Published:Updated:

பாண்டிய மண்ணிலிருந்து கட்டியங்காரர்கள் - முனைவர் பா.ச.அரிபாபு, கிதியோன் சிங் | இவர்கள் | பகுதி 23

இவர்கள் | பா.ச.அரிபாபு

சமகாலச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளின் பின்னடைவுக்குக் காரணங்களாக அவர் கூறுவது, அவற்றால் பெருகிவரும் மெய்நிகர் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்போனதுதான்.

பாண்டிய மண்ணிலிருந்து கட்டியங்காரர்கள் - முனைவர் பா.ச.அரிபாபு, கிதியோன் சிங் | இவர்கள் | பகுதி 23

சமகாலச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளின் பின்னடைவுக்குக் காரணங்களாக அவர் கூறுவது, அவற்றால் பெருகிவரும் மெய்நிகர் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்போனதுதான்.

Published:Updated:
இவர்கள் | பா.ச.அரிபாபு
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

`கட்டியக்காரக் கோமாளியின் வளையொலிக்கு மன்னனின் ஆணையும் அடிபணியும்’ என்று நாடகக் கலையேடுகள் கூறுகின்றன. பேராசியர் முனைவர் பா.ச.அரிபாபு, அவரின் நண்பர் கிதியோன் சிங், அவரது நட்பு வட்டத்தின் நெறியாள்கையில் இயங்கிவரும் 'பஃபூன்' யூடியூப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ் வரலாற்றுப் பதிவுகள் நாட்டுப்புறவியல் ஆவணப் பதிவுகள், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல், பொருளாதாரச் சூழல், கலைப் பயிற்சி முறைகள் ஆகியவற்றின் ஆய்வுத் தொகுப்புகளைக் காண்கையில்' நாட்டுப்புறவியலின் கட்டியக்காரர்கள்' என்றே இவர்களை வர்ணிக்கத் தோன்றுகிறது. `கட்டியம் கூறுதல்’ என்றால் 'புகழ் கூறுவது' என்று தமிழகராதிகள் சுட்டுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகில் அண்டக்குடி எனும் சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்த அரிபாபு அவர்கள், இளமைக் காலந்தொட்டே தமிழ் நிலத்தின் தொன்மையையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் ஆழந்தறிந்து கற்பதில் நாட்டம்கொண்டிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்பு அதே துறையில் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமும் பெற்றார். அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற நாள்களைத் தனது வாழ்வின் பொற்காலம் என்று குறிப்பிடும் அரிபாபு,

``தமிழக நாட்டுப்புறவியலின்பால்கொண்ட பற்றுக்கு கல்லூரிகால அனுபவங்களே வழிகோலின’’ என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'திணைக் கோட்பாட்டு அடிப்படையில் தமிழ் நாவல்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, தனது இருபத்தியேழாவது வயதிலேயே முனைவர் பட்டம் பெற்றவருக்கு அமெரிக்கன் கல்லூரியிலேயே உதவிப் பேராசியராகப் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

நாட்டுப்புறவியலை வகுப்புப் பாடமாக கல்லூரியில் படித்தபோதும் நாட்டார் வழக்காறுகளுடன் அவர்கொண்டிருந்த தொடர்பும் ஈடுபாடும் தனது குடும்ப வழிவந்ததாகவே அவர் குறிப்பிடுகிறார். "எனது ஈடுபாட்டின் தொடர்ச்சியே எனது கல்வியின் அடிப்படையாகவும் அமைந்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு" என்று நெகிழ்ந்து கூறுபவருக்கு ஒயிலாட்டம் ஆடுவதில் நல்ல தேர்ச்சியுண்டு. ஆண்டுதோறும் நடைபெறும் ஊர் தெய்வமான 'வாழவந்தாள்' அம்மனின் திருவிழாவில் ஒயிலாடுவதை இன்றுவரை வழக்கமாகக்கொண்டுள்ளார். திருவிழா நடைபெறும் காலத்தில் ஒயிலாட்டம், மழைப்பாடல், கும்மிப்பாடல் ஆகியவை இடம்பெறுவது வழக்கம். அவற்றில் தவறாமல் பங்குபெறுவதும், அவற்றைக் குறித்த ஆவணங்களைச் சேகரிப்பதும் தனக்கு மிகவும் நிறைவு தரும்விஷயங்கள் என்று அரிபாபு கூறுகிறார்.

அழிந்துவரும் நாட்டார் கலைகளின் பெருமைகளை உலகுக்கு உரக்கக் கூறுவதன் அவசியத்தை நன்குணர்ந்த அரிபாபு, ஒயிலாட்டத்தின் வரலாற்றுப் பின்னணியையும் பயிற்சி முறைகளையும் தொகுத்துள்ளார். ஒயிலாட்டம் என்பது, ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றைவைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே, இந்த ஆட்டத்தின் பெயராக மருவியுள்ளது. இது முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை. ஆண்மையின் கம்பீரத்தை உணர்த்தும் இந்தக் கலையாட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டு ஆடுவதில்லை.

இவ்வாட்டத்தின் அடவுகள், ஆண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டவை ஆகும்.

பத்து முதல் பன்னிரண்டு பேர்கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர்த் திசையிலோ அல்லது நேர்த்திசையிலோ நின்றுகொண்டு ஆடுவார்கள். சிறகை விரித்தால் மயிலாட்டம், சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம் என்று இக்கலையின் தன்மை வர்ணிக்கப்படுகிறது.

"ஆளோடு ஆளு

உரசாமல்

உங்கள் ஆளிலே

ஒரு முழம் தள்ளி நின்று

காலோடு காலு உரசாமல்

உங்கள் கைபிடித்துணி

தவறாமல்

மேலோடு மேலு உரசாமல்

உங்கள் வேர்வை தண்ணி

சிதறாமல்..."

என்று நீளும் பாடல் ஒயிலாட்டத்தின் இலக்கணங்களை வரையறுக்கிறது. ஒயிலாட்டம் ஆடுகையில் காற்சலங்கையின் ஒலியில் ஆண்மையின் கம்பீரம் வெளிப்பட வேண்டும் என்பது நியதி. ஒயிலாட்டத்தின் மூத்த குருவான (வஸ்தாவி) சி.வீரன் என்பவரிடம் ஒயிலாட்டக் கலையின் நியதிகளையும் முறைகளையும் கற்றறிந்து 2007-ம் ஆண்டு 'இராமாயண கதை' என்ற தலைப்பில் ஆய்வு நூலை இயற்றினார் திரு.அரிபாபு. பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால் அந்நூல் வெளியிடப்பட்டது. அதேபோல் UGC-யின் உதவியோடு 'Fertility Rituals- a collection and recording' என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்திருக்கிறார். அந்த ஆய்வின் ஒரு பகுதியான 'மழைச்சடங்கு' எனும் ஆவணப்படம் தமிழ் வாழ்வியல் ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர்கள்
இவர்கள்

அதேபோல் ஒப்பாரிப் பாடல்களின் தனித்தன்மைகளும், தமிழர் வாழ்வில் அவற்றின் இன்றியமையாமையும் என்கிற கோணத்தில் பல ஆய்வுகள் செய்துள்ள முனைவர் அரிபாபுவின் முயற்சிகள் நம்மை வியப்பிலாழ்த்துபவை என்றால் அது மிகையாகாது. ``ஒப்பாரிப் பாடல்கள் மனத்தை ஆற்றுப்படுத்தும் வல்லமை படைத்தவை. அவற்றின் மெட்டுகள், சொற்களை நீண்டு உச்சரித்து முடிக்கும்போது சோகத்தின் நீளமும் கூடி அடங்குவதை உணர முடியும்" என்கிறார் திரு.அரிபாபு.

பாண்டிய மண்ணிலிருந்து கட்டியங்காரர்கள் - முனைவர் பா.ச.அரிபாபு, கிதியோன் சிங் | இவர்கள் | பகுதி 23

உசிலம்பட்டி பேச்சியம்மாள் என்கிற ஒப்பாரிப் பாடல் கலைஞரின் நேர்காணலை பஃபூன்-யூடியூப் தளத்தில் காண நேர்ந்தது. கணவரை இழந்த பிறகு தனது நாற்பதாவது வயதில் ஒப்பாரிப் பாடல்கள் பாடத் தொடங்கிய பேச்சியம்மாளின் பாடல்களைக் கேட்கும்போது மனம் தானாகவே அவரது பாடலோடு இணைந்து சிறிது நேரம் துக்கத்தை ஆராதித்தது. திரு.அரிபாபு, கிதியோன் அவர்களின் பெருமுயற்சியால் நாட்டுப்புறவியலின் பல முகங்களின் அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. மதுரை செனறாயப் பெருமாள் கோயில் வரலாறு, பாடகர் மதிச்சியம் பாலா அவர்களின் கலைப்பயணம், நாதஸ்வர கலைஞர் திருமதி. நாகலெட்சுமி ரமேஷ் அவர்களின் நேர்காணல், பளியர்கள் சமூக மேம்பாட்டுக்காகப் போராடும் கொடைக்கானல் மல்லிகா, கிடைமாடுகள் பராமரிக்கும் கீதாரி திரு.போஸ் அவர்களின் இடையர்கள் வாழ்வியல் குறித்த பதிவுகள் என்று பஃபூன் சேனலில் இடம்பெறும் ஒவ்வொரு காணொலிப் பதிவும் வரலாற்று ஆவணங்கள் என்று போற்றப்படும் அளவுக்கு நேர்மையான படைப்புகளாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேராசியர் டி.தருமராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதைப் பெரும் உவகையோடு குறிப்பிடும் அரிபாபு, அயோத்திதாசரை, அவரது சித்தாந்தத்தை இன்றைய தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தியதில் பேராசியர் டி.தருமராஜ் அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டென்று கருதுகிறார். ``தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று அசைவியக்கத்தை அறிந்துகொள்ள விரும்பும் யாவருமே விருப்பு வெறுப்பு இல்லாமல் அயோத்திதாசரைக் கற்றுதான் ஆக வேண்டும்’’ என்று கூறும் அரிபாபு, ``அம்பேத்கர்போல், பெரியார்போல் அயோத்திதாசரும் சுயமரியாதைச் சிந்தனையை மக்கள் மனத்தில் வேரூன்றச் செய்தவர். அவரைப் புறம்தள்ளிவிட்டு எந்தவொரு சுயமரியாதைக் கோட்பாட்டையும் நிலைநிறுத்த முடியாது’’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். ``பேராசியர் டி.தருமராஜ் அவர்களது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' மற்றும் 'அயோத்திதாசரியம்' ஆகிய நூல்களை தமிழ்ச் சமூகம் நிச்சயம் வாசித்து பயன்பெற வேண்டும்’’ என்கிறார்.

