மனக்கட்டைமேல்
பொம்மையாய்
உட்காரவைத்து
கத்தரிக்கோல் கவிஞர்
தலையெழுத்தை
எழுதுவார்
அசைந்தால்
எழுத்துப்பிழை ஆகுமென
காதைத் திருகுவார்
மொட்டையடித்து
மூன்றுநாள் ஆனதுபோல்
பலாப்பழமாய் இருக்கும்
மண்டை
சிதறிய முடிகளைக் கூட்டிப்பெருக்கி
ஒரு ரூபா தாளை நீட்டுவாள்
அம்மா
சலூனுக்குப்போன
பத்தாவது வயதிலும்
அதே பலாப்பழம்
மேல்நிலை வகுப்புவரை
தொடர்ந்தது
அவருக்கும் எனக்குமான
தலையெழுத்து
முடி திருத்தினாலும்
முகூர்த்த நாளில்
தவில் வாசிப்பார்

கல்லூரிப் பொழுதில்
குளிர் அறையில்
சுழற்நாற்காலியில்
உட்கார வைத்து
வெட்டி முடித்ததும்
நூறு ரூபா டிப்ஸ்
தருகையில்
நினைவு வந்தது
அம்மா கொடுத்த
ஒரு ரூபா காயிதமும்
கத்தரிக்கோல்
கவிதையும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism