விடுதிகளுக்காகவே
ஏதாவதொரு படிப்பில் சேரும்
ஏழை மாணவனின் கதை
அத்தியாயம் மிக்கது
அதிகாலை
வகுப்புத்தோழனின்
விடுதிக்குச் செல்கையில்
இரும்புப் பட்டறையில் வேலை பார்ப்பதாய்ச்
சொன்னான்
கல்லூரி
தங்குவதற்கான கூரை
சம்பளத்தை
வீட்டுக்கு அனுப்பிவிட்டு
அரை நிர்வாணமாய்ப் படுத்துக்கிடப்பேன்
அறையில்
குழாயில் தண்ணீர் வந்தால்
குளியல்
வியர்வை பூத்த உடம்பில்

ஒரே சட்டையை நான்கு நாள்கள்
அணிவதில்
மனம் கசகசக்கும்
பஞ்சாயத்து ரேடியோவாய்
ஒரு தொலைக்காட்சியில்
யாவரும் குடியிருப்போம்
தேமல் கொண்ட சுவர்கள்
மரைகழன்ற மரக்கட்டில்
குடிநீர் இல்லா வெற்றிடம்
கைகளே தலையணை
வாயாடும் மின்விசிறி
விடுதியின் அவலத்தை
அவ்வப்போது பார்த்ததுண்டு
பழையசோற்றைப் பூட்டிவைத்து
மறுநாள் இரவு
ஊறுகாயும் உப்பும் இல்லாமல்
தண்ணீர் ஊற்றி
அனாதையாய் தின்பவனைப் பார்த்து
ரேசன் அரிசியில்
சுடச்சுட ஆக்கி
அம்மாவோடு சேர்ந்து குடிக்கையில்
குல்பி ஐஸாய் இனித்தது
கஞ்சித்தண்ணி.