டவுசர் பருவமும்
வாடகை சைக்கிளும்
இமைகளாய்
சேர்ந்திருந்த காலத்தில்
நாத்திக்கிழம
ஊர்சுற்றுதல் அலாதியானது
எப்போதும்
முகூர்த்த நாளாய்க்
கூடியிருக்கும்
மூர்மார்க்கெட் வளாகத்தில்
நேரு ஸ்டேடிய கால்பந்து
உயிர்காலேஜி படகுசவாரி
அல்லிகுளம் சிமெண்டு சிற்பங்கள்
மை லேடீஸ் பூங்கா
சினிமா சூட்டிங்
பூங்காவைச் சுற்றி
வட்டமிடும்
வாடகை ரெயில்
விக்டோரியா ஹாலில்
கலைநிகழ்வு
ஜவ்தாள் பையில்
தண்ணீர் மூட்டைக்குள்
விளையாடும்
வண்ணமீன்கள்
பக்கங்கள் குறைந்த
பழைய புத்தகங்கள்

குழந்தைகள் மொய்க்கும்
பொம்மை உலகம்
சுற்றிவந்ததில்
சோர்வு வழிமறிக்க
ஐஸ்போட்ட
கிர்ணிப்பழ சர்பத்தைக்
குடிக்கையில்
சித்தப்பா வயதில் ஒருத்தர்
இரும்புக் கூடாரமாய் இருக்கும்
காய்லாங்கடைக் கதவை
கற்பூரம் கொளுத்தி மூடினார்
உள்ளே
செத்துக்கிடந்தன
கடவுள்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism