கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜக்கம்மா - சிறுகதை

ஜக்கம்மா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஜக்கம்மா - சிறுகதை

நவீன்கிருஷ்ணா

காலையிலேயே காலிங் பெல் அடித்தது.

கிச்சனில் வேலை செய்துகொண்டிருந்த நான், ``ஹரிணீ, யாருன்னு பாரு’’ என்று ஹாலைப் பார்த்துக் குரல் கொடுத்தேன். பதில் ஏதும் வராமல், மீண்டும் காலிங் பெல் அடிக்க… வியர்வையும் எரிச்சலுமாய் வெளியே வந்து, ஹாலில் லேப்டாப்பில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஆன்லைன் கிளாசில் சிவில் படிக்கும் ஹரிணியைப் பார்த்து, கோபத்தை அடக்கிக்கொண்டு, வெளியே வந்து வாசல் கதவைத் திறந்தேன்.

எங்கள் வீட்டில் குடியிருக்கும் கணேசண்ணனும் அவர் மனைவி சீதாக்காவும் வந்திருந்தனர். “வாங்க அண்ணே, வாங்க அக்கா” என்றபடி கதவைத் திறந்துவிட்டேன். “என்ன காயத்ரி, காலையில தொந்தரவு பண்றமா..?’’ என இருவரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார்கள்.

``அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணா, இதுல என்ன தொந்தரவு... ஆமா என்ன இந்த நேரத்துல?’’ என்று சிரித்தபடி ஸ்டவ் ஞாபகம் வந்து, ``ஒரு நிமிஷம்’’ என்று கிச்சனுக்கு வந்து கேஸ் ஸ்டவ்வைக் குறைத்து வைத்துவிட்டு, ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துவந்து கணேசண்ணன் கையில் கொடுத்தேன். அவர் ஒரு மடக்குக் குடித்துவிட்டு டீப்பாயில் வைத்தபடி ``எங்கம்மா, மாப்பிள்ளை பிரகாஷ் இல்ல... இன்னிக்கு லீவ்தானே?’’ என்று கேட்டபடி, படித்துக்கொண்டிருந்த ஹரிணியைப் பார்த்தார்.

ஹரிணியும் ஏதோ செவ்வாய்க் கிரக நபர்களைப் பார்த்துச் சிரிப்பதுபோல் ஒரு சிரிப்பு சிரித்து, அவள் பாட்டுக்கு ஆன்லைன் கிளாஸைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

நான் இதை கவனித்தபடி “அவரு ஆபீஸ் யூனியன் வேலையாப் போயிருக்காருண்ணே..!’’ என்றேன்.

``நீ உட்காரும்மா’’ என்றபடி அவர் அக்காவைப் பார்க்க, அக்காவும் அவரிடம் `நீங்களே சொல்லுங்க’ என்பதுபோல் ஜாடை காட்ட, கணேசண்ணன் அசடு வழிந்தபடி ஏதோ சொல்ல முயல... நான் எதிர் சோபாவில் அமர்ந்தேன்.

``மாப்பிள்ளைக்கு ரெண்டு மூணு போன் பண்ணிட்டேன், அவரு எடுக்கல. அப்புறம்தான் வீட்டுக்கு வந்தோம்’’ என்றார்.

“என்னண்ணே, எதும் பிரச்னையா? சும்மா சொல்லுங்க’’ என்றேன்.

``ஆமாம்மா, உங்க வீட்டிலதான் கொஞ்சம் பிரச்னை. நாங்க காலி பண்ணிக்கலாம்னு இருக் கோம்’’ என்றார்.

நான் திகைத்து, ``என்னண்ணே சொல்றீங்க, குடி வந்து ஒரு மாசம்கூட ஆகலையே... என்ன பிரச்னை? வசதி எதுவும் குறைச்சலா இருக்கா?’’ என்றேன்.

ஜக்கம்மா - சிறுகதை

“கணேசன் பேச ஆரம்பித்தார், ``வசதிக்கு என்னம்மா குறைச்சல், நல்ல வசதியான வீடுதான். ஆனா என்ன, ராத்திரி... ராத்திரிதான்’’ என இழுக்க, இப்போது சீதா அக்கா கொஞ்சம் குரலை உயர்த்தி, “என்னங்க, சும்மா இப்படி இழுத்து இழுத்துச் சொல்லிக்கிட்டிருக்கீங்க’’ என்றபடி, அதே வேகத்தில் திரும்பி என்னைப் பார்த்து, “அது ஒன்னுமில்ல காயத்ரி, டெய்லி நைட் ஆச்சுன்னா உன் மாமியாரு கடைசியா இருந்த ரூம்லேருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்டுகிட்டே இருக்கு, திடீர்னு சிரிக்கிற சத்தமெல்லாம் கேட்குது... எங்களுக்கே கொஞ்சம் பயமாதான் இருக்கும்மா. புள்ளை குட்டிங்க இருக்கற வீடு வேறயா, அதான் கொஞ்சம் கருக் கருக்குனு இருக்கு’’ என்றார்.

நான் அதிர்ச்சியாகி எழுந்தேவிட்டேன். “அக்கா ஒரு நிமிஷம், வந்துடுறேன்’’ என்று சொல்லியபடி வேக வேகமாய் கிச்சனுக்குள் வந்து அடுப்பை அணைத்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, முந்தானையால் வாயைத் துடைத்தபடி வந்து சோபாவில் அமர்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

கணேசண்ணன் மறுபடியும் ஆரம்பித்தார், ``அதான்மா, சீதா சொல்ற மாதிரி சத்தம் கேட்கிறது உண்மைதான். அதுவும் நடுராத்திரி பேச்சுக்குரல் கேட்குது. ஜக்கம்மா அத்தை குரல் மாதிரிதான் இருக்குது. அவங்க செத்து இன்னும் ஒரு வருஷம் திரும்பலைல, அதான் அவங்க ஆத்மா இன்னும் வீட்டையே சுத்திக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். திதி எல்லாம் சரியா செய்துட்டீங்கதானே? எதுக்குச் சொல்றேன்னா, ஏதாவது திதி கிதி தப்பா இருந்தா ஆத்மா சாந்தி அடையாதுன்னு சொல்வாங்கில்ல, அதான் கேட்டேன்மா. இப்ப அந்த ரூமைப் பூட்டிதான் வெச்சிருக்கோம்” என்றார்.

நான் பதறியபடி, ``அதெல்லாம் நல்ல திதிலதான் அத்தை இறந்தாங்கன்னு அவர் சொல்வாரு. அதான் காரியம் எல்லாம் நல்லபடியா முடிச்சு வச்சுட்டமே அண்ணே...’’ என்றேன்.

கணேசண்ணனும் சீதாக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. என் படபடப்பைப் பார்த்து கணேசண்ணன், அந்தச் சொம்புத் தண்ணீரை எடுத்துப் பாதி குடித்துவிட்டு மறுபடி பேச ஆரம்பித்தார்.

``அதுக்கில்லம்மா, இன்னும் குழந்தைங்க அந்தக் குரலைக் கேட்கல, நானும் சீதாவும்தான். ராத்திரி சத்தம் கேட்டு முழிப்பு வந்துட்டா அதுக்கப்புறம் ஒரு பொட்டுத் தூக்கம் வராது. அப்புறம் காலைல வரைக்கும் சிவராத்தரிதான் போ... அந்தம்மாவுக்கு ஏதோ குறைன்னு மட்டும் புரியுது..! அதாம்மா நேரேயே வந்து சொல்லிட்டுப் போயிடலாம்னு வந்தோம். மாப்பிள்ளை வந்தா சீக்கிரம் அது என்ன ஏதுன்னு உடனே வந்து பார்க்கச் சொல்லும்மா” என்றபடி கிளம்புவதற்காக எழுந்தார்.

நான் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், “வந்துட்டு ஒன்னும் சாப்பிடாமப் போறீங்களேண்ணே, காபியாவது சாப்பிடுங்க’’ என, “அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. இப்பதான் டிபனே முடிச்சுட்டு வந்தோம்” என்று கிளம்பிச் சென்றனர்.

நான் சில நிமிடங்கள் அப்படியே சோபாவில் யோசனையில் அமர்ந்துவிட்டேன். அவருக்கு போன் செய்து சொல்லலாம் என மொபைலை எடுத்துவிட்டு, ‘ஆபீஸ் யூனியன் மீட்டிங்கில் இருப்பவரை எதற்கு தொந்தரவு செய்ய’ என்று தவிர்த்தேன்.

ஹாலில் நடந்தபடி ஹரிணியைப் பார்த்தேன். இங்கு நடந்த எதுவுமே தெரியாதபடி ஹெட்போனில் ஆன்லைன் வகுப்பில் பிசியாக இருந்தாள். `நேரா படிச்சாலே இந்த என்ஜினீயர்கள் ஒழுங்கா வீடு கட்டாதுங்க, கொரோனாவால இது ரெண்டு வருஷமா ஆன்லைனிலேயே படிக்குது...’ என ஒரு பக்கம் கோபமும் மறுபக்கம் பரிதாபமும் ஒன்றாய் வந்துபோனது.

அதன்பின் சமைக்கும் மனநிலை போனதால், சாதத்தை மட்டும் வைத்துவிட்டு, ரசத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என அடுப்பை அணைத்தேன்.

ஹாலில் வந்து எதேச்சையாக மாலையுடன் இருந்த மாமனாரின் புகைப்படத்தைப் பார்த்தேன். `ஒருவேளை மாமியார் போட்டோவையும் வச்சுக் கும்பிடணுமோ... இல்லையே, அதுக்கு ஒரு வருஷம் திரும்பணுமே’ என்று பதில் சொல்லிக்கொண்டேன்.

ஹரிணியிடம் சொல்லலாமா என்று யோசனை வந்து `படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு இதைச் சொல்லணும்... அதுவுமில்லாம இவளுக்கு அவ அப்பத்தா ஜக்கம்மான்னா உயிரு. அப்பத்தா இப்ப ஆவியா வருதாம்னு சொன்னா பயந்துருவா, அப்பத்தா நம்ம வீட்டுக்கும் வருமான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?’ இப்படியாக ஒவ்வொரு கேள்வியும் பதிலுமாய் தனியாக எனக்கு நானே பேசிக்கொண்டிருந்த என்னைப் பார்த்து எனக்கே சிரிப்பு வந்தது.

சாயந்தரம் ஆறரை மணிக்கு வந்த அவரிடம் உடனேயே சொல்லவில்லை. எல்லாம் முடித்து கைலியுடன் வந்து சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்தபடி அவரே ஆரம்பித்தார்,

``காயத்ரி, நம்ம அம்மா வீட்டுல குடியிருக்கறார் இல்ல, அதான்மா கணேசன், மூணு கால் பண்ணிட்டாரு, மீட்டிங்ல இருந்ததால எடுக்க முடியல. அப்புறம் பேசினா, அவர் வீட்டுக்கு வந்து உன்கிட்ட பேசிட்டேன்னு சொன்னாரு. என்னவாம்?’’ என்றார். `வீட்டுக்குள்ள சுனாமியே வந்து போன் பண்ணினாகூட நீங்க உங்க யூனியன் மீட்டிங் முடிச்சுட்டு வந்துதான் என்னைப் பார்ப்பீங்கன்னு தெரியுங்க’ என்று மனசுக்குள் நினைத்தபடி காபி கொடுத்துவிட்டு, கணேசண்ணனும் சீதாக்காவும் வந்து சொன்னதை விலாவரியாகச் சொல்லி முடித்தேன்.

அவர் அதிர்ச்சியை வெளியே காட்டாமல் கொஞ்ச நேரம் யோசித்தபடி அமைதியாக இருந்துவிட்டு, ``டக்குனு சேலையை மாத்திட்டுக் கிளம்பு, நாம ஒரு எட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டு வருவோம்’’ என்று என் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று கிளம்ப ஆரம்பிக்க, நானும் சேலையை மாற்றி, முடியைக் குதிரை வால் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

மாமியார் இறந்து காரியங்கள் எல்லாம் முடிந்து இன்றுதான் அந்த வீட்டிற்குள் நுழைகிறேன்.

``வாங்க பிரகாஷ், வாம்மா’’ என்றழைத்தபடி கணேசண்ணன் வர, நானும் அவரும் உள்ளே நுழைந்தோம். வீட்டை அழகாக வைத்திருந்தார் சீதாக்கா. எல்லா அறைகளையும் பார்த்துவிட்டு என் மாமியார் இறுதிக் காலத்தில் படுத்திருந்த அறையைப் பார்க்க, அந்தக் கதவில் பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியது. சுற்றிலும் விளக்கமாறு, செருப்பு என பேய் விரட்டும் பொருள்களாக இருந்தன. நான் பயத்துடன் மிரட்சியாக அதையே பார்க்க... அவரும் இதையெல்லாம் கவனித்தபடி ``ஸாரி அண்ணே, இந்த நேரத்துல தொந்தரவு பண்றோம்’’ என்றார்.

சீதாக்கா ``ஏதாவது சாப்பிடுறீங்களா?’’ என்றதற்கு மறுத்தபடி ``சொல்லுங்கண்ணே’’ என்றார். ``அதான் தங்கச்சிகிட்ட எல்லாம் சொன்னோமே?’’ என்றார் கணேசண்ணன்.

``இல்லண்ணே... சொன்னா, அதான் உடனே கிளம்பி வந்தோம்!’’

அவர் ஏதோ தோன்றியதுபோல அந்த அறைக்கு முன்னால் போய் நின்றார். ``சரிங்கண்ணே, உங்க பிரச்னை புரியுது. எப்படியும் ஞாயிற்றுக்கிழமை சரி பண்ணிடலாம்’’ என்றுவிட்டு, என்னைப் பார்த்து “போலாம்” என்று சொல்லிக் கிளம்ப, நான் பின்னாடியே ஓடினேன்.

வண்டியில் வீடு போய் இறங்கும்வரை இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. வீடு வந்து இறங்கி ஏதோ சிந்தனையில் இருந்தார். பல நேரங்களில் அவர் மனநிலையைப் படிப்பது சிரமம். நான் உள்ளே சென்று ஒரு நைட்டியைப் போட்டுக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தேன்.

அவர் தன் செல்போனை எடுத்து, “ம்... ரவி, நான்தான்டா... ம்... நல்லாதான்டா இருக்கேன். ஞாயிற்றுக்கிழமை காலைலே கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டுப் போறியா? ஆமான்டா, பெரிய பிரச்னைதான், போன்ல சொல்ற மாதிரி இருந்தா சொல்லமாட்டேனா? இல்லடா, நான் பாக்க முடிஞ்சா பாக்கமாட்டேனா, போதும், ம்ம்... சரி... சரி...” என்று போனை வைத்தவர், என்னைப் பார்த்தார்.

`ரவி என்ன சொன்னான்னு கேட்டாதான் சொல்வீங்களோ’ என்று கேட்ட என் பார்வையைத் தவிர்த்தபடி, “இல்லம்மா, அவன் பிரைவேட் கம்பெனில வேலை பாக்குறான். ஞாயிற்றுக் கிழமைகூட வேலையாம். திடுதிப்புன்னு எப்படி லீவு சொல்வான். அதான் யோசிச்சிருக்கான். அப்புறம் நான்தான் விஷயம் சீரியஸ்னு சொல்லியிருக்கேன்’’ என்றார்.

``ஏன், நீங்களே போய் உங்க அம்மாகிட்ட பேசி அனுப்ப வேண்டியதுதானே..?’’

``ஆமா... எங்கம்மா உயிரோட இருந்தப்பவே என் பேச்சை மதிக்காது, இப்ப எப்படி? அதான் தம்பி ரவியை வரச் சொன்னேன்.’’

ஜக்கம்மா - சிறுகதை

“உங்கம்மா உங்க பேச்ச மதிக்காதுன்னு உங்க அம்மா செத்ததுக்கு அப்புறம்தான் உங்களுக்குத் தெரிய வருது, பாவம்” என்று அவரை ஒரு குத்தல் குத்தினேன். அதற்கும் வழக்கம்போல் ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

நான் கோபமாக “நாம இங்க பக்கத்துல இருக்கோம்னு அந்த வீட்டைப் பார்த்துக்கறது ஈஸியா இருக்கும்னு அந்த வீட்டை நமக்கு எழுதி வைக்கச் சொன்னோம். வாய் விட்டுக் கேட்டுகூட உங்க அம்மா நமக்கு எழுத மாட்டேன்னுட்டு கடைசி மகன்தான் உசத்தின்னு அவனுக்கு எழுத வச்சிச்சு. இப்ப பிரச்னைன்னா மட்டும் நாமதான் போய்ப் பார்க்கணுமாக்கும்’’ என்றேன்.

“ஏம்மா, நாம எங்க பிரச்னைய பார்க்கப் போறோம்? அதுக்குதான் அவனுக்கு போன் பண்ணி வரச் சொன்னேன். அதுவுமில்லாம, நம்மளை மாதிரி கவர்மென்ட் வேலையா பார்க்குறான், தனியார் கம்பெனில வேலை பாக்குறான். அந்த வாடகை வந்தா அவன் குடும்பத்துக்கு நல்லதுன்னுதான அம்மா அவனுக்கு அந்த வீட்டை எழுதச் சொல்லுச்சு, நீதான் பிடிவாதமா நம்ம பக்கத்துல இருக்கிற வீடு நமக்குதான் வேணும்னு அடம்பிடிச்சு பத்திரத்துல கையெழுத்து போடக் கூடாதுன்னு இன்னும் ஒத்தக் கால்ல நிக்கற. தம்பியும் எத்தனை தடவை கேட்டுப் பார்த்துட்டான். என்னை வேற கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லிக்கிட்டே இருந்து கடைசில செத்தும் போயிடுச்சு. இப்ப அதான் திரும்ப வந்து சுத்துது போல...’’

அவரின் குரல் அதிகமானது தெரிந்ததும் அதற்கு மேல் பேசினால் வம்புதான் என உணர்ந்து நான் பேச்சை மாற்றி, ``நைட்டுக்கு தோசை ஊத்தவா, இல்ல சோறு போதுமா?’’ என்றவுடன், அவரும் ``எது வேணும்னாலும் ஓகேதான்மா’’ என்றுவிட்டு ஒரு அரைச்சிரிப்பு சிரித்தார்.

அதிகாலையிலேயே கொழுந்தன் ரவி வந்துவிட்டான். அவன் குளித்து வருவதற்குள் காலை டிபனை நான் செய்து வைத்திருக்க, மெதுவாக அந்த வீட்டுப் பிரச்னை குறித்து அவரும் ரவியும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

இவ்வளவு பெரிய பிரச்னையைக் கேட்டும் ரவியிடம் எந்தவிதப் பதற்றமும் இல்லை. கடைக்குட்டியாய் அவன் செல்லமாய் வளர்ந்ததும், என் மாமியாருக்கு எதுவென்றாலும் அவன்தான் தீர்த்து வைப்பான் என்பதும் எங்கள் இருவருக்குமே தெரிந்ததால் எங்களுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.

நானும் அவரும் ஒரு பைக்கில் செல்ல, ரவி ஹரிணியின் பைக்கில் வர, மாமியாரின் வீட்டிற்குச் சென்றோம். முன்பே கணேசண்ணனுக்கு போன் செய்து சொன்னதால், குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டு வாசலிலேயே ரெடியாக இருந்தனர்.

ஜக்கம்மா - சிறுகதை

ரவியிடம் எல்லா விஷயத்தையும் கணேசண்ணனும் சீதாக்காவும் சொல்லி முடித்திருக்க, ரவி முதலில் அவர்கள் அம்மா இருந்த அறையைப் போய்ப் பார்த்தான். சுற்றிலும் இருந்த விளக்கமாறு செருப்பு எல்லாவற்றையும் ஒரு சிரிப்புடன் பார்க்க, கணேசண்ணனும் சீதாக்காவும் அவனை அசடுவழியப் பார்த்தனர்.

பின்பு வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தான். பின்பு அந்த அறையின் சாவியைக் கேட்டு வாங்கி, சுற்றிலும் இருந்த விளக்கமாறு, செருப்பு எல்லாவற்றையும் ஒரு ஓரமாய் ஒதுக்கிவிட்டு அந்த அறையைத் திறந்தான்.

அவர் மட்டும் தைரியமாக முன்னே சென்று அறையைப் பார்க்க, நான் கொஞ்சம் பயமாய் இருந்தாலும், `கடைசிக் காலத்துல கிழவி என் வீட்டுலதான இருந்திச்சு, நல்லாதான பார்த்துக்கிட்டோம்’ என்பது ஞாபகம் வந்து கொஞ்சம் தைரியமாகவே எட்டிப் பார்த்தேன்.

உள்ளே மாமியாரின் வாசனை வருவதுபோல் தோன்றியதும், சட்டென்று நான் வெளியே வந்துவிட்டேன். ரவி மட்டும் தைரியமாக அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, வெளியே வந்து கதவருகே நின்றுகொண்டு அந்த அறையையே பொறுமையாக சில நிமிடங்கள் பார்த்தான். பின் சத்தமாக ஏதோ கோயில் பூசாரிகள் அம்மனிடம் பேசுவதுபோல் ``என்ன ஜக்கம்மா, இன்னும் உன் வீட்ட விட்டுப் போக மனசில்லையா? கொள்ளுப் பேரன் பேத்தி வரைக்கும் பார்த்துக் கொஞ்சிட்டு நல்லாத்தானே வாழ்ந்துட்டுப் போய்ச் சேர்ந்த... அப்புறம் இப்ப உனக்கு என்ன குறைன்னு திரும்ப வந்திருக்க..!’’ என அவர் உயிருடன் இருந்தால் எப்படிப் பேசுவானோ அதே டெசிபலில் பேசினான்.

கணேசண்ணனும் சீதாக்காவும் ‘பேய்கூட போய் இப்படிப் பேசுறானே’ என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ரவி இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தி, ``சாகிற வரைக்கும் ராசாத்தி மாதிரிதான இருந்த. நாலு மருமக்கமாரையும் ஆட்டித்தான படைச்ச. உன் மகனுங்க நாங்க நாலு பேரும் நீ கிழிச்ச கோட்டை என்னிக்காவது தாண்டியிருக்கோமா சொல்லு...’’ என்றவுடன் எனக்கு உள்ளூர சிரிப்பாய் இருந்தாலும் `இதெல்லாம் அந்தம்மா செத்ததுக்கப்புறம் வந்து கேட்கிறானே’ என கொஞ்சம் கோபம்தான் வந்தது.

``இங்க பாரு ஜக்கம்மா, இப்ப குடியிருக்கவங்க நம்ம சொந்தக்காரங்க. உனக்கு மகன் முறைதான் வரும், தெரியும்ல. அவங்களைப் போய் ஏன் பயமுறுத்தற... செத்ததுக்கு அப்புறமும் நீ இங்கதான் சுத்திக்கிட்டிருப்பீன்னா அப்புறம் எதுக்கு வீட்டை என் பேருல எழுதிக் கொடுத்த, சொல்லு?’’ என்று மூச்சுவாங்கப் பேசிவிட்டு, சில நிமிடங்கள் அந்த அறையையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, ``அண்ணே, போலாம். இனிமே அம்மா இங்க வராது’’ என்றான்.

நானும் அவரும் ஆச்சரியமாய் அவனைப் பார்த்தோம். திரும்பி கணேசண்ணனைப் பார்த்து, ``அண்ணே, இனிமே அம்மா உங்களுக்குத் தொந்தரவு பண்ணாது’’ என்றான். அவரும், சீதாக்காவும் அரைமனதாய்த் தலையாட்ட, நாங்கள் அங்கே இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.

மறுநாள் காலை அடுப்படியில் வேலையாய் இருந்தபோது போன் அடித்தது. சீதாக்காதான். கொஞ்சம் பதற்றமாகவே போனை எடுத்தேன்.

“சொல்லுங்கக்கா.’’

``இல்ல காயத்ரி, நேத்து ரவி தம்பி வந்துட்டுப் போனதுக்கப்புறம் நைட்டு தொந்தரவு எதுவும் இல்ல. அதைச் சொல்லத்தான் போன் பண்ணினேன்.’’

நான் சந்தோஷமாக ``அப்படியாக்கா, ரொம்ப சந்தோஷம்’’ என்றேன்.

``உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிரு’’ என போனை வைக்க... நான் அடுப்பை அணைத்துவிட்டு ஆசுவாசமாய்ப் பெருமூச்சு விட்டேன்.

அன்று ஏதோ கவர்மென்ட் லீவு என்று சோபாவில் அவர் கைலியுடன் அமர்ந்திருந்தார். நான் இரண்டு டம்ளரில் காபியுடன் அருகில் அமர்ந்து ஒரு டம்ளரை அவரிடம் நீட்டினேன். அவர் ஆச்சரியமாக ``என்ன இன்னைக்கு கேட்காமலயே காபி’’ என்று கேட்க, நான் சிரித்தபடி, “இல்லங்க, ரவிக்கு எழுதியிருக்கிற பத்திரத்துல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருங்க’’ என்றேன்.

“நிஜமாதான் சொல்றியா?’’

“அட, இதில போய் யாராவது விளையாடுவாங்களா? அத்தைக்கு ரவின்னா உசிருன்னு தெரியும். ஆனா அதை அவங்க இறந்ததும் அப்புறம் அன்னிக்கு அந்த வீட்டுல ரவி அவங்ககிட்ட பேசுனதுலதான் புரிஞ்சது. அதுவுமில்லாம, நீங்க சொன்னீங்க பாருங்க... அதுக்குதான் அம்மா இன்னும் அந்த வீட்டை விட்டுப் போகலையோ என்னமோன்னு, அதாங்க. அதுக்கப்புறமும் அந்த வீட்டைக் கொடுக்கலன்னா அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும்!’’

அவர் என்னைப் பெருமையாகப் பார்த்தார்.