
News
கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
தபால்காரர் வீடு வந்ததும்
வாரப்பத்திரிகைக்காக ஓடுவோம்
மணியார்டர்
பண்டிகை வாழ்த்து
நண்பர் அழைப்பு
சிற்றிதழ்
காதல் கடிதம்
சேமிப்பு அட்டை
தேர்வு முடிவு
தந்தி
எத்தனையோ மணியோசை
வாசலில் ஒலித்ததுண்டு
யாவருக்கும் விலாசம் கொடுப்பவர்
முகவரியற்று
தெருவோர டீக்கடையில்
சிகரெட் பிடித்தவாறு

சீருடை அணிந்த தோளில்
எத்தனை இன்ப துன்பங்கள்
ஏதும் அறியாது
கடிகார முள்ளாய்
கடந்து செல்வார்
குடும்பத்தில் ஒருவர்
எதிர்பார்ப்புக்குரியவர்
சைக்கிள் மணியோசை
பொய்த்துப்போன காலத்தில்
ஒரு பின்னிரவு
அஞ்சல் திசையைக் கடந்தேன்
தபால் பெட்டிக்குள்
கூடு கட்டியிருந்தது
குருவி.