Published:Updated:

இரண்டு பறவைகள் - சிறுகதை

இரண்டு பறவைகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டு பறவைகள் - சிறுகதை

- க.அம்சப்ரியா

``போடி... எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. இத்தனை நாளுக்கப்புறம் இதெல்லாம் எனக்குத் தேவையா..?’’

மணிமேகலைக்கு அம்மாவின் சிணுங்கல் சிலிர்ப்பாகவும் வாஞ்சையாகவும் இருந்தது. இப்படி எப்போதாவதுதான் அம்மாவின் முகத்தில் பொலிவு தென்படும். வெற்றிலைக் கறைபடிந்த முன்பற்கள் வெளியே தெரிய, திறந்தும் திறக்காமலும் இருக்கிற கதவின் வழியே உள்ளே வருகிற காலை நேர சூரிய ஒளியைப் போல வசீகரம்.

அரைமணி நேரமாக அம்மாவுடன் செல்லப்போராட்டம். இன்று மட்டுமா... நேற்றும் மறுப்புதான். இடைவிடாமல் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

‘‘பத்திரமா போய்ட்டு வந்திடலாம். என்னை நம்பி வாம்மா...’’ ஸ்கூட்டியை நகர்த்தியபடி அழைத்தாள்.

‘‘ரெண்டு பேரும் பஸ்லேயே போயிட்டு வந்திடலாம்... அதுதான் சௌகர்யம்.’’

‘‘ஏம்மா, பஸ்ல போறது பெரிய விஷயமா... நீ ஏன் இப்படித் தயங்கறேன்னு தெரியும்...’’ இப்படிக் கூறிவிட்டு அம்மாவின் முகத்தையே பார்த்தாள். மறுபடியும் புன்னகை இழையோடுகிற மறுப்பு. அம்மாவிற்கு இப்படிப் புதிதாக எதைச் செய்யும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். கல்லூரிக்குச் சென்ற முதல் நாளில் தனது சுடிதாரைப் பார்த்துக்கூட பதற்றமாகிவிட்டாள்.

‘‘இவ்வளவு சொடரா... கலரா இருக்கணுமா..?’’

அடர்த்தியான வண்ணமெல்லாம் அம்மாவின் வார்த்தையில் ‘சொடர்’தான். அம்மாவிடம் இருக்கிற எல்லாச் சேலைகளும் மிக மங்கலான நிறம்தான். தனக்குத் தாவணி எடுத்தபோதுகூட மங்கலான நிறம்தான். ``ஏம்மா இப்படி’’ என்றால், ``வளவுக்காரிக்குப் பவுசு பாருன்னு நாக்கு மேல பல்லு மேல போட்டு நாலு வார்த்தை சொன்னா நமக்குத்தான் நரகம்.’’

அம்மாவின் இந்தப் பதில் இன்னும் வேறு வேறு நேரங்களில் வேறு வேறு விதமாக வரும். அத்தனை பதில்களையும் கவனித்துப் பார்த்தால், அவளின் காரணமற்ற பயமும் பதற்றமும் தேவையா என்று தோன்றும். ஏன் என்று குழப்பமும் வரும். எத்தனை காலத்திற்கு இப்படியென்று ஆத்திரமும் எழும்.

இன்றும் அப்படித்தான். முந்தைய கேள்வியை மறுபடியும் வேறுவிதமாகக் கேட்டாள்.

‘‘விழுந்துட்டா ஆஸ்பத்திரிச் செலவு அதிகமாகும்னு பயப்படறியாம்மா? இல்லே, யாராச்சும் ஏதாவது மோசமா சொல்லுவாங்கன்னு பயமா, சொல்லும்மா..?’’

‘‘இவ பெரிய மனுசி... என்கிட்டே கேள்வி கேட்கிறா. எனக்கு இன்னிக்கு வேலை இருக்கு. இன்னொரு நாள் பாத்துக்கலாம்.’’

இரண்டு பறவைகள் - சிறுகதை

எப்போதாவது கோயிலுக்குப் போக வேண்டும் என்றோ, ஒரமனைக்குப் போக வேண்டும் என்றோ கூறுவதும், சரியெனத் தயாராகும்போது, உடனே கிளம்பிவிடுகிற அம்மாதான் `இன்று வேண்டாம்’ என்று பல இன்றுகளைக் கடத்திக்கொண்டிருக்கிறாள்.

‘‘இப்படியே சொல்லாதம்மா, ஊருக்காக வாழ்றோமா, நமக்காகவா... நீயே சொல்லு, இந்த வீதியில இப்படி நாம போறது, மத்தவங்களுக்குப் புடிக்காது, அப்படித்தானே..?’’

அம்மா எதுவுமே சொல்லவில்லை. எப்போதும் போல சமைக்கத் தயாராகிவிட்டாள். இன்று பருப்புச் சாப்பாடுதான். இரவே முடிவு செய்தாயிற்று. காலையில் மாசாணியம்மன் கோயிலுக்குப் போகவேண்டும். அதனால் நேரமே கிளம்பவேண்டும்.

இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் கோயில். பேருந்தில் சென்றால் இரண்டு பேருந்துகள் மாற வேண்டும். கூடுதல் செலவு. அலைச்சல். நேரவிரயம். இப்போது பேருந்துக்குக் கட்டணம் இல்லை. சிறப்புப் பேருந்துகளில் கட்டணம் இருக்கலாம். அம்மா எப்போதும் விடியற்காலையில் எழுந்துவிடுவாள். முந்தைய நாள், காடுகரையெல்லாம் சுற்றிக் கீரை பறித்து, இரவு வெகுநேரம் கட்டுகளாகக் கட்டி, காலையில் ஐந்து மணிக்கே எழுந்து முதல் பேருந்தில் பொள்ளாச்சிக்குக் கொண்டு போவாள். கோட்டூர்ப் பேருந்து நிலையத்தில் கீரை மூட்டையை விரித்துக் கடை பரப்பினால், எட்டு மணிக்குள் விற்றுவிடும்.

அம்மாவின் கீரைக்கு எப்போதும் நல்ல மதிப்புதான். சிலரைப்போல சாக்கடைத் தண்ணீர் தேங்கியிருக்கிற இடத்தில் முளைத்துச் செழித்திருக்கிற கீரைகளையோ, தண்ணீர் நாறிக் கிடக்கிற ஆத்துப் பள்ளத்திலோ, இப்படியான வேறு எந்த இடங்களிலுமோ கீரைகளைப் பறிக்கவே மாட்டாள்.

‘‘சனங்கள அப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது. கொழந்த குட்டிக, வயசான சீவனுக, நோயாளிக இப்படி நம்மள நம்பி ரக்கிரி வாங்கிட்டுப் போகுதுங்க... அவங்களுக்குச் சுத்தபத்தமா கொடுக்கணும்.’’

‘‘அம்மா, அது ரக்கிரி இல்லே. கீரை.டவுன்காரங்கிட்டே நாகரிகமா சொல்லும்மா.அதென்ன ரக்கிரி கிக்கிரின்னுட்டு... உன்ன ரொம்ப கேலி பேசுவாங்க. அது உனக்குப் புரியறதே இல்லே. நம்மூர்ல உங்கிட்டே யாரும் வாங்கறதும் இல்ல. ரக்கரி ரத்தத்தில ஒட்டுதோ இல்லையோ, சாதி மட்டும் ஒட்டியிருக்கு.’’

‘‘ஆமா... ரொம்பப் படிச்சாலே இப்படித்தான்... ரக்கிரிங்கறது நான் கொழந்தையா இருக்கிறப்ப புடிச்சு இருக்கு. உன்னப் படிக்க வெச்சதனாலே ரக்கிரிய கீரைங்கறே...’’

அம்மா கூறுவது உண்மையோ? இப்படி எத்தனையோ சொற்களைப் பற்றி அம்மாவிடம் விவாதம் செய்திருக்கிறாள். அம்மாவோடு கீரைக் கூடையைச் சுமந்தபடி பல முறை சென்றிருக்கிறாள்.

பேருந்தில், யாரிடமாவது அறிமுகப்படுத்தும் போது, ‘‘இஸ்கூல்ல படிக்குது’’ என்பாள். மனசுக்குள் கோபமும் ஆத்திரமும் பொங்கிவரும்.

‘‘ஏம்மா, அது இஸ்கூலா..?’’

‘‘எனக்கென்ன தெரியும்? மழையோ வெயிலோ, பட்டினியோ விருந்தோ, எது எப்படியிருந்தாலும் உன்னப் படிக்க வைக்கணும், அவ்வளவுதான்.’’

அம்மா தன்னைப் படிக்க வைக்க எத்தனை தியாகங்களைச் செய்கிறாள், செய்திருக்கிறாள் என்று யோசித்தால் ஒன்று, இரண்டு, மூன்றென வரிசை கட்டி நிற்கும். இந்தக் காலனிப் பகுதியை ஒட்டி குடியானத் தெருவும் வந்துவிட்டது. இரண்டு பகுதியையும் பிரிப்பது ஒரு வீதிதான். வீதிக்கு வடபுறம் அவர்கள். தென்புறம் இவர்கள்.

இந்தக் காலனியில் தான் மட்டும்தான் பட்டப்படிப்பு படித்திருக்கிறோம் என்பது மணிமேகலைக்கு எப்போதும் பெருமிதம். அம்மா படிக்கவைத்தாளே தவிர மனசுக்குள் எப்போதும் ஆழமான தாழ்வு மனப்பான்மை.

நல்லதாக ஒரு சுடிதார், ஒரு செருப்பு, ஒரு கடிகாரம்... இப்படி மாறுகிறபோதெல்லாம் தன்னை யாரோ கழுத்தை நெரிப்பது போலவே உணர்கிறாள். முகத்தில் தெரிகிற தடுமாற்றம், அந்நியம் மனதைத் துளைக்கத்தான் செய்கிறது. வேண்டா வெறுப்பு படரும்.

‘‘சனங்க எப்பப் பாரு சாடை பேசுறதிலதான் குறியா இருக்கு... எம் புள்ளையப் படிக்க வெச்சேன், வேலைக்குப் போறா... இவங்களுக்கு என்ன நோகுது. அந்த மேற்கு வளவு பெரியூட்டு அம்மா, புள்ளைய வெடியால வரச் சொல்லு, நோம்பி வருது... வீடெல்லாம் பூசோணுங்கிறாங்க...அவங்கவங்க ஒண்ணப் பெத்து வெச்சிருக்கிறாங்களே, அதுகள வேல செய்யச் சொல்ல வேண்டியதுதானே...’’

இரண்டு பறவைகள் - சிறுகதை

இப்படி அம்மா, யார் யாரோ வேலைக்குக் கூப்பிடுவதாகப் புலம்பியபடியே இருப்பாள்.

ஒரு முறை கல்லூரிக்குப் பணம் கட்ட, எப்படியெல்லாம் முயன்றும் பணம் புரட்ட முடியவில்லை. அம்மா ஊருக்குள் நான்கைந்து வீட்டுக்கு சாயங்காலம் வாசல் பெருக்கப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். தினமும் கீரை விற்பதில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனைக் கட்டிவிடலாம் என்று கூறினாள். மணிமேகலைக்கு அப்படி அம்மா போவதும், அவர்களிடம் கையேந்தி நிற்பதும் அறவே பிடிப்பதில்லை.

அம்மாவிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ, வலுக்கட்டாயமாக பழைய சோறு, காலையில் மிச்சமான இட்லி, ஊசிப்போன சாம்பார் என்று தலையில் கட்டுவார்கள். அதையும் மறுக்கத் தெரியாமல் வாங்கி வந்துவிடுவாள்.

‘‘ஏம்மா, இப்படியெல்லாம்..?’’

‘‘என்னடி ராசாத்தி செய்றது... வேண்டாம்னா, பெரிய பவுசுக்காரி அவ்வளவு பெரிய மனுசியான்னு என்னென்னவோ திட்டுறாங்க...’’

‘‘பொறும்மா, இந்த வருசம் படிப்பு முடிச்சிடும்... அப்புறம் பார்.’’

‘‘என்னத்தப் பாக்கறது... இந்த ஊர் இல்லே, எல்லா ஊர்லயும் இப்படித்தான்.’’

‘‘டவுன்ல இந்தப் பிரச்சினை இல்லேம்மா...வேல கெடச்ச உடனே அங்கே போயிடலாமா..?’’

எப்போதும் அம்மாவிடம் மனச் சமாதானத்திற்காக இந்தக் கேள்வியை முன் வைப்பாள். அம்மா மௌனமாகிவிடுவாள்.

‘‘ஏம்மணி... பெரிய வூட்டுப் பண்ணாடிகிட்டே பணம் கேட்டுப் பாக்கட்டுமா? வெவரந்தெரிஞ்ச நாள் மொதலா அங்கதான வாசல் கூட்டுறேன்... ஒரு நாளும் பணம், காசுன்னு கேட்டதில்லே.’’

‘‘ம்... சரிம்மா. நாளைக்குள்ளே எப்படியாவது புரட்டணும்.’’

போன வேகத்தில் திரும்பி வந்தாள். முகம் அவளின் மிச்சமாகிற கீரையைப்போல வாடி வதங்கியிருந்தது.

‘‘ஏம்மா, என்னாச்சு... முகமெல்லாம் இப்படியிருக்கு?’’

‘‘இல்லேன்னா, இல்லேன்னு சொல்லணும், `சாமி பல்லக்கு ஏறலாம். ஆசாமிக்கு எதுக்கு பல்லாக்கு’ங்கிறாங்க. சீவகட்டை பட்டுக் குஞ்சம் ஆகணும்னு கட்டாயமா... இப்படியெல்லாம் வியாக்கியானம் பேசறாங்க...’’

‘‘விடுங்க... அது அவங்க பழக்கம்! அதை மாத்த முடியாது.’’

மறுபடியும் நான்கைந்து இடத்தில் கேட்டுப் பார்த்தார்கள். பணம் இருந்தாலும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள். இரவெல்லாம் அழுகை.

ஒருவேளை அப்பா இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா..? அப்பா இருந்திருந்தால் படிக்கவே வைத்திருக்கமாட்டார். ஐந்தாவதோடு படிப்பை நிறுத்திவிடலாம் என்று பிடிவாதமாக இருந்தவராயிற்றே!

அப்பா மற்றவர்களைப் போல குடிகாரரோ, வம்பு வழக்குக்குப் போகிறவரோ இல்லை. ஆனாலும் மரம் ஏறுகிறபோது தவறிவிழுந்து அதே இடத்தில் இறந்தபோது மணிமேகலை ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அதுவரை அம்மா கிடைக்கிற வேலைக்குத்தான் போய்க் கொண்டிருந்தாள். நடவு, களைவெட்டு, அறுவடை என்று வேலை இருந்துகொண்டே இருந்தது. சிறிது நாள்களில் அதெல்லாம் மாறி வேறு வேலைகள் தேட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சோளம், கம்பு, நெல் என இருந்தது இப்போது தென்னந்தோப்புகளாய் மாறி, வேலைகளின் தன்மையும் மாறிவிட்டது. அம்மா கீரை விற்கிற வேலைக்குத் தயாரானாள்.

ஆறாம் வகுப்புக்கு அனுப்புவதில் சொந்தங்கள் எவருக்கும் விருப்பமில்லை. ‘‘நம்ம சாதி சனத்தில இதுவரைக்கும் யாரும் வெளியூர் போய் படிச்சதே இல்ல... இது எதுக்கு புதுசா... அதுவும் ஆம்பளத் துணை இல்லாத வீடு.’’

இதுபோல நூற்றுக்கணக்கான வசைகள், எதிர்ப்புகள், அம்மாவிற்கு எழுதப்படிக்கத் தெரியும். தப்பும் தவறுமாய் எழுதுவாள். பிழையோடுதான் படிப்பாள். அந்தச் சிறு சுடர்தான் மணிமேகலையை பன்னிரண்டாம் வகுப்பு வரை நகர்த்தியது.

கந்துக்காரரிடம் கடன் வாங்குவார்கள். வாரம் தவறாமல் கட்டுவதும், பிறகு வேண்டும்போது வாங்குவதும் ஒரு சங்கிலித் தொடர் போல இன்றுவரை தொடர்கிறது. இந்த ஸ்கூட்டியை வாங்குவதற்குக்கூட அவர்தான் கடன் கொடுத்தார்.

