஒரு கதை எழுதுறபோது அதுக்குப் பின்னால நிறைய கதைகள் இருக்கும். எல்லாத்தையும் அந்தக் கதைக்குள்ள வைக்கமுடியாது. கொஞ்சத்தை விலக்கி வைப்போம். அஞ்சு பவுன்ல ஒரு நகை இருக்குன்னா, அதைச்செய்ய அஞ்சு பவுன் தங்கம் மட்டும் போதாது. ஏழு பவுனோ, எட்டுப் பவுனோ இருந்தாதான் செதுக்கி அஞ்சு பவுனுக்கு நகையாக்கமுடியும். செதுக்குறப்போ உதிர்ந்துபோற தங்கம் வீணாப்போச்சுன்னு சொல்லமுடியாது. பொன்னுக்கு மதிப்பு குறையாதுல்லா... என்னைக்கு இருந்தாலும் அது தங்கம்தான். அதுமாதிரிதான் இந்த மிச்சக் கதைகளும். இதுவரைக்கும் பொதுவுல வைக்காம வச்சிருந்த கதைகள் இருக்கும். கடிதங்கள் இருக்கும். கட்டுரைகள் இருக்கும். கெட்ட வார்த்தைகளே வராமல் கெட்ட வார்த்தைகள் பத்திக் கட்டுரைகள் எழுதமுடியுமான்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்...”

கி.ராஜ நாராயணன்
கி.ராஜ நாராயணன்

“80க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... பல நூறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார் கி.ரா. இன்னும் சொல்லப்படாத கதைகள் இருக்கா?”

“இருக்குமுல்லா... இருக்கத்தானே செய்யும். எல்லாத்தையும் சொல்லி முடிக்க முடியாதே. சொல்லமுடியாதபடி எவ்வளவு விஷயங்கள் இருக்கு. எந்தக் காலத்துக்குச் சொல்லி முடிய! மனசுக்குள்ள இன்னும் நெறைய கதைகள் கிடக்கே... நான் எம்புள்ளைகளுக்கு ராமாயணம் சொல்றேன். ராமர் வில்லை உடைச்சார்னு சொல்றேன். உடனே பக்கத்துல இருந்த பாட்டி சொல்றா... ‘என்னடா இப்பிடிச் சொல்றே... ராமர் எங்கடா உடைச்சார்... வளைக்கத்தானேடா செஞ்சார்’ங்கிறா... ‘எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர்னு தானே கம்பர் சொல்லியிருக்கார் பாட்டி’ங்கிறேன். ‘ஒடிச்சது வேற, வளைச்சது வேற’ங்கிறா பாட்டி... அதுக்கு அவக்கிட்ட ஒரு கதையிருக்கு... எந்தக்கதை சரி..? கதைகள் எப்பவுமே இப்படித்தான். இந்தப்பக்கம் போகும்... அந்தப்பக்கமும் போகும்... அப்படிப் போனாதான் சுவாரஸ்யம். கதைக்குக் கொஞ்சம் பொய் சொல்லணும். இல்லாததைச் சொல்லணும்...”

“கி.ராவுக்கு இன்னும் தீராத ஆசை?”

“ஒரு ஆசையும் கிடையாது. எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சுட்டுத்தான் கி.ரா இந்தப் படுக்கையில படுத்திருக்கார். ‘ஆடியோடி அமர்ந்தேனே அம்மானே’ன்னு இருக்கேன் நான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“வாழ்க்கையில இன்னும் விளங்காத விஷயம்னு ஏதாவது ஒண்ணு இருக்கா?”

“இருக்கத்தான் செய்யும். விளக்கத்தைத் தேடித் தேடித்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கோம். விரல்களெல்லாம் அழுகி விழுந்தபிறகும் ஒருத்தன் நம்பிக்கையோட வாழ்ந்துக்கிட்டிருக்கான்லா... அது எப்படி? ஏதோ ஒரு விஷயம் அவனை வாழவைக்குதில்லா... அது என்ன? இப்படி பல விளங்காத விஷயங்கள் இருக்கு... அதுதான் வாழ்க்கையை நகர்த்திக்கிட்டே போவும். எல்லாமே விளங்கிருச்சுன்னா அப்பறம் என்ன சுவாரஸ்யம் இருக்கு?”

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

“கொரோனாத் தனிமையை எப்படி எதிர்கொண்டீங்க...”

“இசை தெரிஞ்சவனுக்குத் தனிமை கிடையாது. சங்கீதம் துணைக்கிருக்கும். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு. எழுதுறவன் எழுதிக்கிட்டு இருப்பான். தாது வருஷப் பஞ்சம் இருக்கே... அதோடவா இது பெரிசு? ஒவ்வொரு அறுபது வருஷத்துக்கும் ஒரு தாது வருஷம் வரும். அதோட சேர்ந்து பஞ்சமும் வரும். மழைக் காலத்துலகூட வானம் இறங்காது. மக்களெல்லாம் பஞ்சம் பிழைக்க நடப்பாங்க. போற வழியிலேயே செத்துப்போவாங்க. நான் ரெண்டு தாது பஞ்சத்தை பாத்திருக்கேன். வானம் இறங்காம கொன்னது ஒரு பக்கம், அதே வானம் அடைப்பெடுத்து கொன்னதும் நடந்திருக்கு. அறுபது நாள், தொண்ணூறு நாளெல்லாம் விடாமப் பெய்யும். வருமானம் இல்லாத எளியவுக எல்லாம் தவிச்சுப்போவாக. அதையெல்லாம் பாத்துப் பழகுனவுகளுக்கு இந்தக் கொரோனால்லாம் ஒண்ணுமேயில்லை.’’

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

“ஏற்கெனவே உங்க ‘கிடை’ நாவல் சினிமாவாகியிருக்கு. இப்போ சினிமாவாக்க உங்கள் நாவல்ல எதைப் பரிந்துரைப்பீங்க?”

“சினிமா செய்யிறமாதிரி ஒரு கதை வேணும்ன்னு ரொம்ப நாள் முன்னாடி பாலசந்தரோட பையன் கைலாசம் வந்தாரு. சினிமாவுக்கான கதைன்னு எனக்கு எழுதிப் பழக்கமில்லை. கைலாசத்துக்காக ஒரு கதை எழுதினேன். ‘உங்களுக்குத் தேவையான விஷயங்களை மாத்திக்கோங்க. மத்த எழுத்தாளர் மாதிரி என் கதையில கை வைக்கக்கூடாதுன்னெல்லாம் சொல்ல மாட்டேன்’னு சொன்னேன். கதைக்கான தொகையைக் கொடுத்துட்டு, ‘நீங்க இதை புஸ்தகமா போடுறதுன்னாக்கூட போட்டுக்குங்க’ன்னு சொன்னாங்க. ‘அந்தமான் நாயக்கர்’னு புத்தகம் போட்டேன். கோபல்ல கிராமத்தோட மூணாவது பகுதி அது. ஆனா, அந்தக்கதை படமாகலே. குழந்தைகளுக்காக ‘பிஞ்சு’ன்னு ஒரு கதை எழுதினேன். ஒருநாள் எடிட்டர் லெனின் ஒரு புது நோட்டுக் கட்டை என் பாக்கெட்டுல வச்சு, ‘இது பிஞ்சுகள் கதைக்கு அட்வான்ஸ்’ன்னு சொன்னாரு. இப்போ அந்தக்கதை படமாகப் போகுது.”

“பேச்சு நடை எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலையேங்கிற வருத்தம் இப்போதும் உங்களுக்கு இருக்கா?”

“தமிழ்ல உரைநடை இலக்கியம் பிறந்த நேரத்துல காவிரி நதித்தீரத்து எழுத்தாளர்கள்தான் முதல்ல வர்றாங்க. புதுசா வந்த கி.ராவோட பேச்சு வழக்கு இலக்கியத்தை யாரும் அங்கீகரிக்கலே. ஏன்னா, அவங்க இத்தனைநாள் பண்ணினதெல்லாம் வீணாப்போயிரும்ங்கிற பயம். இன்னைக்கு கி.ராதான் சரின்னு எல்லாரும் சொல்றாங்க. அவங்கெல்லாம் எழுதினது கவிதை நடை. கவிதை நடை மாறும். பேச்சு நடை மாறாது. தமிழன் ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எப்பிடிப் பேசியிருப்பான்னு கேட்டீங்கன்னா, இப்போ நாம பேசிக்கிட்டிருக் கோம்லயா... அப்படித்தான் பேசியிருப்பான்னு மொழி ஆராய்ச்சி பண்றவங்க சொல்றாங்க. பேச்சுதான் நிக்கும். மத்ததெல்லாம் மாறும். அப்போ யாரும் நம்பலே. இப்போ சரிங்கிறாங்க.’’

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

“இடைச்செவல் பற்றிய நினைவுகள்... அண்மையில அங்கே போகமுடிஞ்சுதா?”

“நேத்து ஒருத்தர் வந்தார். ‘இடைச்செவல் போனேன். என்னா செழிப்பு, அடேயப்பா...’ன்னு சிலாகிச்சார். நான் சொன்னேன்... அது இடைச்செவலோட ஒரு முகம். மழைக்காலத்து முகம். மஞ்சள் குளிச்சுட்டு ஈரத்தோட வந்து நிக்கிற குமரி மாதிரி இருக்கும். பாத்துக்கிட்டே இருக்கலாம். கோடையில நேரெதிர். வெக்கைக் காத்தடிக்கும். மனுஷனுக்கு மனுஷன் புன்னகையோட பாக்கமாட்டான். கொடுமையா இருக்கும். கொஞ்சநாளைக்கு முன்னால பையன்களுக்கு சொத்து பிரிச்சுக்கொடுக்க அங்கே போனேன். ‘இனிமே எக்காரணம் கொண்டும் இடைச்செவல் வரமாட்டேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிரியமான பெண்கள் அங்கே இல்லை. பிரியமான நண்பர்களும் இல்லை. எல்லாரும் போய்ச் சேந்துட்டாங்க. வீடுக எல்லாம் காலியாருக்கு. நான் எங்கே போறது... கிராமங்கள் அழிஞ்சுக்கிட்டே வருது. அந்த அழிவைத் தாங்கமுடியலே.”

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

“விவசாயச் சங்கத்துல இணைந்து போராடி சிறைக்கெல்லாம் போயிருக்கீங்க. இன்றைய அரசியலை கவனிக்கிறீங்களா?”

“போராட்டக் களத்துல நின்ன நாள்களையெல்லாம் நினைச்சுப் பாத்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது. அதெல்லாம் சாவியாய் போன நாள்கள். அரசியல் ஆரோக்கியமாயில்லை. சதா, ஒருத்தனை ஒருத்தன் திங்கிறதுதான் நடக்குது. நல்லவங்க அருகிட்டாங்க. ஜனக மகாராஜன் ஒருகாலத்திலயும் சிம்மாசனத்துல உக்காந்த தில்லைன்னு சொல்வாங்க. ஜனங்களோடவே இருந்தான். ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக்கூடாது. துறவி மாதிரிதான் இருக்கணும். இடதுசாரிகள் நாட்டுக்குத் தேவை. ஆனா அவங்க மக்களுக்காக நிக்கணும். ஆள ஆசைப்படக்கூடாது. ஆள்கிறவனுக்கு சுயநலம் வந்திடும்.”

“தமிழக எழுத்தாளர்களுக்கு தேசிய அளவுல அங்கீகாரங்கள் கிடைக்குறதுல பாரபட்சம் இருக்கிறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு. நீங்கள் ஏற்கிறீர்களா?”

“விருதை உண்டாக்குபவர்களே அதை யாருக்குக் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுறாங்க. அதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. டால்ஸ்டாய் என்ன விருது வாங்கினார்? ஆனா இமயம் மாதிரி நிக்குறார். எனக்கு விருது பற்றிய கவலையெல்லாம் இல்லை. யாரையும், சிபாரிசு பண்ணுங்கன்னும் சொல்லமாட்டேன். ‘அய்யோ, கி.ராவுக்குக் கொடுக்காமப் போனோமே’ன்னு பின்னால வருத்தப்பட்டுக்கட்டும். ஆரம்பத்திலிருந்தே சபையால் புறக்கணிக்கப்பட்டவன் நான். எந்த எதிர்பார்ப்புமில்லை.”

“பாலியல் கதைகளுக்கான தேவை என்ன? ‘அண்டரெண்டப் பட்சி’ வரைக்கும் கி.ராவின் கதைகள்ல அதுவே முன் நிற்கிறதே?”

“எல்லாரும் படிக்கிற முதல் பாடம், அதுதானே... அதை நோக்கித்தான் போகணும். அது வழியாத்தான் போகணும். அதுதான் இயல்பு. பாலியலைப் பேசுறது தப்பில்லை. அதுபத்தி இங்கே நிறைய குழப்பங்கள் இருக்கு. தாமரை இதழுக்கு ‘பேதை’ன்னு ஒரு கதை அனுப்பினேன். அந்தக் கதையில ‘உயிர்ஸ்தலம்’ன்னு ஒரு வார்த்தை எழுதியிருந்தேன். தி.க.சி, ‘அந்த உயிர்ஸ்தலத்தை எடுத்திட்டு வேற வார்த்தை போடுங்க’ன்னார். ‘வேற என்ன வார்த்தை போடுறது, சக்கரைக்கட்டின்னு போடலாமா’ன்னு கேட்டேன். எஸ்.ஏ.முருகானந்தம் ‘இந்தக் கதையை நானே என் பத்திரிகையில போடுறேன்’னு சொல்லி போட்டுட்டார். அதுக்கப்புறம் தி.க.சி சொன்னார்... ‘கதையைத் திரும்பவும் படிச்சேன் கி.ரா... நீங்க எழுதியிருக்கிறது சரிதான்’னு சொன்னார். அந்தக்கதையை ‘இல்லஸ்ட்ரேட் வீக்லி’யில ஆங்கிலத்துல மொழிபெயர்த்துப் போட்டிருந்தாக.”

“உங்களுக்கு நெருக்கமானவர் கமல். அவர் அரசியல் பிரவேசம் பற்றி?”

“ஒன்றரை வருஷத்துக்கு முன்னால கமல் என்னை வந்து பார்த்தார். அதுக்கப்புறம் சந்திக்கலே. இப்போ டிவி நிகழ்ச்சியில நான் எழுதின ‘அண்டரெண்ட பட்சி’ பத்தி பேசினதா சொன்னாங்க. நேராப் பாத்துப் பேசி ரொம்ப நாளாச்சு. கமல் மாதிரி மனிதர்கள் அரசியலுக்கு வர்றது நல்லது. அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்பமே...”

“இந்தச் சூழல்ல கணவதி அம்மா பற்றிய நினைவுகள்..?”

“என் மனைவியைப் பத்தி என்னால அழாமப் பேசமுடியாது. அப்படி வாழ்ந்தோம் நாங்க. எல்லாரும், ‘புஸ்தகமா எழுதுங்களே’ன்னு சொன்னாங்க. எழுதமாட்டேன்... நீங்க படிக்கணும்னு நினைக்கிறீக... அதைப் படிக்க முடியாது. அது என்னோட போகட்டும்னு சொல்லிட்டேன். என்னோட வந்தவ என்னோடவே போகட்டும்.”