அரசமரம் கீழே
பெண்கள் உட்கார்ந்திருக்க
நடுவே ஜோசியக்காரர்
அம்மாவின் நிழலாய் நானும்
ஹைக்கூ கவிதையாய்
மூன்று கோடுகள் விபூதி
அசோக சக்கரமாய் குங்குமம்
பச்சை சால்வை அணிந்து
காவி உடையில் கம்பீரமாய் இருப்பார்
கையில் சுருட்டி வந்த
பிளாஸ்டிக் பாய் விரித்து அமருவார்
ஜோசியர்மீது மக்களுக்கு
மாண்புமிகு மரியாதை
கிளி சீட்டு எடுத்துக் கொடுக்க
அவர் சொல்வதே வாக்கு
தட்சணை பரிகாரம் என்றவாறு
பொழுது நீளும்
எதிர்காலத்திற்காக சேமித்த
சிறுதொகைகளை
எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளவே
செலவிடுவர் யாவரும்
நெல்லுக்கும் சொல்லுக்கும்
கட்டுப்படும் விவசாயியைப்போல்
அடுக்கி வைத்ததில் இருந்து
ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்து
கூலிக்காய்க் காத்திருக்கும் கிளி
“இந்தா உன் நெல்லு - நீ
உள்ளே போயி நில்லு!”
அடுக்கு மொழியில் ஒரு வாசகத்தைக்
கிளியிடம் சொல்வார்.
அவனே என்
முதல் பாட்டு வாத்தியான்!