Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 19 - வாடகை வீடு

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

நேரம் கழித்து வருவதே

இரவு பழக்கமாகிவிடுகிறது

சாப்டாச்சா என்றவாறு

சோத்தில் தண்ணீர் ஊத்தி

பழையதுக்கு சேமித்தாள் மனைவி

கடிகாரக் கூண்டில்

ரோஜாவைத் தேடி

நடக்கின்றன முட்கள்

ஒரு சிந்தனையோடு பேசிக்கொண்டிருக்க

இன்று எழுதிய பல்லவியா என

வினவிய மனைவியிடம்

பிறகு பயன்படும் என்றேன்

தாழில்லாக் கதவில்

நாற்காலியை முட்டுக்கொடுக்க

கடலலையாய் ஜன்னலை

மூடித்திறந்தது காற்று

பால் வாங்கணும் என்ற

மனைவியின் வாயை அடைத்தது

முந்நூறு ரூபா

தாழ் திறவாய்! - கதவு 19 - வாடகை வீடு

வாடகை வீட்டின் ஒழுகல்

பாத்திரத்தில் விழுந்த மழைத்துளியின்

மெட்டுக்கு என்ன எழுதுவது

இரண்டு செங்கல்மீது ராவெல்லாம்

உட்கார்ந்துகொண்டே தூங்கியபிறகு

அதிகாலை தூறலில்

சிமெண்டு ஓட்டையிலிருந்து சிந்தியது மழைப்பல்லவி

நான்கு வயது மகள்

அப்பா வாங்கிவரப்போகும்

மரப்பாச்சி பொம்மையோடு

பேசிக்கொண்டிருந்தாள்

ஒரு சோளக்காட்டுப் பொம்மையின்

பாக்கெட்டில் காசு இல்லாதது

தெரியாமல்.