இதில்தான் மறுபடியும் அம்மாவிற்குப் பெரும் பதற்றம். ‘‘ஊருக்குள்ள நாலு பேரு, நாலுவிதமா பேசுவாங்க... இதெல்லாம் இப்ப வேண்டாம்.’’ அம்மா தொடர்ந்து இதையேதான் கூறிக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் கண்ணுக்கு முன் இப்படி ஸ்கூட்டியில் ஆனந்தியோடு வாசலில் நின்றது பெரும் அதிர்ச்சிதான். அம்மாவிடம் ஏற்கெனவே ஒரு பொய்யைத்தான் கூறிச் சமாளித்திருந்தாள்.

ஸ்கூட்டியை ஓட்டிப் பழக ஆனந்திதான் துணையாக இருந்தாள். கல்லூரியில் படிப்பை முடித்தவுடன், வேலைக்குப் போகத் தயாரானாள் மணிமேகலை. கணினி படித்திருந்ததால், கணினிப் பயிற்சி மையத்தில் எளிதாக வேலை கிடைத்தது. காலை ஏழு மணிக்குப் பயிற்சி நிலையத்தில் இருக்க வேண்டும். இரவு எட்டு மணி வரை வகுப்பு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

காலையில் ஊருக்குள் வருகிற ஒரே ஒரு பேருந்தைத்தான் நம்ப வேண்டியிருந்தது. அதை விட்டுவிட்டால் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று ஊரெல்லைப் பிரிவில் காத்திருக்க வேண்டும். பல சமயங்களில் பேருந்து நிற்காமல் போகிற வாய்ப்புகள்தான் அதிகம்.

இந்தச் சின்னக் கிராமத்தில் இவள் மட்டும்தான் வேலைக்குப் போகிறாள். அதுவே பலருக்கும் உறுத்தல்தான். அது வேறு வேறு வகைகளில், பொறாமைச் சொற்களாகவும் வெடிக்கும்.

சொந்தக்காரர்களே அம்மாவிடம் இல்லாததும் பொல்லாததுமாக எதையாவது சொல்கிறபோது அம்மா எதையுமே காது கொடுத்துக் கேட்டதே இல்லை. யாருடனாவது தான் ஓடிப்போகக் கூடுமென்றும், அம்மாவை அநாதையாக விட்டுவிடக்கூடும் என்றும் அவரவர் யூகத்திற்கும் அம்மாவிடம் சொற்கள் வந்து சேரும். அம்மா அதற்கெல்லாம் அயர்ந்து போக வாய்ப்பில்லை.

அத்தைப் பையன் வீரக்குமார். அவனும் அவன் பங்குக்கு மிரட்டிப் பார்க்கிறான். ``கட்டிக்கப் போறது நான், எதுக்கு டவுனுக்கு வேலைக்குப் போறதெல்லாம். இன்னும் ரெண்டு மாசத்தில கல்யாணம் வெச்சுக்கலாம்...’’

நான்கைந்து முறை மணிமேகலையிடம் வம்புக்கு இழுத்தான். அம்மாவிற்கே இதில் குழப்பம்தான். ஆனாலும் வேலைக்குப் போவது தன் மகள் மட்டும்தான் என்பதில் கர்வம்தான். தன் சொல்பேச்சுக் கேட்டுப் படித்து, இப்போது வேலைக்கும் போவது இரட்டிப்பு மகிழ்ச்சி. அரசாங்க வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் இருவரின் விருப்பமும். இப்போதைக்குக் கல்யாணப் பேச்சோடு யாரும் வரவேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

இரண்டு பறவைகள் - சிறுகதை

ஆனந்திதான் ஸ்கூட்டி ஆலோசனையைத் தந்தவள். தினமும் பதற்றத்தோடு ஏன் பேருந்தையே நம்பிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு ஸ்கூட்டி வாங்கலாமே என்றாள். தனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்தாள். பிடிவாதமாக ஆனந்திதான் ஸ்கூட்டியில் உட்கார வைத்தாள். எப்போதாவது பிரதிபலனை எதிர்பாராமல் உதவி செய்கிறவர்களைச் சந்திக்கிறபோது இந்த உலகம் நல்லவர்களாலும் சூழ்ந்ததுதான் என்ற ஒளி பிறக்கிறது. ஆனந்தியிடம் ஏன் நெருக்கம் உருவானதென்று புரியவில்லை. ஆனால் பிரிக்க முடியாத ஏதோ ஒரு பந்தம் நெடுநாளாகத் தொடர்வதாக பிரமை.

ஆனந்தி ஸ்கூட்டியைத் தள்ளுகிற அழகே தனிதான். அவ்வளவு லாகவமாக, எதிரில் வரும் வாகனங்களை முந்திச் செல்லாமல் போவாள். ஆனாலும் அந்த விபத்து நடந்துவிட்டது.

கூரியர் ஒன்று அவசரமாக அனுப்ப வேண்டியிருந்தது. ஆனந்தியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, அத்தனை மகிழ்ச்சியோடு கிளம்பினாள். ஆனந்தி இல்லாமல் அவளின் வண்டியை எடுத்துக்கொண்டு போவது இதுதான் முதல் முறை.

கொஞ்சமே கொஞ்சம்தான் பயம் இருந்தது. ஒருவேளை அந்தத் தைரியம்தானோ என்னவோ, ஸ்கூட்டியின் வேகத்தை இன்னும் கொஞ்சமெனக் கூட்டினாள். வானத்தில் பறக்கிற பெரு மகிழ்ச்சியாகப் பரவிக் கொண்டிருந்தது.

என்ன நடந்தது, ஏது நடந்தது என்று புரிவதற்குள் பாதையில் இவள் ஒரு பக்கம், வண்டி ஒரு பக்கமெனச் சாய்ந்தார்கள். கை காலெல்லாம் காயங்கள். யார் தகவல் கூறினார்கள்? எப்போது வந்தார்கள்? ஆனந்தி மங்கலாகத் தெரிந்தாள். உடனுக்குடன் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். காயங்கள் தவிர, பெரிதாக ஒன்றும் பிரச்சினை இல்லை. பயப்பட வேண்டாமென மருத்துவமனை அனுப்பிவிட்டது.

ஆனந்தியோடு ஸ்கூட்டியில் போகிற போது, குறுக்கே ஒரு வாகனம் வந்ததால் தனக்கு மட்டும் காயங்கள் என்று அம்மாவிடம் சமாளித்தாள். அம்மாவிற்குச் சமாதானமே ஆகவில்லை. ஒரு வார விடுமுறைக்குப் பிறகு வேலைக்குப் போனாள். ஆனந்தி மறுபடியும் உற்சாகப்படுத்தினாளே தவிர, அந்த விபத்து பற்றியோ, தனக்கு ஏற்பட்ட செலவு குறித்தோ எதுவுமே குறை கூறவில்லை. ஆனந்தி தனக்கு இந்த விஷயத்தில் குருவாகவே மாறிப்போனாள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆனந்திதான் மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக வந்தாள்.

‘‘மணி... கிளம்பு. ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டாச்சு. முக்கியமான ஒரு இடத்திற்குப் போறோம்.’’

‘‘எங்கேன்னு சொல்லேன்..?’’

‘‘முதல்ல வண்டியில உட்கார், சொல்றேன்.’’

வண்டியில் போகும்போது வேறு எதையோ பேசினாளே தவிர, தான் எதற்குப் போகிறோம் என்று கூறவில்லை. வண்டியை நிறுத்தினாள்.

``இப்ப நாம எங்க போறோம்..?’’

``இதோ இங்கதான்...’’

கை நீட்டிய இடத்தில், பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். ``வாம்மா...’’ என்றவரைப் பின்தொடர்ந்தார்கள். ஒரு தெரு கடந்து வீட்டிற்குள் சென்றார்கள். வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. ‘இங்கு எதுக்கு வந்திருக்கோம்..?’ குழப்பமாக இருந்தது.

‘‘அத்தையும் பவியும் பொள்ளாச்சி போயிருக்காங்க. வாங்க வண்டியைப் பாக்கலாம்...’’ வீட்டிற்குப் பின்பக்கம் அழைத்துச் சென்றவர், மூடியிருந்த துணியை இழுத்தார். பளபளப்பாக புத்தம் புது ஸ்கூட்டி.

``ஸ்கூட்டி இவளுக்குத்தான் மாமா...’’

``வண்டி புதுசும்மா. என் பேத்திக்கு வாங்கினோம். அவங்க மாமா பிரியப்பட்டு பெரிய வண்டி வாங்கிக் கொடுத்திட்டாரு.அதனால இதை வித்திடலாம்னு ஆனந்திகிட்டே நேத்துதான் சொன்னேன். இன்னிக்கே வந்திட்டீங்க. பணத்தை ரெண்டு தவணையில கொடுத்தா போதும். பேப்பர் வேலையெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம். இந்தாங்க சாவி... இப்பவே வண்டியை எடுத்திட்டுப் போலாம்.’’

``எனக்கு இப்ப எதுக்கு..? அம்மா வேற திட்டுவாங்க.’’

``அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... இப்ப வண்டியை எடுக்கலாம் பாஸ்...’’ சிரித்துக் கொண்டே ஆனந்தி கூற, ஒரு வகையில் இதெல்லாம் பிடித்திருக்கிறது என்பதாகவும் மனசு கூறியது. வேண்டாம் என்பது போலவும் மனசு தடுத்தது.

ஆனந்தியின் பேச்சை மீற முடியவில்லை. ஸ்கூட்டியின் சாவியைக் கையில் பெறுகிறபோது மனசுக்குள் தங்கள் தலைமுறையிலேயே முதன் முதலாக புதிய சொத்தொன்றை விலை கொடுத்து வாங்குகிற பெருமிதம். இனி அம்மாவை மருத்துவமனைக்கு, கோயிலுக்கு, அவள் விரும்புகிற எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லலாம்.

அம்மா `ஏன், ஏது’ என்றோ, `இத்தனை செலவு தேவையா’ என்றோ கேட்கக்கூடும். `வேண்டாம், திருப்பிக் கொடுத்துடு’’ என்றோகூட கூறலாம். ஆயிரம் யோசனைகளையும் வேறு வேறு காரணங்களால் சமாதானம் கூறிக் கொண்டது.

கந்துக்காரரிடம் விவரம் கூறியவுடன் சற்று நேரம் யோசித்தார். ``மொத மொத படிக்கணும்னு கடன் கேட்டு வந்தே... படிப்புன்னு சொன்னதால நானும் தயங்காமக் கொடுத்தேன். நீயும் நல்லா படிச்சு, கடனையும் திருப்பிக் கௌரவமா கொடுத்தே. இப்ப வேலைக்குப் போறதுக்குன்னு கேட்கிற, அதே நம்பிக்கையிலதான் இப்பவும் கொடுக்கிறேன்... பாத்து நடந்துக்க.’’

இப்படிக் கூறியவர், உடனே பணத்தையும் தந்துவிட, இன்று வண்டி சொந்த வண்டியாயிற்று.

மணிமேகலை வாசலில் நின்று கெஞ்சிக் கொண்டிருப்பதை, பக்கத்து வீடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. ``இந்தக் காலத்தில யாரு இப்படியெல்லாம் பொறுப்பா இருக்கிறாங்க. புள்ள கூப்பிடுது, போய் உக்காருவியா... ரொம்பவும்தான் கெராக்கி பண்ணுறியே?’’

எதிர் வீட்டு அக்கா கண்டிக்க, அம்மா யோசனையுடன் வண்டியின் அருகில் வந்தார்.

‘‘சேலையை நல்லா மடிச்சுக்கம்மா... தைரியமா உக்காரு, வண்டி கிளம்பற போது என்ன நல்லாப் புடிச்சுக்கோ, சரியா...’’

மணிமேகலையின் குரலில் மகிழ்ச்சி, ஆனந்தம், முகத்தில் எப்போதாவது மட்டுமே பார்க்க வாய்க்குமே அதே சுடர்!

அம்மா, தான் கூறியது போலவே உட்கார்ந்து தன்னைப் பிடித்துக்கொண்டதில் மனம் கொண்டாட்டத்தில் ஆர்ப்பரித்தது. இதுவரை வாழ்நாளில் உணராத உணர்வு.

வண்டியை நகர்த்தத் தொடங்கினாள் மணிமேகலை. `விரைவில் அம்மாவிற்கும் வண்டி ஓட்டிப் பழக்கிவிடணும்...’ மனசுக்குள்ளேயே கூறிக் கொண்டாள் மணிமேகலை.

இரண்டு பறவைகள் புதிய வானத்தில் சிறகடிக்கத் தொடங்கின.