இவர்கள்
இவர்கள்

சமகாலச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளின் பின்னடைவுக்குக் காரணங்களாக அவர் கூறுவது, அவற்றால் பெருகிவரும் மெய்நிகர் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்போனதுதான். அதேபோல் சினிமாவின் தாக்கமும் நாட்டார் கலைகளில் தென்படுவதைக் காண முடிகிறது.

ஊர்ப்பக்கங்களில் நடைபெறும் வள்ளி திருமணம், குறவன் குறத்தி ஆட்டங்கள் போன்றவற்றில் இன்று சினிமாப் பாடல்களை ஒலிக்கச் செய்கின்றனர்.

"அப்படி செய்தால்தான் மக்கள் ரசிக்கிறார்கள், எங்களுக்கும் வருமானம் கிடைக்கிறது" என்று வெளிப்படையாகக் கலைஞர்கள் கூறுவதாகக் குறிப்பிடும் திரு.அரிபாபு, நாட்டுப்புறவியல் கலை வடிவங்களை மெய்நிகர் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கும் ஒரு முயற்சியாகவே 'பஃபூன்' சேனலைத் தொடங்கியதாகக் கூறுகிறார். தனது நண்பர் கிதியோன் சிங் இதைச் செயலாக்குவதில் பெரும்பங்கு ஆற்றுவதாகக் கூறுகிறார். விளிம்புநிலை மக்களின் கலை வடிவங்களை அழிவின் பாதையிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மெய்நிகர் உலகில் அவற்றைப் பிரபலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். `சிறு விதையொன்று போதுமல்லவா பெருவனத்தை உருவாக்கிட’ என்ற நம்பிக்கையின் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் அரிபாபு.

'தமிழறம்' என்கிற நாட்டுப்புறவியல் இதழை வெற்றிகரமாக நடத்திவரும் பேராசிரியர் அரிபாபு அவர்கள், அந்த விதழின் மூலம் நாட்டுப்புறவியலின் அனைத்துக் கூறுகளையும் அலசும் தரமான ஆய்வுக் கட்டுரைகளை எவ்வித வர்த்தக சமரசமும் செய்துகொள்ளாமல், தமிழ் வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கிவருகிறார்.

அறம் பிறழாமல் அவர் ஆற்றும் இப்பணியை தமிழினத்துக்கு அவர் ஆற்றும் பெருந்தொண்டு என்றே கூற வேண்டும்.

நவீன இலக்கியப் படைப்புகளில் நாட்டுப்புறவியலின் தன்மையைப் பேசும் படைப்புகளாக பூமணியின் 'அஞ்ஞாதி', ஜெயமோகனின் 'கொற்றவை', சோ.தருமனின் 'சூல்' மற்றும் முத்துநாகுவின் 'சுளுந்தீ' ஆகியவற்றைக் குறிப்பிடும் அரிபாபு வளரும் தலைமுறையினரிடம் ஆழ்ந்து வாசிக்கும் தன்மை குறைந்துவிட்டதாகவே கருதுகிறார். "வாசிப்பு என்பது அகம் சார்ந்த விஷயமென்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்றபோதும் வெறும் பொழுதுபோக்கு நோக்கத்தில் மட்டும் வாசிப்பை அணுகாமல் நமது வரலாற்றை, தமிழ் வாழ்வியலை, தமிழ்ச் சமூகம் சந்திக்கும் சவால்களை அறிந்துகொள்ளும் ஒரு முயற்சியாக வாசிப்பை அணுகும்போது அவ்வனுபவம் நமது ஆளுமையை வலுப்படுத்துவதை நாம் உணர முடியும்" என்கிறார்.

உலகுக்கு அறத்தைக் கற்பித்தவன் தமிழன். அவனது அறமும் பெருமையும் வருங்காலத்திலும் தழைத்தோங்க உழைக்கும் கட்டியங்காரர்களான பேராசிரியர் பா.ச.அரிபாபு போன்றோர் தமிழ் வானில் முளைத்த விடிவெள்ளிகள்.

(இவர்கள்... வருவார்கள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism